……………………………………………

……………………………………………..

………………………………………….
1965 -ஆம் வருடம்….. அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் எதுவும் கிடையாது….
திரையரங்குகளில, திரைப்படங்கள் துவங்கும் முன்னர், 10-12 நிமிடங்களுக்கு, ம்த்திய அரசின் செய்தி, விளம்பரத்துறை தயாரிக்கும், நியூஸ் ரீல் என்று அழைக்கப்பட்ட டாக்குமெண்டரி படம், திரையிடப்படும்….. ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும் அது கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்பது அரசின் உத்திரவு.
படம் பார்க்க வருபவர்கள், திரைப்படத்தைக் காண ஆவலாக இருக்கும் அந்த நேரத்தில், வலுக்கட்டாயமாக பார்க்க வைக்கப்படும் நியூஸ் ரீலை காண எரிச்சலாக இருக்கும்….. அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ந்ல்ல தோற்றம் இல்லாதவர்.. குள்ளமாக, கவர்ச்சியின்றி, கம்பீரமின்றி – காணப்படு வார்….. எனவே எரிச்சலில் இருக்கும் பார்வையாளர்களில் இளைய வயதினர், திரையில் அவர் தோன்றும்போதெல்லாம் ஏளனமாக கூச்சலிடுவார்கள்…… தியேட்டரில் “ஸோன் பப்டி – ஸோன் பப்டி ” என்று கத்துவார்கள்….
இதே லால் பகதூர் சாஸ்திரியை, பதினைந்தே நாட்களில், அத்தனை மக்களும், ஹீரோவாக கொண்டாடி, நியூஸ்ரீலில் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் பலத்த கரகோஷமாக கைதட்டி வரவேற்கும் நிகழ்வுகளும் உருவாயின…..!!! (இந்த நிகழ்வுகளை எல்லாம் நேரடியாக பார்த்த அனுபவம் எனக்கு உண்டு …)
இந்த மாயம் நிகழ்ந்தது எப்படி ….? இன்றைய இளைஞர்களில் அதிகம் அறிய வாய்ப்பில்லாத சாஸ்திரி அவர்களின் வரலாறு தெரிந்தால் புரியும்…..( சாஸ்திரி என்பது ஜாதிப்பெயர் அல்ல …. உத்திரப்பிரதேசத்தில் அவர் படித்த, தத்துவம் சம்பந்தமான பட்டப்படிப்பின் பெய்ர்… )
…………………………………………………..
இந்தியாவின் எளிமையான பிரதமராக அறியப்பட்ட லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு நாள் ஜனவரி-11.
நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரி, ‘அமைதியின் மனிதர்’ என்று அழைக்கப்பட்டார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள். லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை அதற்கு சிறந்தவொரு எடுத்துக்காட்டு.
லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்காலத்தில் அவரது அமைதியான குணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் நினைத்தது. 1965-ல் காஷ்மீர் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்தியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
தனக்கு ஒரு பிரச்சினை வந்தால் பொறுத்துப் போகும் குணம் கொண்ட லால் பகதூர் சாஸ்திரி, நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றதும் துடித்துப் போய்விட்டார். பாகிஸ்தானை தாக்க இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நடந்த போரில், பாகிஸ்தானின் உள்ளே லாகூர் வரை புகுந்து சில பாகிஸ்தான் நிலப்பகுதிகளையும் இந்திய ராணுவம் கைப்பற்றியது.
1965 செப்டம்பர் 21-ம் தேதி ஐ.நா. சபை கூடி, இருதரப்பையும் சமாதானமாக செல்லுமாறு கேட்டுக்கொள்ள,
சில தினங்களில் போர் முடிவுக்கு வந்தது.
போர் முடிந்த நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையே பகைமை குறையவில்லை. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அப்போதைய சோவியத் யூனியன் அரசு ஈடுபட்டது.
1966-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் சோவியத் யூனியனின் பிரதமராக இருந்த கோசிஜின் முன்னிலையில் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபரான அயூப்கானும் தாஷ்கண்ட் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜனவரி 10-ம் தேதி இரவு, இரு தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது நடந்த சில மணி நேரங்களிலேயே ஜனவரி 11-ம் தேதி அதிகாலையில் லால் பகதூர் சாஸ்திரி காலமானார்.
சாஸ்திரி இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு அவரைப் புகைப்படம் எடுத்த பிரேம் வைத்யா என்ற புகைப்பட வல்லுநர், பிற்காலத்தில் லால் பகதூர் சாஸ்திரியின் கடைசி நாள் எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
”தாஷ்கண்டில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை படமெடுக்க நானும் சென்றிருந்தேன்.
இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தங்குவதற்காக அழகான மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை நடந்த இடத்தில் இருந்து 3 நிமிட நடைப்பயணத்தில் எட்டிவிடக் கூடிய தூரத்தில் அந்த மாளிகை இருந்தது.
ஜனவரி 10-ம் தேதி இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லால் பகதூர் சாஸ்திரி தனது மாளிகைக்கு சென்றுவிட்டார்.
அன்று நள்ளிரவு வரை சாஸ்திரிக்கு பல்வேறு பணிகள் இருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
லால் பகதூர் சாஸ்திரி பணிபுரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்.
அன்று இரவு அறைக்கு வந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவில் யாரிடமோ நீண்டநேரம் தொலைபேசியில் பேசிவிட்டு தாமதமாக இரவு உணவை முடித்துக்கொண்டார்.
பின்னர் அங்குள்ள அறையிலேயே அவர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தார்.
சாஸ்திரியை படமெடுக்க இதுதான் உகந்த சமயம் என்று நினைத்த நான், தோட்டத்தில் இருந்துகொண்டு என்னுடைய கேமராவில் பிலிம்ரோல் தீரும் வரை படமெடுத்தேன்.
படமெடுத்த பிறகு என் அறைக்கு வந்த நான் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டேன். நள்ளிரவில் என் அறையின் கதவை யாரோ பதற்றத்துடன் தட்டும் சத்தம் கேட்டது.
கதவைத் திறந்தபோது, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் பதற்றத்துடன் வெளியில் நின்றிருந்தார்.
‘பிரேம்.. பிரேம்.. சாஸ்திரிஜி…’ என்ற வார்த்தையை தவிர வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நானும் அவரும், சாஸ்திரி தங்கியிருந்த மாளிகைக்கு சென்றோம்.
நள்ளிரவு நேரத்திலும் அந்த மாளிகை பரபரப்பாக இருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் கவலை அப்பிக்கிடந்தது. அறைக்குள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உடல் சலனமற்றுக் கிடந்தது.
அவரது தனிப்பட்ட மருத்துவரான டாக்டர். ஆர்.என்.சக், இணைச் செயலாளரான சி.பி.ஸ்ரீவத்சவா, பிரதமரின் தனிச் செயலளரான ஜெகன்னாத் சஹாய் ஆகியோர் அவரது உடலைச் சுற்றி கண்ணீர் மல்க நின்றிருந்தனர்.
சில மணி நேரங்களுக்கு முன்பு, துடிப்பாக உலவிக்கொண்டிருந்த அவரை கடைசியாக படம் பிடித்து என் நினைவுக்கு வந்தது” – என்கிறார் பிரேம் வைத்யா.
லால் பகதூர் சாஸ்திரி, மாரடைப்பால் காலமானதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்னும் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பான சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.
ஊழல் மிகுந்த எத்தனையோ அரசியல்வாதிகளை இன்று நாம் பார்க்கிறோம். அவர்களில் பலரும் கோடிகளில் குளிக்கிறார்கள்.
ஆனால், நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் லால் பகதூர் சாஸ்திரிக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.
1965-ல் பியட் கார் ஒன்றை வாங்க விரும்பிருக்கிறார் லால் பகதூர் சாஸ்திரி.
அப்போது அதன் விலை 12,000 ரூபாய். ஆனால் சாஸ்திரியிடம் இருந்தது வெறும் 7 ஆயிரம் ரூபாய்.
இதனால் வங்கியில் கடன் வாங்க விண்ணப்பித்துள்ளார்.
அவர் பிரதமர் என்பதால் ஒரே நாளில் கடன் கிடைத்துள்ளது.
ஆனால், அந்த காரின் கடனை அடைக்கும் முன் சாஸ்திரி உயிரிழந்தார்.
அவர் இறந்த பிறகு அந்த கடனை தள்ளுபடி செய்ய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முன்வந்தார்.
ஆனால், சாஸ்திரியின் மனைவி அதை ஏற்கவில்லை.
தனக்கு வந்த பென்ஷன் பணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த தவணையைக் கட்டி முடித்திருக்கிறார் சாஸ்திரியின் மனைவி.
தான் மட்டும் எளிமையாக இருக்காமல் தன் குடும்பத்துக்கும் எளிமையை கற்றுக் கொடுத்திருந்தார் லால் பகதூர் சாஸ்திரி. அதுதான் அவரது சிறப்பு. ( உதவிக்கு நன்றி – பி.எம். சுதிர் )
…………………………………………………………………………………………………………………………………………………………………………………..



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…