முதலில் உருவானது பாஜகவா -இந்து மதமா…? “மதம்” பிடித்த மனிதர்களுக்கு ஒரு கேள்வி…



அண்மைக் காலத்தில் ஒரு புதிய தீவிரவாதம் கிளம்பி இருக்கிறது…
“உங்கள் மதத்திற்கு ஆபத்து” என்று சொல்லி, அமைதியாக வாழும்
மக்களைத் தூண்டி விட்டு, மதவெறியர்களாக அவர்களை மாற்ற
முயற்சிக்கிறது இந்த புதிய தீவிரவாத கும்பல்.

மற்ற மதங்களைப்பற்றி தவறாகவும், பொய்யாகவும்
செய்திகளை உருவாக்கி,
அந்த மதங்களால் இந்து மதத்திற்கு
ஏதோ பெரிய ஆபத்து வந்து விட்டதாக –
கற்பனை பிரச்சினைகளைக் இட்டுக்கட்டி,
வாட்சப் மெசேஜ்’கள் வடிவில் அவற்றை
பரபரப்பாக உலவ விடுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ பலர்,
படித்தவர்கள் கூட – தங்கள் பங்கிற்கு அதை மேலும் பரப்புகிறார்கள்.

தாங்கள் பரப்பும் இந்த வதந்திகளை /
– கதைகளை உருவாக்கியது யார்…?
அவர்கள் எங்கே இருக்கிறார்கள்….
இப்படி வதந்திகளைப் பரப்புவதன் பின்னணி என்ன…?
இவற்றால் ஆதாயம் பெறப்போகிறவர்கள் யார்…?

தாங்கள் அறியாமலே பங்குகொள்ளும்இந்த சூழ்ச்சி வலையால்
சமூகத்தில் எத்தகைய கேடுகள், விளைவுகள் ஏற்படும் –
என்பனவற்றை பற்றியெல்லாம் யோசிக்காமலே,
simply தங்களுக்கு வரும் whatsapp message -கள் எல்லாவற்றையும்
forward செய்துவிடும் மக்கள் –

கொஞ்சம் நின்று – நிதானமாக
இந்த இடுகையை
வாசிக்கவேண்டுமென்று
விரும்புகிறேன்.
இந்த இடுகையில் சொல்லப்படும்
செய்திகளை ஆழமாக யோசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்

இந்த message -கள் எல்லாம் இறுதியில் –
மோடிஜி ஒருவரால் மட்டுமே இந்த ஆபத்தை தடுக்க முடியும் என்றும்
அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மட்டும் தான்
இந்துக்கள் அழிவிலிருந்து தப்ப முடியும் என்றும் உணர்த்துகிற
விதத்தில் முடியும்.

இதை படிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு கேள்வியை –
கேட்டுக்கொண்டு யோசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

மோடிஜி தோன்றுவதற்கு முன்னாலேயே –
எப்போது உருவாகியது என்றே சொல்ல முடியாத –
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய
இந்த இந்து மதத்தை காத்து வந்தது யார்…?

அவர்கள் உணர்வு பூர்வமாக ஒரு விஷயத்தை
நினைவில் கொள்ள வேண்டும் –

மோடிஜி வருவதற்கு முன்பும் இந்து மதம் இருந்தது…
மோடிஜிக்கு பிறகும் –

இந்த மதம் தொடர்ந்து நீடித்திருக்கும்…
தனி மனிதர் யாரும் பாதுகாக்க வேண்டிய
அவல நிலையில் இது இல்லை..!!!

தமிழகம் – மதப்பூசல்கள் இன்றி அமைதியாக இருக்கிறது.
இந்துக்களும், முஸ்லிம்களும் இங்கே பெரும்பாலும்
மாமன், மச்சான் முறை சொல்லி,
தோள்களில் கைபோட்டு ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களிடையே துவேஷங்களை கிளப்பும் செய்திகளை
பரப்பும் பாவத்தில் தாங்களும் பங்குகொள்ள வேண்டுமா
என்று மக்கள் யோசிக்க வேண்டும்.

தங்களை அறியாமலே இந்த சூழ்ச்சி வலையில் விழுந்து விட்ட –
விழுந்து கொண்டிருக்கிற
மக்கள் கீழேயுள்ள செய்தியை அவசியம் வாசிக்க வேண்டும்…

————————–

பிராம்மணராக பிறந்த – இரா.சத்தியமூர்த்தி அய்யங்கார் என்பவர்
விடுத்துள்ள ஒரு விழிப்புணர்வு செய்தி கீழே –

—————————

தேர்தல் நெருங்க நெருங்க மித வாதம் குறைந்து மதவாதம்,
மதம் பற்றிய வாதம், பெருகிக் கொண்டிருக்கிறது.
பாஜக ஆட்சி வந்த பின்னால், இந்து மதத்தைக் காப்பாற்ற ஒரே வழி,
நமது கல்ச்சரை காப்பாற்ற ஒரே வழி பாஜகவை ஆதரிப்பது
தவிர வேறில்லை என்பது போல் ஒரு
மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவை ஆதரிக்க பல காரணங்கள் இருந்தாலும், மதம்பிடித்து
ஆதரிக்கும் காரணம் எனக்கு ஏற்புடையதில்லை.
ஏன்? பாஜக தீவிர ஆதரவாளர்கள் நம்மை மதத்தை வைத்து
பயமுறுத்துகிறார்கள். எப்படி?

”பிற மதத்தினர் உங்களை அவர்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள்.
இந்துக்கள் பிறமதங்களுக்கு மாறுவது அதிகரித்திருக்கிறது.
இப்படியே போனால், இந்தியாவில் இந்துக்கள் மைனாரிட்டி
ஆகிவிடுவார்கள். பிறமதத்தினர் மெஜாரிட்டி ஆகி, ஆட்சிக்கு வந்து,
நம்நாட்டை வேறுமத நாடாக மாற்றிவிடுவார்கள்.
பிறகு நாம் நமது கலாச்சார அடையாளங்களை இழந்து, நம் மத
பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க முடியாத நிலைக்குத்
தள்ளப்படுவோம். முஸ்லீம் நாடுகளில் எப்படி ஹிந்துக்கள்
இருக்கிறார்களோ, அப்படி இருக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே,
இப்போதே சுதாரித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால்…..”

இந்த பயமுறுத்தலை பல இந்துக்கள்
கேள்வியே கேட்காமல் நம்புகிறார்கள்.
உண்மை நிலவரம் என்ன?.

ஒரு 38 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஓட்டளிப்பவர்கள்.
இதில் மைனாரிட்டி மதத்தினர் ஒரு 3 சதவீதம் இருப்பார்கள்
என்று கொண்டால், 35 சதவீதம் இந்துக்கள் பாஜகவுக்கு
ஆதரவளிப்பவர்கள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? மீதம் உள்ள 65 சதவீதத்தினருக்கு
இந்து மதம் ஆபத்தில் இருப்பதாக தோன்றவில்லையே.
அவர்கள் இந்து கலாசாரம், மத பழக்க வழக்கம் ஆகியவை
எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று நினைக்கிறார்கள்
என்று கொள்ளலாம் அல்லவா?

அவ்வளவு சுலபமாக நம்மை மதமாற்றம் செய்ய முடியும் என்றால்,
முஸ்லீம் நாடுகளில் பல வருடங்களாக வாழும் இந்துக்கள் எப்படி
இன்னும் இந்துக்களாகவே இருக்கிறார்கள்?
பாகிஸ்தானிலும் இந்துக்கள் உண்டு, இந்துக் கோவில்கள் உண்டு;
சில அரபு நாடுகளிலும் இந்துக்கோவில்கள்…
முஸ்லீம் போலீஸ் பாதுகாப்புடன் உண்டு

இதேபோல் கிருத்துவம் பெரும்பான்மையான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்,
பவுத்தம் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற
நாடுகளிலும் இந்துக்கள் மதம் மாறிவிடவில்லையே.

அதெல்லாம் இல்லை, அங்கெல்லாம் அவர்கள் (மதம் மாற்றுபவர்கள்) மிதவாதிகள்.
நம் நாட்டை மாற்றத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்று ஒரு வாதம் வரலாம்.

ஒரு இருநூறு, முன்னூறு, ஐநூறு, ஏன் ஆயிரம் வருடங்கள் வரை பின் சென்று பார்க்கலாம்.
முகலாய மன்னர்கள் பலர் நம் நாட்டை ஆக்கிரமித்தார்கள். அவுரங்கசீப் போன்ற கொடுங்கோல்
மன்னர்களும் இருந்திருக்கிறார்கள்.

நம்நாட்டையே சேர்ந்த அசோகர் போன்ற மன்னர்களும் இந்து மதத்தை விட்டு புத்த மதத்தை
தழுவியிருக்கிறார்கள். அப்போதேல்லாம் ஜனநாயக ஆட்சி, ஒரு
கான்ஸ்ட்டியூஷனுக்கு கீழா நடந்தது? மதம் மாறு, இல்லாவிட்டால் சிரச்சேதம் என்று சொல்லும்
அளவுக்கு அதிகாரமும், ரத்தம் குடிக்கும் கத்திகளும், வீரர்களும் இருந்தார்கள். கேள்வி கேட்க
ஆளில்லை. ஆனாலும் இந்து மதம் அழியவில்லையே?

இப்போது மட்டும், அதுவும் என்றும் இல்லாத அளவுக்கு இத்தனை பயம் ஊட்டி பிரிவினை
செய்வது எதனால்? ஓட்டுக்காகதானே?

கலாச்சார அடையாளங்கள் காணாமல் போகும் என்று
வாதிடுபவர்களுக்காக –

நான் பிறப்பால் பிராமணன்.
நடப்பால் நான் பிராமணன் இல்லை.
இன்றைய நிலையில், பல பிராமணர்களின் நிலை இதுதான்.
முடிந்த அளவுக்கு பிராமணீயம் கடைபிடிக்கிறார்கள்.
இந்த நாளில் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்பதை விட்டுவிட்டார்கள்.
சில அவர்களாகவே விட்டது. சில பிள்ளைகள் தலையெடுத்து
சொல்லிக்காட்டியதால் விட்டது.
நம் பெற்றோர் கடைபிடித்ததையும்,
அவர்களுடைய பெற்றோர் கடைபிடித்ததையும்,
நாம் கடைபிடிப்பதுடன் ஒப்பிட்டால்,
பல வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும்.

உதாரணத்துக்கு, தரையில் அமர்ந்து
இலையில் சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு.
கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில்
மனைவி சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு.

மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டில் இருந்து
விலக்கி வைக்கப்பட்டு தனியாக அமர்ந்திருந்ததுண்டு.
தினமும் இறைவனுக்கு அர்ச்சிக்காமல்,
ஆராதனம் செய்யாமல் சாப்பிடாமல் இருந்ததுண்டு.

ஆங்கில காய்கறிகள் என்று
சிலவற்றை சுத்தமாக ஒதுக்கியதுண்டு.
கிணற்றுத் தண்ணீரை (அல்லது ஆற்று
நீர்) மட்டும்தான் உபயோகிப்பேன் என்று இருந்த காலம் உண்டு.
இளம் வயதிலேயே ஆண்களுக்கு பூணூல் போட்ட காலம் உண்டு.
பிராமணன் நிச்சயம் குடுமி வைத்திருக்க வேண்டும்,
வைத்திருந்தார்கள் என்கிற காலம் ஒன்று உண்டு.

ஒரு நூறு வருடத்திற்கு முன் தமிழ்நாட்டில் இந்துத் திருமணங்கள்
ஐந்து நாள் நடந்ததாக நான் கேட்டிருக்கிறேன்.
இப்போதைய திருமணங்கள் ஒன்றரை,
அதிகபட்சம் இரண்டு நாட்களில் முடிந்து விடுகின்றன.
இப்போதைய திருமணங்களும் வட, தென்னாட்டு பழக்கங்களின்
கலவையாக மாறியிருக்கிறது.

கைம்பெண் மறுமணம் செய்யாமலும்,
அவர்களின் அழகை குறைக்கும் செயல்களை
செய்தும் இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது
கைம்பெண் மறுமணம் நடக்க வேண்டியது வாழ்க்கைக்கு
அவசியம் என்று மாறியிருக்கிறது.

இந்து மதத்தினர் வேறு மத வழிபாட்டுத்தலங்களுக்கு
செல்லாமல் இருந்ததும்,
வைணவர், சைவ வழிபாட்டை ஒதுக்கியதும்,
சைவர்கள் திருமால் வழிபாட்டை
ஒதுக்கியதும் சரித்திரத்தில் உண்டு.

இன்று பல இந்து மதத்தினர்
பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த சில பிறமதத்தவர்
இந்து மத வழிபாட்டுத்தலங்களுக்கு
இறைவனை தரிசிக்க சென்றிருக்கிறார்கள்.

பிரபலங்கள் என்று எடுத்துக் கொண்டால்,
கிறித்துவ மதத்தைச் சார்ந்த யேசுதாஸ்
கிட்டத்தட்ட இந்துவாகவே இருப்பது
அனைவரும் அறிந்தது. சைவ, வைணவ பிரிவுகளை
இணைக்கும் பாலமாக சிவன், விஷ்ணு இருவரையும்
வழிபடும் ஸ்மார்த்தர்கள் என்கிற
வகுப்பு உருவானதும் சரித்திரம்.

கிட்டத்தட்ட மேலே சொன்ன அனைத்தும்,
ஜாதி சார்ந்த பழக்கவழக்கங்களாக இருந்து,
காலத்தின் மாற்றத்தில் காணாமல் போனவை. இந்த மாற்றம்
பிராமண ஜாதி மட்டுமல்ல, வேறு பல ஜாதிகளிலும் நடந்திருக்கிறது.
மற்ற மதங்களில் நடந்திருக்கிறதா என்று சொல்ல எனக்கு அந்த
மதங்களைப் பற்றிய அறிவும் புரிதலும் கிடையாது.

இந்து மதத்தின் அனைத்து ஜாதிகளிலும்
இது நடந்திருக்கிறது என்று கொண்டால்,
இந்து மதமும் மாறியிருக்கிறது என்றுதானே பொருள்?
இந்து மதம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது
என்றுதானே பொருள்?.
மதம் தன்னை புதுப்பித்துக் கொள்வதன் பலன் என்ன?
புதுப்பித்துக் கொள்வது –
சர்வைவலுக்கு நல்லதா, ஆபத்தானதா?.

அதனால்தான் சொல்கிறேன். அவசியம் ஓட்டுப் போடுங்கள்…

ஆனால், மதத்தை முன்னிறுத்தி ஓட்டுப் போடாதீர்கள்.
இது அனைத்து மதத்தினருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்.

அது பிரிவினையை, பிளவை அதிகப்படுத்தும். நம் வாழ்வில் நாம்
தினமும் பிற மதத்தினரை சந்திக்கிறோம். அப்போது நம்முடன்
நட்பும், அன்பும் பெருகவேண்டும்.

மதம் கொண்ட அரசியலால் நேசமும், நட்பும் நாசமாக அனுமதிக்கக்கூடாது.

.
—————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to முதலில் உருவானது பாஜகவா -இந்து மதமா…? “மதம்” பிடித்த மனிதர்களுக்கு ஒரு கேள்வி…

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    “மதப்பற்று” என்பதற்கும், “மதவெறி” என்பதற்கும் இடையே உள்ள
    மிகப்பெரிய வித்தியாசத்தை அனவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் –

    “மதப்பற்று” மனிதனுக்கு கடவுள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
    நமக்கு மேலே ஒருவர் இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்.

    ஆண்டவன் ஒருவனே.
    அனைத்து மதங்களும் நல்லவற்றையே போதிக்கின்றன.
    அனைவருடனும் ஒற்றுமையாகவும், நட்புடனும் வாழ வேண்டும்…

    நல்லது செய்தால் – நல்லது விளையும்.
    நாம் நல்லதை நினைத்தால் – நமக்கு நல்லதே நடக்கும்.
    நாம் பிறருக்கு உதவி செய்தால் – மற்றவர்களும் நமக்கு உதவி செய்வார்கள்.

    நட்பு, அன்பு, கருணை, பாசம், இரக்கம் – ஆகியவை “மதப்பற்று” மனிதருக்கு
    அடிப்படையில் கற்றுக்கொடுக்கும் விஷயங்கள்.

    இவை positive ஆன விஷயங்கள்.

    ————-

    ஆனால், “மதவெறி” என்பது மனிதரை மிருகமாக்கும் ஒரு குணம்.

    எல்லாரையும் சந்தேகப்படு. எவரையும் நம்பாதே.
    பிறர் உங்களை அழிப்பதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    பிற மதத்தவர்கள் உங்களுக்கு கேடு செய்கிறார்கள்.
    அவர்களை ஒழித்தாலன்றி – நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது.

    அவனுக்கு முன் நீ முந்திக்கொள்.
    அவனை அழிப்பதற்கு நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
    உன் மதம் மட்டும் தான் நிலைக்க வேண்டும்.
    உன் கடவுள் மட்டும் தான் வணங்கப்பட வேண்டும்…

    -இவை அனைத்துமே negative ஆன விஷயங்கள்.

    ——————————
    -இவை எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
    ——————————

    மதப்பற்றும், கடவுள் நம்பிக்கையும் உடைய – சாதாரண மக்களிடம்,

    தொடர்ந்து negative (எதிர்மறையான) சிந்தனைகளை பரப்பி,
    பூதாகாரமாக வளர்த்து,
    அவர்கள் மனதை ஆக்கிரமித்து –
    அவர்களை சிந்தனை செய்யவே விடாமல் –

    தொடர்ந்து மாற்று மதத்தினரைப்பற்றிய தவறான செய்திகளையே
    அவர்கள் மனதில் விதைத்து –
    அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து,
    சந்தேகத்தையும், பொறாமையையும், அவர்கள் மனதில் உருவாக்கி –
    அவர்களின் நிம்மதியை குலைத்து,
    எப்போதும் எதிர் மதத்தினரைப்பற்றிய சிந்தனையிலேயே மூழ்கடித்து-
    தொடர்ந்து டென்ஷனிலும், ரத்தக்கொதிப்பிலும் மூழ்கடிப்பதே

    மதத் தீவிரவாதிகளின் வேலை (அவர்கள் எந்த மதத்தினராக
    இருந்தாலும் சரி… எல்லா மதங்களிலும் இத்தகையோர் இருக்கின்றனர்.)

    ———————————————

    தங்களுக்கு whatsapp மெசேஜுகளை உருவாக்கி அனுப்புபவர்கள்,
    எத்தகையோர், அவர்களின் உண்மையான குறிக்கோள் என்ன –
    என்பதைப்பற்றி மக்கள் சிந்தித்துப் பார்த்து, உண்மையை உணர வேண்டும்…

    மதப்பற்றும், கடவுள் நம்பிக்கையும் உள்ள சாதாரண மக்களிடம்
    எந்த குறையும் இல்லை… ஆனால், தாங்கள் பெறும்
    whatsapp மெசேஜுகளை உண்மையென்று நம்பி, நிம்மதி இழப்பதும் –
    அவற்றை மற்றவர்களுக்கு circulate செய்வதும் தான்
    அவர்களது பலவீனம்.

    ஆட்சியைக் கைப்பற்றி, அதிகாரத்தை தொடர்ந்து சுவைக்க எண்ணும்
    ஒரு கூட்டம் இந்த சாதாரண மக்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு –
    தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன…

    தங்களையும் அறியாமலே தாங்களும் இவற்றிற்கு துணை போகிறோம்
    என்பதை இந்த சாதாரண “மதப்பற்று” உடைய மக்கள் புரிந்து கொண்டால் போதும்.

    நாடு ஒரு பேராபத்திலிருந்து தப்பி விடும்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  2. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    .

    சரியான நேரத்தில் அவசியம் தேவையான, விவரமாக கருத்துகள்.
    உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள் சார்.

    .

  3. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    A timely beautiful article.I also have a lot to tell about today’s cheap politics in the name of
    religion.But I feel awkward. (Migavun aruveruka thakka arasiyal). I don’t know where this will lead.
    Anyway I am glad that by that tine i may not be alive.

  4. ஒரு ...( மதம் பிடிக்காத )... தேசபக்தன்'s avatar ஒரு ...( மதம் பிடிக்காத )... தேசபக்தன் சொல்கிறார்:

    கோபாலகிருஷ்ணன் சார்,

    நீங்கள் சொல்வது போல்,
    ஒரு அசிங்கமான காலகட்டத்தில் தான் நாம்
    வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    அரசியல் ஆட்சி அதிகாரத்தைப்பெற
    என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராக
    இருக்கும் கூட்டம் இது.
    சாதாரண, மதப்பற்றுடைய மக்களை
    “மதவெறி” கொண்ட மனிதர்களாக மாற்றுவதையே
    தங்கள் ஆட்சியின் குறிக்கோளாக கொண்டிருக்கும்
    ஒரு தலைமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    வெட்கம்.வேதனை.
    சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் இல்லாத சோதனை.
    இறைவனை வேண்டுவதைத்தவிர
    நமக்கு வேறு வழி ஏதும் இல்லை.

  5. ஒரு ...(மத வெறி இல்லாத) ... தேசபக்தன்'s avatar ஒரு ...(மத வெறி இல்லாத) ... தேசபக்தன் சொல்கிறார்:

    .
    எந்த சட்டத்தையும் மதிக்காமல்,
    தேர்தல் கமிஷனின் உத்திரவையும் மீறி,
    தாக்குதல் நடத்திய விமானப்படைக்கு
    ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கிறார்.

    செய்த சாதனைகளை சொல்லி
    ஓட்டுக்கேட்க வக்கில்லையே
    இவர்களுக்கு.

  6. D. CHANDRAMOULI's avatar D. CHANDRAMOULI சொல்கிறார்:

    I feel very sad to see the pathetic situation that we are in now. It is somewhat comfortable to know that we are still surrounded by wise people like you. We can only pray to God to save India at this critical juncture. .

  7. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இடுகையைப் படித்தேன், கருத்துகளையும்தான். நான் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், இந்த ஊருக்கு வந்த சமயத்தில் என் தம்பி சொன்னான், இந்த கவர்ன்மெண்ட் மக்களைப் பிரிக்கிறது, சமயத்தில் அரசுக்கு என்ன வேலை, ஒற்றுமை உணர்வை கடுமையாக பாதிக்குமே என்று கேட்டான். என்னடா இப்படிச் சொல்றானே என்று தோன்றியது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      // நான் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. //

      எந்த கருத்தை சாமி…?
      இந்த இடுகையில் நிறைய கருத்துகள் பறிமாறப்பட்டிருக்கின்றன.
      எதையென்று சொல்லுங்களேன்…
      முடிந்தால் – விளக்கம் சொல்கிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  8. R.SRINIVASAN's avatar R.SRINIVASAN சொல்கிறார்:

    What a brilliant article. Mr.Sathyamurthy, wherever you are, kindly accept my heart felt thanks to you for your brilliant and very important appeal to voters. I would be much thankful to the administrator of vimarisanam.wordpress to kindly communicate my sincere thanks to Mr.Sathyamurthy. I hope this article will reach thousands of readers. This article must be forwarded thro’ whatsaap. My sincere thanks to vimarisanam.wordpress for this wonderful and very meaningful articcle, which can save the secular fabric of our great country even if one person changes. SIMPLY GREAT. HATS-OFF.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      ஸ்ரீநிவாசன்,

      திரு.சத்யமூர்த்தி அவர்களை எனக்கு தெரியாது; பழக்கமில்லை.
      அவரது கடிதத்தைதான் வலைத்தளத்தில் பார்த்தேன்.
      கிட்டத்தட்ட என் பார்வையுடன் ஒத்துப்போனதால் –
      ஒரு மூன்றாவது நபர் சொல்வதை போடுவது இன்னும் சிறப்பாக
      இருக்குமென்று நினைத்து அதை குறிப்பிட்டு பதிவு செய்தேன்.

      உங்களைப்போலவே, என் சார்பாகவும், இந்த விமரிசனம் தளத்தின்
      “மதவெறி இல்லாத” இதர வாசக நண்பர்களின் சார்பாகவும்
      அவரது கருத்துகளுக்கு உளமார்ந்த வாழ்த்துகளையும்,
      பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

      இன்றைய உலகம் மிகவும் சிறியது. எனவே,
      எங்கே இருந்தாலும், அவரும் இதை படிப்பார் என்றே நம்புகிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  9. எத்தனையோ பேர் எழுதியுள்ளார்கள்… ஆனால் இவ்வளவு அற்புதமாக விளக்கமாக பதிவு செய்தமைக்கு நன்றி… பலருக்கும் தங்களின் இந்த பதிவின் இணைப்பை அனுப்பினேன்… பலரும் உணர வேண்டிய பகிர்வு…

    நன்றிகள் பல…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      திண்டுக்கல் தனபாலன்,

      உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      இதை நான் எழுதியது கூட முக்கியமில்லை.
      இந்த செய்தி முடிந்த அளவு அதிக மக்களை
      சென்றடைய வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

      நீங்கள் பலருக்கும் அனுப்புவது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

      உங்களைப் போன்றே மற்ற நண்பர்களும்
      பலருக்கும் இந்த செய்தியை பரப்ப வேண்டுமென்று
      வேண்டுகிறேன்.

      நல்லதே நடக்கட்டும்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.