அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!!



அது ஒரு மார்ச் 30-ந்தேதி…

திருச்சியில் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஒன்றில்,
நான் ஒரு சிறிய நிர்வாகப்பிரிவின்
பொறுப்பாளராக பணியாற்றி வந்த சமயம் அது.

(இதற்கு முந்தி எழுதப்பட்ட –
கடைசி மறக்க முடியாத நினைவுகள் இடுகையின் லிங்க் –

(தொடர்ச்சி) ஒரு தோல்வி இத்தனை சந்தோஷம்…….? (மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி-4 )

விஜிலன்ஸ் என்று சொல்லப்பட்ட அந்த பிரிவு தனது இதர பொறுப்புகளுடன் தொழிற்சாலைக்கும் அதன் தலைமையகத்திற்குமான முக்கியமான தகவல் பரிமாற்றங்களை செய்யும் பொறுப்பையும் ஏற்றிருந்தது.

இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1983-ஆம் ஆண்டில் நடந்த ஒரு விஷயம் இது. இப்போதிருக்கும் நவீன தொலைதொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத நாட்கள் அவை. அப்போதிருந்த ஒரே வேகமான தொலைதொடர்பு சாதனம் டெலிபிரிண்டர் மெஷின் என்னும் சாதனம் தான். இப்போது அதைவிட பலமடங்கு வேகமான, வசதியான சாதனங்கள் வந்து விட்டபடியால், அந்த சாதனம் கைவிடப்பட்டு விட்டது. இன்றைய தலைமுறை அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

..

..

டைப்ரைட்டர் கீ போர்டு,
டெலிபோன் போல டயல் செய்யும் வசதி,
ஒரு பிரிண்டர் ஆகியவை இணைந்த ஒரு சாதனம்
TPM என்று சொல்லக்கூடிய டெலி பிரிண்டர் மெஷின்.

பாதுகாப்பு துறையைச் சார்ந்த சுமார் 40 தொழிற்சாலைகள்,
கல்கத்தாவில் அமைந்திருக்கும் அவற்றின் தலைமையகம்,
டெல்லி பாதுகாப்பு மற்றும்
நிதியமைச்சகம் ஆகியவற்றுடன் மட்டும் – அதிலிருந்து நேரடியாக
செய்திகளை பெறவோ, அனுப்பவோ இயலும்.

அந்த மெஷினை கையாள TPM Operator என்கிற பதவிப்பெயரோடு,
தனியாக ஒரு பெண் ஊழியர் இருந்தார். இருந்தாலும்,
ஆர்வம் காரணமாக நான் அந்த பிரிவுக்கு வந்த
இரண்டு நாட்களிலேயே
அதை இயக்கப் பழகி விட்டேன்.

தொழிற்சாலையின் ஜி.எம்.அலுவலகத்திற்கு அடுத்த அறையில் தான் எனது இந்த அலுவலகம் இருந்தது. ரகசியம், தகவல்கள் – பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், எப்போதும் கண்காணிப்பு கூடிய ஜிஎம் அறைக்கு பக்கத்து அறை…!!!

சாதாரணமாக கல்கத்தாவுக்கோ, டெல்லிக்கோ கனெக்ஷன் கிடைப்பது மிகவும் கடினம். தொலைதொடர்பு வசதிகள் அத்தகைய நிலையில் தான் இருந்தன அப்போது. நாள் முழுவதும் டயல் செய்து டயல் செய்து லைன் கிடைக்காமல் – நொந்து போவார் அந்த TPM Operator.

எனவே, எங்களது அவசர தேவைகளுக்காக – எப்போதாவது கல்கத்தா அல்லது டெல்லியிலிருந்து எதாவது அவசர செய்தி அனுப்ப அவர்களாகவே முயற்சி மேற்கொண்டு லைனில் வரும்போது,

உடனடியாக எனக்கு சொல்லும்படி அந்த பெண்மணியிடம் சொல்லி
வைத்திருந்தேன்… என் இருக்கைக்கு நேர் எதிரே 7-8 அடி
தூரத்தில் தான் அவரது இடம்.

எனவே, தொடர்பு வந்தால், உடனே அவர் பதட்டத்துடன்
“சார் டெல்லி, சார் கல்கத்தா” என்று கத்துவார்….
உடனே நான் எழுந்து மெஷின் அருகே போய்,

செய்தி வந்துகொண்டிருக்கும்போதே அவர்களை இடைமறித்து, நீங்கள் செய்தி அனுப்பியவுடன், தொடர்பை நிறுத்தி விடாதீர்கள்… எங்களிடம் அவசர தகவல்கள் இருக்கின்றன.. இதே தொடர்பில் அவற்றை அனுப்பி விடுகிறோம் என்று சொல்லி அவர்கள் லைனை நிறுத்திக்கொள்வேன்….(எல்லாம் கீ போர்டு – எழுத்து மூலம் தான்)

அந்த மார்ச் 30-ந்தேதி, மாலை 4 மணி வாக்கில், டெல்லி பாதுகாப்பு
அமைச்சகத்திலிருந்து எங்களை தொடர்பு கொண்டு ஒரு செய்தியை அனுப்பத் தொடங்கினார்கள்… அது மெஷினில் வரும்போதே நான் ஆவலுடன் படித்துக்கொண்டிருந்தேன்…

” 5-ஆம் வகுப்பு வரை (பிரைமரி) – ஒரு புதிய செண்டிரல் ஸ்கூல் (கேந்திரிய வித்யாலயா) துவங்குவதற்கான இந்த வருடத்திய govt.sanction ஒன்று பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது… நாளை 31-ந்தேதியுடன் இந்த govt.sanction காலாவதியாகி விடும்…

ஆனால் – இதற்கான ஆசிரியர் பணியிடங்கள்,
கட்டிடங்கள், ஃபர்னிசர்கள் – ஆகியவற்றிற்கு
எந்தவித நிதி ஒதுக்கீடும் (budget allocation) கிடையாது…

இவை எதுவுமே இல்லாமல், உங்களால் பள்ளியை நடத்த இயலுமா…?

முடியும் என்றால் – உடனடியாக சொல்லுங்கள்…
உங்களுக்கு ஒதுக்க முயற்சிக்கிறோம்… ”
இந்த ரீதியில் சென்றது அந்த TPM message.

—————————————————–
இங்கே ஒரு பிரச்சினையை சொல்ல வேண்டும் –

எங்கள் தொழிற்சாலை டவுன்ஷிப்பில் ஒரு கேந்திரிய வித்யாலயா
(ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை) ஏற்கெனவே செயல்பட்டு
வந்தது. ஆனால், அனைத்து வகுப்புகளிலும் ஒரே பிரிவு மட்டும் தான்.

ஏப்ரல் மாதத்தில் – 35 இடங்கள் மட்டுமே இருந்த முதல் வகுப்பில் சேருவதற்காக சுமார் 150 குழந்தைகள் காத்திருந்தன…

அருகே வேறு எதுவும் பள்ளிகள் இல்லை.
டவுன்ஷிப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை என்றால்,
குழந்தைகள் தினமும் குறைந்த பட்சம் 10 கி.மீ.
தொலைவில் உள்ள வேறு தனியார் பள்ளிக்குத்தான்
செல்லவேண்டி இருக்கும்.

போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்தில்,
5 வயது குழந்தைகளை அவ்வளவு தூரம் அனுப்புவது
பெரிய பிரச்சினையாக இருந்தது.
இன்னொரு விஷயம் – கேந்திரிய வித்யாலயாவில் 1-ஆம் வகுப்பில் குழந்தையை சேர்த்து விட்டால், 12 வது வகுப்பு வரை கவலையே இல்லை.
அடிக்கடி பணி/ஊர் மாறிச் செல்லும் ஊழியர்களின்
குழந்தைகளின் படிப்பு எந்த ஊருக்கு சென்றாலும், கல்வியாண்டின்
இடையே சென்றாலும் கூட – தடைபடாது…
எல்லா கேந்திரிய வித்யாலயாவிலும், மாற்றலில் வருபவர்களின் குழந்தைகளுக்கு automatic ஆக அட்மிஷன் கிடைத்து விடும்.
தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு, பணிமாற்றத்தில் சென்றால் – குழந்தைகளின் படிப்பு சிக்கலாகி விடும்.

தொழிற்சாலை ஊழியர் மத்தியில்
இது ஒரு பெரிய கலக்கமாகவே இருந்தது….
தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் – யூனியன்களுக்கும்,
இதனால் பெரும் பிரச்சினை…! நிஜமான பிரச்சினை.
வழி காண முடியாத பிரச்சினை.

அதுவும் ஏப்ரல் அருகில் நெருங்கி விட்டதால், பல பெற்றோர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி இருந்தனர்…

தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில்,
மேல் மட்டங்களுக்கு -பலமுறை,
பலத்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. தலைமையகம் முதல்,
பாதுகாப்பு அமைச்சர் வரையில்…

ஆனாலும், ஒன்றும் நடக்கவில்லை….
நிதியமைச்சகம் கையைவிரிக்கிறது
என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

——————————————————-

அந்த message வந்தவுடன் அதை
மெஷின் பேப்பர் ரோலிலிருந்து கிழித்து எடுத்துக் கொண்டு,
TPM Operator -இடம், நீங்கள் அவர்களின் அனைத்து
மெசேஜுகளும் வந்தவுடன், நம் பக்கத்திலிருந்து அனுப்ப வேண்டிய
செய்திகளை அனுப்பிக் கொண்டிருங்கள்….

– லைன் தொடர்பு அறுபட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் ஜி.எம். அறை வரை போய்விட்டுவந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு, டெல்லி பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து வந்த மெசேஜை எடுத்துக்கொண்டு உடனடியாக பக்கத்திலிருந்த General Manager அவர்களின் அறைக்கு சென்றேன்.

அந்த ஜி.எம். அந்த தொழிற்சாலைக்கு வருவதற்கு முன்னால், சுமார் எட்டு ஆண்டுக்காலம் லண்டனில், இந்திய தூதரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்… மிகவும் கண்டிப்பானவர்.
எந்தவித விதிமுறை மீறல்களையும் அவர் அனுமதிக்க மாட்டார்.

——————————————————

இவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவம்,
அதன் பிறகு என் நிலை ஆகியவை பற்றி
முன்னர் கூட இந்த தளத்தில், ஒரு இடுகை எழுதி இருந்தேன்..

அது கடைசியாக – இப்படி முடிந்திருந்தது –

…………………..

// ஆனலும் கூட, அடுத்த 3 வருடங்கள்,
நெருங்கிப் பழக முடியாத இரும்பு மனிதராக இருந்த அவருடன் –

நான் நெருங்கி பணிபுரிந்த காலம், என் 40 ஆண்டுக்கால சர்வீசில்
மறக்க முடியாத, அற்புதமானதொரு காலம்….!!!

வெளியில் இருந்தால், நான் ஆற்றி இருக்கக்கூடிய
சமூகப்பணிகளை விட, அற்புதமான சில காரியங்களை
அங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது….! //

……………..

( இந்த இடுகையை படிக்க விரும்புவோருக்காக லிங்க் –

ஜி.எம். அறையில் என்ன நடந்தது……? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 3 )

—————————
நீண்டு விட்டது….
மீதியை அடுத்த பகுதியில் தொடர்கிறேன்…

..

அடுத்த பகுதி – பகுதி-2 – அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ….!!!
——————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.