…
…
இங்கு வருவதற்கு முன்பாக – நான் எங்கே இருந்தேன்…?
இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இருப்பேன்…?
அதன் பிறகு எங்கே போவேன்…?
அங்கே எனக்கு என்ன ஆகும்…?
நான் ஏன் இங்கே வந்து பிறந்தேன்…?
இன்ன ஊரில் தான்,
இந்த நேரத்தில் தான்,
இந்த தாய்க்கும், இந்த தகப்பனுக்கும் தான்
நான் மகனாக பிறக்கவேண்டும் என்று யார் முடிவு செய்தது…?
நான் ஏன் இதைவிட ஒரு பெரிய செல்வந்தர் மாளிகையிலோ,
இதைவிட மோசமான ஒரு ஏழையின் குடிசையிலோ
பிறந்திருக்கக் கூடாது…?
நான் கூன், குருடு, முடமாக பிறக்காமல் எப்படி
ஒழுங்கான அங்கங்களுடன் பிறந்தேன்…? இன்னும் சிலர்
குறைபாடுகளுடன் பிறப்பது ஏன்…?
நான் பெண்ணாகப் பிறப்பதா, ஆணாகப் பிறப்பதா
என்பதை தீர்மானித்தது யார்…?
இன்னும் இது போன்ற எத்தனையெத்தனையோ கேள்விகள் உண்டு…
இவை எனக்கு மட்டும் தனியானவை அல்ல.
உங்களுக்கும், இந்த மண்ணிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் –
பொருந்தக்கூடிய கேள்விகள் தான் இவை.
இன்பங்களை துய்க்கும்போது, யாரையும் நினைப்பதில்லை.
ஆனால், துன்பங்களை சந்திக்கும்போது –
எனக்கு மட்டும் ஏன் இப்படி …? என்று கேள்வி வருகிறது…
எனக்கு மட்டுமா இப்படி….?
உலகில் பிறந்த அனைவருக்குமே இன்ப துன்பங்கள்
கலந்தே தான் வருகின்றன…
ஆனால் – கேள்வி…” எனக்கு மட்டும் ஏன் இப்படி…?”
பணக்காரர்களுக்கு மட்டும் துன்பங்கள் இல்லையா…?
குடும்பத்தொல்லைகள் இல்லையா…?
உறவினர்களால் பிரச்சினைகள் இல்லையா…?
உடல் உபாதைகள், வியாதிகள் வருவதில்லையா…?
எத்தனை பணம் இருந்தும்,
விரும்பியதை சாப்பிட முடியாத
எத்தனை பேரை நாம் பார்க்கிறோம்…?
நாம் சந்திக்கும் இத்தனை துன்பங்களுக்கும் காரணமென்ன…?
மனிதர் சந்திக்கும் பிணி, மூப்பு, இறப்பு – இந்த மூன்றையும்
பார்த்து கலங்கிய சித்தார்த்தன் இதற்கு விடிவு தேடி –
இளம் மனைவியை, பிள்ளைகளை,
அரச வாழ்வை – துறந்தான்…
துறவறம் பூண்டான்…தவம் செய்தான்…..
புத்தனாக ஞானம் பெற்று திரும்பினான்…
அத்தனைக்கும் காரணம் “ஆசை”யே
என்று காரணம் கற்பித்தான்……
ஆனால், யோசித்துப் பாருங்கள்…
ஆசைகளை ஒழித்தால் மட்டும் துன்பங்கள் வராமல்
போய் விடுகிறதா…?
இல்லையே…
அந்தந்த ஆசையால் வரும்
விளைவுகளை மட்டுமே தவிர்க்க முடியும்…
பிணியைத் தவிர்க்க முடியுமா…?
மூப்பைத் தவிர்க்க முடியுமா…?
பசியைத் தவிர்க்க முடியுமா…?
ஒருவன் பிறக்கும்போதே சகல வசதிகளுடன்,
சகல செல்வங்களுடன் பிறப்பது எப்படி….?
மற்றொருவன், பிளாட்பாரத்தில் வசித்து உறங்கும்
பிச்சைக்காரன் மகனாக பிறப்பது எப்படி…?
ஒருவன் அற்ப ஆயுளில் செத்துப்போவது எப்படி…?
மற்றொருவன் 100 வயது வரை வாழ்வது எப்படி…?
பல ஆண்டுகளாக இத்தகைய கேள்விகள்
எனக்குள் எழுந்துகொண்டே தான் இருக்கின்றன…
உங்களில் பலருக்கும் இத்தகைய கேள்விகள் இருக்கலாம்.
ஆனால் இதற்கான விடைகள்…? விளக்கங்கள்…?
யார் தருவர்…?
மூச்சு நின்று விட்டது…
விழிகள் நிலைகுத்தி நிற்கின்றன…
அசைவே இல்லை…
டாக்டர் வருகிறார்… நாடி பிடித்து பார்க்கிறார்…
உதட்டைப் பிதுக்குகிறார்…
“அவர்” என்பது “அது” ஆகிறது…
வீட்டு நடுவே “கிடத்தப்படுகிறது “…
சடங்குகள் நிகழ்கின்றன…
தவழ்ந்து, நின்று, நடந்து, ஓடிய உடலை –
நான்கு பேர் தூக்கிச் செல்கின்றனர்…
பெற்ற மகனாலேயே – தீ வைக்கப்படுகிறது…
கைப்பிடி சாம்பலாகி நதியில், கடலில் கரைக்கப்படுகிறது….
..

..
ஆனால் – இத்தனையும் ஆன பின்பும் –
கதை முடியவில்லையா…?
இன்னமும் தொடர்கிறதா…? அது எப்படி….?

..
“புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம்….”
” மீண்டும் ஜனனம், மீண்டும் மரணம்
மீண்டுமொரு அன்னையின் கருவிலே துயில்…”
——————-
முந்தைய ஜென்மம்… அடுத்த ஜென்மம்…
இவைகளெல்லாம் உண்மையா…?
மனிதர் மீண்டும் மீண்டும்
மறுபிறவி எடுப்பது உண்மையா…?
இது எத்தனை காலத்துக்கு தொடரும்….?
( நாளைய தினம் (பகுதி-4-ல்) மீண்டும் தொடரலாம்……)
இதற்கு முந்தைய பகுதியை பார்க்க …..
————————
பின் குறிப்பு –
இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கத்தை தர விரும்புகிறேன்…
என்னைப் பொறுத்த வரை, அனைத்து மதங்களையும் நான் ஒன்றாகவே
பாவிக்கிறேன்… மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்றும்
விரும்புகிறேன்…..
எத்தனை நதிகள் ஓடினாலும்,
அவை அனைத்துமே இறுதியில்,
கடலில் சென்று சங்கமிப்பதைப் போல…
பயணிக்கும் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும்,
அனைத்து சமயங்களும், இறுதியில் ஒரே இறைவனிடமே
கொண்டு சேர்க்கின்றன என்பது என் நம்பிக்கை….
இருந்தாலும், இந்த கட்டுரைத் தொடரில், பல இடங்களில், ஹிந்து மத
சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை, அடிப்படையாக வைத்தே எழுதுகிறேன்.
பிற மதங்களிலும் இத்தகைய விஷயங்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கலாம். மற்ற சமயங்களைப்பற்றிய ஓரளவு தெளிவு எனக்கு இருந்தாலும், அவற்றைப் பற்றி விவரமாக பேசும் அளவிற்கு எனக்கு முழுமையாகத் தெரியாது. எனக்கு சரியாகத் தெரியாத விஷயங்களை நான் வியாக்கியானம் செய்வது சரியாக
இருக்காது….
இருந்தாலும், மற்ற சமயங்கள் – விதி, மறுபிறவி போன்றவை குறித்து என்ன கூறுகின்றன என்பதையும் நான் தெரிந்து கொள்ள ஆவலாகவே இருக்கிறேன்….
என்னைப் போலவே மற்ற வாசகர்களும் நினைப்பார்களென்று நம்புகிறேன்.
எனவே விதி, மறுபிறவி போன்றவை குறித்து –
இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த சமயங்கள் என்ன சொல்கின்றன
என்பதை அவை குறித்து நன்கு அறிந்த நண்பர்கள் பின்னூட்டங்கள் மூலம் தெரிவிக்கலாம்.
அப்படி எழுதும்போது, இது விவாதத்திற்காக எழுதப்படவில்லை;
இந்த விஷயங்கள் குறித்து, ஒவ்வொரு சமயமும் என்ன சொல்கிறது
என்று மற்றவர்களும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்
என்கிற நோக்கத்தோடு எழுதப்படுவது என்பதை அவசியம்
கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்…
.
———————————————————————————————————-



பிங்குபாக்: (பகுதி- 3) “மாயா உலகம்”- முடிவில்லாத கேள்விகள் …. – TamilBlogs
கே.எம்.சார்,
“முடிவில்லாத கேள்விகள் ” என்று பொருத்தமான தலைப்பு தான் வைத்திருக்கிறீர்கள். ஏகப்பட்ட கேள்விகள் ; இந்த கேள்விகள் எல்லாருடமும்
உண்டு. ஆர்வத்தோடு அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
இது விவாதத்திற்காக எழுதப்படவில்லை;
இந்த விஷயங்கள் குறித்து, ஒவ்வொரு சமயமும் என்ன சொல்கிறது
என்று மற்றவர்களும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்
என்கிற நோக்கத்தோடு எழுதப்படுவது என்பதை அவசியம்
கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்
Very nice