ரூ.2000 கோடி கருப்புப்பணம், நாட்டு மக்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது… இன்றைய செய்தி….!!!


இது இன்றைய செய்தி –

ஸ்விஸ் வங்கியில் முன்னாள் அதிபர் அபசா பதுக்கி வைத்திருந்த பணத்தை திரும்பப்பெற்று, அதை நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பேன் என்று 2015 தேர்தலின்போது தனது நாட்டு மக்களுக்கு வாக்களித்து, தேர்தலில் வெற்றியும் பெற்று அதிபராக பொறுப்பேற்றார் தற்போதைய நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி….

பதவியேற்ற பிறகு, தொடர்ந்து ஸ்விஸ் அரசுடனும், வங்கிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, முதல் கட்டமாக 2000 கோடியை விடுவித்து, உலக வங்கியின் மேற்பார்வையில், இந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற ஸ்விஸ் அரசும் ஒப்புக்கொண்டுள்ளது…!!!

————–

வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து, நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என்று தேர்தல் நேரத்தில் வாக்கு கொடுத்து விட்டு – பதவிக்கு வந்த பிறகு ….

இதென்ன பைத்தியக்காரத்தனம்… இதெல்லாம் நடைமுறை சாத்தியமானதா…? தேர்தல் பேசப்படும் செய்திகளை எல்லாம் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது…

– என்று ஜகா வாங்கும் நமது அரசியல்வாதிகளுக்கும், அவர்களை இன்னமும் நம்பும் ஏமாளி மக்களுக்கும் – இது நடைமுறை சாத்தியமானதா இல்லையா
என்பதை மேற்படி செய்தி தெரிவிக்கும்…

மேலே இருப்பது இன்று காலை வெளிவந்துள்ள செய்தி. அதற்கு முன்னதாகவே, கருப்புப்பணம் சம்பந்தமாக, இன்று காலை வெளியிடுவதற்காக நான் தயார் செய்திருந்த இடுகையை கீழே அப்படியே பதிப்பிக்கிறேன். எனக்கு ஆச்சரியம் தரும் விஷயம், என் பதிவை வெளியிடுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த நைஜீரிய செய்தி கிடைத்தது தான்….

—————————————————–

தலைப்பு – “அப்பன் குதிருக்குள் இல்லை” – என்று சொல்ல இரண்டு
நிதியமைச்சர்கள் தேவையா….??? !!!!

——-

உலகில் இல்லாத அதிசயமாய் இந்த பாரத மணித்திருநாட்டுக்கு மட்டுமென்று ஒரே சமயத்தில் ஒன்றுக்கு இரண்டாக கேபினட் அமைச்சர்கள் நிதியமைச்சராக வேலை பார்க்கிறார்கள்…!!!

எதிர்க்கட்சிகளும், நிறைய செய்தித்தளங்கள் இது சரியா…? ஒரு சமயத்தில் ஒருத்தர் தானே நிதியமைச்சராக செயல்பட முடியும் என்று கேட்டு விட்டன…

ஆனால் பதில் வர வேண்டிய இடத்திலிருந்து வழக்கம் போல்
” மௌன யோகா…”

ஆனால், இப்போது ஒரே விஷயத்தை இரண்டு நிதியமைச்சர்களும் தனித்தனியே சொல்லி இருக்கிறார்கள்…”எங்க அப்பன் குதிருக்குள் இல்லை…”

2016-ஆம் ஆண்டை விட, 2017-ஆம் ஆண்டு ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை /தொகை 50 % அதிகரித்திருக்கிறது. 2017-ல் மட்டுமே இந்தியர்களின் மொத்த வைப்பு 7000 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது என்று ஸ்விஸ் நாட்டிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது….

ஸ்விஸ் நாட்டிலிருந்து கருப்புப்பணத்தை இந்தியா கொண்டு வருவோம்
என்று சொல்லி பதவிக்கு வந்தவர்கள், இந்தியாவிலிருந்து மேலும் கருப்புப் பணத்தை வெளியே போக அனுமதித்தது எப்படி….?
– என்று ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் கேட்கத் துவங்கும் முன்னரே,
அவசர அவசரமாக இரண்டு நிதியமைச்சர்களும் தனித்தனியே கோரஸ் பாடுகிறார்கள்….

——–

” ஸ்விஸ் வங்கியில் இருப்பது எல்லாமே கருப்புப்பணம் என்று
சொல்வது தவறு….!!! ”

” இந்தியர்கள் என்று ஸ்விஸ் வங்கி சொல்வது வெளிநாடு வாழ்
(NRI) இந்தியர்களையும் சேர்த்து தான்…”

——–

சரி – உங்களிடம் இல்லாத புள்ளி விவரங்களா…?
பாஜக அரசு கொண்டு வந்த புதிய சட்ட விதிகளின்படி, வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், பணம் டெபாசிட் செய்வோர் –
இந்திய அரசுக்கு, (வருமான வரித் துறைக்கும், ரிசர்வ் வங்கிக்கும்.. )
அது பற்றிய தகவல்களை தந்தாக வேண்டும்….

” எல்லாமே கருப்புப்பணம் என்று சொல்வது தவறு ” என்று பொத்தாம்பொதுவாக அறிவிப்பு செய்வதை விட்டு விட்டு,

நிதியமைச்சகம் மூலமாக, இந்த தகவல்களை சரி பார்த்து, அதிகாரபூர்வமாக, புள்ளி விவரங்களை வெளியிடலாமே….

இத்தனை “வெள்ளை” …
இத்தனை சொல்லாமல் “ஓடிப்போன கருப்பு” என்று…..!

அதை விட்டு விட்டு – ஏன்… “எங்கப்பன் குதிருக்குள் இல்லை….???”

இன்னொரு common sense கேள்வி…

டெபாசிட்டுகளுக்கு, உலகிலேயே குறைந்த பட்ச வட்டி அளிப்பது –
ஸ்விஸ் வங்கிகள் தான். (சொல்லப்போனால் – சில வங்கிகளில் வட்டியே கிடையாது… 0% -)

அந்த வங்கிகளில் நமது ” இந்திய ” அல்லது ” NRI -இந்திய ”
பெருந்தொழிலதிபர்கள், பிரமுகர்கள் – இப்போதும் கொண்டு போய் பணத்தை – பதுக்குவது – sorry – சேர்த்து வைப்பது ஏன்…???
(இப்போது தான் ரகசியம் காக்கும் விதி கைவிடப்பட்டு விட்டதே…? )

இந்த கேள்விகளுக்கு –
தீவிரமாகவும், சுறுசுறுப்பாகவும்
பணியாற்றிக் கொண்டிருக்கும் –
இரண்டு நிதியமைச்சர்களிலிருந்து
யாராவது ஒருவர் விளக்கம் தந்தால் கூடப் போதுமானது….!!!

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ரூ.2000 கோடி கருப்புப்பணம், நாட்டு மக்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது… இன்றைய செய்தி….!!!

  1. பிங்குபாக்: ரூ.2000 கோடி கருப்புப்பணம், நாட்டு மக்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது… இன்றைய செய்தி….!!! – TamilBlogs

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    // இந்தியர்கள் என்று ஸ்விஸ் வங்கி சொல்வது வெளிநாடு வாழ் (NRI) இந்தியர்களையும் சேர்த்து தான்…//

    கா.மை சார்… இவர்கள் உளருவதற்கு எல்லை இல்லாமல் போகிறது.

    வெளிநாட்டு வாழ் இந்தியர் (அதாவது இந்தியக் குடிமகன்) ஏன் ஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் போடவேண்டும்? ஸ்விஸ் வங்கிகளில் போடப்படும் பணம் எல்லாம் உலகின் பிற பகுதிகளில் ஏய்த்துக் கொண்டுவரப்படும் பணம் மட்டும்தான். நான் படித்தபடி, சில வங்கிகளில் அதற்கு பணம் வசூலிக்கிறார்கள் (டெபாசிட் பண்ணின பணத்துக்கு).

    எனக்குத் தோன்றுவது… ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தன் கட்சியில் புத்தர்கள் மட்டும்தான் உறுப்பினர்கள் என்று நினைத்திருப்பார்கள். யார் யார் டெபாசிட் செய்துள்ளார்கள், கறுப்புப் பணம் யாரிடம் இருக்கிறது என்ற தகவல்கள் எல்லாம் தெரிந்தவுடன் (ஆட்சியில் இருக்கும்போது), அடடா.. இதை ஒழிப்பது சாத்தியமில்லை, தன் ஆட்களையும் காட்டிக்கொடுக்கவேண்டியிருக்கும் என்பது புரிந்திருக்கலாம்.. அதனால் இப்போது ஆளுக்கு வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

    பாஜக சொல்லிய பல ‘கொள்கைகள்’, அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்பு காணாமல்தான் போயிருக்கிறது. அவர்களின் முதன்மைக் கொள்கையான ‘அயோத்தியில் ராமர் கோவில்’ ஏன் நடைமுறைப்படுத்தமுடியாமல் இருக்கிறது (நல்லதோ கெட்டதோ, அதற்குள் நான் செல்லவில்லை).

    எனக்கு, நம் நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்வதே நல்லதா என்ற சந்தேகம் இருக்கிறது (சாதாரண சம்பாத்தியம்தான்… ஆனால் அதற்குமே ஆபத்து வந்துவிட்டால் வயதானபின்பு என்ன செய்வது?). இப்போதான், வங்கி திவாலானால் டெபாசிட்தாரர்களுக்கு ஒன்றும் தரவேண்டாம் என்பதுபோல் செய்திகள் வருகிறதே.

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    இரண்டு நிதியமைச்சர்களும் வந்து அவர்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு போய் விட்டார்கள்; அவ்வளவு தான். இனி வேறு யார் எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் வராது; அவர்களைப் பொறுத்தவரையில் மற்றவர்கள் அனைவரும் மடையர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.