“மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் ….(பகுதி- 1)



பிறப்பது நம் கையில் இல்லை…
இறப்பதும் நம் விருப்பத்தில் இல்லை…
எத்தனை நாட்கள் இங்கிருக்கப்போகிறோம்… ?
சுத்தமாக நமக்குத் தெரியாது…

அன்றாடம் சந்திக்கிறோம் ஆயிரம் பிரச்சினைகளை…
நாளை என்ன நடக்கப்போகிறது…?
எத்தகைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்….?
அவை எவ்வாறு முடியும்…?
எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது நம்மால் ….

நாம் இருப்பது ஒரு “மாயா உலகம்”…
நாமும் இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறோம்…அவ்வளவே…!
இதில் நமக்கு எந்த அளவு தெரியும்…?
நம்மைச்சுற்றி நிகழ்வனவற்றில்,
நமது பங்கென்ன….?
நாம் நினைப்பது போல் முடிவது எத்தனை…?

நம் பிறப்பை பற்றி, இருப்பைப் பற்றி, நடப்பைப் பற்றி –
கேட்க கேள்விகள் ஆயிரம் இருக்கின்றன நமக்கு…
ஆனால் விடைகள்…?

நான் இந்த மண்ணிற்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றன…
இங்கே பார்த்தது, படித்தது, கேட்டது, அனுபவித்தது, உணர்ந்தது,
தெரிந்து கொண்டது, சிந்தித்தது – என்று
நல்லதும், கெட்டதுமாக – ஏராளமான அனுபவங்கள்…
அதே போல் எனக்குள் எழுந்த கேள்விகளும் ஏராளம்…

அவற்றிற்கான விடைகளையும்,
விளக்கங்களையும் தேடி நான் படித்த புத்தகங்கள்,
அலைந்த இடங்கள், சந்தித்த துறவிகள், ஞானிகள் நிறைய….

கேள்விகள் சிலவற்றிற்கு முழுமையான் விடைகள் கிடைத்தன…
சிலவற்றை அனுபவத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது…
சிலவற்றிற்கு ஓரளவு விளக்கம் கிடைத்தது….

ஆனால் –

இன்னமும் விடை கிடைக்காத, விளக்கம் பெறாத,
புரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

இவற்றை எல்லாம் நான் இங்கே மற்ற நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்பினேன். யாருக்கும் பாடம்
சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு எனக்கு ஞானம் கிடையாது…
என் எழுத்தில் எங்கேயாவது அந்த தொனி வந்தால் –
அதை என் வயது, அனுபவம் காரணமாக வந்த உரிமை
என்று நினைத்துக் கொள்ளுங்கள்…..

என்னால் உணர முடியாத பல விஷயங்களை
மற்ற சில வாசக நண்பர்கள் அறிந்திருக்கக் கூடும்….

அவர்களின் பின்னூட்டங்கள் மூலமாக –
அவற்றையும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…
இது ஒரு அனுபவப் பகிர்வு மட்டுமே.
இங்கு கொடுத்தல், வாங்கல் இரண்டுமே நிகழும்…

இங்கே ஆன்மிகம் சம்பந்தப்பட்டவை
மட்டும் தான் என்றில்லை…

மனதை அலைக்கழிக்கும் எத்தனையோ விஷயங்களை
பேசலாம், விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்….

தனியாக தலைப்புக்குள் அடக்க வசதிப்படாத ஏராளமான
விஷயங்களை நான் இந்த தொடர்கட்டுரையில்
தொடர்ந்து விவாதிக்க விரும்புகிறேன்….
இதுவரை நாம் இந்த விமரிசனம் தளத்தில் அதிகம்
விவாதிக்காத ஆன்மிகம் – சற்று தூக்கலாக இருக்கலாம்….

ஆனால் – மற்ற தலைப்புகளும் உண்டு…..
ஆகாயத்திற்கு கீழே இருக்கும் எதைப்பற்றி
வேண்டுமானாலும் இங்கு பேசலாம்… வானமே எல்லை…!!!

என்னால் இயன்ற வரையில் இந்த கட்டுரைத்தொடரை,
பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் எடுத்துச்செல்ல
முயற்சிப்பேன்…. ஆனால், அதில் எவ்வளவு தூரம் வெற்றி
கிடைக்கும்…. எனக்குத் தெரியாது…
” அவன் ”
துணை புரிவான் என்று நம்புகிறேன்… வேண்டுகிறேன்.

வாரத்தில் இரண்டு நாட்களாவது இந்த தலைப்பில் எழுதலாம் என்று
இப்போதைக்கு தோன்றுகிறது…. போகப்போக பார்க்கலாம்.

மற்றபடி – வழக்கம்போல் நடப்பு அரசியல் பற்றிய இடுகைகளையும் –
தொடர்ந்து எழுத முடியுமென்று நம்புகிறேன்.

——————————————————————————-

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு…..!!!

என் அந்தக்கால நண்பர் ஒருவர்… உயிர் நண்பர்…
நான் அவரை கடைசியாகப் பார்த்து 37 -38 ஆண்டுகள் ஆகிவிட்டன…

” வேணு ” (வேணுகோபாலன்) …..நானும் அவரும் திருச்சியில் ஒரே
அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தோம். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தாலும், தினமும் காலையிலும், மதிய இடைவேளையிலும், மாலையிலும் நிச்சயம் சந்தித்துக் கொள்வோம்.

அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் (Sportsman )… ‘volley ball’ விளையாட்டில் மாநில அளவில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்…. அதே சமயம் ‘tennis’ விளையாட்டில் தேசிய அளவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
நல்ல உடற்பயிற்சி. உடல்வாகு… ஆஜானுபாகுவாக இருப்பார். ஆனால், மிக மிக soft-ஆன மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை… எத்தகைய நிலையிலும் கோபப்பட மாட்டார்.

நான் இதற்கு நேர் எதிர்…
ஞாயிறு காலைகளில் மட்டும் badminton விளையாடுவேன். நிறைய படிப்பது, பொதுநலம், தொழிற்சங்கம் என்று வேறுவித ஈடுபாடுகள்… எங்கே, யாருக்கு பிரச்சினை என்றாலும் போய் நிற்பேன்… என்னால் முடிந்ததைச் செய்வேன்.
தவறுகளை சகித்துக் கொள்ளவே மாட்டேன்.
ரொம்ப கோபப்படுவேன்…

வேணுகோபால் அந்த காலத்திலேயே ஸ்கூட்டர் வைத்திருந்தார். ஒரு நாள் மதியம் 12 மணியளவில் உணவு இடைவேளையில், சாப்பிடுவதற்காக வீட்டிற்கு போனார்…. வண்டியை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே போய் சாப்பிட்டு விட்டு, மீண்டும் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ஒரு மணிக்குள் ஆபிஸ் வர வேண்டும்…

ஆனால், அன்று – வரவில்லை.

வீட்டுக்கு போய் சாப்பிட்டார்.. மீண்டும் அலுவலகம் வர, வீட்டு வாசலில் இருந்த ஸ்கூட்டரை நோக்கிச் சென்றிருக்கிறார். வீட்டுக்கதவுக்கும், ஸ்கூட்டருக்கும் இடையே இருந்த சுமார் 10 அடி தூர இடைவெளியில் நடக்கும்போது, திடீரென்று கீழே விழுந்தார்.

மரணம் அடைந்தார்…. நொடியில் மாரடைப்பு….!
எந்தவித முன் அறிகுறியும் 2 நொடிகளுக்கு முன்னால் கூட இல்லை.

தாங்கவில்லை எங்களுக்கு…நம்பவே முடியவில்லை.. எங்கள் நண்பர் குழுவிற்குள் ரொம்ப நாட்கள் பேசிப்பேசி தவித்திருந்தோம். 38 வயதில், படு active ஆக இருந்த, ஒரு திடமான விளையாட்டு வீரருக்கு இப்படி ஒரு திடீர் மரணமா…?

இதற்கு என்ன காரணம்…?
ஏன் இப்படி நடந்தது….?
எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத, எல்லாரும் விரும்பக்கூடிய, பழக அற்புதமான இளைஞர் ஒருவர் – இப்படி திடீரென்று இறக்க –

காரணமென்ன….?

( நாளை மீண்டும் இந்த தலைப்பில் சந்திப்போம்….(முடிந்தால்)…!!! )

இதன் அடுத்த பகுதியைக் காண ….
——————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to “மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் ….(பகுதி- 1)

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காரணம் புரியாதவைகளுக்கு எப்படி காரணம் தேடமுடியும்?

    எது செய்தால் நிம்மதியான மரணம் வரும் என்று சொல்லமுடியும்? அன்றன்றைக்கான வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து, முடிந்தவரை மேலும் பாவம் செய்யாமல், முடிந்தவரை பிறரது உதவியைக் கோராமல், அடுத்தவர்களுக்கு முடிந்தால் உதவி செய்து வாழ்தால் நிம்மதியான முடிவு வருமா? சொல்லத் தெரியவில்லை. இதை ‘கர்மா’ என்ற அருமையான கான்செப்டில் அடக்கிவிடுகின்றனர்.

  2. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    pls go ahead,share ur experiences

  3. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    மரணம் — வாழ்க்கை நமக்கு ஒளித்து வைத்திருக்கும் கடைசி அதிசயம்!

  4. Raghuraman's avatar Raghuraman சொல்கிறார்:

    நீங்கள் இதைப்பற்றி எல்லாம் எழுதினால் நன்றாக இருக்குமே என்று
    நினைத்திருந்தேன். நீங்களே துவக்கி விட்டீர்கள். இவை குறித்து
    தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. உங்கள்
    எழுத்தின் மூலமும், அனுபவத்தின் மூலமும் நீங்கள் உணர்ந்தவற்றை இங்கு கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். please
    go ahead and share your thoughts and experiences with us.

  5. பிங்குபாக்: “மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் ….(பகுதி- 1) – TamilBlogs

  6. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    வாழ்க்கை புதிரானது. பல விஷயங்கள் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாதது. அப்படி தான் மனிதன் படைக்கப் பட்டிருக்கிறான்.

    ஏனென்றால், மனிதர்களுக்கு சிறிய அளவிலான அறிவே கொடுக்கப்பட்டு இருப்பதாக இறைவன் கூறுவதாக அறிகிறோம்.

    அப்படி நமக்கு என்ன கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதனடிப்படையில் தான் நாளை(மறுமையில்) நாம் கேள்வி கேட்கப்படுவோம்.

    அது அறிவுச்செல்வமோ பொருட் செல்வமோ இரண்டுமோ எதுவாகவுமோ இருக்கலாம். நமக்கு கொடுக்கப் பட்ட அனைத்தையும் பற்றி கேட்கப்படுவோம். நம் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரிக்கப் படுவோம்.

    இந்த சிறிய அளவில் கொடுக்கப்பட்ட அறிவையும் பொருளையும் வைத்துகொண்டு மனிதன் ஆடும் ஆட்டம் இருக்கிறதே…கொள்ளும் அகந்தை இருக்கிறதே…இதுவும் விசாரணைக்கு உரியதே.

    ஆகவே, பல விசயங்கள் விளங்கவில்லை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அலட்டிக் கொள்ள தேவை இல்லை என்பது என் புரிதல்.

    அப்படி சொற்பமாக கொடுக்கப் பட்டவற்றில் முக்கியமானது “விதி”.
    சொற்பமாகவே கொடுக்கப்பட்ட அறிவை கொண்டு விதியை தர்க்கம் செய்யவோ விவாதம் செய்யவோ முடியாது, கூடாது. முழுமையாக அறிந்து கொள்ள முயற்சிப்பதும் கூட அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது? கொடுக்கப் படாததை பெற முடியுமா?

    வேணுகோபால் மாதிரியான சம்பவங்கள் ஏராளம் சொல்லலாம். அது விதியின்பாற் பட்டது. நமக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும். ஆனால், நம்மால் ஆகக் கூடியது ஒன்றும் இல்லை, விதி வலியது என்று கடந்து சென்று விட இந்த நம்பிக்கை பெரிதும் உதவும். உற்றார் உறவினர்களை பறிகொடுத்து உயிரோடு இருப்பவர்களுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வாழ்க்கையே இருளடைந்த நிலை ஏற்படுபவர்களுக்கும் விதியின் பாற் வைக்கும் நம்பிக்கை இருக்கிறதே அது ஒரு மிகப்பெரிய மன ஆறுதல் தருவது தின்னம்.

    உலகில் நடக்க கூடிய மற்ற பல நிகழ்வுகளை நினைத்தால் நம்மால் சரியாக தூங்க முடியுமா?

    உதாரணமாக,

    நல்ல பெற்றோருக்கு பிறந்த குழந்தை கடத்தப்பட்டு முடமாக்கப்பட்டு பிச்சை எடுக்கவைக்கப் படுவதையும் நல்ல குடும்பத்தில் வளர்ந்த இளம் வயது பெண் கடத்தப்பட்டு விற்கப்பட்டு அந்த பெண்ணின் வாழ்க்கை நாசமாக்கப் படுவதையும் பற்றி சிந்தித்து இருக்கிறோமா?

    இன்னும், இலங்கையில் சிறார்கள் பள்ளியில் இலங்கை இராணுவம் நடத்திய குண்டு வீச்சிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்கிஸ்தானில் குழந்தைகள் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திலும் கொள்ளப்பட்ட குழந்தைகள் என்ன பாவம் செய்து இருப்பார்கள்…? இப்படி
    இன்னும் ஏராளமாக சொல்லிக் கொண்டு போகலாம்…

    இதற்கெல்லாம் ‘கர்மா’ தான் காரணம் என்று சொன்னால்….?

    சொல்பவர்கள் இந்த கேள்விக்கு பதில் சொன்னால் நல்லது.

    முற்பிறவியின் கர்மா தான் இந்த பிறவியில் நன்மை தீமை ஏற்படுவது என்று கொண்டால்…

    இந்த பூமியில் ஆரம்பத்தில் முதன் முறையாக பிறந்து இருப்பார்களே அவர்களுக்கு எந்த முற்பிறவியின் கர்மா காரணமாக இருக்கமுடியும்…?

    போலவே, ஏழு பிறவி என்ற ஒன்று சம்பந்தமாக ஒரு கேள்வி எழுகிறது.

    இன்று உலகம் அழியப்போகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்று புதிதாக பிறக்கும் குழந்தைகள் அதாவது ஏழு பிறவி எடுத்து வராத முதல் பிறவியோ இரண்டாவது மூன்றாவது பிறவிகளோ எடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு ஏழு பிறவி பூர்த்தியடையாமலே இன்று உலகம் அழிந்தால் இறந்து விடுமே. அந்த குழந்தைகளுக்கு ஏழு பிறவி மறுக்கப்படும் நிலை ஏற்படுமே. இதற்கு என்ன பதில்?

    பதில் கிடைத்தால் நல்லது. இல்லை என்றால்…

    மேலே சொன்ன அனைத்துக்கும்… ஒரு பிறவி தான் அதில் இறைவன் விதித்த விதி தான் பிரதானம் என்று கொண்டால்…

    குழப்பங்களோ விடை கிடைக்காத கேள்விகளோ எழ வாய்ப்பில்லை. எல்லாம் அவன் செயல் என்று அவனிடமே பொறுப்பை சாட்டிவிடலாம்.

    எல்லாத்திற்கும் “அவன்” போதுமானவன்.

  7. Ramanarayanan Raman's avatar Ramanarayanan Raman சொல்கிறார்:

    Please read the holographic concept in latest physics research where the scientists propose that the universe is indeed a hologram.

  8. பிங்குபாக்: (பகுதி- 2) “மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

  9. G. Velmurugan's avatar G. Velmurugan சொல்கிறார்:

    “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.