“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்திஜி சொன்ன கதையொன்று…..!!!


இந்தியா, சீனா – வெளியுறவுக் கொள்கை அடிக்கடி மாறி வருவது குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அழகான உதாரணம் ஒன்றினைக் கூறி விளக்கி இருக்கிறார் குருமூர்த்தி அவர்கள்.

..

..

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில், ‘எதிரியுடன் நட்பு சாத்தியமா..?’ என்கிற கேள்வி ஒன்று எழுகிறது. தர்மபுத்திரர், பீஷ்மரிடம் இது குறித்து கேட்கிறார்… பீஷ்மர் அதற்கு எலி-பூனை உறவை உதாரணமாக கூறி, அது சாத்தியமே என்று விளக்குகிறார். பீஷ்மர் கூறிய அந்த கதை கீழே –

———————

ஒரு மரப்பொந்தில் ஒரு எலி இருந்தது. அதை ஒரு பூனை குறி வைத்துக்கொண்டே இருந்தது. தினமும் எலி உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தது. ஒருநாள் பூனை பிடிக்கும் குறவன் வலையில், பூனை சிக்கிக் கொண்டது. எலிக்கு ஒரே கொண்டாட்டம்.

அப்போது பூனை, எலியைப் பார்த்து, “நீ வலையை கடித்து என்னை விடுவித்து விட்டால், நான் வாழ்நாள் முழுவதும் உனக்கு நன்றியுடன் இருப்பேன். நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறியது. அதற்கு எலி “உன்னை நான் விடுவித்த பிறகு உன் மனது மாறி விடும். என்னை தின்பது என்பது உன் பிறவிக் குணம். ஆகையால், நீ ஒழிந்து போவது தான் எனக்கு நன்மை” என்று கூறுகிறது.

அந்த சமயத்தில் பாம்பு ஒன்று வருகிறது. பாம்பு எலியை தின்று விடும்.
ஆனால், பூனையிடம் போகாது.

எனவே, எலி, பூனையிடம் “பாம்பிடமிருந்து என்னைக் காப்பாற்றி விடு. பிறகு நான் உன்னை விடுவிக்கிறேன்” என்று கூறியது. பூனை அதற்கு ஒப்புக்கொள்ள,
எலி வலைக்குள் சென்று பூனையின் பக்கத்தில் படுத்துக் கொண்டது.

பாம்பு, சீறியெல்லாம் பார்த்து விட்டு பலனில்லாமல் சென்று விட்டது.
“இப்போது என்னை விடுதலை செய்வாயா..?” என்று பூனை கேட்க,
எலி “நிச்சயம் செய்வேன். ஆனால் கொஞ்சம் பொறு” என்றுசொன்னது.

சிறிது நேரம் கழித்து, பூனைக் குறவன் சிறிது தூரத்தில் வருவது
தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் அருகில் வரவர பூனைக்கு
திகில் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால், அவன் ஒரு குறிப்பிட்ட
தூரத்தில் வந்தவுடன், குறவனிடமிருந்து பூனைக்கு தப்பிக்க மட்டுமே
நேரம் கொடுத்து, எலி வலையை கடித்து, பூனையை விடுவித்தது.
பூனைக்கு எலியை தாக்க நேரமில்லை….

இது தான் எதிரியிடம் உறவு வைத்துக் கொள்ளும் முறை என்று
பீஷ்மர் விளக்கினார்.

———————-

மிகப்பொருத்தமான, சரியான உதாரணம் கூறிய குருமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள்.

——————–

ஆனால், நான் சொல்ல வந்த கதை இத்தோடு முடியவில்லை….!!!
வெளியுறவுக்கு மட்டும் தானா இந்தக் கதை….?
உள்நாட்டு அரசியலுக்கும் இதே கதை தானே ….?

நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். சந்திரபாபு நாயுடுவும் பாஜகவும் முதலில் எப்படி ‘ஜிக்ரி தோஸ்த்'(பிறவி நண்பன்…) உறவு வைத்துக் கொண்டார்கள்…. பிறகு எப்படி பிரிந்தார்கள் என்று….

அதே போல், காஷ்மீரில் மஃப்டி அவர்களின் பிடிஎஃப் கட்சியுடன் பாஜகவுக்கு, எப்படி உறவு உருவானது……பிறகு இப்போது எப்படி முறிந்தது என்று….

அடுத்து நான் சொல்லப்போகும் செய்தி இன்னமும் வெளியில் பரவவில்லை…. நம்புவதற்கு கடினமாக இருக்கும்….!!! இருந்தாலும், உருவாகிக் கொண்டிருக்கும் நிகழ்வு இது….!!!

மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து federal front என்கிற 3-வது அணியை அமைக்க வேண்டும்; அடுத்து வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில்,
பாஜகவை ஒழித்துக் கட்ட வேண்டும்…”பாஜக இல்லாத இந்தியாவை” உருவாக்க வேண்டும் என்றெல்லாம் எள்ளுருண்டை மாதிரி துள்ளிக்குதித்தாரே –

அதற்காக, மம்தா, ஸ்டாலின் ஆகியோரை எல்லாம் சென்று பார்த்து ஆர்வமாக, தீவிரமாகப் பேசினாரே ….தெலங்கானா முதலமைச்சர் திருவாளர்
சந்திரசேகர் ராஆஆஆவ்….

..

அவர் –

தான், இதுவரை வெளியில் சொன்னதற்கு நேரெதிராக, வரவிருக்கும் பாராளுமன்ற மற்றும் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கியமாவதற்கான ரகசிய முயற்சிகளை துவங்கி விட்டார்….

உரிய காலத்திற்கு முன்பாகவே, டிசம்பர் 2018-லேயே
தெலங்கானா சட்டமன்ற தேர்தலை நடத்த பாஜக அரசு தனக்கு உதவ வேண்டுமென்றும், அதற்கு கைம்மாறாக, 2019 பாராளுமன்ற தேர்தலில், தனது கட்சி பாஜகவுடன் கூட்டு சேரும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

பாஜகவும் முழு ஆர்வத்தோடு இந்த கூட்டணி முயற்சியை வரவேற்கிறது….

ஆனால் –
இந்த எலியைப்பற்றி மோடிஜிக்கும், அமீத்ஜீக்கும் தெரியாதா என்ன….?
டிசம்பரில் சட்டமன்ற தேர்தலை தனக்கு சாதகமாக
முடித்துக் கொண்டு, மே 2019-ல் பாராளுமன்ற தேர்தலின்போது, பாஜகவுக்கு எதிரான கட்சிகளுடன் இந்த எலி சேராது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன…?

எனவே, இந்த கூட்டணியை வரவேற்கும் அதே நேரத்தில்,
அதற்கு தேவையான உரிய “பந்தோபஸ்த்”துகளை அவர்கள் கவனித்துக்
கொள்வார்கள் என்று நம்பலாம்…

உரிய சமயத்தில் தகுந்த அறிவிப்பு வெளியாகும். அதுவரை ராஆஆஆவ் அடக்கி வாசிப்பார்…!!!

– எனவே, எலி-பூனை கதை –
வெளியுறவுக்கு மட்டுமல்ல என்றறிக … 🙂 🙂 🙂

.
——————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்திஜி சொன்ன கதையொன்று…..!!!

  1. பிங்குபாக்: “துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்திஜி சொன்ன கதையொன்று…..!!! – TamilBlogs

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    ராஆஆஆஅவ் கதை புதுசா இருக்கே.
    நிஜமாகவா ?
    அடேயப்பா எப்பேற்பட்ட ஜெகதலப்பிரதாபன் அந்த ஆள் !

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ஆக, பூனைக்கு ஒரு வேடவனையும் கடவுள் படைத்துள்ளார் என்பதை பூனை அறிந்து அதிகம் ஆடாமல் இருக்கனும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.