ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால் …???


ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால், விவசாயிகளை திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – சொல்வது …..???

உண்மையிலேயே பிரச்சினை இருந்தால், விவசாயிகள் தாமாகவே திரண்டெழுந்து போராட முனைய மாட்டார்களா…?

அவர்களது பிரச்சினைக்காக, அவர்களையே அணி திரட்ட இவர் தான் போக வேண்டுமா…?

காவிரி பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டால் தீர்த்து வைக்கப்பட்டது தமிழ் நாட்டின் சில VIP -க்களை – (வேலை இல்லா பொலிடிஷியன்ஸ்களை ) படாதபாடு படுத்தி விட்டது….

கடந்த பல மாதங்களாக கனவிலும் நினைவிலும், அனைத்துகட்சி கூட்டம், போராட்டம் போராட்டம் என்று மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே இருந்தவர், திடீரென்று ஒரு anti-climax -ஐ சந்திக்க நேரிட்டதில், இன்னமும் அந்த பழைய போராட்ட tone -லிருந்து வெளிபட்டு வரமுடியவில்லை போலும் ….

காவிரி குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, கட்சி பேதமின்றி தமிழக விவசாயிகள் (கம்யூனிஸ்டு கட்சி உட்பட ) அனைவருமே வரவேற்கிறார்கள்… 40 ஆண்டுகளாக நிம்மதியிழக்கச் செய்த ஒரு பிரச்சினைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டிருப்பது விவசாயிகளை நிம்மதிப் பெருமூச்சு விட அனுமதித்திருக்கிறது…

கீழே திமுக ஆதரவு பத்திரிகையான தினகரன் செய்தி –

1983-ல், சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, அதன் தொடர்ச்சியாக, காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை பதிவுசெய்து, அதன் சார்பாக காவிரி விவகாரத்தில் நியாயம் கேட்டு,

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னம்பிக்கையோடு அதை விடாமல் நடத்தி –

இன்று இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அடிப்படைக் காரணமாக இருந்தவர் திரு. ரங்கநாதன் அவர்கள்….

அவர் கூறுவது –

———
காவிரி மேலாண்மை ஆணையத்தை சுப்ரீம் கோர்ட் அமைத்தது வரவேற்கத்தக்கது…. இதனால், 40 ஆண்டு கால முயற்சி நிறைவேறி உள்ளது …..

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது ஒரு முழு அதிகரம் படைத்த அமைப்பாகும். இதில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் தலையிட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் குழுவானது டில்லியில் இருந்துதான் செயல்படும். தமிழகத்தை சேர்ந்தவர்களோ, கர்நாடகத்தை சேர்ந்தவர்களோ நதிக்கு சொந்தம் கொண்டாட முடியது.

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து எத்தனை டிஎம்சி நீரை ஜூன் முதல் மே வரை வெளியேற்ற வேண்டும்… அந்த தண்ணீரானது மேட்டூருக்கு வரும்போது எந்த அளவில் விநியோகம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒழுங்காற்று குழு பார்த்து கொள்ளும்.

————–

எனவே, மேலும் மேலும் குழப்பங்களை உருவாக்காமல், உருவாக்கப்பட்டிருக்கும் ஆணையம் வெற்றிகரமாக செயல்படும் விதத்தைப் பற்றி யோசிப்பது நல்லது… அதற்கான, பயனுள்ள யோசனைகளை கூறுவது நல்லது…

இன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர் அளவு 32 அடி… அணை திறக்கப்பட்டு, குறுவைப் பாசனம் துவங்க வேண்டுமானால், குறைந்த பட்சம் 50 நாட்களுக்காவது தண்ணீர் தொடர்ந்து விடப்பட வேண்டும்…. 32 அடி தண்ணீரை வைத்துக் கொண்டு எவ்வளவு நாட்கள் அணையை திறந்து வைக்க முடியும்…? நீர் தஞ்சையை அடைவதற்குள்ளாகவே
அணை காலியாகி விடுமே….

கர்நாடகாவில் காவிரியின் 4 அணைகளிலும், உண்மையிலேயே நீர் மட்டம் குறைவாகவே இருக்கிறது. தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தான் கர்நாடகாவில் துவங்கும். சரியான நேரத்தில் பருவ மழை துவங்கி விடுகிறது என்றே வைத்துக் கொண்டாலும் கூட குறைந்த பட்சம் 15 நாட்களாவது மழை பெய்தால் தான் அணைகளுக்கு ஓரளவு நீர் வந்து சேர்ந்து, தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவது சாத்தியமாகும்…….

சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ள மாதாந்திர பங்கீட்டின்படி நீர் விடப்பட்டால் கூட, ஜூன் மாதம் 7.5 டிஎம்சி நீர் தான் கொடுக்கப்பட வேண்டும்….. ஜூலையிலிருந்து தான் கூடுதல் நீர் கொடுக்கப்பட வேண்டும்….

பருவமழை நம்பிக்கை தருகிறதா, தொடர்ந்து நீர் வரத்து இருக்குமா என்பதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல், உறுதி செய்துகொள்ளாமல் – குறுவை சாகுபடியை துவக்க தமிழக விவசாயிகளே தயாராக இல்லை…

இது குறித்தெல்லாம் எந்தவித சிந்தனையும் இல்லாமல் – அணையை திறக்கிறாயா இல்லை போராட்டத்தை துவக்கவா என்று பேசுவது அபத்தமாக இல்லை…?

மத்திய அரசின் ஆணை, அரசு இதழில் (கெஜட்டில்) வெளியிடப்பட்டாக வேண்டும். தனியே, டெல்லியில் அலுவலகம் அமைக்கப்பட்டாக வேண்டும்…

அதற்கான அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அடிப்படைப் பணிகள் துவங்கப்பட்டாக வேண்டும்…..

சம்பந்தப்பட்ட 4 அணைகளிலிருந்தும், விவரங்கள் திரட்டப்பட்டு, மேலாண்மை ஆணைய ஆவணங்களில் /கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த அடிப்படை விஷயங்கள் தயாரான பின்னர் தான் ஆணையம் உறுதியாகவும், தீவிரமாகவும் செயல்படத் துவங்க முடியும்…..

எப்படியும் ஜூன் மூன்று அல்லது நான்காவது வாரத்திற்கு முன்னர் அணைகள் திறக்கப்பட வாய்ப்பில்லை.

எனவே, பணிகளை துரிதப்படுத்துங்கள் என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது…

உடனே அணையை திறக்கிறாயா… இல்லை போராட்டத்தை துவக்கவா என்று கேட்பது……? இந்த அரசியல்வாதிகள் கொஞ்ச காலத்திற்கு அமைதி காப்பது பிரச்சினை தீர்வு பெற உதவியாக இருக்கும்.

இன்னொரு விஷயம் –

அதற்குள்ளாக தபாஜக தலைவர் காவிரி ஆணையம் நியமிக்கப்பட உச்சநீதிமன்றம் காரணம் அல்ல… மத்திய பாஜக அரசு தான் காரணம்… அதற்கு தான் நன்றி சொல்ல வேண்டுமென்று பேச ஆரம்பித்து விட்டார்… இதைத்தொடர்ந்து பல தலைவர்களும் இதற்கு தாங்கள் தான் காரணம் என்று உரிமைக்குரல் கொடுக்கத் துவங்கி விடுவார்கள் என்று நம்பலாம்.

உண்மையிலேயே இன்றைய தினம் காவிரி பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட்டிருப்பதற்கு காரணமானவர்கள் என்று சொல்ல வேண்டுமானால் –

– 40 ஆண்டுகளாக, விடாமுயற்சியுடன், அனைத்து தரப்பினரையும் அரவணைத்துக்கொண்டு சட்டப் போராட்டம் நடத்திய காவிரி விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவர் திரு.ரங்கநாதன் …

– எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் – மத்திய அரசு, கர்நாடக அரசு இரண்டுமே – தமிழகம் தண்ணீர் பெற உதவியாக இருக்காது என்பதை புரிந்துகொண்டு, இந்த பிரச்சினைக்கு சட்டபூர்வமான அணுகுமுறையே சரியானதாக இருக்குமென்று தீர்மானித்து, சட்டப்போராட்டத்தை தொடர்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்…

– கடந்த 4-5 மாதங்களாக, வழக்கு இறுதி நிலையை எட்டிய சமயத்தில் – வெகு திறமையாக வாதாடி, மத்திய அரசின் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், தமிழகத்தின் உரிமையை, அவலத்தை – உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு புரிய வைத்து தமிழ் நாட்டின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சேகர் நபாடே மற்றும் அவரது குழுவினர்….

– காவிரி பற்றிய சகல விவரங்களையும் அறிந்து வைத்திருக்கும் திரு.சுப்ரமணியம் மற்றும் தமிழகத்தின் நீர்ப்பாசனத்துறையின் மூத்த அதிகாரிகள், ஆகியோர்….

– தமிழக அரசில், வித்தியாசமாகச் செயல்படும் இரண்டு-மூன்று அமைச்சர்களில் சட்ட அமைச்சர் திரு.சண்முகமும் ஒருவர்…..வழக்கில் எப்படியாவது நல்ல தீர்ப்பை பெற்று விட வேண்டுமென்கிற உறுதியுடன், ஒவ்வொரு விசாரணை நாளன்றும், விடாமல் டெல்லிக்கு சென்று முகாமிட்டு, நீதிமன்றத்திலும் ஆஜராகி, சம்பந்தப்பட்ட தமிழக team-ஐ உற்சாகப்படுத்திய தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் அவர்கள்….

-ஆகியோரைச் சொல்லலாம்….

( இன்னும் யாராவது விடுபட்டுப்போயிருக்கிறார்களென்று, நண்பர்கள் எண்ணினால்,
பின்னூட்டத்தில் சொல்லலாம்…)

இந்த ஆண்டு நிச்சயம் தமிழக / கர்நாடக மக்களின் மீது இயற்கை அன்னை கருணை காட்டி, நல்ல மழை பொழியச்செய்து, துன்பங்கள் தீர உதவுவாளென்று நம்புவோம்…வேண்டுவோம்..

———————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால் …???

  1. பிங்குபாக்: ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால் …??? – TamilBlogs

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நான் ஊன்றிப் படித்த இடுகை இது. நல்ல சமயத்தில் சரியாக எழுதியிருக்கீங்க. அதற்கே பாராட்டுகள். அதிலும் நீங்கள் யார் யாருக்கெல்லாம் பாராட்டு சேரவேண்டுமோ அவர்களை விட்டுவிடாமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    முதல்ல இந்த அரசியல் வியாதிகள், காவிரிப் பிரச்சனையில் நுழைவதைத் தடை செய்யணும். எல்லோரும் அனைத்துக் கட்சிக் கூட்டம் அது இது என்று ‘வெட்டி பந்தா, பெருமைக்குத்தான்’ உழைக்கிறார்களே தவிர, அவர்களுக்கு பிரச்சனை தீரவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. பிரச்சனையில் உண்மையிலேயே அவர்களுக்கு அக்கறை இருந்தால்,
    1. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளையும் தனிமைப்படுத்துவோம். அவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம்.
    2. சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டும் என்று பார்த்து ஆளுகின்ற கட்சிக்கு முழு ஆதரவைத் தருவோம்
    என்று டிக்ளேர் செய்தால், இவர்களுக்கு காவிரிப் பிரச்சனையின் மீதும், விவசாயிகளின் மீதும் அக்கறை உண்டு என்று கருதலாம்.

    அதை விட்டுவிட்டு, அனைத்துக் கட்சி, டெல்டா பகுதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்று ஜல்லியடிக்கிறார் ஸ்டாலின். எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கிறது தமிழக பாஜக (அவர்களால்தான் ஆணையம் உருவாகப்போகின்றது என்று). பாஜகவின் அறிக்கையைப் படித்துவிட்டு, குருவி மூளை உள்ளவர்கள் கூட, பாஜக இதில் நியாயமாக நடந்துகொண்டது என்று கனவிலும் கருதமாட்டார்கள்.

    எனக்குத் தெரிந்து காவிரி விஷயத்தில் உண்மையாக உழைத்த ஒரே அரசியல்வாதி ஜெ. மட்டும்தான். அவருக்கு மட்டும்தான் பாராட்டு போகவேண்டும் (அரசியலில்)

  3. BVS's avatar BVS சொல்கிறார்:

    நண்பர் புதியவன். சரியாகவே சொல்லி இருக்கிறார். அவர் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். தமிழக விவசாயிகள் அப்பாவிகள். ஆனால் உண்மையானவர்கள். இந்த பசப்புக்கெல்லாம் அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.
    அவர்களுக்கு தெரியும் ஆணையம் வந்தது எவ்வளவு பெரிய நன்மையென்று.

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    நீங்கள் குறிப்பிட்டவர்கள் காவிரிக்காக உண்மையாக பாடுபட்டவர்கள் .. ஆனால் சிலர் தங்களின் நலனுக்காக விட்டுக் காெடுத்தவர்கள் என்பது வரலாற்று சான்று …! காவிரி மேலாண்மை வாரியம் என்பதை அரசிதழில் பதிவிட சட்டப் பாேராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா ..அதையே தங்களால் தான் கிடைத்தது என்று உள்ளே புகுந்து சாெந்தம் காெண்டாட நினைத்தவர்களையும் மறக்க முடியுமா …?

    தற்பாேதும் எங்கே மற்றவர்களுக்கு பெயர் சென்று விடுமாே என்கிற ஆதங்கத்தில் நடுவிலே சிந்துப் பாட துடிக்கிறார்கள் …உண்மையில் முழுமுதல் காரணம் விவசாயிகள் தான் …. வயிறு பசித்தவனுக்குதான் தெரியும் காவிரியின் முக்கியத்துவம் … உயிர் தியாகம் செய்தவர்கள் அவர்கள்தான் …!!! நல்லது நடக்கட்டும் …!

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பெட் ரோல் – டீசல் விலை –
    இன்றைய பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரையிலிருந்து –
    வாசக நண்பர்களின் தகவலுக்காக கீழே எடுத்துத் தந்திருக்கிறேன்.

    —————————–

    இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை
    எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?

    ..
    உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே விலையில்தான் வாங்குகின்றன.

    ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வெவ்வேறு வரி விதிமுறைகளால் நுகர்வோருக்கு விற்கப்படும் பெட்ரோலின் விலையில் வித்தியாசம் நிலவுகிறது.

    இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?

    ஓரு பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது கிட்டதட்ட 159 லிட்டர் அளவை கொண்டது. கச்சா எண்ணெய் அமெரிக்க டாலர்களில் விற்கப்படுகிறது.

    ஒரு பீப்பாயின் விலை 75 டாலர்களாகவும், ஒரு டாலரின் இந்திய மதிப்பு 68 ரூபாயாகவும் கணக்கில் கொள்வோம். அதனடிப்படையில் எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

    ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை – 5,100 ரூபாய் (75 x 68)

    ஒரு லிட்டர் எண்ணெய்யின் விலை – 32.08 ரூபாய் (5100/159)

    தோராயமான அடிப்படை பராமரிப்பு கட்டணத்தில் நுழைவு கட்டணம், சுத்திகரிப்பு கட்டணம், கப்பல் வழியாக தரைக்கு இறக்குமதி கட்டணம், மற்ற அடிப்படை செயல்பாட்டுச் செலவு, அடிப்படை செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவு, போக்குவரத்துச் செலவு, கப்பல் வழியாக எண்ணெய்யை எடுத்துவரும் செலவு உள்ளிட்டவை அடங்கும்.

    ஒரு லிட்டருக்கான (பெட்ரோல்) தோராயமான அடிப்படை பராமரிப்பு கட்டணம் – 5.93 ரூபாய். இதே கட்டணம் ஒரு லிட்டர் டீசலுக்கு 8.78 ரூபாய்.

    ஆகவே ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை – ரூ. 38.01

    ஒரு லிட்டர் டீசலின் அடிப்படை விலை – ரூ. 40.86

    ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை நுகர்வோரை சென்றடையும் போது எப்படி இரு மடங்காகிறது?

    மத்திய அரசு விதிக்கும் வரிகள் பெட்ரோல் டீசல்
    கலால் வரி + சாலை வரி ரூ 19.48 (ஒரு லிட்டருக்கு) ரூ 15.33 -(ஒரு லிட்டருக்கு)

    எரிபொருள் விலை ரூ 57.49 (ஒரு லிட்டருக்கு) ரூ 56.19 (ஒரு லிட்டருக்கு)
    இடத்தை பொறுத்து டீலருக்கு கொடுக்கப்படும் தொகை மாறக்கூடும்

    உதாரணமாக டெல்லியை அடிப்படையாக கொண்ட இடத்தில் பெட்ரோல் பம்புக்கு டீலருக்கான தரகு தொகையை கணக்கில் கொள்வோம்.

    டீலர் பெட்ரோல் டீசல்
    தரகு தொகை ரூ 3.62 (ஒரு லிட்டருக்கு) ரூ 2.52 (ஒரு லிட்டருக்கு)
    எரிபொருள் விலை – வாட் வரிக்கு முன்னதாக (தோராயமாக) ரூ 61.11 (ஒரு லிட்டருக்கு) ரூ 58.71 (ஒரு லிட்டருக்கு)

    வாட் வரி – மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உதாரணமாக பெட்ரோலுக்கு 27% வாட் வரி. டீசலுக்கு 16.75% என கணக்கில் கொள்வோம். மேற்கொண்டு 25 பைசா மாசுபாடு வரியாகவும் செலுத்த வேண்டும்,

    மாநில அரசு விதிக்கும் வரிகள் பெட்ரோல் டீசல்
    வாட் வரி ரூ 16.74 (ஒரு லிட்டருக்கு) ரூ 9.83 (ஒரு லிட்டருக்கு)
    இறுதி விலை (தோராயமாக) ரூ 77.85 ரூ 68.54

    குறிப்பு :- இந்த விலை கணக்கீட்டில் வரிகள் உட்பட அனைத்துக் கட்டணங்களும் தோராயமாகவே கணக்கிடப்பட்டுள்ளது. இவை துல்லியத்துக்கு நெருக்கமான கட்டணமே. அதி துல்லியமான கணக்கீடு அல்ல.

    தோராயமாக 38 ரூபாய் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு வெவ்வேறு வரிகள் விதிப்பதன் மூலம் ரூ 36.22 காசுகள் (தோராயமாக) வரை பெறுகின்றன.

    ( நன்றி – https://www.bbc.com/tamil/india-44199170 )

    பின் குறிப்பு – பெட்ரோல், டீசலை GST -க்குள் கொண்டு வந்தாலொழிய பொதுமக்களுக்கு இதிலிருந்து விடுதலை
    கிடைக்காது. இன்னமும் கொண்டு வராதது மாநில, மத்திய அரசுகளின் சுயநலம். 75 % மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால்
    போதும்….ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு, GST – க்குள் கொண்டு வரும் வேலையை
    இந்த அரசுகள் பார்க்க வேண்டும்…. இதில் பாஜக மற்றும் பாஜக அல்லாத மாநிலங்கள் எல்லாமே ஒரே நிலையில் தான் இருக்கின்றன. மற்றவர் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கின்றன…

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    ” ஆட்சியில் இல்லாத தலைவர்களின் தற்போதைய நிலைப்பாடு ” …: பாவப்பட்ட மக்கள் — ” எங்களையும் ஏதோ முடிந்ததை செய்கிறார்கள் என சகித்துக் கொள்கிறார்கள் ” ….?

    உண்மைதான் …! தினம் ஏதாவது ஒரு வாழ்வாதார பிரச்னை அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதால் இப்போதெல்லாம் எங்களால் முடிந்தது – ஒரு அறிக்கை விடுவது – அப்புறம் குறட்டை விட்டு அடுத்த அறிக்கைக்கு ரெடியாவது — தனியே செய்துக் காட்டிய போராட்ட சூடு – சொரணை எல்லாம் — தற்போது ” மரத்து போய் ” தோழமை என்று கூட்டாக செய்து காட்டும் நிலையில் இருக்கிறோம் …!

    காவிரி மற்றும் ஜீவாதார உரிமைகளுக்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாேது விறுவிறுப்பு காட்டாமல் அடக்கியே வாசிப்பாேம் … எங்களுக்கு நல்ல பதவிகளுக்கு மட்டும் குரலை உயர்த்தி உரிமைக்காக பாேராடுவாேம்…

    அதுமட்டுமில்லாமல் — நீட் – வன்கொடுமை – கந்து வட்டி – கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை போன்ற பல உயிர் இழப்புகளுக்கு – அரசு நிர்ணயிக்கிற உயிருக்கான விலையை — நாங்கள் கொஞ்சம் அதிகமான விலையை நிர்ணயித்து கொடுக்க சொல்லி அறிக்கை விடுகிறோம் — இறந்தவரின் வீடுகளுக்கே சென்று ” ஒப்பாரி ” வைத்து கண்ணீர் சிந்தி எங்களது திறமையைக் காட்டுகிறோம் …சிபிஐ விசாரணை என்று கூக்குரல் இடுகிறோம் … !

    சாலை மறியல் – மனித சங்கிலி — பிற ரகப் போராட்டங்களை அனைத்துக் கட்சியினருடனும் சேர்ந்து செய்து — கைதாகி குளிர்சாதன வசதியுள்ள திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்கி உயர் ரக உணவை உண்டு — உறங்கி மாலையில் விடுதலையாகி கம்பீரமாக வெளியே வருகிறோம் … நாங்கள் இந்த கிளை சிறைச்சாலை — மத்திய சிறைச்சாலை பக்கமெல்லாம் சென்று பல வருடங்கள் கடந்து விட்டன …! சட்டசபைக்குள் சென்றதும் — உடனே வெளிநடப்பு செய்து ” கின்னஸ் ” சாதனைக்காக காத்திருக்கிறோம் …!!

    தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து நாங்கள் மக்களுக்கு ஆற்றும் தொண்டு எல்லோரும் அறிந்ததே … ! எங்களை போல மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு போராடுபவர்கள் வேறு யாராவது இருந்தால் காட்டுங்கள் பாப்போம் …
    என்ன சில நேரங்களில் ” பகுத்தறிவு ” பேசி நாங்கள் யார் என்பதை நிலை நிறுத்திக் கொள்கிறோம் — அவ்வப்போது மறைந்த தலைவர்களின் கொட்டேஷன்களை தொட்டு — மதவாதம் — பிரிவினை — வன் கொடுமை — ஊழல் — லஞ்சம் –தொழிலாளர் நலன் — மாநில உரிமை — கல்விக் கொள்கை — கையாலாகாத அரசு என்று மறக்காமல் வார்த்தையாடுகிறோம் — எழுதுகிறோம் ….!
    ஊழல் — லஞ்சம் – லாவண்ணியம் என்று – அதில் ஊறிப்போனவர்களுடன் சேர்ந்து நாங்கள் குரல் கொடுப்பது உலக முழுக்க பிரபலம் … என்னவோ எங்களால் முடிந்தளவு செய்கிறோம் … அவ்வளவே …!!!
    மறைந்த தலைவர்களின் மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி எந்த சேதாரமும் இல்லாமல் வாழ்கிறோம் …. ! மக்களும் எங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று நினைத்து ஒத்து போகப் பழகி விட்டார்கள் …!!!

  7. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் பலி, பலர் படுகாயம்.

    என்ன கொடுமை சார் இது. இது ஒரு நிச்சயமான அரச பயங்கர வாதம்.

    இதில் கொடுமையிலும் கொடுமை, முதல்வரும் அமைச்சர் ஜெயக்குமாரும் இந்த கொலைகளை ஆதரித்து இருப்பது.

    வழக்கம் போலவே மெளனச்சாமியார் வாயில் ப்ளாஸ்த்ரி.

    நாம் எங்கு இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் தானா?

  8. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    ஸ்டெர்லைட்டும் …..ஸ்டெரைட் பயரிங்கும் …?

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    என்ன எழுதுவது என்றே எனக்கு புரியவில்லை…
    இது எப்படி நடந்தது…?
    யார் உத்திரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடந்தது…?
    கலவரங்களைப் பற்றிய வீடியோக்கள் எல்லாம் வெளிவருகின்றன.
    துப்பாக்கி சூடு நடந்தது குறித்த வீடியோக்கள் எதையும்
    காண முடியவில்லையே … ஏன்…? அது குறித்த செய்திகளும் முழுமையாக இல்லை….செய்தித் தணிக்கை முறை எதுவும் அமலில் இருக்கிறதா…? மீடியாக்கள் உண்மையான நிலவரத்தை வெளியிட வேண்டும்.
    எது எப்படியாயினும் – உயிர்ப்பலி மிகவும் வருத்தத்தை தருகிறது.
    இங்கு யாருக்கும் பொறுப்பில்லை; உண்மையான மனிதாபிமானம் இல்லை -ஆளும்கட்சிக்கும் சரி… எதிர்க்கட்சிகளுக்கும் சரி.
    இதில் சிக்கி நாசமாவது, உணர்ச்சி வசப்படும் அப்பாவி மக்கள் தான்.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      சன் செய்தியில் காண்பித்தார்கள்.

      ஒரு போலிஸ் வேன் மீது படுத்துக் கொண்டு கூட்டத்தை பார்த்து சுடுவதை காண்பித்தார்கள்.

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        தொலைக்காட்சிகளுக்கு நிர்பந்தம் இருந்திருப்பதாக தான் தெரிகிறது. ஊடக தர்மம் சந்தி சிரிக்குது.

        நாள் பூரா போராட்டம் நடந்துகொண்டிருக்கு, ஒரு இடத்தில் அல்ல பல இடங்களில் துப்பாக்கி சூடு நடந்து 11 பேர் இறந்து பல பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

        சில தொலைகாட்சிகளில் காமெடி காட்சிகளும் சினிமா காட்சிகளும் ஒளி பரப்பி இவர்கள் வெளிப்படுத்தியது தங்கள் அபிமானத்தையா வக்கிரத்தையா?

    • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

      துப்பாக்கி சூடு — ஒப்புக்கு இது ஒன்று மட்டுமே அனைத்து சானல்களிலும் — ஏதோ கடமைக்காக காட்டினார்கள் … ? http://www.newstig.net/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        இந்த வீடியோவில் பொதுமக்களே அதிகம் கூடாத இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது எப்படி?

        சுடுகின்ற வீடியோ காட்சிகளே ஒளிபரப்பாமல் — குறிப்பிட்ட ஒரே ஒரு காட்சியை மட்டும் அனைத்து சானல்களும் காட்டியது ஏன் …? மற்ற சுடும் காட்சிகள் எங்கே — ஊடகங்கள் எடுத்தனவா — இல்லையா …? காட்டுவதற்கு தடை போட்டது யார் …? ஊடகங்களே பதில் கூறுங்கள் — மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள் … ! ரெய்டு — கொலை –கொள்ளை — திடீர் அரசியல்வாதிகளின் பேட்டி மற்றும் கூட்டங்களை மாய்ந்து – மாய்ந்து காட்டும் ஊடகங்கள் — இந்த சூட்டில் எதையுமே காட்டாமல் இருந்தது ஏன் — இருப்பதேன் ….?

        • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

          On Tuesday, the protest began around 8.30am near Our Lady of Snows Church close to the city’s old harbor, and the protesters marched towards the collectorate. Police tried to stop them at several points, but in vain.

          Vastly outnumbered by the protesters, the police personnel fled. As the crowd reached the collectorate, they went on the rampage, damaging and setting ablaze nearly 50 two-wheelers and a dozen four-wheelers. They attacked the collectorate building and the police personnel posted there, leaving a few cops injured. At this point, police retaliated by firing at the mob

          மேலே உள்ள செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான 70%க்கான காண்டிராக்ட் வேலைகளைச் செய்வது கிதா ஜீவன் (திமுக எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள்) ஆட்கள்தான்..

          • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

            ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் தோல்வி தூத்துக்குடி படுகொலை!: ஹென்றி டிஃபேன் நேர்காணல்

            இந்த நேர்காணலில் முக்கிய கேள்விக்கு அவரின் பதில்.

            பேரணி எந்த சமயத்தில் வன்முறையானது?

            போராட்டக் களத்தில் இருந்த எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். பேரணி தொடங்கிய இடத்திலிருந்து காவல் துறையினர் யாரும் மக்களைத் தடுக்கவே இல்லை. அதேபோல, போராட்டக்காரர்களும் வன்முறை மனநிலையில் இல்லை. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என பல தரப்பினரும் அமைதியுடன் கலந்துகொண்டதைப் பார்த்தேன். மூன்று மைல் பாலத்துக்கு அருகில் காவல் துறையினர் திடீரென்று தடியடி நடத்தினார்கள். ஆனாலும், மக்கள் திரண்டு பேரணியைத் தொடர்ந்தார்கள். மக்கள் கூடிக்கொண்டே இருந்தார்கள். ஆட்சியர் அலுவலகம் முன்புதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடக்கத் தொடங்கியதும்தான் வன்முறை தொடங்கியது. கூட வந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததையும், இறந்ததையும் மக்கள் பார்த்தபோது கலவரம் வெடித்தது.

            முழு நேர்காணலயும் படிக்க.

            http://tamil.thehindu.com/opinion/columns/article23975075.ece?homepage=true

          • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

            ‘நியூஸ் 7 கேள்வி நேரம்’ தூத்துக்குடியில் தொடரும் போராட்டம் : நீடிக்கும் பதற்றம் : என்ன செய்ய வேண்டும் அரசு? விவாத நிகழ்சியில், பாலதண்டாயுதபானி என்கிற ஓய்பெற்ற காவல் அதிகாரி, அருமையான உண்மையான விளக்கங்களை தந்து முக்கியமான ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

            ”அமைதியாக வன்முறையில்லாமல் போராடி வந்த மக்களை வன்முறை நோக்கி தூண்டியது யார்?”

            நான் காவல் துறையில் இருந்தவன் என்றாலும் இந்த கேள்வியை ஏன் கேட்கிறேன் என்று நினைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டே கேட்கிறார்.

            Well said sir. I really appreciate and solute you sir.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.