(பகுதி-2) பாஜக தலைவர் அமீத் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி கொலை செய்யப்பட்டாரா ……?


ஜஸ்டிஸ் லோயா அவர்கள் இறப்பதற்கு முன்னால், தனது
குடும்பத்தினரிடம் ” …….. சாதகமாக தீர்ப்பு வழங்கினால் 100 கோடி
ரூபாய் தருவதாக என்னிடம் பேரம் பேசுகிறார்கள்… எனக்கு
அதிர்ச்சியாக இருக்கிறது..” என்று கூறி இருக்கிறார். அவரிடம்
பேரம் பேசியது யார் என்பது இன்னும் அதிர்ச்சியான விஷயம்.
அப்போதைய பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.மோஹித் ஷா
அவர்கள் தான் தன்னிடம் இத்தகைய பேரத்தை தெரிவித்தார்
என்று கூறி இருக்கிறார் ஜஸ்டிஸ் லோயா..( அப்போதைய மும்பை
தலைமை நீதிபதி குஜராத்தை சேர்ந்தவர்…). இந்த செய்தி
வெளிவந்ததிலிருந்து, இதுவரை ஜஸ்டிஸ் திரு.மோஹித் ஷா அவர்கள்
இது குறித்து எந்தவித கருத்தோ, மறுப்போ தெரிவிக்கவில்லை.

பேரம் பேசியவர்கள், குறிப்பாக டிசம்பர் 30-ந்தேதி இந்த தீர்ப்பை
வழங்குமாறு வேறு கூறி இருக்கிறார்கள். அன்றைய தினம்
வேறு ஒரு பரபரப்பான செய்தி வெளிவரப்போகிறது. எனவே,
இந்த தீர்ப்பைப்பற்றிய விஷயங்களுக்கு மீடியாவில் முக்கியத்துவம்
கிடைக்காது என்று வேறு திரு.மோஹித் ஷா சொன்னாராம்.

ஜஸ்டிஸ் லோயா இறந்தபிறகு, 3-வது நீதிபதி தனது தீர்ப்பை
அதே டிசம்பர் 30-ல் அறிவித்திருக்கிறார். அன்றைய தினம்,
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி – தான், டெஸ்ட் போட்டிகளிலிருந்து
ரிடையர் ஆவதாக அறிவித்து, அந்த செய்தி பரபரப்பாக
ஓடிக்கொண்டிருக்கிறது…. எனவே, இந்த தீர்ப்பைப்பற்றி எந்த செய்தி
சேனலும் முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை. இந்த அளவிற்கு
சம்பந்தப்பட்டவர்கள் திட்டம் போட்டு செயல்பட்டிருப்பதாக
சொல்லப்படுகிறது.

ஜஸ்டிஸ் லோயா அவர்கள் எப்படி இறந்தார் என்பது குறித்து
சொல்லப்படுவதாவது –

அவரது 2 சக நீதிபதிகள் வற்புறுத்தியதன் பேரில், 2014, நவம்பர்
30-ந்தேதி, வேறொரு நீதிபதியின் மகள் திருமணத்திற்காக,
மும்பையிலிருந்து, நாக்பூர் சென்றிருக்கிறார் ஜஸ்டிஸ் லோயா.
அங்கே அரசு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் 2 சகநீதிபதிகளுடன் தங்கி
இருந்திருக்கிறார்.

நடு இரவில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, தனியார்
மருத்துவமனை ஒன்றிற்கு (ஆட்டோ ரிக்ஷாவில்…?? ) அழைத்து
சென்றிருக்கிறார்கள். அந்த மருத்துவமனையில், ஈசிஜி எந்திரம் கூட
வேலை செய்யும் நிலையில் இல்லையாம். அங்கே அவருக்கு
முதலுதவி கொடுக்கப்பட்டு, வேறொரு தனியார் மருத்துவமனைக்கு
அழைத்து போயிருக்கிறார்கள். அங்கே அவரை பரிசோதித்த
மருத்துவர்கள், ஜஸ்டிஸ் லோயா, ஏற்கெனவே இறந்து விட்டதாக
அறிவித்திருக்கிறார்கள்.

அவரது குடும்பத்திற்கு செய்தி சொல்லப்படாமலே, இரவோடு இரவாக
போஸ்ட் மார்டம் செய்யப்பட்டிருக்கிறது. போஸ்ட் மார்டம் முடிந்த
கையோடு, போலீசார், அவரது உடலை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி,
அவரது இருப்பிடமான மும்பைக்கு அனுப்பாமல், அவரது சொந்த
ஊரான பூர்விக கிராமத்திற்கு அனுப்பி விட்டார்கள்.

ஜஸ்டிஸ் லோயா அவர்களை நாக்பூருக்கு வற்புறுத்தி அழைத்து வந்த
சக நீதிபதிகள், அவர் இறந்த பிறகு குடும்பத்தாருடன் தொலைபேசியில்
கூட பேசவில்லை. இறந்த உடலுடன் அவர்கள் உடன் செல்லவில்லை.

அதன் பின்னர் லோயா குடும்பத்திற்கு, போலீசார் தான், ஜஸ்டிஸ்
லோயா இறந்த தகவலையும், அவரது உடல் போஸ்ட் மார்டம்
செய்யப்பட்டு, சொந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது என்கிற
தகவலையும் சொல்லி இருக்கிறார்கள்.

இறப்பு செய்தி தெரிந்து ஜஸ்டிஸ் லோயா குடும்பத்தினர் யாரும்
நாக்பூர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே சம்பந்தப்பட்டவர்கள்
இப்படி செயல்பட்டிருப்பதாக, அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம்
எழுந்திருக்கிறது.

பூர்விக கிராமத்திற்கு ஜஸ்டிஸ் லோயாவின் உடலை ஒரு ஆம்புலன்ஸ்
வண்டியில் ஒரு டிரைவர் மட்டும் ஏற்றிச் சென்றிருக்கிறார். சுமார்
8-9 மணி நேர ரோடு வழி பயணம்…. கூட நண்பர்கள், போலீஸ்காரர்கள்
என்று யாருமே செல்லவில்லை…

இறந்து போன ஜஸ்டிஸ் லோயாவின் உடலை, அவரின் ஒன்று விட்ட
சகோதரர் ஒருவர் தான் – போஸ்ட் மார்டம் செய்யவும், பிறகு
உடலை பெற்றுக்கொண்டு, கிராமத்திற்கு அனுப்பவும், கையெழுத்து
போட்டிருப்பதாக போலீஸ்காரர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், உண்மையில், நாக்பூரில், ஜஸ்டிஸ் லோயாவிற்கு அப்படிப்பட்ட
உறவினர்கள் யாருமே இல்லையாம்.

ஜஸ்டிஸ் லோயாவின் சகோதரி டாக்டர் அனுராதா பியானியே
என்பவர், அவரே ஒரு அரசு மருத்துவர். ஆனால், அவரே,
ஹார்ட் அட்டாக் வந்து இறந்ததாக சொல்லப்பட்ட லோயாவின்
தலையில் பின்பகுதியில் ஒரு காயம் இருந்ததாகவும், சட்டை
காலரிலும், முன்பக்கம் தோள்பட்டையிலிருந்து மார்பு வரையிலும்,
ரத்தக்கறை இருந்ததாகவும் – இது எப்படி சாத்தியமாகி இருக்கும்
என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், காரவான்
நிருபரிடம் சொல்லி இருக்கிறார்.

இறந்துபோனவரின் உடைமைகளை போலீசார் தான் கைப்பற்றி,
குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும். ஆனால், 4 நாட்கள் கழித்து,
ஒரு ஆர்.எஸ்.எஸ்.பிரச்சாரகர், அவரது செல்போனை கொண்டு வந்து
கொடுத்தாராம். அதில் பல விவரங்கள் அழிக்கப்பட்டிருந்தனவாம்.

ஜஸ்டிஸ் லோயா குடும்பத்தினர் எழுப்பி இருக்கும் சந்தேகங்களை
பற்றி, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும்,
சட்டகமிஷன் சேர்மனாக பதவி வகித்தவருமான, ஜஸ்டிஸ் ஷா
அவர்களிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது –


” ஜஸ்டிஸ் லோயா குடும்பத்தினர் கூறி இருக்கும் விஷயங்கள் மிகுந்த
மன வருத்தத்தை அளிப்பதாகவும், அந்த குடும்பத்தினரின் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பும், கடமையும் நீதித்துறைக்கு இருக்கிறது என்றும்,

மும்பை உயர்நீதிமன்றம் அல்லது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம் ” என்றும் கூறி இருக்கிறார்.

ஜஸ்டிஸ் லோயா குடும்பத்தினர், இவ்வளவு தாமதமாக இந்த
பிரச்சினையை எழுப்புவதற்கு பதிலாக, அப்போதே ஏன் விசாரணை
கேட்கவில்லை என்கிற கேள்வி எழும்.
ஜஸ்டிஸ் லோயா அவர்களின் குடும்பத்தினர் அப்போதே
கேட்டிருக்கின்றனர். லோயா அவர்களின் மகன் ஒரு மனுவும்
கொடுத்திருக்கிறார்…. ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது….!

அந்த காலகட்டத்தில், இந்த விஷயத்தை மேற்கொண்டு தொடர,
குடும்பத்து உறுப்பினர்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மிகுந்த சக்தி வாய்ந்த நபர்களை
எதிர்ப்பதன் மூலம் தங்களுக்கு மேலும் தொல்லைகள் வரலாமென்று
அஞ்சி இருக்கிறார்கள்.

இப்போது விஷயம் வெளி வரக்காரணம் – இறந்து போன ஜஸ்டிஸ்
லோயா அவர்களின் சகோதரியின் மகள், ‘காரவான்’ இதழின்
செய்தியாளர் ஒருவருடன் தற்செயலாக பேசிக்கொண்டிருந்தபோது –
இதைப்பற்றி எல்லாம் சாதாரண முறையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து காரவான் இதழ் மேற்கொண்ட விசாரணைகளின்
விளைவு தான் இப்போது வெளிவந்திருக்கும் செய்திகள்…. இப்போது,
ஜஸ்டிஸ் லோயா குடும்பத்தினர் அனைவருமே, வெளிப்படையாக
இது குறித்து பேட்டி கொடுத்திருக்கின்றனர்.

இந்த செய்தி குறித்து டெலகிராப் பத்திரிகை கீழ்க்கண்ட பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது –

————————–

– நெஞ்சுவலி காரணமாக ஜஸ்டிஸ் லோயா மருத்துவமனைக்கு
எடுத்துச் செல்லும்போது அவரது குடும்பத்திற்கு தகவல்
தெரிவிக்கப்படாதது ஏன்..?

– ஜஸ்டிஸ் லோயா அவர்கள் இறந்த பிறகு கூட செய்தி உடனடியாக
அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்படாதது ஏன்…?

– போஸ்ட் மார்டம் பண்ணும் முன்பாக குடும்பத்தினரின் அனுமதி
ஏன் கோரப்படவில்லை…? குறைந்தபட்சம், போஸ்ட்மார்டம்
செய்யப்படுகிறது என்கிற தகவலைக்கூட தெரிவிக்காதது ஏன்..?

– போஸ்ட் மார்டம் செய்ய உத்திரவிட்டது யார்..? ஏன்…?

– எந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள போஸ்ட் மார்டம்
செய்யப்பட்டது…?

– முக்கிய அரசு அதிகாரிகளும், நீதிபதிகள், அமைச்சர்கள்,
எம்.எல்.ஏக்கள் போன்றவர்களும் தங்கக்கூடிய அரசாங்க விருந்தினர்
விடுதியில், ஒரு கார் கூட இல்லாமல் போனது எப்படி…?

– 2 கி.மீ.தொலைவிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து, அந்த
நள்ளிரவில் யார் போய் ஆட்டோவை அழைத்து வந்தது…?

– ஒரு ECG மெஷின் கூட இல்லாத ஒரு தனியார் மருத்துவமனைக்கு
மாரடைப்பு வந்தவர் கொண்டு செல்லப்பட்டது ஏன்..?

– காலை 5 மணிக்கு, தொலைபேசி மூலம், ஜஸ்டிஸ் லோயா இறந்து
விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில், காலை 6.15 மணிக்கு தான்
அவர் இறந்ததாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது… இது ஏன்..?

– ஜஸ்டிஸ் லோயா அவர்களின் செல்போன் 3 நாட்கள் தாமதமாக
அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட காரணம் என்ன… ?

– அந்த போன், போலீஸ் துறையால் தானே கொடுக்கப்பட்டிருக்க
வேண்டும்… RSS ஊழியர் அதை எடுத்துக் கொண்டு வந்து
கொடுத்தது எப்படி…?

– ஜஸ்டிஸ் லோயாவின் சட்டையில் ரத்தக்கறை காணப்பட்டதாக
அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். மாரடைப்பு வந்து இறந்தவர்
சட்டையில் ரத்தக்கறை எப்படி வந்தது…? ( இதயமும், நுரையீரலும்
செயலிழந்து விடுவதால், போஸ்ட் மார்டம் செய்யப்படும்போது,
ரத்தம் வராது என்று டாக்டரான அவரது சகோதரி சொல்கிறார்…)

– ஜஸ்டிஸ் லோயாவின் சகோதரி, (அரசு மருத்துவராக
மஹாராஷ்டிராவிலேயே பணி புரிபவர் ..) ” திருப்தியளிக்கக்கூடிய
தீர்ப்பை அளிப்பதற்காக என் சகோதரருக்கு 100 கோடி ரூபாய்
கொடுப்பதாக, அவரது தலைமை நீதிபதியாலேயே கூறப்பட்டிருக்கிறது…”
என்று குற்றம் சாட்டுகிறார்.
( சம்பந்தப்பட்ட, தற்போது ஓய்வுபெற்றுவிட்ட அந்த நீதிபதி இதுவரை,
இது குறித்து வாயே திறக்கவில்லை. )

– தீர்ப்பை டிசம்பர் 30-ந்தேதியன்று அளிக்கும்படி வேறு ஜஸ்டிஸ்
லோயா அறிவுருத்தப்பட்டிருக்கிறார்… அன்றைய தினம் வேறோரு
முக்கிய சம்பவம் நிகழப்போவதால், இந்த தீர்ப்பின் முக்கியத்துவம்
குறையும் என்று வேறு சொல்லப்பட்டிருக்கிறது..

– அதே மாதிரி, டிசம்பர் 30-ந்தேதி, இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி
அவர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரிடையர் ஆகும் செய்தி
வெளியாகி இருக்கிறது. மீடியாவில் தீர்ப்பிற்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படவில்லை.

———————————————————–

இந்த விஷயம் குறித்து, விரிவான, அதிகாரபூர்வமான –
விசாரணையொன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று
மீடியாவில் வற்புறுத்தல் துவங்கி இருக்கிறது. விரைவில்
இந்த கோரிக்கை, பல முனைகளிலும் எடுத்துச்செல்லப்பட்டு
வலுப்பெறக்கூடும்.

அப்படி வெளிப்படையான விசாரணை ஒன்று நடந்தால், இன்னும்
பலவேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரக்கூடும் …!!!

——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to (பகுதி-2) பாஜக தலைவர் அமீத் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி கொலை செய்யப்பட்டாரா ……?

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    கொலைகார பாவிகள்.

    மதத்தைவைத்து மக்களை மடையர்களாக்கி இவர்கள் செய்யும் கொலை பாதகங்களை மறைக்கிறார்கள், பிழைக்கிறார்கள்.

    இவர்களை ஆதரிப்பவர்களும் கொலை பாதகங்கள் செய்து பிழைப்பு நடத்த விளைபவர்களே. வேறு யார் இந்த மாபாவிகளை ஆதரிக்கமுடியும்.

    தெய்வம் நின்று கொல்லும்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நெஞ்சை உருக்குவதாக கட்டுரை இருக்கிறது.

    நிறைய எண்ணங்களையும் இது ஏற்படுத்துகிறது. எப்படி முக்கியமான வழக்கின் தீர்ப்புகள் அல்லது சம்பவங்கள், முக்கியத்துவம் கொடுக்கமாட்டாதபடி, வேறு ஒரு பெரிய செய்தி வரும் அன்று (அல்லது அதுவும் வரவழைக்கப் படுகிறதோ?) வெளியிடப்படுகிறது, நீதிபதிகள், போலீசார் போன்றவர்களுக்கும், ஆட்சியில் பொறுப்பில் உள்ள முக்கியமான அரசியல்வாதிகளுக்கும், பெரிய அதிகாரிகளுக்கும், நியாயம் தவறிச் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதெல்லாம் தெரிகிறது.

    ‘யாராவது பெரிய பொறுப்புகளுக்குக் கொண்டுவரப்பட்டால்’ அதற்கு நமக்குத் தெரியாத வேறு பலப் பல காரணங்கள் இருக்கக்கூடும். கவர்னராக நியமிக்கப்படுபவர்களுக்கும், சிபிஐ, தேர்தல் கமிஷன் மற்றும் வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நியமிக்கப்படுபவர்களுக்கும் இது பொருந்தும். ‘கையில் கறை’ படியாமல் பெரிய பொறுப்புகளுக்கு ஆட்கள் வரமுடியாது போலும்.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ப்ரமோத் மகாஜன், மும்பை குண்டுவெடிப்பு வழக்கின்போது பணியில் இறந்த போலீஸ் அதிகாரி (ஏன்… லால் பகதூர் சாஸ்திரி, சுபாஷ்….. ஏன்.. ஜெ கூட) போன்ற பலப் பல மரணங்கள் நினைவுக்கு வருகின்றன.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      அன்றாடம் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகள் தான் பொதுவாக நம் கருத்தையும், கண்ணோட்டத்தையும் உருவாக்குகின்றன.
      பல விஷயங்களில் நமது முடிவுகளும், அவற்றையொட்டியே உருவாகின்றன.

      ஆனால், நமக்கு தெரியாமல், நம் பார்வைக்கு வராமல் எத்தனையோ விஷயங்கள் நாட்டில் நடக்கின்றன. அரிதாகவே நமது பார்வைக்கு அவை கிடைக்கின்றன. அந்த விஷயங்கள் தான் நாட்டின் பெரிய மனிதர்களின்
      சுய உருவத்தை பிரதிபலிக்கின்றன. எந்த அரசியல்வாதியையும் லேசில் நம்புவதற்கில்லை.. அதனால் தான், வெவ்வேறு இடங்களில், அவர்களைப்பற்றிய உண்மைகள் ஒளிந்துகொண்டிருக்கும் செய்திகளை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

      500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டபோது, அதன் பின் நமக்கு தெரியாமல் ஒளிந்திருக்கக்கூடிய காரணங்களை நான் எழுதியபோது, நிறைய பேர் அதை நம்பவே இல்லை.

      பின்னால் நடந்த நிகழ்வுகள், அந்த காரணங்களை ஓரளவு மெய்ப்பிப்பதாக அமைந்தன.

      ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சர் (போலீஸ் துறைக்கு பொறுப்பானவர்) கைது செய்யப்படுவதோ, சிறையில் தள்ளப்படுவதோ, வழக்கு முடியும் வரை மாநிலத்திற்குள்ளேயே நுழையக்கூடாது
      என்று சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்படுவதோ, சுதந்திர இந்தியாவில் ஒரே ஒரு தடவை தான் நிகழ்ந்திருக்கிறது….
      எனவே, இந்த செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை… இன்றாவது இது வெளியில் வந்ததே என்கிற ஆறுதலையும், அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற உணர்வையும் தருகிறது.

      அரசியல் உலகம் எந்தவிதத்திலும் நம்பிக்கை கொள்ள அருகதையற்றது.
      அரசியலில் வெற்றி பெறவும், பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும்,
      எந்த எல்லைக்கும் போகத்துணிந்தவர்கள் பெரும்பாலான அரசியல்வாதிகள்.
      நாம் இயன்ற வரை எந்த அரசியல்வாதியையும் முழுவதுமாக நம்பி ஏமாறாமல் இருக்க பழகுவோம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தியாகு,

      இந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் பின்னர் வேறு ஒரு செய்தி இருக்கிறது…

      இந்த இடுகைத் தலைப்பிலான செய்திகள் இத்துடன் முடியவில்லை.
      நான் இன்னும் சில தகவல்களுக்காக காத்திருக்கிறேன். கிடைத்த பின்னர்,
      மீண்டும் இந்த பொருளில் விவாதத்தை தொடரலாம். நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        ஷொராபுதீன் என்கவுண்டர் வழக்கில், குஜராத்தை சேர்ந்த இன்னும் பல சீனியர் போலீஸ் அதிகாரிகளும்,
        ராஜஸ்தானை சேர்ந்த சில பாஜக அரசியல்வாதிகளும் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இருந்தார்கள் என்பதும்,

        இந்த வழக்கில் “favourable judgement” என்பது அவர்களுக்கும் பொருந்தும் என்பதும் கூட இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

        இந்த வழக்கில் ஜஸ்டிஸ் லோயா தீர்ப்பு கூறி இருந்தால், ஒரு வேளை அவர்களில் பல பேர் ஜெயிலுக்குப் போக வேண்டியிருந்திருக்கும் என்பதையும் நினைவு கூற வேண்டும்…

        சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஜஸ்டிஸ் லோயா இறந்ததால், பலர் பலன் அடைந்திருப்பார்கள் …!!!

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    “rumour only”

    இதுதான் அரசியல் வாதிகளின் பலம், நம்பிக்கை.

    தான் செய்வதை கண்மூடி பின்பற்ற மடக்கூட்டம் ஒன்று இருப்பதால் தான் அரசியல் வியாதிகளின் அட்டூழியங்கள் அளவு கடந்து சென்று இந்நாட்டின் சாபக்கேடாக இருக்கு.

  5. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    சாதகமான தீர்ப்பு வழங்கினால் அனைத்து வசதிகளும் ” கவர்னர் பதவியும் ” – கிடைக்கும் …. பாதகமான தீர்ப்பு என்றால் ” மரணம் ” கிடைக்கும் …. பிழைக்க தெரிந்தவன் பிழைப்பான் …. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.