…
…
சென்னையின் வெளிப்புறத்தில், வங்கக்கடலையொட்டிய ஒரு மீனவர்
கிராமமான ஊரூர் ஆல்காட் குப்பத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னர் ஒரு இனிமையான புரட்சி – வெடித்தது என்று சொல்லக்கூடாது – மலர்ந்தது….
திரு. டி.எம்.கிருஷ்ணா என்கிற, வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய கர்நாடக இசைக்கலைஞரின் உள்ளத்தில் உதித்த எண்ணத்தின் செயல்வடிவம் அது …!
இசை என்பது ஏன் வசதி படைத்த, குறிப்பிட்ட அளவு மக்களோடு
நின்று விட வேண்டும்…? பாமர மக்களால் கர்நாடக இசையை
ரசிக்க முடியாதா…? கானா, தப்பாட்டம், பறையாட்டம், வில்லுப்பாட்டு எல்லாம் இசையோடு சேர்த்தி இல்லையா…? அவை ஏன் பாமர மக்களோடு
நின்று விட வேண்டும்…?
இசையின் அனைத்து பரிமாணங்களையும், பாமர மக்களுக்கு
அறிமுகப்படுத்த வேண்டும். அதன் பின், அவர்களுக்கு பிடிப்பதை
அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்… தொடரட்டும்.
அவர்களுக்கு தெரியாது, புரியாது என்று ஏன் இசையின் ஒரு பகுதியை
அவர்களிடம் கொண்டு செல்லாமலே இருக்க வேண்டும்…?
இதெல்லாம் அவரது மனதில் உதித்த கேள்விகள்.
அதன் விளைவே முதல் தடவையாக, 2015-ல், பொங்கி வரும்
கடல் அலைகளிலிருந்து ஐம்பதே மீட்டர் உள்ளே தள்ளி, கடற்கரை
மணலிலேயே, மிக எளிமையாக – மேடையமைத்து பல்வேறு
இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதை நான் இங்கு எழுதுவது, just – இது குறித்து இதுவரை அறியாத
நண்பர்களுக்கு இதனைப்பற்றிய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி வைக்கவே.. ஏற்கெனவே பல நண்பர்கள் இது குறித்து அறிவர். அவர்களுக்கு, இது
மலரும் நினைவுகளாக இருக்கட்டும்.
ஊரூர் ஆல்காட் குப்பம் சம்பந்தமான சில சிறு வீடியோக்களை
கீழே பதிந்திருக்கிறேன். அவை வாசக நண்பர்களுக்கு இதனைபற்றிய
ஒரு தெளிவான அறிமுகத்தை தரும்….
An invitation to Urur Olcott Kuppam Margazhi Vizha
T.M. Krishna – Published on Jan 8, 2015-
Curtain Raiser by TM Krishna –
திரு.டி.எம்.கிருஷ்ணாவின் எனக்கு பிடித்த ஒரு பாடல்…
TM Krishna live at kuppam vizha 2017
A Glance into the Urur-Olcott Kuppam Vizha-



தங்களின் இந்த இடுகை [ பொருத்தமான ] ஒரு நன்னாளில் வெளியிட்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் …. நன்னாள் என்று கூறியது ” திரு .வி. சாந்தாராம் ” அவர்களின் பிறந்தநாள் இன்று — அவரைப்பற்றி தாங்கள் முழுவதும் அறிந்திருப்பீர்கள் — நம் இளைய தலைமுறை அறிந்திருக்குமா என்பது ஒரு கேள்விதான் …
சமூக சீர்திருத்தக் கருத்துகளை கலைவடிவத்துக்கு மாற்றி எப்படி திரைப்படமாக்குவது என்று இந்திய இயக்குநர்களுக்கு வழியமைத்தவர் — இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு ‘படோஸி’ திரைப்படம் — அவர் தொடாத சமூக சீர்திருத்தக் கருத்துக்களே இல்லை என்பதற்கு பெண்கள் பிரச்சினைகளுக்கு ‘துனியா ந மானே’, பாலியல் தொழிலில் இருந்து மீள நினைக்கும் பெண்ணின் வாழ்க்கைக்கு ‘ஆத்மி’ (1939) ஆகிய படங்கள் — முதல் கலர் படம் — முதன் முதலில் பெண்களை நடிக்கவைத்தார்.போன்ற எண்ணற்ற சாதனைகளை புரிந்தவர் என்பதும் — இவரது ‘தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த ” பல்லாண்டு வாழ்க ” படமாக வெளிவந்ததும் — வரலாறு ….
எண்ணற்ற உயர்ந்த விருதுகளை பெற்றவர் — இன்று கூகுள் இந்த சமூக சுசீர்திருத்த மேதைக்கு ” டூடுல் ” போட்டு சிறப்பித்துள்ளது என்பது நோக்கத்தக்கது —
உங்களின் விருப்பமான // ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழா … ( என் விருப்பம் – 14 ) // இந்த பதிவை எனது விருப்பமாக ” திரு . வி. சாந்தாராம் ” அவர்களுக்கு சமர்ப்பிக்க தாங்கள் அனுமதிப்பீர்களா என்கிற நம்பிக்கை — எனக்கு …!!!
செல்வராஜன்,
நான் சிறு வயதில் வடக்கே வாழ்ந்தவன் என்பதால், என் பள்ளி நாட்களிலிருந்தே, திரு.வி.சாந்தாராம் அவர்களின் படங்களுடனேயே தான் வளர்ந்தேன்.
1955 -ல் “ஜனக் ஜனக் பாயல் பாஜே” படம் ரிலீஸ் ஆனபோது, சிறு பையனாகவே, அடித்து பிடித்துக்கொண்டு தியேட்டரில் பார்த்தது நினைவிற்கு வருகிறது…..! அதற்குப் பின் வெளிவந்த கிட்டத்தட்ட அவரது எல்லா படங்களையும், சுடச்சுட பார்த்திருக்கிறேன்.
அற்புதமான ஒரு Creator… (படைப்பாளி…) !!! கதை, வசனம், இசை, டைரக்ஷன், தயாரிப்பு என்று அவரது படங்களின் அனைத்து பொறுப்பையும் அவரே சுமப்பார். அவரது ஒவ்வொரு படமும் வெளியான சமயங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும்.
ஜனக் ஜனக் பாயல் பாஜே – படத்தில் அந்த காலத்திய புகழ்பெற்ற நடனக்கலைஞர் கோபிகிருஷ்ணா கதாநாயகனாகவும், சந்தியா நாயகியாகவும் நடித்திருந்தனர் – ( என்று சொல்வதை விட நடனமாடி இருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்… படம் முழுவதும் பாடலும், நடனமும் தான்…!).
வண்ணப்படங்கள் இந்தியாவிற்கு அபூர்வமாக இருந்த காலத்தில், இசையும், நடனமும், கண்ணைக்கவரும் வண்ணமும் சேர்ந்து படத்தை எங்கேயோ தூக்கிச் சென்று விட்டன.
சாம்பிளுக்கு ஜனக் ஜனக்-ல் இருந்து அற்புதமான ஒரு நடனக்காட்சி கீழே –
திரு.சாந்தாராம் அவர்களின் ஒரு மைனஸ் பாயிண்ட் அவரது ஸ்த்ரீ (Stree) படம் வெளிவந்தபோது விமரிசிக்கப்பட்டது. 60 வயதான பிறகு அவர் கதாநாயகனாக நடித்தது ( துஷ்யந்தனாக என்று நினைவு…)
க்ளோசப் காட்சிகளில் பார்க்கும்படி இல்லை… வேறு யாரையாவது கதாநாயகனாக போட்டிருக்கலாம் என்று விமரிசிக்கப்பட்டது….
( இப்போதைப்போல், தாத்தாக்களை எல்லாம் ஹீரோக்களாக தோற்றமளிக்க வைக்கும் மேக்கப் சமாச்சாரங்கள் …அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை…!)
“தோ ஆங்கேன் பாரா ஹாத்” தான் அவரது சமூகப்படங்களில் மாஸ்டர் பீஸ் என்று சொல்ல வேண்டும். அப்போது புதிய concept ஆன திறந்தவெளி சிறைச்சாலைகளின் அவசியத்தைப் பற்றி வலியுறுத்தும் விதத்தில் அதன் கதையமைப்பு இருந்தது. கொடூரமான குற்றங்களை புரிந்த ஆறு கைதிகளை, ஒரு சிறை வார்டனாக அவர் தன் அன்பினால் கட்டுப்படுத்துவது போன்ற ஒரு கதையமைப்பு…
இந்திய திரைப்பட சரித்திரத்தில் வி.சாந்தாராம் அவர்களுக்கு என்றும் நிரந்தரமான ஒரு இடம் உண்டு.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஒரு நிகழ்வு, contrary to belief of many, Deviation from tradition நடக்கும்போது, அது நடக்கின்ற காலத்தில் நிறைய எதிர்ப்புகளையும், unrecognitionகளையும், பாரம்பர்ய சிந்தனையில் இருப்பவர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தும். டி.எம்.கிருஷ்ணா அவர்களின் வித்தியாசமான சிந்தனையும் அப்படித்தான். ஆனால், இவைகள்தான் காலத்தை வென்று நிற்கும்.
பாரதியார் போன்றவர்கள் அவர்கள் வாழும் காலத்தில் கொஞ்சம்கூட recognition இல்லாமல் வாழ்ந்து மடிந்தவர்கள். உறவினர்கள்கூட பாரதியாரை ஆதரித்ததில்லை. ராமானுசரின் மனைவியேகூட, ராமானுசரின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டதில்லை.
பார்ப்போம் டி.எம்.கிருஷ்ணாவின் வழி, காலத்தை வெல்லுகிறதா என்று.
தமிழன்,
சாதாரண சங்கீத வித்வான்கள், திரு.டி.எம்.கிருஷ்ணாவைப் போல் முயற்சிகளை தொடங்கி இருந்தால், கர்நாடக இசை ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்து அத்தகையவர்களை அடக்கி இருப்பார்கள்.
ஆனால், திரு.டி.எம்.கிருஷ்னா வலுவான இசைக்குடும்ப பின்னணிகளை கொண்டவர் என்பதாலும், சர்ச்சையை கிளப்பும் முன்னரே அவர் புகழ்பெற்று தனக்கான உயர்நிலையை உறுதி செய்துகொண்டு விட்டார் என்பதாலும், கர்நாடக சங்கீத உலகம் அவரை சகித்துக் கொள்கிறது என்று கூட சொல்லலாம்.
ஆனால், என்னைப்பொருத்தவரை – இந்த இரண்டு விதமான சிந்தனைகளும் தொடர்ந்து கொண்டே
இருக்கும் என்று தான் நினைக்கிறேன்… இருக்கட்டுமே… அதனால் பாதகம் எதுவும் இல்லை…!!! குப்பங்களிலிருந்து கர்நாடக இசை ரசிகர்கள் உருவாவதும், மேட்டுக்குடியிலிருந்து தாரை,தப்பட்டை, தப்பாட்டம் ரசிகர்கள் உருவாவதும் நல்லது தானே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்