தமிழக பாஜக அமைச்சர் தொகுதியில் ஊழலா…? தினமலர் என்ன சொல்ல வருகிறது…?


சனிக்கிழமை (14/10/2017) தினமலர் இதழ் பல
கோடி ஊழல் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து
கன்னியாகுமரியை, திருவனந்தபுரத்துடன் இணைக்கும்
NH-47 தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்க பணிகள்
குறித்து, ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

National Highways Authority of India (NHAI) மேற்கொள்ளும்
இந்த பணியை, ஆர்வத்துடன் விரைவுபடுத்தி வருபவர்
தொகுதி பாஜக எம்.பி.யும் மத்திய அமைச்சருமானவர்.

பல கேள்விகளை எழுப்பும் இடுகையின் பகுதிக்கு செல்லும்
முன், தினமலர் நாளிதழில் வெளிவந்திருக்கும் அந்த
செய்தியை ஒரு முறை படித்து விடுவோம்.

(சனிக்கிழமை 14/10/2017 தேதியிட்ட தினமலர் நாளிதழிலிருந்து)


உண்மையில் தினமலர் செய்தியின் நோக்கம் என்ன…?
அது யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது…?

சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதா…? NHAI மீதா…?
அல்லது திட்டத்தை செயல்படுத்தி வரும் L&T நிறுவனத்தின்
மீதா…?

தினமலர் செய்தியை அப்படியே நம்பி விடாமல்,
நாமாக இது குறித்து ஆராய்ந்தால், சில விஷயங்கள்
புலப்படுகின்றன.

அதென்ன “போலி நெடுஞ்சாலை”…?
போடுவதாக சொல்லப்பட்டு, போடாமலே, போட்டு விட்டதாக
சொன்னால் தானே இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்…?

இந்த இடம் பற்றி புரிந்துகொள்ள அது குறித்த வரைபடம்
கீழே –


1932-ஆம் ஆண்டு போடப்பட்டு, அதன் பிறகு
கண்டுகொள்ளப்படாமலே இருந்த சாலை இப்போது 1200
கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது….
ஒரிஜினல் சாலை போடப்பட்டு, 85 ஆண்டுகள் ஆகி விட்டன
என்பதால், சாலையின் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் உருவாகி
சாலை குறுகி விட்டது என்பதும் தெரிய வருகிறது.

எனவே, சில பகுதிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு
பதிலாக (அது குறித்த வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில்
நிலுவையில் இருக்கின்றன…) சிறிது தள்ளி மாற்று பாதை
அமைக்கப்பட்டு, பின்பு ஒரிஜினல் சாலையுடன்
மீண்டும்இணைக்கப்படுகிறது என்பதும் புரியவருகிறது.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர்
லால் மோகன் என்பவரும், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் என்பவரும் –
இந்த ஏற்பாட்டை பிடிக்காத மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு
இதனை எதிர்க்கிறார்கள்… அவர்களின் சார்பாகத்தான் தினமலர் செய்தி பேசுகிறது என்பது புரிகிறது.

1200 கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் பல ஊழல்கள்
அரங்கேறி வருகின்றன என்கிற எண்ணத்தை இந்த செய்தி
உருவாக்குகிறது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில்
ஊழல்கள் இருக்கலாம் – இல்லாமலும் இருக்கலாம்.
நமக்கு விவரங்கள் தெரிய இப்போதைக்கு வாய்ப்பில்லை…

ஆனால், இந்த செய்தியை வெளியிட்ட தினமலருக்கு
இதில் “உள்நோக்கம்” இருப்பது புரிகிறது.

உண்மையில் செய்தியில் சொல்லப்படுபவது போல்,
ஏற்கெனவே இந்த பிரச்சினை பசுமை தீர்ப்பாணையத்திற்கு
எடுத்து செல்லப்பட்டு, அதன் தீர்ப்பும் வெளிவந்து விட்டது
என்றால், அது எத்தகைய தீர்ப்பு என்கிற விஷயத்தை
தினமலர் செய்தி சொல்லாமல் மறைக்கிறது.

தீர்ப்பாய உத்திரவின்படி, மத்திய சாலைப் போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட
திட்டம் குறித்து, ரகசிய ஆய்வு மேற்கொண்டது. இருப்பினும்,
போலி சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு
வருகிறது – என்று செய்தி சொல்கிறது.

அதென்ன “ரகசிய ஆய்வு” …?
அதன் முடிவுகள் என்ன…?
அதன் முடிவுகளின்படி செயல்கள் தொடர்கின்றனவா..

அல்லது மாறாகவா…?
மாறாக என்றால் அது எப்படி சாத்தியம்…?
இந்த விவரங்களை எல்லாம் தினமலர் செய்தி ஏன்
தெரிவிக்கவில்லை…?

தினமலர் நேர்மையான முறையில் செயல்படுவதாக
இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்…?

சம்பந்தப்பட்ட தமிழக பாஜக அமைச்சரிடம் இந்த
பிரச்சினைகளைப்பற்றி விரிவாக பேசி, இந்த நெடுஞ்சாலை
தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றி அவரது
விளக்கத்தையும் பெற்று செய்தியுடன் வெளியிட்டிருக்க
வேண்டும்…

அப்படிச் செய்யாதது – தினமலர் இந்த விஷயத்தில் வேறு
“உள்நோக்கம்” எதாவது கொண்டிருக்கிறதோ என்கிற
ஐயத்தை தான் உண்டு பண்ணுகிறது…

அதே போல், வெளிவந்திருக்கும் இந்த செய்தி நிச்சயம்
சம்பந்தப்பட்ட அமைச்சரின் பார்வைக்கு கொண்டு
செல்லப்பட்டிருக்கும். அவரும் இந்த விஷயத்தில் மௌனம்
காப்பது – பலவித சந்தேகங்களை உண்டுபண்ணுவதாகவும்,
ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது….

ஏன் இந்த நிலை தொடர வேண்டும்…?
எங்கே தவறு நிகழ்கிறது…?
ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை…?
யார் பாதுகாக்கப்படுகிறார்கள்…?

இதை தெரிந்து கொள்ள, இந்த சாலையை உருவாக்குவதற்கு
தேவைப்படும் வரிப்பணத்தை கொடுக்கும் மக்களுக்கு நிச்சயம்
உரிமை இருக்கிறது.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.