…

…
நாம் இதை எப்படி கவனிக்கத் தவறினோம் … தெரியவில்லை.
நண்பர் செந்தில்நாதன் அனுப்பியதன் பேரில் தான் நான் இதை
பார்க்க நேர்ந்தது…. மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன்…
தினமணியின் பார்வை வியப்பைத் தருகிறது… வேறு யாருக்கும்
தோன்றாத ஒரு வித்தியாசமான பார்வை…
நீங்களும் படித்துப் பாருங்களேன்….
இப்படி கூட ஒரு சாத்தியக்கூறு இருக்க கூடுமோ….?
படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்…
—————————————————————–
தேவை நீதி விசாரணை!
By ஆசிரியர் | Published on : 02nd September 2017 02:21 AM |
—–
2016-17 நிதியாண்டுக்கான அறிக்கை பேரதிர்ச்சியை அளிக்கிறது.
2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நள்ளிரவில் செல்லாததாக
அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 செலாவணிகளில் 98.96%
செலாவணிகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுத் திரும்பப்
பெறப்பட்டிருக்கிறது என்கிற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு
நம்பும்படியாகவோ, ஏற்கும்படியாகவோ இல்லை. அப்படி
வந்திருக்குமானால், செலாவணியைச் செல்லாததாக்கும்
நரேந்திர மோடி அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்கு
உரியது என்பதிலும் சந்தேகமில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாத அறிவிப்பின்போது புழக்கத்தில்
இருந்த ரூ.500, ரூ.1000 செலாவணிகளின் மொத்த மதிப்பு ரூ.15.44
லட்சம் கோடி. இப்போதைய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி
கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலும் ரிசர்வ் வங்கி திரும்பப்
பெற்றிருக்கும் ரூ.500, ரூ.1000 செல்லாததாக்கப்பட்ட
செலாவணிகளின் மொத்த மதிப்பு ரூ.15.28 லட்சம் கோடி.
ஆகஸ்ட் 30 ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, ஏறத்தாழ 98.96%
செல்லாததாக்கப்பட்ட செலாவணிகள் திரும்பப்
பெறப்பட்டிருப்பதாகவும், திரும்ப வராத செலாவணியின் மதிப்பு
வெறும் ரூ.16,000 கோடி மட்டுமே என்றும் தெரிகிறது.
செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது,
இந்தியாவின் அன்றைய தலைமை வழக்குரைஞர் முகுல்
ரோத்தகி, சுமார் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடி
வரையிலான செல்லாததாக்கப்பட்ட செலாவணி திரும்ப வராது
என்று அரசு எதிர்பார்ப்பதாகக் கூறியது,
வெறும் வெற்று வாதமாக நிச்சயமாக இருக்க முடியாது.
ஏதாவது அடிப்படை ஆதாரமுள்ள தகவல்களின்
அடிப்படையில்தான் அரசு இப்படியொரு முடிவை எடுத்திருக்க
முடியும், அதன் அடிப்படையில்தான் தலைமை வழக்குரைஞர்
உச்சநீதிமன்றத்தின் அந்தக் கருத்தை பதிவு செய்திருக்க முடியும்.
கணக்கில் காட்டாமல் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தைக்
கணக்கில் கொண்டு வருவதுதான் அரசின் நோக்கமாக இருந்தது
என்கிற நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வாதத்தை ஏற்றுக்
கொள்வோம். கடந்த மார்ச் மாதத்துடன் நிதியாண்டும்
முடிந்துவிட்டது. பெரும்பாலான செல்லாத செலாவணிகளும்
கணக்கில் வந்துவிட்டது.
வருமான வரி வசூல் கடந்த ஆண்டு 25% அதிகரித்திருக்கிறது
என்று பெருமை தட்டிக் கொள்கிறார் நிதியமைச்சர்.
அதற்கு முந்தைய 2015-16 நிதியாண்டில் செலாவணி
செல்லாததாக்கப்படாமலேயே வருமான வரித் தாக்கல் 27% ஆக
அதிகரித்தது என்பது அவருக்குத் தெரியாமல் இருக்க
வாய்ப்பில்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் வாதப்படி 98.96% செல்லாததாக்கப்பட்ட
செலாவணி வங்கிகளில் போடப்பட்டு, திரும்பப்
பெறப்பட்டிருக்குமானால், அவை அனைத்தும் வருமான வரித்
துறையின் நுண்ணாடிக்குள் வந்திருக்க வேண்டும்.
ஆனால், வங்கிக் கணக்குகளில் திரும்பி வந்திருக்கும் 98.96%
செல்லாததாக்கப்பட்ட செலாவணிக்கும், தாக்கல்
செய்யப்பட்டிருக்கும் வருமான வரிக் கணக்கின்படியான
வருவாய்க்கும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத நிலைமை
காணப்படுகிறது.
செலாவணி செல்லாததாக்கப்பட்ட பணத்தை வெளிக்
கொணர்வதற்காகத்தான் அரசின் அந்த முடிவு என்றால்,
வருமான வரித் துறை முடுக்கி விடப்பட்டு, கடந்த ஆறு
மாதங்களில் வங்கிகளில் போடப்பட்ட பணம் குறித்த
முழுமையான விசாரணையையும் அரசு முடுக்கிவிட்டு
முடித்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?
அனைவருக்கும் கேட்புரை (நோட்டீஸ்) அனுப்பப்பட்டிருக்கிறதே
தவிர, அடுத்த கட்டத்துக்குக்கூட விசாரணை நகர்ந்ததாகத்
தெரியவில்லை.
ரூ.16,000 கோடிக்காக ரூ.21,000 கோடி செலவழித்துப் புதிய
செலாவணிகளை அச்சடித்திருக்கிறார்கள் என்கிற முன்னாள்
நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வாதமும் அர்த்தமற்றது, அவரது
புள்ளி விவரமும் தவறானது. புதிய செலாவணிகளை அச்சடிக்க
ரூ.7,965 கோடிதான் செலவாகி இருப்பதாக ரிசர்வ் வங்கி
தெரிவித்திருப்பதை அவர் எப்படிக் கவனிக்கத் தவறினார் என்று
தெரியவில்லை.
இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த தேசத்தில் இப்படி
செல்லாததாக்கப்பட்ட 98.96% செலாவணி நிச்சயமாகத் திரும்பி
வந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் ஏதோ தவறு
நடந்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில்
கோரியிருப்பதுபோல, அடுத்த மூன்று மாதங்களுக்கு மீண்டும்
செல்லாததாக்கப்பட்ட செலாவணிகளை வங்கிகளில் அடைக்க
அனுமதி வழங்கினால், ஒருவேளை 98.96% அல்ல, 120% அல்லது
130% செல்லாத செலாவணிகள்கூடத் திரும்பக் கூடும் என்கிற
சந்தேகம் எழுகிறது.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
செலாவணி செல்லாததாக்கப்பட்டபோது, ஒரே எண்ணுள்ள
உயர் மதிப்புச் செலாவணிகள் புழக்கத்தில் இருப்பதாகவும்,
பரவலாகப் பேசப்பட்டது. ஒரே எண்ணுள்ள ரூ.500, ரூ.1000
செலாவணிகள் அதிகாரபூர்வமாகப் புழக்கத்தில்
விடப்பட்டிருக்காது என்பது என்ன நிச்சயம்? அது ஏன்
உண்மையாக இருக்கக் கூடாது?
ரிசர்வ் வங்கி கூறுவதுபோல, 98.96% திரும்பப் பெறப்பட்டிந்தால்,
அதற்கு அதுகூடக் காரணமாக இருக்கலாம்.
இன்னும் மூன்று மாதங்களுக்கு அரசு செல்லாததாக்கப்பட்ட
செலாவணிகளைப் பெற வழிகோலுவதும், 100%க்கும் அதிகமாகச்
செலாவணிகள் திரும்பப் பெறப்பட்டால், அதன் அடிப்படையில்
அத்தனை நோட்டுகளையும் துல்லியப் பரிசோதனைக்கு
உட்படுத்துவதும்தான் இந்தப் புதிருக்கு விடையாக இருக்கும்.
இதுகுறித்து நீதிமன்ற விசாரணை அமைக்கப்படுவது
உடனடித் தேவை!
( http://www.dinamani.com/editorial/2017/sep/02/%E0%AE
%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE
%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE
%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE
%B0%E0%AE%A3%E0%AF%88-2765769.html )
——————————————————————-



முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் எழுதிய புத்தகமான ‘’I Do What I Do … பற்றி….!
செல்வராஜன்,
…..பதிவு வந்துகொண்டே இருக்கிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்