மாதொரு பாகன் – விமரிசனத்தின் 2-ஆம் பகுதி …..

polyester prince-2

நேற்றைய தினம் எஸ்.குருமூர்த்தி அவர்களின்
” கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல ” என்கிற
தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி வெளியானது.

அதைத்தொடர்ந்து, இன்றைய தினம் தினமணி நாளிதழில்
அதன் இரண்டாவது- இறுதிப்பகுதி வெளியாகி இருக்கிறது.

நண்பர்களின் பார்வைக்காகவும், கருத்துக்களுக்காகவும்,
அதையும் கீழே பதிவிட்டிருக்கிறேன்…

—————————————————

பகுதி- 2

கருத்துச் சுதந்திரம், விடுதலை குறித்த நீதித்துறை
பிரமாணங்கள் மக்களைப் பெரிதாக ஆர்வம் கொள்ளச்
செய்வதில்லை. ஏனென்றால், அவற்றில் நிலைத்ததன்மை
இல்லாததும், எல்லா வழக்குகளையும் ஒன்று போலவே அணுகாததும்தான்.

சல்மான் ருஷ்டி தனது சாத்தானின் கவிதைகள் ஒரு புனைவு
என்று கூறி, மன்னிப்பு கோரினார். அதை யாருமே கண்டுகொள்ளவில்லை.

பெருமாள் முருகன் வழக்கின் தீர்ப்பில் சென்னை
உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதுபோல,
முற்போக்கான நவீன அரசியலமைப்புச் சட்டம் உள்ள
இந்தியாதான், சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத்
தடை செய்த முதல் நாடு!

இப்போது பெருமாள் முருகனின் கருத்து சுதந்திரத்திற்காக
வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவளிக்கும் முற்போக்குவாதிகள்
அந்தத் தடையை எதிர்த்திருக்க வேண்டியதுதானே நியாயம்?
யாரும் பேசவில்லை எதிர்க்க அஞ்சினார்கள் அல்லது,
ஆதரித்தார்கள்.

நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடுக்க
முற்பட்டிருந்தாலும், எந்த நீதிமன்றமும் ருஷ்டியின்
கருத்துச் சுதந்திரம் குறித்து உபதேசித்திருக்கும்.
ஏனெனில், புத்தகம் தடை செய்யப்பட்டிருக்காவிடில்,
எல்லா இடங்களிலும் கலவரம் வெடித்திருக்கும்.

வன்முறைக்கான அச்சுறுத்தல், கருத்துச் சுதந்திரத்தின் மீதான
நீதியை மெளனமாக்குகிறது என்பதைத்தானே இது
தெளிவுபடுத்துகிறது.

அதைப்போலவே, “விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கும்
இப்போது பெருமாள் முருகனின் நாவலுக்கு செய்தது
போல, எந்த முற்போக்குவாதியும் நீதிமன்றத்தில்
எதிர்முறையீடு செய்யவில்லை.

காரணம் வெளிப்படையானது. வன்முறையின் அச்சறுத்தலின்
முன்பாக, கருத்துச் சுதந்திரத்தை யாரும் வலியுறுத்துவதில்லை.

காரணம், பயம் அல்லது
போலித்தனம். வன்முறைக் கும்பல் முன்பாக
முற்போக்குவாதிகள் காணாமல் போகிறார்கள்.

திருபாய் அம்பானி வழக்கை எடுத்துக்கொள்வோம்.
தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடுகள்,
1980-களில், ரிலையன்ஸ் நிறுவனத் தவறுகளைத்
தொடர்ந்து அம்பலப்படுத்தின. ஆனால் அன்றைய மத்திய அரசு
தவறு, செய்தவர்களோடு சேர்ந்துகொண்டு இந்தியன்
எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சோதனையிட்டது, எழுதியவரை
கைது செய்தது, உரிமையாளரை தொல்லைப்படுத்தியது.

அம்பானியைக் காப்பாற்ற சுமார் 300-க்கும் மேற்பட்ட
குற்ற வழக்குகளைப் பதிவு செய்தது.

பின்னாளில், ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஹமீஸ்
மெக்டொனால்டு, இந்தப் பத்திரிகையின் பணியையும்
அம்பானியின் தவறுகளையும் ஆவணப்படுத்தும்
“பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

இந்தியாவில் “பாலியஸ்டர் பிரின்ஸ்’ தடை
செய்யப்பட்டது. யாரால்? கீழமை நீதிமன்றத்தால்!

( பாலியஸ்டர் ப்ரின்ஸ் – குறித்து விமரிசனம் தளத்தில்
நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு விரிவான இடுகை
எழுதியதாக நினைவு – தேடிப்பார்க்கிறேன்…. கிடைத்தால்
மீண்டும் பதியலாம்… காவிரிமைந்தன் )

இன்று கருத்துச் சுதந்திரத்துக்காக கண்ணீர் விடும்
முற்போக்குவாதிகள், அன்று இதனை உயர்நீதிமன்றத்துக்கோ
உச்சநீதிமன்றத்துக்கோ கொண்டு செல்லவில்லை. கருத்துச்
சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதாகக்
கூக்குரலிடவில்லை. காரணம் வெளிப்படையானது. இது பெரும்
பணக்கார இந்தியரின்
குழுமம் தொடர்பானது என்பதுதான் அந்தக் காரணம்.

இந்திய அரசினால் தடை செய்யப்பட்ட புத்தகங்களின்
பட்டியல் வேடிக்கையானது. பண்டித நேருவின்
செயலர் எம்.ஓ. மத்தாய் எழுதிய “நேரு கால நினைவுகள்’
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம்.

நேரு காலத்தின் அனைத்து முக்கியமான நபர்கள் குறித்தும்
அப்பட்டமாக விவரித்த இந்த புத்தகம்
தடை செய்யப்பட்டது. ஏன்?

அது அதிகாரம் பெற்றவர்களை புண்படுத்தியது.
நேரு குடும்பத்தினரை நெளிய வைத்தது. அப்போது யாருக்கும்
கருத்துச் சுதந்திரம்
ஒரு விஷயமாகப் படவில்லை.

“அன்டர்ஸ்டான்டிங் இஸ்லாம் த்ரூ ஹாதீஸ்” என்று
ராம் ஸ்வரூப் எழுதிய புத்தகத்திற்கு 1991-இல் தடை
விதிக்கப்பட்டது. ஏன்?

இஸ்லாமிய அரசியலுக்கு சிக்கலாக அமைந்தது.
முஸ்லிம் வாக்கு வங்கியை பாதிக்கும் என்கிற
அச்சம்தான் காரணம்.

சல்மான் ருஷ்டி எழுதிய “தி மூர்ஸ் லாஸ்ட் லாப்’
நூலுக்கு 1995-இல் தடை விதிக்கப்பட்டது. ஏன்?

அதில் ஒரு கதாபாத்திரம், சிவசேனையின் பலம் வாய்ந்த
தலைவர் பாலாசாகேப்
தாக்கரே போலவே சித்திரிக்கப்பட்டிருந்தது. மேலும்,
அதில் ஒரு நாயின் பெயர் ஜவாஹர்லால்.

இந்தத் தடை, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது
என்று உச்சநீதிமன்றம் 1996-ல் தீர்ப்பளித்தது. ஆனாலும்,
விற்பனையாளர்கள், வன்முறைக்குப் பயந்து,
சிவசேனையின் கோட்டையாகிய மகாராஷ்டிரத்தில்
அந்தப் புத்தகத்தை விற்பனைக்கு அனுப்பவில்லை,

விற்பனைக்கு வைக்கவும் மறுத்தனர். அப்போது
நீதிமன்ற அவமதிப்பு என்பதாக எந்த முற்போக்குவாதியும்
நீதிமன்றத்தை அணுகவில்லை.

முஸ்லிம் எழுத்தாளர்களான அல்சஃபீ, அல்மாதீ
இருவரும் சேர்ந்து எழுதிய “தி ட்ரூ ஃபர்கன்” நூலானது,
இஸ்லாமை கேலி செய்வதாகக் கூறி தடை செய்யப்பட்டது.

ஆனந்த் யாதவ் எழுதிய ஒரு புத்தகம், துக்காராமானந்
தியானேஸ்வரை அவதூறு செய்வதாகக்கூறி
புணே நீதிமன்றம் அந்தப் பிரதிகளை அழிக்க 2
014 ஜூனில் உத்தரவிட்டது.

வெளிப்படையாகச் சொன்னால், ஆட்சேபணைக்குரிய
புத்தகங்கள் குறித்த அணுகுமுறையில் நீதித்துறைக்கோ
அரசுக்கோ எந்தவிதமான நிரந்தத்தன்மையும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை வல்லமை படைத்தவர்கள்
அல்லது இதனால் வன்முறை உண்டாகுமா என்பது மட்டுமே
ஒரே வழிகாட்டு நெறியாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

அரசியலமைப்பு போலித்தனம்

“மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராகப் போராடிய
திருச்செங்கோடு சமூகத்தினர் சாதாரண மக்கள்-
வேட்டியணிந்த நாட்டுப்புற மனிதர்கள்.
நகரத்தவர்கள் அல்ல. புத்தக வெளியீட்டாளரை மிரட்டி,
முடக்கக்கூடிய செல்வம்
படைத்த அம்பானியைப் போன்றவர்களும் அல்ல,
அல்லது புத்தகத்தை தடை செய்ய அரசியல்
பலம்வாயந்த நேரு, பால்தாக்கரே போன்றவர்களும் அல்ல.

திருச்செங்கோடு மக்கள் ஜனநாயக ரீதியாக
அமைதிப்பேச்சு நடத்தினார்கள். பெருமாள் முருகன்
சொல்லிய ஆவணங்களை காட்டுமாறு அழைத்தார்கள்.
அங்கே வன்முறை இல்லை. விவகாரம்

உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தாலும் யாரும் அவரை எதுவும்
செய்துவிடவில்லை.

ஆதாரங்கள் எதையும் காட்ட முடியாததால்,
தான் எழுதியதற்கு பெருமாள் முருகன் மன்னிப்பு
கேட்டார். இருந்தும்கூட, அரசு அதிகாரிகளால்
நடத்தப்பட்ட அமைதிப்பேச்சு, கட்டப்பஞ்சாயத்தாகக்
கருதப்பட்டது; விமர்சிக்கப்பட்டது.

இந்தியாவில் பல பிரச்னைகள் சாதாரண
பேச்சுவார்த்தையில் – அது பஞ்சாயத்து அல்லது
சமூகக் தலைவர்களின் தலையீடு என்றாலும் – தீர்வு
காணப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்திலும்
உச்சநீதிமன்றத்திலும் நடத்தப்பட்ட மணிப்பால் குரூப்
வழக்கு ஆன்மீகத் தலைவர் வீரேந்திர ஹெக்டே
தலையீட்டில் தீர்வு கண்டது.

எல்லாவற்றையும் பொதுவாக்கிவிடுவது என்பது
இந்தியாவில் இன்னும் செயல்படுகிற செலவில்லாத
சமூக அமைப்பின் மதிப்பைக் குறைவுபடுத்துவதாகும்.
பரிகாசப்படுத்தி, சிறுமைப்படுத்துவதைக் காட்டிலும் இத்தகைய
அமைதிப்பேச்சுவார்த்தை
அல்லது பஞ்சாயத்து எவ்வாறு நடத்தப்பட வேண்டும்
என்பதற்கான வழிகாட்டுதலை நீதித் துறை
வழங்கியிருக்கலாம்.

சமூகக் கலவரங்கள் அல்லது சாதிச் சண்டைகளில்
காவல்துறையினரும்கூட அமைதிப் பேச்சுக்கு
முற்படுகிறார்கள், பிரச்னையைத் தீர்க்கிறார்கள்.
அதுவும்கூட கட்டப்பஞ்சாயத்துதானா?

தங்கள் சமுதாயப் பெண்கள் குறித்து பெருமாள்
முருகன் ஆத்திரமூட்டும்விதமாக எழுதியும்கூட,
அந்தச் சமூகத்தினர் கலந்துகொண்ட அமைதிப்பேச்சு
வன்முறை இல்லாமல் நடந்தது. அவர்கள் பாராட்டப்பட
வேண்டியவர்கள்.

“சாத்தானின் கவிதைகள்’, “விஸ்வரூபம்’ விவகாரங்களில்,
போராட்டக்காரர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து தங்கள்
இலட்சியத்தில் வெற்றி கண்டார்கள். அப்படிப் பார்த்தால்
திருச்செங்கோடு மக்கள் அமைதிப் பேச்சு நடத்தியது தவறா?

இதனால் கிடைக்கும் முடிவு இதுதான்: புத்தகத் தடை
குறித்த மேல்மட்டப் பார்வையில், பல வழக்குகளில்
தெரிவு செய்த மதிப்பீடுகளும், மற்ற வழக்குகளில்

கருத்துரிமைக் கொண்டாட்டமும், இங்கே முற்போக்கு,
கருத்துச் சுதந்திரம் என்ற பெயர்களில் நடைபெறும்
அரசமைப்பு மற்றும் அரசியல் போலித்தனங்களையே
அம்பலமாக்குகின்றன.

ஒன்றுபோன்ற அணுகுமுறை தேவை

ஒரு தனிநபர் விவகாரம் இது:
ஒரு படித்த பெண்மணி. திருச்செங்கோட்டில் தொழில் புரிபவர்.
விசாக சடங்கு (வரடிக்கல் சுற்றுதல்) விரதத்தில் குழந்தை
பெற்றுக் கொண்டவர். அவர் என்னிடம் கேட்டார்: முருகனின் புத்தகத்தைப் படித்தவர்கள் என்னையும் என் குழந்தையைப் பற்றியும் என்ன நினைப்பார்கள்?

அவரது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
பெருமாள் முருகனின் புத்தகத்தைக் கொண்டாடும்
முற்போக்குவாதிகளிடமும் இருக்காது.

திருச்செங்கோட்டில் வாழும் ஆயிரக்கணக்கான
பெண்கள் இந்த அவமானத்தில் துன்புறுகிறார்கள் –
மெளனமாக! அவர்களது வலியை உணர்கிறேன்.

ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள்.

பாடம் இதுதான்: ஆட்சேபணைக்குரிய கருத்து
வெளிப்பாட்டை தடை செய்ய அல்லது அனுமதிக்க ஒரு
நடுநிலையான, ஒன்றுபோன்ற அரசியலமைப்பு அணுகுமுறை
தேவையாக இருக்கிறது.

அது இல்லை, வல்லான் வகுத்ததே சட்டம்,
வன்முறைவாதிகளுக்கே வாழ்வு என்று சொன்னால், அது
எங்கே போய் முடியும் என்பதை நினைத்து பார்க்கவே
வேதனையாக இருக்கிறது.

நேற்றைய முதல் பகுதியின் கடைசிப் பத்தியை மீண்டும்
ஒருமுறை படித்துப் பாருங்கள். இந்தப் பிரச்னையின் நியாயம்
புரியும்.

வெளிப்படையாகச் சொன்னால்,
ஆட்சேபணைக்குரிய புத்தகங்கள் குறித்த
அணுகுமுறையில் –

நீதித்துறைக்கோ அரசுக்கோ
எந்தவிதமான நிரந்தத்தன்மையும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை வல்லமை
படைத்தவர்கள் அல்லது இதனால் வன்முறை
உண்டாகுமா என்பது மட்டுமே –

ஒரே வழிகாட்டுநெறியாக
இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to மாதொரு பாகன் – விமரிசனத்தின் 2-ஆம் பகுதி …..

  1. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // 89-ஆம் வருடத்திய கொலைமுயற்சி வழக்கு …..
    Posted on செப்ரெம்பர் 8, 2014 by vimarisanam – kavirimainthan // என்கிற இடுகையில் திரு பாய் அம்பானி & சன்ஸ் மற்றும் பாம்பே டையிங் விவகாரம் போன்றவற்றோடு ” பாலியஸ்டர் பிரின்ஸ் ‘ புத்தகம் பற்றியும் இருக்கிறது …..
    // ‘ The Polyester Prince – The Rise of Dhirubhai Ambani ‘
    என்கிற பெயரில் 1999-ல் விவரமாக ஒரு புத்தகம் எழுதினார் –

    டில்லியில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய
    எழுத்தாளர் ஹாமிஷ் மெக்டொனால்டு என்பவர்.
    மத்திய அரசில் பதவியிலிருந்த யார் யாரிடம்,
    எப்படி எப்படியெல்லாம் – தன் செல்வாக்கையும்,
    தந்திரங்களையும் பயன்படுத்தி
    திருபாய் அம்பானி தன் கம்பெனியை வளர்த்தார்
    என்பதைப்பற்றி விலாவாரியாக அலசி இருந்தார்
    ஹாமிஷ் மெக்டொனால்டு……
    தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி – அந்த புத்தகத்தை வெளியிட விடாமல் மத்திய அரசைக் கொண்டு தடை செய்ய வைத்தார் பெரிய அம்பானி. (மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் / அதிகாரிகளின் பலவீனங்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் விலாவாரியாக அலசப்பட்டு இருந்ததே …) — வலியோரை வாழ்த்துவது தானே நம் அரசியல் — மற்றும் ” முற்போக்கு “என்று கூறிக் கொண்டு திரிபவர்களின் —- வேலையாக இருக்கிறது …. பெருமாள் முருகன் மட்டும் ” மீண்டும் உயிர்த்த்தெழுவேன் ” என்று கூறுவதைப் போல — பாதிக்கப் பட்டவர்களும் எழுந்தால் …. ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      பாலியெஸ்டர் ப்ரின்ஸ் பற்றி
      நீங்கள் தந்திருக்கும் தகவலுக்கு மிக்க நன்றி.

      நிதானமாக இதை ஒரு தடவை மறுபதிவு செய்யலாம்…

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. நிமித்திகன்'s avatar நிமித்திகன் சொல்கிறார்:

    //வல்லான் வகுத்ததே சட்டம்,
    வன்முறைவாதிகளுக்கே வாழ்வு என்று சொன்னால், அது
    எங்கே போய் முடியும் என்பதை நினைத்து பார்க்கவே
    வேதனையாக இருக்கிறது.//
    மிகச் சரியான கருத்து. இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எளியவனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ளி நகையாடலாம், கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் எனும் போக்குதான் நிலவுகிறது. இந்த நாட்டில் மட்டும்தான் – ஒரு குறிப்பிட்ட – மதத்தின் மீது, அரசியல் தலைவரின்மீது, கிரிக்கெட் வீரரின்மீது, நடிகரின் மீது, – இது போன்ற ‘குறிப்பிட்ட’ என்பவைகளின் மீது கருத்து தெரிவிக்க முடியாது. தெரிவித்தீர்கள் என்றால், அவ்வளவுதான் – கண்டனக் கனைகளும், ….. மிரட்டல்களும் நிச்சயம் வரும். தெரிவித்தவர் கொஞ்ச நாள் தலைமறைவாக இருக்க நேரிடும், கட்டாய மன்னிப்பு கேட்க நேரிடும். ஆனால் நீங்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் கேட்க நாதியில்லை என்றால், உங்களைப்பற்றியோ அல்லது உங்களது வழக்கங்களைப் பற்றியோ கருத்து தெரிவித்தால், அது அவ்வாறு தெரிவித்தவரின் கருத்து சுதந்திரம் என்று வக்காலத்து வாங்கப்படும். மாதொருபாகன் பிரச்சனைக்குரிய ஒரு கருத்தினை தெரிவித்து ஒரு குறிப்பிட்ட இன மக்களின் உணர்வினை தாக்கி இருப்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆனால் அதை எழுதியவரின் எழுத்து சுதந்திரம் பறிபோகிறதாம். என்ன கொடுமை இது. ஒரு பேச்சிற்கு அக்கதையில் வருவதுபோல் அவ்வாறான வழக்கம் இருந்ததாகக் கொண்டால்கூட, அதனை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமா. அதைக் கருவாகக் கொண்ட அந்த புத்தகத்தை தடை செய்ததில் என்ன தவறு. தடையை நீக்கியதன் மூலம், செத்துப்போன பெருமாள் முருகனை பிழைக்க வைத்துவிட்டார்கள், ஆனால் உயிருடனும் உணர்வுடனும் உள்ள அவ்வின மக்களைச் சாகடித்து விட்டார்கள்.

  3. raj's avatar raj சொல்கிறார்:

    உங்க பதிவு அருமை .

  4. Seshan's avatar Seshan சொல்கிறார்:

    One more feather on your hat…….
    குருமூர்த்தியின் கட்டுரையை ஒரு பதிவுலக பிரபலர் மாய்ந்து மாய்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

    http://ramaniecuvellore.blogspot.ae/2016/07/blog-post_10.html

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சேஷன்,

      கண்ணதாசன் அவர்களின் ஒரு பழைய வசனம்
      நினைவிற்கு வருகிறது.

      அனார்கலி நாடகத்தில் சிவாஜி பேசுவார் –
      ” அன்பே, ஆத்திரத்தில் என் அந்தஸ்தையே உயர்த்துகிறாயே” என்று….

      அது மாதிரி இருக்கிறதே இது….
      ” பதிவுலக பிரபலர் ” என்கிற சொல்லுக்கு
      நான் எப்படி பொருந்துவேன்…?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. Antony's avatar Antony சொல்கிறார்:

    Hi KM,
    1. Can we know your stand on this?
    2. Have you read the book?
    3. According to the author, did the so called villagers, not wealthy enough to fight for the justice come to know about the book only after 3 editions and an English translation released?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப அந்தோனி,

      என் நிலையை முன்னரே விளக்கி விட்டேனே –
      ஒரு வேளை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

      அதையே மீண்டும் இங்கே தருகிறேன் –

      ——————————
      கதை எழுதுவது வேறு.
      நிகழ்வுகளை பதிவது வேறு.
      கதை என்றால் தெளிவாக தெரிவித்து விட வேண்டும்.

      நிகழ்வுகள் என்றால் அதற்கான ஆதாரங்களை
      மேற்கோளிட்டுக்காட்ட வேண்டும்.
      இவற்றை செய்ய முடியவில்லை என்றால்
      எதிர்ப்புகள் வருவது நியாயம்.

      ———————-

      -புத்தகத்தை ஓரளவிற்கு தான் படித்தேன்…
      அதுவே போதுமானதாகத் தோன்றியது.

      – இது குறித்து என்னுடைய கருத்து –

      ஜாதி, மதம் இரண்டும் உணர்வுபூர்வமானது.
      மிக எளிதாக உணர்ச்சியை தூண்டி விடக்கூடியது.

      எந்த விதத்திலும், ஒரு மதத்தை சேர்ந்தவர்கள்
      மற்ற மதத்தினை இழிவுபடுத்துவதையோ –

      ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் மற்ற ஜாதியினரை
      கேவலப்படுத்துவதையோ –

      நான் என்றும் ஏற்க மாட்டேன்.
      முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொண்டு,
      இதையெல்லாம் ஆதரிப்பவர்களையும்
      என்னால் ஏற்க முடிவதில்லை.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. Parthiban's avatar Parthiban சொல்கிறார்:

    காவிரிமைந்தன்,

    நீங்கள் திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரையை
    உங்கள் தளத்தில் பதிவிட்டதற்காக
    உங்களை அசிங்கமாக தனிப்பட்ட முறையில்
    திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
    சாதி மோதலை உருவாக்கி வேடிக்கை பார்ப்பதில் தான்
    இவர்களுக்கு ஆர்வம்.
    இவர்கள் கொள்கைவாதிகளாக இருந்தால்,
    இவர்களுக்கு கொள்கையில் நம்பிக்கை இருந்தால்,
    கருத்துக்கு பதில் கருத்தால் மோதுவதை விட்டு விட்டு,
    தனிப்பட திட்டுவது எந்த ரகம் ?
    அந்த பதிவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
    இந்த அளவிற்கு மட்டமாக எழுதுவது அவர் சார்ந்த
    அமைப்பிற்கே அவமானம் அல்லவா ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப பார்த்திபன்,

      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      உண்மையான கம்யூனிஸ்டாக இருந்தால்,
      இப்படி எல்லாம் தனிப்பட தாக்கி எழுத மாட்டார்கள்.

      அவர்கள், தாம் உண்மையில் யார் என்பதை
      தங்களின் எழுத்திலும், தரத்திலும்
      நிரூபித்திருக்கிறார்கள்.

      JUST IGNORE …

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.