திரு.தயாநிதி மாறன் வழக்கு – சரியான விவரங்கள் கீழே – ஊடகங்கள் ஏன் தருவதில்லை …?

dhayanithi maran

இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்
இருக்கிறது. இது குறித்த சரியான, முழு விவரங்கள்
கிடைப்பதில் – ஏனோ – தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எந்த ஊடகத்திலும் முழு விவரங்கள் தரப்படவில்லை
என்பதை கீழேயுள்ள விவரங்களை படித்தால் நீங்களே
உணரலாம்.

இயன்ற வரை, பல இடங்களிலிருந்து சேகரித்த விவரங்களை
கீழே தொகுத்து தந்திருக்கிறேன்….

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு போக வேண்டிய காரணம் –
தயாநிதி மாறன் தன்னை கைது செய்யக்கூடாது என்று
சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருந்தார்.
அதை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீட்டிற்கு சென்றபோது,
அங்கும் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை
பிறப்பிக்கப்பட்டது. அவரைக் கைது செய்தே ஆக வேண்டும்
என்கிற அவசியம் என்ன என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி
எழுப்பி வழக்கை ஒத்தி வைத்திருந்தது..

அது தொடர்பான விசாரணை, கடந்த வெள்ளியன்று மீண்டும்
உச்சநீதிமன்றம் முன்பாக வந்தது. அப்போது தயாநிதி மாறன்
சார்பில் மூத்த வழக்குரைஞர் (காங்கிரஸ் தலைவர் )
அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதித்தார்.
தனது வாதத்தில் –

———-

“தொலைபேசி இணைப்புகள் பெற்ற நடவடிக்கையில் எவ்வித முறைகேடுகளையும் தயாநிதி மாறன் செய்யவில்லை.
இந்த வழக்கில் சிபிஐ, முன்னுக்குப் பின் முரணாக சில
தகவல்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளது. இதேபோல தயாநிதி
மாறனின் சகோதரருக்குச் சொந்தமான சன் டிவிக்கு, பிஎஸ்என்எல்
இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சிபிஐ கூறியுள்ளது.

ஆனால், அக்குற்றச்சாட்டை நிரூபிக்க சரியான ஆதாரத்தை
சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக
ஏற்கெனவே ஐந்து முறை சிபிஐ தலைமையகத்தில் தயாநிதி
மாறன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார்.

இந்நிலையில், மேலும் அவரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
வழங்கக் கூடாது’ என்றார்.

———–

இதைத் தொடர்ந்து, சிபிஐ சார்பில் அட்டர்னி ஜெனரல்
முகுல் ரோத்தகி ஆஜராகி வாதித்தபோது –

தயாநிதி மாறன் தில்லியில் அரசு பங்களாவில் இருந்த போது,
அவருக்கு வழங்கப்பட்ட அதிவேக இணைய சேவை
இணைப்புகளைப் போல, தனது சென்னை அடையாறு
போட் கிளப் இல்லத்திலும் பயன்படுத்தினார். அதற்கான ஆதாரங்கள் சிபிஐவசம் உள்ளன.

அந்த இணைப்புகளை சட்டவிரோதமாக தனது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டிவிக்காக அவர் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் பயன்படுத்திய இணைப்புகளை தனது பெயரில்
வைத்துக் கொள்ளாமல், பிஎஸ்என்எல் சென்னை மண்டலத்
தலைமைப் பொது மேலாளர் பெயரில் வைத்திருந்தார்.
அதற்குக் கட்டணம் “பூஜ்ஜியம்’ என்றே கணக்கில்
காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையின் போது,
அவர் சரியான முறையில் ஒத்துழைக்கவில்லை என்றார்.

———–

அந்த சமயத்தில் நீதிபதி டி.எஸ்.தாக்குர்,
“இந்த விவகாரத்தில் பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தாமல் தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏன் நேரிடுகிறது’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு முகுல் ரோத்தகி, “பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம்
சிபிஐ கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் தயாநிதி மாறனின்
வாய்மொழி உத்தரவுக்கு இணங்க, அத்தகைய சேவை கொண்ட
இணைப்புகளை வழங்கியதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள்
கூறியுள்ளனர்’
என்றார்.

———-

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க
முடியாது. எனினும், பிஎஸ்என்எல் இணைப்புகளை வழங்க

அனுமதி தந்தது யார் ? அதை செயல்படுத்தியது யார்?

போன்ற விவரங்களை தயாநிதி மாறனிடம் இருந்து பெற சிபிஐக்கு உரிமை உண்டு.

எனவே, அவர் தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில்
வரும் 30 முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை தினமும்
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஆஜராகி
சிபிஐ அதிகாரிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க
வேண்டும்.

விசாரணையில் எழுப்பப்படும் கேள்விகளை முன்கூட்டியே
சிபிஐ அதிகாரிகள் அவரிடம் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஎஸ்என்எல்
அதிகாரிகளும் சிபிஐ எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க
வேண்டும். அதுவரை தயாநிதி மாறனை கைது செய்வதற்கு
விதித்த தடை நீடிக்கும்.

———
சிபிஐ விசாரணைக்கு தயாநிதி மாறன் முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும். அதிலும் அவர் ஒத்துழைக்கவில்லை என
சிபிஐ கருதினால், மீணடும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம்’
என்று நீதிபதிகள் குறிப்பிட்டு அடுத்த விசாரணையை
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

———-

பல செய்தி தளங்களிலிருந்து சேகரித்த செய்திகள்
இவற்றை தாண்டி இன்னும் சில விஷயங்களையும்
சொல்கின்றன –

நீதிமன்றம் – சிபிஐ அதிகாரிகள் – தயாநிதி மாறன் மற்றும்
பிஎஸ்என்எல் அதிகாரிகளிடமிருந்து அடிப்படையான
முழு உண்மையையும் வெளியே கொண்டு வரும்
வகையில் அதற்கு தேவையான அனைத்து கேள்விகளையும்
questionnaire -ஆக தயாரித்து அளிக்க வேண்டும்.
என்றும் அதற்கு –

குற்றம் சாட்டப்பட்ட தயாநிதியும் மற்றவர்களும்-
எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டுமென்றும்
உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
( வாய் மொழியாக விசாரித்தால், சரியான பதிலை கூறாமல்
மழுப்புவதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டதால் –
எழுத்து வடிவில் பதிலளிக்க உத்திரவு …..! )

இடையில் – நீதிபதி, தயாநிதியின் வக்கீல் சிங்வியிடம் –
தயாநிதி மாறனுக்கு அவ்வளவு தொலைபேசி இணைப்புகள்
பெற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது ? என்று
கேட்டிருக்கிறார்…. இதற்கு சரியான பதில் இல்லை.

பின்னர் தயாநிதியின் வக்கீல் சிங்வி – தாங்கள்
வழக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ள
ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாயை இப்போதே
தரத்தயாராக இருப்பதாகவும் ( வழக்கை முடிவிற்கு
கொண்டு வர ) கூறி இருக்கிறார்…..

இதற்கு பதிலடியாக அரசு வக்கீல் ரோத்தகி –
“நீங்கள் திருடி விட்டு, வழக்கு போட்டதும் –
திரும்பத் தந்து விடுவதாகச் சொன்னால் திருட்டு
இல்லையென்று ஆகி விடுமா …?”
என்று கேட்டிருக்கிறார்.

மேலும் – Integrated Switch Digital
Network Technology
சாதனங்கள் சாதாரணமாக மிக அதிகமான அளவில் data-
பரிமாற்றம் செய்பவர்களுக்கே தேவைப்படுகிறது.
இதற்கு இணையான மற்ற கருவிகள் சன் டிவி அலுவலகத்திலும்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது – என்றும் விளக்கி இருக்கிறார்.

நீதிபதி – அரசு வக்கீலிடம்,
“நீங்கள் சம்பந்தப்பட்ட பிஎஸ்என்எல்
அதிகாரிகளை விசாரித்தீர்களா ..?
அவர்கள் என்ன சொல்கிறார்கள்..?
அவர்கள் பயமுறுத்தப்பட்டார்களா…? – என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு, அரசு வக்கீல், அந்த அதிகாரிகள் –
” இந்த உயர்ரக கேபிள் தொடர்புகள் தயாநிதி அமைச்சராக
இருந்தபோது கொடுத்த “வாய்மொழி” உத்திரவுகளின் பேரில்
தான் அளிக்கப்பட்டன” என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள்
கொடுத்த வாக்குமூலத்தை காட்டி இருக்கிறார்.

இதன் பின்னர் நீதிபதி மீண்டும் சிபிஐ யிடம் –
“இந்த உயர்ரக கேபிள் இணைப்புகளை கொடுக்க உண்மையில்
யார் உத்திரவு கொடுத்தது என்றும் ஏன் அத்தகைய உத்திரவு
கொடுக்கப்பட்டது ?” என்கிற உண்மைகள் வெளிவரும்
வண்ணம் கேள்விகளை தயாரிக்கும்படி கூறி இருக்கிறார்.

தயாநிதி தரப்பிடம் – “நீங்கள் இதற்கு சரியான ஒத்துழைப்பை
தர வேண்டும் ” என்றும் சிபிஐ-யிடம் இந்த நிலையிலும்
உண்மையை மறைக்க முயன்றார்களேயானால் நீங்கள்
மீண்டும் இந்த நீதிமன்றத்தை அணுகினால் –

“கைது நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுப்பதைப்பற்றி
நீதிமன்றம் ஆலோசிக்கும்” – என்று கூறி இருக்கிறார்….!!!

——————————

சுப்ரீம் கோர்ட் விசாரணையில் இவ்வளவு செய்திகள்
இருக்கும்போது – மொட்டையாக “தயாநிதி மாறனை
கைது செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு –
6 நாட்கள் மீண்டும் சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்க
அனுமதி ”
என்று செய்தி போட்டு கதையை முடிக்கும்
ஊடகங்கள் தாங்கள் யாருக்காக உழைக்கிறோம்
என்பதை கொஞ்சம் உள்ளுணர்வோடு
யோசித்துப் பார்த்தால் தேவலை…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.தயாநிதி மாறன் வழக்கு – சரியான விவரங்கள் கீழே – ஊடகங்கள் ஏன் தருவதில்லை …?

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    //விசாரணையில் எழுப்பப்படும் கேள்விகளை முன்கூட்டியே
    சிபிஐ அதிகாரிகள் அவரிடம் அளிக்க வேண்டும்.//

    எல்லா வழக்குகளிலும் இது தான் வழிமுறையா என யாரேனும் விளக்க வேண்டும்.
    //இதற்கு, அரசு வக்கீல், அந்த அதிகாரிகள் –
    ” இந்த உயர்ரக கேபிள் தொடர்புகள் தயாநிதி அமைச்சராக
    இருந்தபோது கொடுத்த “வாய்மொழி” உத்திரவுகளின் பேரில்
    தான் அளிக்கப்பட்டன” என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள்
    கொடுத்த வாக்குமூலத்தை காட்டி இருக்கிறார்.//ஆனால் நீதிமன்றம்
    இதனை எடுத்துக் கொண்டதா என தெரியவில்லை.

    வாக்குமூலங்களுக்கு இவ்வளவு தான் முக்கியத்துவமா?

    இது குறித்தும் யாரேனும் விளக்க முடியுமா?

  2. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    தினசரி — வாரம் — மாதம் இருமுறை போன்றை பத்திரிக்கைகள் …. தொலைகாட்சி — கேபிள் விஷன் — சினிமா துறை — நடிப்பு துறை — விமான துறை — அலைக்கற்றை —- அரசியல் — தியேட்டர்கள் — பங்கு வர்த்தகம் —- { தற்போது நீதியையும் ….? } போன்ற அனைத்தையும்……. அப்பப்பா … சொல்லி மாளாது இந்த கே.டி . பிரதர்ஸ் கூட்டமும் — கலைஞர் குடும்பமும் சேர்ந்து ” ஆக்டோபஸ் போல ” அனைத்து தொழில்களையும் கபளீகரம் செய்தும் — ! இன்னும் தமிழகத்தில் ஒருசில பத்திரிக்கைகள் தான் உள்ளன ….. அவற்றையும் வாங்கிவிட்டார்கள் என்றால் இப்போது வந்துள்ள இந்தளவு செய்திகூட வர சான்ஸ் இல்லை என்பதே உண்மை ….. !! இந்த குடும்ப ஆக்டோபஸின் பசி இன்னும் அடங்காமல் — ” நாங்கள் இதுவரை செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறோம் —- மறுபடியும் தவறு செய்ய மாட்டோம் ” என்றெல்லாம் கூறிக்கொண்டு —- மீண்டும் தமிழகத்தை ஆள துடித்து கொண்டு — அலைகிறது ….. என்பது உண்மைதானே …. // அரசு வக்கீல் ரோத்தகி –
    “நீங்கள் திருடி விட்டு, வழக்கு போட்டதும் –
    திரும்பத் தந்து விடுவதாகச் சொன்னால் திருட்டு
    இல்லையென்று ஆகி விடுமா …?”
    என்று கேட்டிருக்கிறார்.// ….. உண்மையில் கேட்டு இருந்தாலும் — இந்த கூட்டத்துக்கு————- அப்படிதானே ….. ?

  3. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை.
    இத்தனை விவரங்கள் எந்த பத்திரிகையிலும் வந்ததாகத்
    தெரியவில்லை. பணம் பாதாளம் வரை பாயும் என்பதை தான்
    இது உறுதிப்படுத்துகிறது. விகடன் செய்தி.காம் ஏன் இதைப்பற்றி
    ஒன்றுமே செய்தி போடவில்லை ? இப்படி ஒரு விஷயம்
    நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. பீற்றோ பீற்று
    என்று மீதி எல்லாவற்றிற்கும் பீற்றிக் கொள்கிறார்களே ஏதோ
    ஜனநாயகத்தை இவர்கள் தான் காப்பாற்றுவது போல. இந்த செய்தியையே
    மறைத்தது எப்படி ? தினமலரில் கூட இந்தெ விவரங்கள் வரவில்லை.
    தினமணியில் ஓரளவு வந்திருக்கிறது.
    நீங்கள் விவரமாக தொகுத்து போட்டதற்கு மிக்க நன்றி..

  4. Naresh Mohan's avatar Naresh Mohan சொல்கிறார்:

    தயாநிதி இப்போது இல்லாவிட்டாலும் கூட அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் ஏர்செல் மேசிஸ் வழக்கில் சி.பி.ஐ அவரது ஜாமீனுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும். வெறும் 200 கோடிக்கே கனிமொழியை 6 மாதத்திற்கும் மேலாக உள்ளே வைத்தவர் நீதிபதி ஒ.பி.சைனி. எனும் போது 700 கோடி கைமாறிய வழக்கில் மாறன்கள் தப்பிக்கவே முடியாது. மேலும் அவர்களின் செல்வாக்கினை கருத்தில் கொண்டு விசாரணை முடியும் வரை சிறையிலேயே வைத்திருக்கும் உத்தரவு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

  5. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    ஒன் இந்தியா தமிழ் செய்திதாளில் இன்றைய செய்தி … : // சட்டசபை தேர்தல்: அதிமுக- 26.84%, திமுக- 24.03%, தேமுதிக- 7.98% ஆதரவு- ஜூ.வி சர்வே முடிவு …..// Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-will-get-27-dmk-24-says-jv-survey-241228.html ….. இவ்வாறு ஒரு ” சர்வேயை ” போட எப்படி ஜூ. வி ….. க்கு மனது வந்தது …. ? இதிலும் உள் அர்த்தம் ஏதாவது இருக்குமோ … ? தி. மு. க . — தே.மு.தி.க … வுடனோ அல்லது வேறு கட்சியுடனோ கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக — அ தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் அமையாது என்பதை மற்ற கட்சிகளுக்கு புரிய வைத்து —- தி.மு.க.கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் தந்திரமா …. ?

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      அதே தான். அதிமுக, திமுக தவிர்ந்த ஏனைய கட்சிகளே, நீங்கள் திமுகவுடன் உறவு வைத்தால் தான் நீங்கள் உய்வடைய முடியும் என்பதே.

  6. thiruvengadam's avatar thiruvengadam சொல்கிறார்:

    சட்டநுணுக்கங்கள் தெரியாத நிலையில் , விவாதங்கள் அனைத்தும் பதிவு செய்வதிலோ / செய்தி வெளியீடுகள் பதிவாளர் அனுமதி போன்ற நிலை பற்றி அறிவது இதில் நலமென எண் ணுகிறேன். இருந்தபோதிலும் பணம் கட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டவரின் ஒத்தசெயலின் முன்னுதாரணம் பெருந்தலைவரின் ” ஊறிய மட்டை ” வாசகம் தற்போது நினைவுக்கு வருகிறது. Adtr Gurumurthy article itself is enough. But law may take a little time & Ur captioned sentence will materialize

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.