இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரே ஆட்சியின் கீழ்,
ஆங்கிலேயர் வசம் இருந்த காலம் அது. தென்
ஆப்பிரிக்காவின் சுரங்கங்களிலும், கரும்புத்
தோட்டங்களிலும் வேலை செய்ய நிறைய ஆட்கள்
தேவைப்பட்டனர். காடு திருத்தி, கழனி அமைக்க –
1860-ல் துவங்கி 1910 வரை, தொடர்ந்து
ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவிலிருந்து நிறைய
உழைப்பாளிகள் தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி (?)
செய்யப்பட்டார்கள்.
1860 மற்றும் 1910 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
ஐம்பது ஆண்டுக் காலத்தில், ஆங்கிலேயர் ஆட்சியில்
வைத்திருந்த பதிவேடுகளின்படி – 1,52,182 இந்திய
வம்சா வழியினர் தென் ஆப்பிரிக்காவின் நேட்டால்
நகருக்கு குடிபெயர்ந்திருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்.
மற்றவர்கள் இந்தி, தெலுங்கு, குஜராத்தி மற்றும்
உருது பேசுவோர்.
தமிழ் நாட்டில் கடும் பஞ்சம் நிலவிய காலம் அது.
விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த அடித்தட்டு
மக்களுக்கு வேலை இல்லை. வயிற்றுப் பிழைப்பிற்காக
வேற்றிடம் செல்லத் தயாராக இருந்தனர். தென்
ஆப்பிரிக்கா, பிஜி, மொரீஷியஸ் போன்ற பல நாடுகளில்
அப்போது உழைக்கும் மக்களுக்கு நிறைய தேவை இருந்தது.
எனவே, தமிழ்நாட்டில் – மதுரை, தஞ்சாவூர், ஆற்காடு,
சேலம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற
இடங்களில் உழைக்கும் மக்களை இந்த நாடுகளுக்கு
“ஏற்றுமதி” செய்ய “வர்த்தகர்கள்”(ஏஜென்ட்டுகள் )
பலர் இருந்தனர்.
எழுதப்படிக்கத் தெரியாத இந்த அப்பாவி கிராம மக்களுக்கு,
குடும்பத்தோடு இருக்க இடமும், உணவும், நல்ல
சம்பளமும் கொடுப்பதாகவும் –
இலவசமாக கப்பல் பயணமும் ஏற்பாடு செய்யப்படும்
என்றும் சொல்லி, நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு
(!) 5 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும்
இலவசமாக தங்கள் ஊர் திரும்பலாம் என்றும் சொல்லி
ஆசை காட்டி மக்களைத் தயார் செய்தனர்.
மனைவி, பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு
குடும்பத்தோடு செல்லலாம் என்று சொன்னதால், எந்தவித
தயக்கமும் இல்லாமல், விவசாயத் தொழிலாளர்கள்
நிறைய பேர் கூட்டம் கூட்டமாக வந்தனர். சகலமும்
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், பாஸ்போர்ட்,
விசா போன்ற தேவைகள் எதுவுமே இல்லாத சூழ்நிலை
அப்போது..!
பிற்காலத்தில் இந்த வாக்குறுதிகள் காற்றில்
விடப்பட்டதாலும், திரும்பவும் தாய் நாட்டிற்கு வர
கையில் பணம் இல்லாததாலும் சென்றவர்களில்
பெரும்பாலானோர் அங்கேயே தங்க நேர்ந்தது.
அந்த மக்களின், 5வது, 6வது தலைமுறை
சந்ததியினர் தான் இன்று தென்னாப்பிரிக்காவில்
இருக்கும் இந்திய வம்சாவளியினர்.
இன்றையதினம் சுமார் 5 லட்சம் தமிழர்கள்
தென்னாப்பிரிக்காவில் வசிக்கின்றனர்
என்று தெரிகிறது.
(தென் ஆப்பிரிக்காவில் -தமிழர்கள் உருவாக்கிய
கரும்புத் தோட்டங்கள் )
(தங்கச்சுரங்கம் )



இப்போது தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் …?
தொடக்க காலத்தில், கரும்புத் தோட்டங்களில்
அடிமைகள் போலத்தான் தமிழர்கள் வேலை செய்ய
நேர்ந்தது. தங்களுக்குள் பேசிக்கொள்வதைத்தவிர,
அவர்களுக்கு வெளியே தமிழ் மொழியில் பேசவும்
எழுதவும் வாய்ப்பு இருக்கவில்லை.
கரும்புத் தோட்டங்களில் தமிழ்த் தொழிலாளர்களின்
“பிணைக்காலம்” முடிவடைந்த பிறகு தான்,
படிப்படியாகத் தமிழர்களிடையே கல்வி, பண்பாடு
போன்ற உணர்வுகளுக்கு இடம் கிடைத்தது.
சமுதாயத்தில் மெல்ல மெல்ல முன்னேற வாய்ப்பு
ஏற்பட்டது. தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்க் கல்வி
அளிக்க சில தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டன.
நேட்டாலைச் சார்ந்த டர்பன் மற்றும் பீட்டர்மாரிட்ஸ்பர்க்
என்ற இரண்டு நகரங்களில் தமிழ்ப் பணிகள்
தொடங்கப்பட்டன.
இந்தியர்கள் தென்ஆப்ரிக்காவுக்கு வந்து
125 ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அதாவது
1985இல் தான் -முதன்முதலாக அரசுப் பள்ளிகளில்
இந்திய மொழிகள் கற்பித்தல் பணி துவங்கியது.
நேட்டால் தமிழ் வேத சங்கம், தென்ஆப்பிரிக்கத் தமிழ்க்
கூட்டமைப்பு, தென் ஆப்பிரிக்கச் சைவ சித்தாந்த சங்கம்
மற்றும் அங்கிருக்கும் பல தமிழ் அமைப்புகள்
சிறுவர்-சிறுமியருக்கு தமிழ்க்கல்வியை போதிப்பதில்
இப்போதும் அக்கரையோடு உழைக்கின்றன.
தமிழர்கள் அதிகமாக வாழும் சில நகரங்களில் மட்டுமே
இது சாத்தியமானது. சிறு சிறு நகரங்களில், தமிழ்க்கல்வி
கற்க வாய்ப்பில்லாத சூழ்நிலை தான் இன்றும்.
தமிழர்களை பண்பாடு ஒன்று தான் இன்றும் இணைக்கிறது.
இங்கிருந்து செல்லும்போது, இந்துக்களாக இருந்த பலரும்
பின்னர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டாலும்,
உணர்வால் இன்னும் தங்கள் தாய்த் தமிழகத்தோடு
இணைந்தே இருக்கிறார்கள்.
சிவன், முருகன், மாரியம்மன், பொங்கல்,
தைப்பூசம்,காவடி, சிவராத்திரி, கார்த்திகைத் தீபம்,
குருபூசைகள், பண்டிகை நாட்களில் தேவாரம்,
திருவாசகம், அருட்பா ஆகியவை – இன்னும் இவர்களை
உணர்வால் இயக்கும் விஷயங்கள்.
தாங்கள் வாழும் இடங்களில் எல்லாம் சிறியதும்,
பெரியதுமாக கோயில்களை எழுப்பியிருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில், “கூலி”கள் என்று அழைக்கப்பட்டு,
பெரும் இன்னல்களை சந்திக்க நேர்ந்தாலும்,
பல ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1963-க்குப் பிறகு
அனவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டு இன்று
அனைவரும் கௌரவமான தென்னாப்பிரிக்க குடிமக்களாக
வாழ்கிறார்கள்.
சூழ்நிலை,தொழில், வெளியுலகப் பழக்கம் காரணமாக
பெரும்பாலானோர் தமிழை முறையாகக் கற்க முடியாமல்,
மேற்கத்திய கலாச்சாரங்களையே வெளியுலகில்
கடைப்பிடிக்கிறார்கள்.
ஆனால், வீட்டுக்குள் இன்னும் பழைய பண்பாட்டை
மறப்பதில்லை. இயன்ற வரை இன்றைய
தலைமுறையினருக்கு துவக்கக்கல்வியை மட்டுமாவது
தமிழில் கற்பிக்க ஆர்வம் கொண்டு முயற்சித்து
வருகிறார்கள்.
பொதுவாக நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய
பாணிக்கு மாறி விட்டாலும் –
திருமணம், சடங்குகள், பூஜை, பண்டிகைகள்,
திருவிழாக்களில், இன்னும் நம் தமிழ்ப் பண்பாட்டின்
மீதுள்ள அபிமானமும், ஆர்வமும் குறையவில்லை.
இசைக்கச்சேரிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும்
அவ்வப்போது ஆர்வத்துடன் நிகழ்த்தப்படுகின்றன.
ஆங்காங்கே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்
தமிழ்ச் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன.
தமிழ் நாட்டில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம்
இங்கு இளைய தலைமுறையினருக்கு இசையும், நடனமும்
கற்றுக்கொடுக்கப்படுகிறது. இவர்களின் மொழி மற்றும்
பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழகம் உதவ வேண்டும்
என்பது தான் இவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.
150 ஆண்டுகளுக்கு முன்னர், பிழைப்பு தேடி, தாய்
நாட்டை விட்டு கடல்களைக் கடந்து சென்றாலும்-
இன்று தமிழர்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும்,
மகிழ்ச்சியாகவும் வாழும் ஒரு இடம் தென்னாப்பிரிக்கா
என்பதைச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்வடைகிறேன்.
தென் ஆப்பிரிக்காவின் அற்புதமான
இயற்கைக் காட்சிகள் சில கீழே –













150 ஆண்டுகளுக்கு முன்னர், பிழைப்பு தேடி, தாய் நாட்டை விட்டு கடல்களைக் கடந்து சென்றாலும்- இன்று தமிழர்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும்,
மகிழ்ச்சியாகவும் வாழும் ஒரு இடம் தென்னாப்பிரிக்கா என்பதைச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்வடைகிறேன்…..
ஆம் உண்மைதான். இங்கே தமிழனின் இழிவான வாழ்க்கையை விட அவர்கள் அந்நிய நாட்டில் இதே தமிழ் பண்புடன் சந்தோஷமாகவே வாழ்கிறார்கள்.
அன்று அவர்கள் செய்தது தவறாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நல்ல, சுத்தமான, கண்ட இடங்களை எச்சில் துப்பாத, பொறுக்கி ஆட்டோ காரன் இல்லாத,
தமிழனை தமிழனே சுரண்டும் அரசியல் தலைவர்கள் இல்லாத இப்படி பல கசமாலங்கள் இல்லாத வாழ்க்கையில் இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்க மட்டும் இல்லை. உலகின் பல நாடுகளில் நமது தமிழர்கள் அன்று தவறுதலாக குடியேறி இன்று நலமுடன் வாழ்கிறார்கள். குடி ஏறிய இடத்தில் அதிகமாக ஆசைப் படும் தமிழர்கள் மட்டுமே மற்ற நாட்டினரால் வெறுக்கப் படுகிறார்கள்.
.
தமிழர்களும், தென்னாப்பிரிக்காவும் … (கடல்களைக் கடந்து…பகுதி-3)
திரு காவிரி மைந்தன் அவர்களின் அற்புதமான, உயிரோட்டமுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு காவிரி மைந்தன்.
நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
தமிழர்களும், தென்னாப்பிரிக்காவும் … (கடல்களைக் கடந்து…பகுதி-3)
திரு காவிரி மைந்தன் அவர்களின் அற்புதமான, உயிரோட்டமுள்ள பதிவு. எனது
பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு காவிரி மைந்தன்.
2014-03-14 14:20 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :
> vimarisanam – kavirimainthan posted: ” இந்தியாவும், தென்
> ஆப்பிரிக்காவும் ஒரே ஆட்சியின் கீழ், ஆங்கிலேயர் வசம் இருந்த காலம் அது. தென்
> ஆப்பிரிக்காவின் சுரங்கங்களிலும், கரும்புத் தோட்டங்களிலும் வேலை செய்ய நிறைய
> ஆட்கள் தேவைப்பட்டனர். காடு திருத்தி, கழனி அமைக்க – 1860-ல் துவங்கி 1910
> வரை,”
INITIALLY THEY SUFFERED MUCH. I HOPE YOU WILL WRITE ABOUT FUJI ALSO.
//இசைக்கச்சேரிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும்
அவ்வப்போது ஆர்வத்துடன் நிகழ்த்தப்படுகின்றன.//
பரதநாட்டியமும், கர்னாடக சங்கீதமும் தானே? அதற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் தொடர்ப்பு உள்ளதா?
iIN MY OPINION, SOCIETY SLOWLY CHANGES IN EVERY TWNTY YEARS. FLAT SYSTEM, NUCLEUS FAMILY, ENGLISH MEDIUM SCHOOLS, OLD AGE HOUSES (SERENE APT) , WEDDING HALLS, TV CHANNELS, CELL PHONES, EASY TRAVEL TO WESTERN COUNTRIES (DUE TO IT SECTOR) LIKE THAT INNUMERABLE THINGS. IN NEW YEAR ( IST JANUARY) , THERE IS LOT OF CROWD IN TEMPLES. EVEN FILM SONGS BECAME A PART OF OUR LIFE.
ACCORDING TO GENERATIONS, TASTE VARIES. MY GRAND CHILDREN ARE ONLY FLUENT WITH ENGLISH. I CAN NOT TALK WITH THEM IN ANY OTHER LANGUAGE. THERE IS NO FIXED GOAL POST FOR ANYTHING. WILL ANYBODY OPPOSE WIDOWS REMARRIAGE NOWADAYS?
MUSIC AND DANCE ARE PART OF EVERY SOCIETY.
பிப்ரவரி 22: தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்றாண்டு இன்று !
Posted Date : 09:49 (22/02/2014)Last updated : 09:49 (22/02/2014)
தில்லையாடி வள்ளியம்மை எனும் போராட்ட குணம் கொண்ட வீரப்பெண் மறைந்த தினம் இன்று. தென் ஆப்ரிக்காவில் ஆட்சியை கைப்பற்றி குடியேறிய ஆங்கிலேயர்கள் அங்கே இருந்த எண்ணற்ற வளங்களை சுரண்டி அவற்றை தங்கள் நாட்டுக்கு பயன்படுத்தி கொண்டார்கள் . கரும்பு பண்ணைகள்,சுரங்கங்களில் வேலைப்பார்க்க கறுப்பினத்தவரை முதலில் வேலைக்கு வைத்தாலும் அவர்கள் பல சமயங்களில் முரண்டு பிடித்ததால் வேறு வாய்ப்புகளை நோக்கினார்கள் .அப்பொழுது தான் இந்தியர்கள் முதலிய காலனி நாட்டு மக்கள் கண்ணில் பட்டார்கள் அவர்களை அங்கே கொண்டு போய் கடுமையான வேலை வாங்கினார்கள் .
மிகவும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் இந்தியர்கள் . அப்படி கூலித்தொழிலாளியாக முனுசாமி மங்கம்மாள் எனும் தில்லையாடியை சேர்ந்த தம்பதியினர் அங்கே போனார்கள் .தலைக்கு மூன்று பவுன் கட்ட வேண்டும்,மிகக்குறைந்த கூலி,பின்னியெடுக்கும் வேலை,ஓட்டுரிமை மறுப்பு,வெள்ளையர் பள்ளிகளில் இடம் மறுப்பு,தொடர்வண்டிகளில் வெள்ளையருடன் இணைந்து பயணிக்க அனுமதி மறுப்பு ;தனிப்பகுதிகளில் சுகாதார வசதியின்றி,ஒதுங்க ஒழுங்கான இடமின்றி என எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தனர் .
அங்கே ஒரு வழக்குக்கு வாதாட சென்ற காந்தி இருபது வருடங்கள் அங்கேயே இருந்து போராடினார்.அவரின் நெடுங்கால அமைதி வழி போராட்டங்களுக்கு ஒரு வழி பிறப்பது போல 1912 இல் தலைவரி ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வந்தது ; ஓராண்டாகியும் அது அமல்படுத்தப்படாத நிலையில் சியர்லே எனும் நீதிபதி கிறிஸ்துவ முறைப்படி செய்துகொண்ட திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்,மற்ற திருமணங்கள் செல்லாது என்றார் .இதன் மூலம் தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற பந்தம் சட்டப்படி செல்லாமல் போனது . மேலும்,எல்லா இந்திய கூலிகளும் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது .இதை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
அந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எண்ணற்ற மக்களுக்கு உதவும் பணியை பெருமையாக செய்து கொண்டிருந்தார் பதினைந்து வயது சிறுமி வள்ளியம்மை ;புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. அதுவரை பெண்களை,குழந்தைகளை போராட்டத்தில் அவ்வளவு முனைப்பாக ஈடுபடுத்தாத காந்தி முதல்முறையாக அதை செய்தார் ;வள்ளியம்மை போராட்டத்தில் கலந்து கொண்டார் .மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ,அபராதம் செலுத்தினால் விடுதலை என்றார்கள் ,”அது சத்யாகிராகிக்கு இழுக்கு “என நெஞ்சுரத்தோடு மறுத்தார் அவர் .ஒரு ஆங்கிலேய அதிகாரி ,”சொந்தக்கொடி கூட இல்லாத நாட்டு கூலிகளுக்கு இவ்வளவு வெறியா ?”எனக்கேள்வி எழுப்பியதும் ,தன் முந்தானையை கிழித்து அந்த அதிகாரி முகத்தில் எறிந்து,”இதுதான் எங்கள் தேசியக்கொடி “என்றதும் வள்ளியம்மை தான் .சுகாதாரமற்ற சிறை வாழ்க்கை அவரின் உடல்நிலையை உருக்குலைத்தது ;கடுமையாக சிறுபெண் எனப்பாராமல் வேலை வாங்கினார்கள் .
பலவீனமடைந்த அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் ஆங்கிலேயர்கள் ;பத்து நாள் போராட்டத்துக்கு பிறகு இறந்து போனார் அந்த வீர மங்கை . காந்தி மனங்கலங்கினார் .இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள் தில்லையாடி வள்ளியம்மை .அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ என்று உணர்ச்சி மேலிட எழுதினார் .
அந்தப் போராட்டத்தின் காரணமாக இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட்டது. எல்லாத் திருமணங்களும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. வெள்ளை அதிகாரி ஒருவன் காந்தியை சுட துப்பாக்கியை நீட்டிய பொழுது,”என்னை முதலில் சுடு பார்க்கலாம்” என வள்ளியம்மை முன்னே போய் நின்றதை காந்தி எண்ணி எண்ணி மனம் விம்மினார் .ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி.தில்லையாடிக்கு பலகாலம் கழித்து காந்தியடிகள் வந்த பொழுது அந்த மண்ணை அப்படியே கண்களில் ஒற்றிக்கொண்டு கண் கலங்கினார் ,வள்ளியம்மை எனும் மகத்தான மங்கையின் சொந்த மண்ணல்லவா அது ?இதே தினம் தில்லையாடி வள்ளியம்மை எனும் வீர மங்கை உயிர் நீத்தார் .அப்பொழுது அவருக்கு வயது 16 !! தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்றாண்டு இன்று!
Please note this was in Junior Vikatan-Sorry I could not mention-yogi
thanks a lot for your input Mr.Yogi.
with best wishes,
Kavirimainthan
//ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவிலிருந்து நிறைய உழைப்பாளிகள் தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி (?) செய்யப்பட்டார்கள்.//
ஐயா, மேலே நீங்கள் இட்டுள்ள கேள்விக்குறிக்குள் எத்தனை ஆயிரம் துரோகங்கள், பேராசைகள், சுயநலங்கள், சின்னாபின்னமாகப்பட்ட குடும்பங்கள், ஆதிக்க வெறிகள், மிருகத்தனமான அடக்கு முறைகள் பொதிந்திருக்கின்றன என்பதை ஒரு கணம் வேதனையுடன் நினைக்காமல் கடந்து செல்ல முடியவில்லை. நீங்கள் அதை தொடர்ந்து சில பத்திகளில் எழுதியிருப்பது பொறுப்பு உணர்ச்சியுடன் கூடிய ‘மிதமான’ வரலாற்று பதிவு என்றே கருதுகிறேன்.