தமிழ்நாடு அரசுப் பணியில் திரு சகாயம் எடுத்து வரும்
அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை கவனித்து வரும்
பொது மக்களில் பலர் சகாயம் அவர்கள் அரசியலுக்கு
வந்தால் நல்லது என்கிற விதத்தில் கருத்து தெரிவித்து
வந்தனர். சில ஊடகங்கள் கூட அவர் அரசியலுக்கு
வருவார் என்று எதிர்பார்த்து எழுதவும் செய்தன..!
மதுரையில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்ட கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்த சகாயம் தற்போது தமிழ்நாடு அரசு நிறுவனமான
“கோ-ஆப்டெக்ஸ்” -ன் மேனேஜிங் டைரெக்டர்
பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
இங்கும் தன் தனித்திறமையை செயலில் காட்டிவரும்
அவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றிலிருந்து
சில பகுதிகள் கீழே –
—
வேட்டி, பட்டுச் சேலைன்னு கோ-ஆப்டெக்ஸ்
பொருள்களின் விற்பனையை பெருக்கணும்னு
முயற்சி செய்கிறோம். வசதியானவங்க மட்டும் தான்
பட்டுச்சேலை உடுத்தணும்கிற நிலையை மாற்ற
யோசிச்சோம். அதற்காக ‘எல்லாருக்குமே பட்டு’
என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்து, 2500 ரூபாய்க்கு
கீழே விலையுள்ள பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தி
இருக்கிறோம். புதிய டிசைன்களைத் தயாரித்து
தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட வசதியாக
‘கோ-ஆப்டெக்ஸ் டிசைன் ஸ்டுடியோ” ஒன்றை
புதிதாக உருவாக்கியுள்ளோம்.
ஒவ்வொரு சேலை, வேட்டியிலும், அதை நெய்த
நெசவாளியின் பெயர், அவரது படம், அந்த துணியை
நெய்வதற்கு எத்தனை முறை அவர் கை,கால்களை
அசைத்தார் என்பன உள்பட அத்தனை விவரங்களும்
அடங்கிய ஒரு அட்டையையும் இணைத்திருக்கிறோம்.
இது அந்த நெசவாளிக்கு நாங்கள் செய்யும் மரியாதை.
சமீபத்தில் கோ-ஆப்டெக்ஸ் பெற்ற மத்திய அரசின்
விருது அங்கீகாரங்களை அந்த நெசவாளிகளுக்கு
அர்ப்பணிக்கிறோம்.
தமிழ்நாட்டில் ஆம் ஆத்மிக்கு உங்களை தலைமை
ஏற்க அழைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா ?
(ஆம் ஆத்மி கட்சியின் அண்மைய டெல்லி “தர்னா”சொதப்பலுக்கு முன்னரே கேட்கப்பட்டு பதிலும் சொல்லப்பட்டு விட்ட கேள்வி இது !)
சமூகம் முழுக்க முழுக்க நேர்மையாக இயங்கும்போது
தான் அதன் பிரதிபலிப்பாக அரசு நிர்வாகமும் முழுக்க நேர்மையாக செயல்படும்.
ஆனால் இன்றைக்கு சமூக அமைப்பின் பெரும்பங்கில்
ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. அப்படிப்பட்ட
சூழ்நிலையில் நான் தனியாளாக அரசியலில் நேர்மையாக
செயல்பட்டால், அது நிச்சயம் எதிர் விளைவுகளைத்தான்
உண்டாக்கும்.
என் நேர்மை, அரசியலைத்தாண்டிய –
இந்த சமூகத்துக்கான நேர்மை.
என் இலக்கு -தேர்தலோ, பதவிகளோ இல்லை.
அடுத்த தலைமுறையை நேர்மையானதாக உருவாக்க
வேண்டும் என்பது தான் என் ஆசை.
ஆக,அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை..!
——–
டெல்லியில் ஆம் ஆத்மி குறுகிய காலத்தில் பிரபலமாகி, உடனடியாக ஆட்சியையும் கைப்பற்றியது, இந்தியா
முழுவதும் பல பொழுதுபோகாத பெரிய மனிதர்களை
உசுப்பி விட்டுள்ளது. திடீர் சாம்பார்,
திடீர் ரசம் மாதிரி – திடீர் எம்.பி., திடீர் அமைச்சர்
ஆகி விடலாம் என்கிற கனவில், பல பிரபலங்கள்
ஆம் ஆத்மியில் சங்கமம் ஆக ஓடோடி வருகின்றனர்.
இது கானல் நீர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்
முன்னர் நாட்டில் எத்தனை கேடுகள் விளையுமோ தெரியவில்லை..
திரு.சகாயம் அவர்களின் கருத்தினை நான் முழுக்க
முழுக்க ஆதரிக்கிறேன். இப்போதைய “அரசியல்
சூழ்நிலை” அவரைப் போன்ற உண்மையானவர்களை விழுங்கிச் சாப்பிட்டு விடும்.
மேலும், மூத்த அரசு அதிகாரி என்கிற முறையிலேயே
அவரால், அவர் பணிபுரியும் அரசுத் துறைகளில்,
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறையச் செய்ய முடியும்- கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை
அவர் தவற விட வேண்டாமே !
நமக்கும், மிக அரிதாகத்தான் நல்ல அரசு அதிகாரிகள்
கிடைக்கிறார்கள்.
பணி ஓய்வு பெறும் வரையில்,
எந்த துறையில்,
எந்த பொறுப்பில் இருந்தாலும் சரி –
அவரால் இயன்ற அளவிற்கு அரசுப்பணிகளில்
இதே போல் நிர்வாகச் சீர்திருத்தங்களைக்
கொண்டு வர வேண்டும் – லஞ்ச ஊழல்களைக் களைய
அவரால் இயன்றதை எல்லாம் செய்ய வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற பிறகு – அவர் பொது வாழ்க்கைக்கு
அவசியம் வர வேண்டும். அதற்குள்ளாக அவரை
அடையாளம் கண்டு கொண்டவர்களும்,
அவரால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர்களும்
நிறைய பேர் இங்கு உருவாகி இருப்பார்கள். அவர் தனி ஆளாக இல்லாமல், நிறைய பேர் அவர் கூட சேர்ந்து உழைப்பதற்கு தயாராக இருப்பார்கள்.
திரு.சகாயம் அவர்கள் அவரது மனித நேயம் மிக்க சிந்தனைகளிலும், முயற்சிகளிலும் –
தொடர்ந்து வெற்றி பெற நமது உளமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்வோம்.





புத்திசாலிகள் இப்படித் தான் முடிவெடுப்பார்கள். கெஜ்ரிவால் கட்சி ஆரம்பிக்கும் போது நமது பொது மக்களின் கருத்துக்கும், அவர் மெஜாரிடி இல்லாமல் நிற்கும் போது எழுந்த கருத்துகளுக்கும், பின்னர் காங்கிரஸ் ஆசியுடன் பதவியில் அமரும் போது வந்த கருத்துகளும் இப்போது அவர் தெருவில் உட்கார்ந்த போது எழுந்த கருத்தகளும் எப்படியெல்லாம் மாறி மாறி வந்தன என்பதையும் தான் நாம் பார்த்தோமே. நம்முடைய இந்த நேர்மை அற்ற மக்களை நம்பி இவர் அரசியலில் இறங்காமல் இருப்பது நலமே. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
தங்களுடன் சேர்ந்து எனது வாழ்த்துக்களை அவருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
49 ஓ வை மனச்சாட்சிப்படி உபயோகித்தவர்கள் ஏற்காடு தொகுதியில் 5000 பேர்தான். எந்த நேர்மையானவரும் சிந்திக்க வேண்டிய விசயம்.
தவிர, தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் நமக்கு எதிராக நின்று ரஜினிகாந்த் போன்ற நடிகர் வெற்றி பெறுவார் என்ற அச்சம்கூட சகாயத்திற்கு இருக்கலாம்.
சிந்திக்காதவன் எப்படிச் செயல்படுவான் என்று இதுவரை பார்த்து வந்தோம். முதலில் திரைப்பட நடிகர்கள் தமிழக அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டும், ஊழலைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.
கோபாலன்
சகாயம் அவர்களுக்கு ஒரு சல்யூட். நேர்மையானவர்கள் அரசு நிர்வாகத்திற்கும் தேவை. அரசு கடமை முடித்த பின் அவசியம் அரசியலுக்கு வரவேண்டும்.
இப்படித்தான் டி என் சேஷன் கண்டிப்பாகவும்/நேர்மையாகவும் பணியாற்றி ஒரு மாற்றத்தையே தேர்த்தலில் கொண்டுவந்தார். இப்போது எங்கே எப்படி இருக்கிறாரோ?
அதே போல இவரையும் காணாமல் செய்துவிடுவார்கள் நம் மிடீயாக்கள்.
சூதானமாக இருந்துக்கொள்ளுங்கள் திரு சகாயம் அவர்களே!