
அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர்கள் சிலர்
இருக்கிறார்கள். வடக்கே லாலுபிரசாத் யாதவை
சொல்லலாம். அவர் பேச்சு எனக்கு ரொம்பவும்
பிடிக்கும்.“கலோக்கியல்” இந்தியில் ஜாலியாகப் பேசுவார்..!
கூச்சம் என்பது துளிக்கூட கிடையாது !
மாட்டுத்தாவன ஊழல் வழக்கில் 5 வருடம்
சிறைத்தண்டனை பெற்று இரண்டு மாதங்களாக
சிறையில் இருந்தவர்,65 வயதானவர், சுப்ரீம்
கோர்ட்டில் ஜாமீன் பெற்று, 2 நாட்கள் முன்பு தான்
வெளியே வந்தார். ஜெயிலுக்கு வெளியே
செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
வெளியே வந்தவுடன் ஒரு செய்தியாளர் கேட்டார்
“லாலுஜி – எப்படி இருக்கீங்க ?”(வடக்கே,
தலைவர்களை ‘ஜி’ போட்டு பெயர் சொல்லி
தாராளமாக அழைக்கலாம் ..!) அதற்கு லாலு சொன்ன
வார்த்தை – உச்சகட்ட தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பு –
“ஜப் தக் ரஹேகா ஆலூ-
தப் தக் ரஹேகா லாலூ..”
இந்தியில் “ஆலூ” என்றால் உருளைக்கிழங்கு என்று
அர்த்தம். தன்னை யாரும் அவ்வளவு சுலபமாக ஒழித்து
விட முடியாது என்கிற அர்த்தத்தில் சொல்கிறார் –
“உருளைக்கிழங்கு எது வரை இருக்குமோ –
அது வரை லாலுவும் இருப்பேன் !”
தமிழ்நாட்டில் விஜய்காந்த் ஒரு வித்தியாசமான மனிதர்.
அவரைப்பற்றி உருவாகும் பிம்பங்களை மேலும் மேலும்
உறுதி செய்வது போலவே, ஆனால் அதே சமயம் மிக்க
தன்னம்பிக்கையுடன் பேசுகிறார். அவரது பேச்சை
பல சமயம் செய்தித்தாள்களில் முழுவதாகப் போடுவதில்லை.
தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் போடுகிறார்கள்.
முழுப்பேச்சையும் கேட்க மிகச்சுவையாக இருக்கும் !
(வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் கேட்பதுண்டு !)
டெல்லி சட்டமன்றத்திற்கு 11 தொகுதிகளில் போட்டியிட்டு,
அத்தனைக்கும் சேர்த்து மொத்தம் இரண்டாயிரத்து சொச்சம்
ஓட்டு வாங்கி விட்டு திரும்பிய கையோடு,
தன்னைப் பற்றிய உருவகத்தை எந்தவிதத்திலும்
மறைக்காமல் அதே சமயத்தில் அதீத தன்னம்பிக்கையுடன்
பேசும் – விஜய்காந்த்தின் லேட்டஸ்ட் பேச்சு கீழே-
————-
நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். ஆனா, எதுக்குப்
பயப்படணுமோ, அதுக்குப் பயப்படணும். எதுக்கு
பயப்பட வேண்டாமோ, அதுக்கு பயப்பட மாட்டேன்.
என் பசங்க ரெண்டு பேரும் – என்கட்சியையும் சரி,
என்னையும் சரி – யூஸ் பண்ண மாட்டாங்க.
“நீங்க -நீங்களா இருக்கணும்”னு அவங்க கிட்ட கண்டிப்பா
சொல்லி இருக்கேன்.
நான் சினிமா உலகத்தையே மறந்து தான் இருந்தேன்.
ஆனா என் மகன் சண்முகநாதனுக்காகத்தான் சினிமா
பாக்கறேன். அதே சமயம் இன்னிக்கு மட்டும் தான்
நான் சினிமாவைப் பத்தி பேசுவேன்.
நாளையிலிருந்து –
நான் பேச மாட்டேன்.
என் சம்சாரம் பேசும்…!
எனக்கு முழுநேர அரசியல் இருக்கு.
கட்சி வேலைகள் இருக்கு. “நீங்க ஏன் ஏற்காடுல நிக்கலை.
பயமா?”ன்னு சிலர் கேக்கறாங்க.
யாருக்கு பயம் ?
அவங்களுக்கு தான் பயம்..!
அதனால தான் ரைட்ஸ் வாங்கிவெச்சும் அவங்க சேனல்ல
என் படங்களைப் போட மாட்டேங்கறாங்க. எங்கே
ஜெயலலிதாவுக்கோ, கலைஞருக்கோ தைரியமிருந்தா –
என் படங்களை ஒளிபரப்பச் சொல்லுங்க பாப்போம்.
நான் நடிச்ச எத்தனை படங்களை வாங்கி முடக்கி
வெச்சிருக்காங்க தெரியுமா ?
நான் அதைப்பத்தி எல்லாம் கவலைப்படலை. ஏன்னா –
மேல தெய்வம் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் இருக்கு!
டெல்லிக்கு நான் போயிருந்தேன். அங்கே –
‘ஆங்ரி யங்மேன்’னு அர்விந்த் கெஜ்ரிவாலை சொல்றாங்க.
நான் கோவப்பட்டா அது தப்பாம். அவரு கோபப்பட்டா
அது “ஆங்க்ரியா”ம்..!
என்னய்யா நியாயம் இது ?
மத்தவங்க செய்யறதெல்லாம் வெளியே தெரியாது.
ஆனா என்மேல மட்டும் ‘குடிக்கிறார்’னு பழி போடறாங்க.
ஏன்யா – குடிச்சா தப்பா …?
நீங்க தானே தமிழ்நாடு பூரா கடை தொறந்து வெச்சிருக்கீங்க.
ஏன் தொறக்கறீங்க ? அப்புறம் ஏன் குடிக்கிறான்’னு
சொல்றீங்க ?
நான் இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன்.
ஆனா, தைரியமானவன். நான் எதுக்கும் கையேந்தி
நிக்க மாட்டேன். இடத்தை -கிடத்தை அடமானம்
வெச்சாவது பொழப்பை நடத்துவேன். கட்சியை வளர்க்க
நான் படறபாடு எனக்கும் –
என் தொண்டர்களுக்கும் தான் தெரியும் !
நான், என் தொண்டர்களை உரிமையாத் திட்டுவேன்.. !
அடிப்பேன் ..!
இன்னும் எது வேண்டுமானாலும் செய்வேன்.
யாரோ ரோட்டுல போற ஆளையா அடிக்கறேன் ..?
என் கட்சிக்காரங்களை தானே அடிக்கறேன்.
என் வீட்டுல இருக்கற மாதிரி தானே அவங்க ..?
அடிக்கிறார்… அடிக்கிறார்’னு நீங்க ஏன்யா கூப்பாடு
போடறீங்க ?
தப்பு பண்ணா கோவம் வரத்தானே செய்யும் ..!
கோவத்தை கோவம்னுதான் சொல்லணும்.
அதை ஏன்யா அரசியல் நாகரிகம்’னு சொல்லணும் ..?
அட என்னய்யா அரசியல் நாகரிகம் ..!
இப்படிச் சொல்லித்தான் தமிழ்நாட்டை ஏமாத்தறீங்க.
இந்தியா முழுக்க இப்படித்தான் பூராப்பயலுகளும்
ஏமாத்தறான் ..!
இப்ப நான் பல வேலைகள்ல இருக்கேன். அதனால,
எவனாவது எதாவது கேட்டா சள்ளுபுள்ளுனு தான்
விழுவேன்..!
அதைத்தான் தலைப்பாப் போடுவீங்க .. போட்டுக்குங்க !
——————
பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது.
தமிழ்நாட்டில் – திமுக, அதிமுக, காங்கிரஸ் தவிர
பாஜக தலைமையில் இன்னொரு கூட்டணியை
உருவாக்க தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன.
மதிமுக ஏற்கெனவே சேர்ந்த மாதிரி தான்.
தேமுதிக வை சேர்க்க தீவிரமாக முயற்சி செய்கிறார்
தமிழருவி மணியன். தமிழக பாஜக தலைவர்கள்
இல.கணேசனும், பொன்.ராதாகிருஷ்ணனும் இதில்
மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். “விஜய்காந்த்
நல்ல லட்சியங்களைக் கொண்டிருக்கிறார்” என்று
இல.கணேசன் பரவசத்துடன் கூறுகிறார்.
(ஆனால் பாஜக தலைமை இன்னமும் கூட
அதிமுக வுடனான கூட்டணியையே விரும்புகிறது.)
அதிமுக வுடன் கூட்டணி இல்லையென்றால் –
விஜய்காந்துடன் பாஜக கூட்டணி
கைகூடலாம்..!
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய
வாய்ப்பும் கூட உருவாகலாம்…!
தமிழகத்திலிருந்து எத்தனை M.P.க்கள் தேருவார்களோ
தெரியாது. ஆனால் எத்தனை பேர் தேரினாலும்,
மத்திய அமைச்சரவையில்
தமிழ் நாட்டுக்கும் இடம் கொடுக்க வேண்டுமே !
எனவே, கூட்டணி சார்பாக விஜய்காந்துக்கு கூட
மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் ..!
(அழகிரி அமைச்சராகலாம் என்றால், புதுச்சேரி
நாராயணசாமியே அமைச்சர் ஆகலாம் என்றால்,
விஜய்காந்த் ஆககூடாதா என்ன ? அவருக்கென்ன
குறைச்சல் ? “ராஜா”மாதிரி இருக்கிறார்…!
மேலும், தமிழ்நாட்டில் அவர் அதிகாரத்திற்கு
வர வாய்ப்பே இல்லை என்னும்போது, அவரும்
இதை விரும்புவார்…!)
இப்போது லட்சியம் செய்யாத டெல்லி சேனல்கள்
எல்லாம் அப்போது என்ன செய்யும் ?
விஜய்காந்த் பின்னால் அலையும் ..!
CNN/IBN, NDTV-யில் மத்திய அமைச்சர் விஜய்காந்தின்
“குடிச்சால் என்ன ? – அடிச்சால் என்ன ?”
பேட்டி ஒளிபரப்பாகலாம் …!
எல்லாப் புகழும் போகட்டும் –
“தமிழருவி மணியன் – இல.கணேசன், பொன்ரா”
கூட்டணிக்கே !!!
—
பின்குறிப்பு – எவ்வளவு நாட்கள் தான் தொடர்ந்து
serious ஆகவே எழுதிக் கொண்டிருப்பது ..?
ரொம்ப நாளாகி விட்டது.
relaxed ஆக ஒரு இடுகை போட்டு- அதான்..!!!



super ponga…. kalakkal post…. even I watched this particular speech… he is going to be the “south lalu”… lalu made a mark when he was in railway ministry.. same way, we don’t know vijaykanth may do something different if he becomes a minister…
நீங்க சொன்ன இரண்டு விசயங்கள் முற்றிலும் உண்மை.
நா நயத்துடன் வி கா பேசுவதில்லை. எல்லாவற்றிலும் பட்டவர்த்தனம் தான்.
இவர் செய்த இரண்டு பிழைகள். கடைசி வரைக்கும் எத்தனை பிரச்சனைகளை உருவாக்கிய போதும் சட்டமன்றம் சென்றிருக்க வேண்டும். பத்திரிக்கைகளில் தினந்தோறும் வந்து இருக்க முடியும்.
தனது தொகுதியை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.
இது தவிர மாபா பாண்டியராஜன் போன்றோர் போன போது கொஞ்சமாவது அடுத்த நிலையைப் பற்றி யோசித்து இருக்க வேண்டும்.
ரிலாக்ஸா ஒரு பதிவுன்னு சொல்லி இப்படி சிரிக்கவிட்டீங்களே ஐயா.
ஆலு லாலு என்பது போல, விசயகாந்த் விசாராயகாந்த் ஆகிவடப்போறர்.
என்னோமோ தோணிச்சு சொல்லிட்டேன்.
உங்கள் நகைசுவை உணர்வு அபாரம் சார்..மிக நல்ல பதிவு..
நம் வி.கா. ரெயில்வே அமைச்சராகிறார்.
முதல் பேட்டி….அரங்கம் நிரம்பி வழிகிறது.
ஒருவர் கேட்கிறார்..
“பெருகிவரும் ரயில் விபத்தை தடுக்க ஏதேனும் திட்டம் உண்டா?”
நம்மவர்,
“ஏன் இல்லாமல்? விபத்துக்கள் பெரும்பாலும் கடைசி பெட்டிகளில் தான் அதிகம் நடைபெறகின்றன என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.எனவே இனிமேல் ரயில்களில் கடைசிப்பெட்டி இணக்க கூடாது என உத்தரவிடப்போகிறேன்..அங்ங்ங்”
“அழகிரி அமைச்சராகலாம் என்றால், புதுச்சேரி
நாராயணசாமியே அமைச்சர் ஆகலாம் என்றால்,
விஜய்காந்த் ஆககூடாதா என்ன ? அவருக்கென்ன
குறைச்சல் ? “ராஜா”மாதிரி இருக்கிறார்…!”
first class phrase..!
Mr.Kavirimainthan, Not only in
serious articles, you are excellant
in comic writing also.
A very realistic and entertaining article.
KM,
In a comedy way you have pointed out something serious, which may happen in future – Captain becoming Cabinet Minister. I feel it could be in the way of Siranjeevi. The way Captain runs his party, may make him land at this point I guess.
ஆம்! ஆம்.வி.கா. மத்திய அமைச்சர் ஆனாலும் ஆகலாம். ஒரு நெப்ஸ் போல, ஒரு மூர்த்தி போலவும் எடுத்துக் கொள்வோமே.