திரு.ப.சிதம்பரம் பேச்சை ஏளனம் செய்கிறது இலங்கை.. ! பதிலையே காணோமே -ஏன் ..?

சென்ற சனியன்று (30/11/13) சென்னையில் உட்லண்ட்ஸ்
ஓட்டல் மண்டபத்தில் ‘இலங்கைத் தமிழர்களின்
வாழ்வுரிமையும் மத்திய அரசின் நிலையும்’ என்கிற
தலைப்பில் பேசும்போது மத்திய அமைச்சர்
திரு.ப.சிதம்பரம் அவர்கள் சில விஷயங்களை வலியுறுத்திப்
பேசினார். சுருக்கமாக –

pc-woodlands meeting

1) இலங்கையில் இறுதிப் போரில் 65 ஆயிரம் பேர்
கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுப் போரை
நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.
ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு
செவிசாய்க்கவில்லை.

இந்திய அரசின் முயற்சிக்கு இரு தரப்பினரும்
உடன்பட்டிருந்தால், பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.
இனப் படுகொலை நடந்திருக்காது.

(குறிப்பு – இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது
என்று திரு ப.சிதம்பரம் அவர்கள் சொன்னார் – அதற்குப் பின்
தான் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்
என்பது கலைஞரின் அந்நாள் statement ..!)

அதற்காக இனப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்க
முடியாது. இலங்கையிலே நடைபெற்ற இந்த
இனப்படுகொலையைப் பற்றி
ஒரு விரிவான,
உண்மையான,
விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அந்த விசாரணை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய
அளவுக்கு உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும்.

அந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம்
காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த
கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை
தண்டிக்கும் வரை, இந்திய அரசு ஓயாது –
இதை நம் அன்புத் தலைவர்
ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்.
2) இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம்,
வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின்
வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத் தரும் 13-வது
திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை
இந்தியா ஓயாது.

3) பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு
இதுவரை சுமார் 500 கோடி ரூபாய் வரை பல வகைகளில்,
இந்திய அரசு உதவியுள்ளது. ரயில் பாதைகள், பஸ்கள்,
மருத்துவ மனைகள், 50,000 வீடுகள் கட்டித்தருதல்
என பல பணிகளை மேற்கொண்டுள்ளது. நடப்பாண்டில்
ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.

————

திரு.ப.சிதம்பரம் அவர்களின் இந்த பேச்சுக்கு,
மிக ஏளனமாகவும், பலத்த பதிலடி கொடுக்கும்
விதத்திலும் இலங்கை அமைச்சர்கள் பேசியுள்ளனர் –

———–

ஓட்டல் மண்டபத்தில் அல்ல –
இலங்கை நாடாளுமன்றத்திலேயே,
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேயின் சகோதரரும்,
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான
பசில் ராஜபக்ச – பதிலடி கொடுக்கிறார் –

“போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின்
தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று விரும்பிய
சில நாடுகள், இப்போது தமிழர்களுக்காக முதலைக்
கண்ணீர் வடிக்கின்றன. பிரபாகரனை அழிக்கும் வேலையை
முடிக்க வேண்டும் என்று எமக்குக் கூறியவர்கள் இப்போது
முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

போரின் இறுதிக்கட்டத்தில், தாம் என்ன செய்தன மற்றும்
எவ்வாறு பங்களித்தன என்பதை மறந்து விட்டு சில நாடுகள்
நடிக்கின்றன.

நமக்கு யாரும் உத்திரவிட முடியாது. எதிர்க்கட்சிகள் இங்கு
அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆளப்போவது
ராஜபக்சக்கள் தான்”.

—————–

இதைதவிர,
இந்த விஷயம் குறித்து பிபிசி க்கு பேட்டியளித்துள்ள
இலங்கையின் மூத்த அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த,
திரு.ப.சிதம்பரம் அவர்களின் பேச்சு குறித்து
மிகக்கேவலமாகவும், ஏளனமாகவும் – கருத்து
தெரிவித்திருக்கிறார் –

“இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு
வெளியாட்களுக்கு உரிமை கிடையாது.
இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு,
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள்
பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான
உரிமையும் கிடையாது.

இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில்,
வாக்கு சேகரிக்கும் நோக்குடன் அரசியல்வாதிகள்
எதையும் பேசுவார்கள். அமைச்சர் சிதம்பரம் தேர்தல்
வாக்குகளுக்காக பேசிய கருத்துக்களை – இலங்கை
கணக்கில் எடுக்காது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு
இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே
வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டது.

பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு
முரணானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர்,
அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது.

அன்று 13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது
சிறிலங்காவில் இருந்த நிலை இன்றில்லை.
இன்று எல்லாம் மாறிவிட்டது.
எங்கள் நாட்டுப் பிரச்சனைகள் பற்றி அவர்கள்
பேசவேண்டியதில்லை– அவற்றை நாங்கள்
பார்த்துக்கொள்கிறோம்.

எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள்
இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின்
பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களின் அரசியல்
தேவைகளுக்காக ஒவ்வொன்றைக் கூறிக் கொண்டிருக்கக்
கூடாது.

வடக்குகிழக்கு மக்களுக்கு முழுநேரம் மின்சாரம் இருக்கிறது.
சாலைப் போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.
பாடசாலைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாழ்க்கையை இந்தியாவா கொடுத்தது?

எங்கள் தெற்கிலுள்ள மக்களின் வரிப்பணத்தில் தான் அந்த
வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒருசதம் கூடக் கொடுக்கவில்லை.
எல்லாவற்றையும் கடனுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் சிதம்பரத்தை முதலில் இங்கு வந்து நிலைமையை
பார்க்கச் சொல்லுங்கள். தென்னிந்தியாவை விட
வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை
அனுபவிக்கிறார்கள்.

—————-

“போரின் இறுதிக்கட்டத்தில், தாம் என்ன செய்தன மற்றும்
எவ்வாறு பங்களித்தன என்பதை மறந்து விட்டு சில நாடுகள்
நடிக்கின்றன”.

“இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி
பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது”.

“வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது
என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச
எவருக்கும் உரிமை கிடையாது”.

“இந்தியா ஒருசதம் கூடக் கொடுக்கவில்லை.
எல்லாவற்றையும் கடனுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்”.

“கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்”.

“எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள்
இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின்
பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள்”.
———
இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் பேசிய
பேச்சுக்கு – இந்த அளவிற்கு கேவலமாக
பதிலளிக்கும் இலங்கைக்கு –

அந்த அமைச்சரோ, இந்திய வெளியுறவு அமைச்சரோ,
இந்திய அரசாங்கமோ –தகுந்த விதத்தில் பதிலடி கொடுக்கும்
என்று காத்திருந்தால் –

மூன்று நாட்களாகி விட்டன –
கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது –
மூச்சு, பேச்சு – எதுவுமே இல்லை !
இலங்கை -இந்தியாவை blackmail
செய்வது போல் தோன்றவில்லை …?

ஏன் இப்படி …?
யாருக்காவது – எதாவது புரிகிறதா …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திரு.ப.சிதம்பரம் பேச்சை ஏளனம் செய்கிறது இலங்கை.. ! பதிலையே காணோமே -ஏன் ..?

  1. எழிலன்'s avatar எழிலன் சொல்கிறார்:

    அய்யா நன்றாகவே புரிகிறது.அதான் கூட்டுக் களவாணிகள் என்று அதான் பசில் ராஜபக்சவே சொல்லி விட்டாரே ? இவர்கள் எப்படி பதில் பேச முடியும் ? பேசினால் அவர் இன்னமும் ரகசியங்களை அவிழ்த்து விடுவாரே.
    கம்முன்னு கெடக்க வேண்டியது தான்.

    எழிலன்

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை.,
    மிக அருமையாக செய்திகளை சேகரித்து,தொகுத்து,எங்களுக்கு ஊட்டுகிறீர்கள்.
    சம்பந்தப்பட்டவர்களுக்கு.VMSS இருந்தால்…ம்ம்ம்ம்..அதுதான் இல்லையே!!
    மிக்க நன்றி.

  3. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ////அந்த அமைச்சரோ, இந்திய வெளியுறவு அமைச்சரோ,
    இந்திய அரசாங்கமோ -தகுந்த விதத்தில் பதிலடி கொடுக்கும்
    என்று காத்திருந்தால் –

    மூன்று நாட்களாகி விட்டன –
    கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது –
    மூச்சு, பேச்சு – எதுவுமே இல்லை !
    இலங்கை -இந்தியாவை blackmail
    செய்வது போல் தோன்றவில்லை …?

    ஏன் இப்படி …?
    யாருக்காவது – எதாவது புரிகிறதா …?///

    அடப் போங்க சார்.. குற்றம் புரிந்த இருவருக்கிடையில் நடக்கும் சிறு சலசலப்பு இது. இதைப் போய் பெருசு படுத்திக்கிட்டு!!!

    இலங்கை அமைச்சர் கேட்பது நியாயம்தானே?? கொலைக்குற்றத்திற்கு சாட்சியாகவும், சக தோழனாகவும், உடந்தையாகவும் இருந்த இந்திய அரசாங்கத்திற்கு இந்தப் பேச்சும் தேவைதான்.. இதற்கு மேலும் தேவைதான்!!

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    //ஏன் இப்படி …?
    யாருக்காவது – எதாவது புரிகிறதா …?//

    காட்சி 1. போரின் பின் ஒரு பேட்டியில் அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேக்கா சொன்னார். “நாம் போரை இவ்வளவு விரைவாக முடிக்க விரும்பவில்லை. நாம் சுற்றி வளைத்து விட்டோம். யாரும் தப்ப முடியாது. ஆனால் அதிக படியான பொது மக்கள் உள்ளே இருந்ததால் அவர்கள் உயிரிழப்பை தவிர்க்க மெதுவாகவே முன்னேற இருந்தோம். ஆனால் ‘புறசக்திகளின்’ நெருக்குதலால் தான் போரை விரைந்து முடித்து அதிக்கப்படியான பொது மக்கள் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்தது.

    காட்சி 2. கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது மே 13, 2009. முடிவுகள் வெளி வந்தது மே 16. அப்போது வரை ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு அடுத்த தவணையும் ஆட்சிக்கு வருமா என்பது முடிவு வரும் வரை கேள்வி குறியாகவே இருந்தது.

    காட்சி 3. இலங்கைக்கு எதிராக எப்போதெல்லாம் மனித உரிமை மீறல் பிரச்சனை எங்கெல்லாம் எழுப்ப படுகிறதோ அப்போதெல்லாம் தீர்மானங்களை தடுப்பதோ, மழுங்கடிப்பதோ இல்லை நீர்த்து போக வைப்போதோ நம் காங்கிரஸ் அரசு தான். உதாரணமாக அண்மையில் இலங்கையில் சல்மான் குர்ஷித்திடம், கமரூனால் இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் பற்றி கேட்ட போது அவரின் பதில் எம்மை பொறுத்த வரையில் ‘இலங்கையின் செயற்பாடு திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது’.

    கேள்வி 1 யாரிந்த ‘புற சக்தி ‘?

    கேள்வி 2 முள்ளி வாய்கால் படுகொலைகள் நடந்த மாதம் வருடம் என்ன?

    கேள்வி 3. நம் அரசு இலங்கை முன் ‘கடன் பட்டார் நெஞ்சம்’ போல் கலங்குவது எதனால்?

    (ம்க்கும்ம்! கா மை ஐயாவே எதுவம் தெரியாதது போல கேட்கும் போது சிறியோன் எனக்கு மட்டும் ஏதாவது தெரியுமா என்ன?! )

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      எழில்,
      ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியும் இந்திய அரசு சக போர்க்குற்றவாளி என்று. ஆகவே அவன் சிதம்பரம் சொல்வதையோ, பசில் சொல்வதையோ சீரியஸாக எடுக்கவே மாட்டான்.

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ரிஷி! ஆனால் அமைச்சர் இவ்வளவு தைரியமாக படித்தவர்கள் மிக்க சென்னையில் மேல் கூறியவாறு மேடை ஏறி பேசுகிறார் என்றால் ஒன்று அவர் இன்னும் நம்மிடையே உண்மை அறியாதவர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டுள்ளார் இல்லை மக்கள் ஞாபக சக்தி மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

        • reader's avatar reader சொல்கிறார்:

          தமிழக அரசியல் தலைமைகளும், தில்லியின் முண்ணனி அரசியல் தலைமைகளும், அதிகார வர்க்கமும், பார்ப்பணீயர்களும் தமிழகத் தமிழனை emotional idiots ஆகத்தான் கருதுகிறார்கள். அவனை நாட்டு ஒருமைப்பாடு எனும் அம்பு கொண்டு அடித்தால் எளிதில் முடங்கி விடுவான் என்பது அரிச்சுவடி பாடம்.தன் மாநிலத்துக்கான பங்கை மற்ற மாநிலங்கள் பிடுங்குவதையே தட்டிக் கேட்க முடியாத தமிழன் எங்கே ஈழத்தைக் காக்கப் போகிறான்?

  5. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    இங்கு இன்னொன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். இந்தியக் கடலோரத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் அடிபட்டால் அதை யாரும் இந்திய மீனவர்கள் பிரச்சினையாக எந்த “தமிழ் ஊடகமும்” சொல்வதில்லை. தமிழக மீனர்வர்கள் அட் வாங்கினர்; ராமேஸ்வர மீனவர்களை கைது செய்தனர் என்றுதான் செய்தி போடுகின்றனர். கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் செய்தி போடட்டும் “இந்திய மீனவர்களை கொலை செய்தது இலங்கை. வேடிக்கை பார்த்தது இந்தியக் கடற்படை” ஆனால் யாருக்கும் அதை செய்ய மாட்டார்கள்.

    ஆகவே யாரும் அரசியலையோ அதிகார வர்க்கத்தையோ நம்பாதீர்கள். உங்களைக் காக்க நீங்களாக அணி திரள வேண்டும். உங்களால் முடியாதென்றால் அடிமைப்பட்டே கிடைக்க வேண்டும்.

    இன்றைய தினகரன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்திய கடற்படை தளபதி ஒருவர் தெளிவாக தெரிவித்துள்ளார். “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி பிடிப்பதால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன”. இப்படி ஏற்கெனவே சிலமுறை குறிப்பிட்டுள்ளனர்.

    இப்போது இந்திய மீனவர்கள் என்ன செய்ய வேண்டும்? இது அவர்கள் முடிவெடுக்க வேண்டியது. இந்திய அரசையோ, தமிழக அரசையோ நீங்கள் நம்புவதைவிட இலங்கையுடன் நேரில் பேசலாம். எனக்கு கண்ணுக்கு தெரியும் எதிரிதான் மரியாதைக்குரியவனாக தெரிகிறான். பக்கத்தில் இருக்கும் துரோகிகள் அல்ல.

  6. sebastiampilai's avatar sebastiampilai சொல்கிறார்:

    சிதம்பரம் ஐயாவுக்கும் அவர்கூட்டத்திற்கும் சொல்ல வேண்டியது: உப்பைத் தின்றவன் தண்ணி குடிப்பான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.