எத்தனையோ இளைஞர்கள் நிறைய கனவுகளுடன்
IAS, IPS தேர்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.
கலெக்டராகி, போலீஸ் அதிகாரியாகி சாதனைகள்
புரிய வேண்டும்..சமுதாயத்திற்கு சேவை
செய்ய அந்த பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என்கிற ஆசையுடன் விரும்பி, தேர்வுகளில்
கலந்து கொள்கிறார்கள்.
(ஒரு காலத்தில் -எனக்கு கூட அந்த ஆசை இருந்தது..
நிறைவேறாமலே போன ஆசை !)
இத்தகைய கனவுகளுடன் பணியில் சேரும்
இளைஞர்களில் பெரும்பாலானோர்,
தங்கள் கனவுகள் நிறைவேறாமல், சராசரியில்
கலந்து, கரைந்து -போய் விடுகிறார்கள்.
காரணம் – கரைபடிந்த அரசியல்வாதிகளின் கீழ்
அவர்கள் பணி புரிய வேண்டியிருப்பது தான்.
அரசியல்வாதிகளின், அமைச்சர்களின் தலையீடு
அவர்களை சராசரியாகவோ, மோசமாகவோ – மாற்றி
விடுகிறது.
அரசியல்வாதிகளால் –
இன்னும் கெடுக்கப்படாத,
கெடுக்க முடியாத –
அதிகாரிகள் சிலரை அதிசயமாகப் பார்க்கும்போது,
இவரைப் போல் இன்னும் நிறைய பேர் வர மாட்டார்களா
என்று ஆதங்கப்பட வைக்கிறது.
(தமிழகத்தில் திருவாளர்கள் சகாயம், அன்சுல் மிஸ்ரா,
ககன்தீப் சிங் போன்று பெயர் தெரிந்த சிலரும், பெயர்
வெளியே அறியப்படாத சிலரும் இருக்கிறார்கள் )
அண்மையில் – ஒரு நல்ல போலீஸ் அதிகாரியைப்
பற்றிய செய்தி ஒன்றைப் படித்தேன்- அந்த செய்தி
சுவையாகவும் இருந்தது. அவரைப் பாராட்டும் விதத்தில்
அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
செய்தி-
———
போலீசார் லஞ்சம் வாங்கக்கூடாது என்பதில் மதுரை
எஸ்.பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார்.
லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீசார் மீது
நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் சமீப காலமாக
நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸாரை லஞ்சம் வாங்க
விடாமல் தடுக்கப் போராடி வருகிறார்.
‘நாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை’ என்று சில
போலீசார் எஸ்.பி.யிடம் தெரிவிக்கையில்,
அவர்களிடம் -ஓப்பன் மைக்கிலேயே
‘நீங்கள் வாங்குவது எனக்குத் தெரியும்.
உங்களைக் கையும் களவுமாகப் பிடிக்கிறேன்’
என்று கூறி இருக்கிறார்.
சில நேர்மையான போலீசாரைத் தேர்ந்தெடுத்து,
அவர்களைத் தனக்கு துணையாக்கிக் கொண்டு –
சிலரை லாரிகளில் மப்டியில் பயணிக்கச் செய்தார்.
சிலரை உரிய ஆவணங்கள் இல்லாமல் டூ வீலரில்
பயணிக்கச் செய்தார். சில இடங்களில் எஸ்.பி.யே
ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சென்றார்.
மூன்று முறை நடந்த இந்த சோதனைகளில்,
சில போலீசார் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டனர்.
இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று
எஸ்.பி. அறிவித்திருப்பதால்,
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விழி பிதுங்கி
திகைத்து நிற்கின்றனர்.
மனம் திறந்து பேசிய போலீஸ் ஜீப் டிரைவர் ஒருவர்,
“தினமும் 2000 ரூபாயாவது இல்லாமல் ரோந்துப்
பணியை முடிக்க மாட்டோம். இப்போது யாரைப்
பார்த்தாலும் பயமாக இருக்கிறது. லாரிக்குள்
எஸ்.பி. இருப்பாரோ, டூ வீலர் -லோடு ஆட்டோக்களில்
எஸ்.பி. வருவாரோ என்று படபடப்பாகவே இருக்கிறது.
கேரளாவிற்கு மாடுகளை கால்நடையாக ஓட்டிக்கொண்டு
போகிறவர்களிடம் கூட ஐம்பது, நூறு என்று வாங்குவோம்.
இப்போது மாடு ஓட்டுகிறவர் வேடத்தில் கூட எஸ்.பி.யோ
அவர் அனுப்பிய போலீசோ வருகிறார்களோ என்று
பயமாக இருக்கிறது” என்று சலித்துக் கொண்டார் !
முன்பெல்லாம் நெடுஞ்சாலை ரோந்துப் பணி என்றால் –
போலீசார் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.
காரணம் –
சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை;
கோர்ட்,வழக்கு என்று அலைச்சல் இல்லை;
ஷிப்டு டூட்டி. நேரத்தில் வந்து போகலாம்.
போதாக்குறைக்கு நல்ல வரும்படி வேறு.நிறைய
போலீஸ்காரர்கள் இந்தப் பணியைப் பெற முண்டியடித்துக்
கொண்டு வருவார்கள்.
இப்போதோ -எஸ்.பி.பாலகிருஷ்ணனின் நடவடிக்கைகள்
காரணமாக“இங்கிருந்து கழண்டு கொண்டால் போதும்”
என்கிற மனநிலையிலேயே இங்கிருக்கும் பல
போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.
————
எஸ்.பி.பாலகிருஷ்ணனுக்கும், அவரைப் போன்ற
மற்ற அதிகாரிகளுக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.





நல்ல செய்திக்கு நன்றி. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நல்ல செய்திக்கு நன்றி. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
2013/9/10 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்”
> **
> vimarisanam – kavirimainthan posted: ” எத்தனையோ இளைஞர்கள் நிறைய
> கனவுகளுடன் IAS, IPS தேர்வுகளில் கலந்து கொள்கிறார்கள். கலெக்டராகி, போலீஸ்
> அதிகாரியாகி சாதனைகள் புரிய வேண்டும்..சமுதாயத்திற்கு சேவை செய்ய அந்த
> பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் விரும்பி,
> தேர்வுகளில் “
பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கங்களும், வாழ்த்துகளும்.
ஒட்டுமொத்த அமைப்பிலிருந்து மனதினை விலக்கிக் கொண்டு விட்டாலும், இவர் போன்ற கர்மவீரர்களைக் காணும்போது மனம் சற்று பூரிப்படைகிறது. நற்செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
(வாஞ்சிநாதன் படம் நினைவுக்கு வருகிறது)
லஞசம் வாங்கும் அல்லது முற்படும் போலீகாரர்களை
வேண்டுமானால் இம்மாதிரியான அதிரடி நடவடிக்கைகளால்
திணற வைக்க முடியும். அரசு அலுவலர்களையோ
அரசியல்வாதிகளையோ ஒன்றும் செய்ய முடியாது.
இதற்கு முன்னால் கூட இம்மாதிரி பல SPக்கள், மாவட்ட
ஆட்சியர்கள் முயன்று இருக்கிறார்கள். கொஞசம் வெற்றி
என்கிற நிலையில், அரசு அதிகாரிகளை மாற்றி, “எதார்த்தத்திற்கு”
வழி செய்துவிடும். உ-ம்: சகாயமும் பாலாஜியும்.
திரு.இறையன்பு மற்றும் திரு.ராதாகிருஷ்ணன் போன்றோரும்
கூட நற்பணிகள் செய்து இருக்கிறார்கள்.
—
நல்ல விதமாய் பணி செய்வோரை கண்டிப்பாக பாராட்டியே
ஆக வேண்டும். பாராட்டுகிறேன்.
திரு.பாலகிருஷ்ணனிற்கு வாழ்த்துக்கள்.
விரைவில் அரசும் இவரை கௌரவிக்கும்.
பணியிடம் மாற்றம் கொடுத்து..
எஸ்.பி.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…
அனுதினமும் ஊழல், கற்பழிப்பு, கொலை கொள்ளை என தீய செய்திகளை படித்து மனம் கெட்டுப்போய் இந்தியா வல்லரசாக வேண்டாம் ஒரு நல்லரசாகவாவது இருக்காதா என எண்ணுகையில் இவரைப் பாராட்டுகையில், இவர் போன்ற நல்லவர்களைப் பற்றியும் எழுத மனம் வந்த உங்களையும் பாராட்டுகிறேன். திரு அசோக் கெம்கா சொன்னது போல, அதிகாரிகள் நேர்மையாக செயலாற்றினால், அரசியல்வியாதிகள் எதுவும் செய்ய இயலாது. அரசியல்வியாதிகள், ஆட்சியிலிருக்கும் காலம் குறைவு ஆனால் அதிகாரிகள் அரசு காப்போடு 20 அல்லது 30 வருடம், நிர்வாகத்தை நடத்த உதவுகிறார்கள் அரசியல் சட்டம் விதிகள் குறித்த அதிகப்படியான அறிவுடையவர்கள் எனவே இவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டுமே நாடு உருப்படும்
அந்த அதிகாரிக்கு மிக்க நன்றி. இங்கு யு.எஸ்.ல் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை. ஆயினும், எங்கெங்கு பயண விதிகள் மீறப்படுகிறதோ அவ்வப்போது சலான் கொடுத்து விடுகிறார்கள். மக்களும் விதிகளை, ஆதலால்,
மீறுவதில்லை. உண்மையில் திரு பாலகிருஷ்ணன் போன்று ஒவ்வோரு மாவட்டதிறுக்கு ஒருவர் இருந்தால், பின், தமிழகம் ஆஹா, ஆஹா,,
பரமசிவம்