எத்தனாலை தடுக்கும் எத்தர்கள் …

பெட்ரோல் விலை –
டீசல் விலை –
சமையல் எரிவாயு விலை –
வாரத்திற்கு வாரம் வித்தியாசம் –
ஏறிக்கொண்டே போகிறது.
ரூபாயின் மதிப்பு –
நாளுக்கு நாள் வித்தியாசம் –
இறங்கிக் கொண்டே போகிறது !
பொறுப்பற்ற அரசாங்கம் –
சொரணை இல்லாத மந்திரிகள் –
உளறிக்கொட்டி விட்டு ஓடும் பிரதமர்.
அக்கரை இல்லாத அந்நியத்தலைமை ..!
சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோலியம் மந்திரி
வீரப்ப மொய்லி சொன்னார் –
“இந்த நாடே – எரிவாயுவிலும், எண்ணையிலும்
(கச்சா எண்ணை ) மிதந்து கொண்டிருக்கிறது –
(தோண்டி எடுக்கத்தான் வக்கு இல்லை)
ஆனால்,இறக்குமதியை குறைக்கக் கூடாது என்று
பயமுறுத்தல் வருகிறது என்று.
“யாரய்யா உம்மை பயமுறுத்துகிறார்கள்” என்று கேட்டால்,
அன்று மூடிய வாயை முந்தாநாள் தான் மீண்டும் திறக்கிறார்.
பார்த்தால் – மீண்டும் அபத்தம் !
“இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை
பெட்ரோல் பங்குகளை மூடினால், கணிசமாக
அந்நியச் செலாவணியை மிச்சம் பிடிக்கலாம்”.
மீடியாக்களும், பொது மக்களும் அடிக்காத குறையாக
ஆவேசம் கொண்டதும், “அது என் யோசனை இல்லை”
என்று ஜகா வாங்குகிறார்.
இந்த விலை கொடுத்து வாங்கி,
தேவை இல்லாமல் பெட்ரோலையோ
டீசலையோ பயன்படுத்த பொது மக்கள் என்ன
பைத்தியக்காரர்களா ?பெட்ரோல் பங்கை மூடினால்,
பயன்பாடு குறைந்து விடுமா ?
பதுக்குவார்கள் – கள்ளச்சந்தையில் விற்பார்கள்.
பெட்டிக்கடைகளில் பெட்ரோல் கிடைக்கும்.
அதற்கும் ஆளும் கட்சிக்காரர்களால் கப்பம்
வசூலிக்கப்படும்.
முதல் காரியமாக, இந்த மந்திரிகள்
போகும்போதும், வரும்போதும் கூடவே போகும் டஜன்
கணக்கான வாகனங்களைத் தவிர்த்தாலே பெரிய அளவில்
மிச்சம் பிடிக்கலாம்.
இவர்களின் விமானப் பயணங்களை குறைத்தாலே
இன்னும் பெரிய அளவில்மிச்சம் பிடிக்கலாம்.
(நமக்குத் தெரிந்தே வாரம் தவறாமல் ஒரு மந்திரி
டெல்லி –புதுச்சேரிக்கும், இன்னொருவர்
டெல்லி-காரைக்குடிக்கும் பயணம் செய்கிறார்கள்.)
லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் செய்திகளின்படி,
ஈரான் நாடு டாலர் கேட்காமல், ரூபாய் மதிப்பிலேயே
இந்தியாவிற்கு எவ்வளவு வேண்டுமானாலும்
கச்சா எண்ணை விற்கத் தயாராக இருக்கிறது.
45% அளவிற்கு ரூபாயாகவே பெற்றுக் கொள்ளவும்
தயாராக இருக்கிறது ( இந்த 45 % -உம் ரூபாயாகவே
செலுத்தப்படுவதால், அது ஏற்றுமதியின் மூலம்
மீண்டும் இந்தியாவிற்கே வந்து விடும்.)
சில வருடங்கள் முன் ஈரானிடமிருந்து ஆண்டுக்கு
2 கோடி டன் பெட்ரோலியம் வாங்கிய இந்தியா
இப்போது கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு
வெறும் 20 லட்சம் டன் என்கிற அளவிற்கு குறைத்து
விட்டது.
காரணம் –
அமெரிக்காவின் அழுத்தமும்,பயமுறுத்தலும் !
சிங்கிற்கு தாடிக்குள்ளே அரிப்பெடுத்தால் கூட
அமெரிக்காவை கேட்டுக் கொண்டு தான் சொரிந்து
கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு அமெரிக்காவின்
அழுத்தம் ! இவருக்கும் நெஞ்சழுத்தம் …!
ஈரானிடமிருந்து பழைய அளவுக்கு பெட்ரோலியத்தை
இறக்குமதி செய்தாலே ஆண்டுக்கு 57,000 கோடி
ரூபாயும், அதற்கீடான டாலரும் மிச்சமாகும்.
உலகத்திலேயே 3வது பெரிய நிலக்கரி ரிசர்வ் உள்ள
நாடு இந்தியா. ஆனால் மொத்த தேவையில் 70 %
நிலக்கரியை – டாலரைக் கொடுத்து இறக்குமதி
செய்கிறோம்.
தோண்டி எடுக்காத பினாமி கம்பெனிகளுக்கு லைசென்ஸ்
கொடுத்து ஆண்டுகள் 10 ஆனாலும், கரி சந்தைக்கு
வரவில்லை. “தோண்டி எடுத்தால் தானே காசு “
என்று கொக்கரிக்கிறார் இன்னொரு மந்திரி.
எண்ணையும், எரிவாயுவும் நிறைய இருந்தாலும்,
தோண்டி எடுக்கும் உரிமையை அம்பானிக்கு கொடுத்து
விட்டு கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது
அரசு.இங்கு ஆட்சி செய்வது அமைச்சர்களா,அம்பானியா
என்றே தெரியவில்லை !
நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து டாலரை மிச்சம்
பிடிக்க முடியும் – தோண்டி எடுக்கும் வேலையை
ஒழுங்காகச் செய்தால்.
மிகப்பெரிய அளவிற்கு பெட்ரோல், டீசலுக்கான டாலரை
மிச்சம் பிடிக்க முடியும் – மாற்றுப் பொருளான
எத்தனாலை கலந்து பயன்படுத்தினால்….
எத்தனாலைப் பற்றி
இங்கே ஒரு சுருக்கமான விளக்கம்-
எத்தனால் என்பது – விவசாயப் பொருட்களிலிருந்து
தயாரிக்கப்படும் –
எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய,
ஆக்சிஜனை உள்ளடக்கிய, ஒரு நிறமற்ற திரவம்.
அமெரிக்காவில் இது சோளத்திலிருந்து (கார்ன் )
விளைவிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் இது
அமோகமாக விளையும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
உருளைக்கிழங்கிலிருந்தும், கோதுமையிலிருந்தும் கூட
(சிறிய அளவில்) தயாரிக்கலாம்.
இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப்
பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை
பயன்படுத்தும்போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புற
சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.
ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது,
கரும் புகை வெளிப்பாடு குறைந்து,
ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி,
சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்கிறது.
ஏற்கெனவே சில நாடுகளில் நடைமுறைக்கு வந்து
அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் –
நடைமுறையில் மிகச்சுலபமாக கொண்டு வரக்கூடிய
ஒரு முறை தான்.
ஏற்கெனவே இப்போது அமெரிக்காவில் ஓடும் அனைத்து
வாகனங்களும் 10 % எதனால் கலந்த கேசோலினை
(எரிபொருள்) பயன்படுத்தி தான் ஓடுகின்றன.
உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும்
பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன்
85 % எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை
கட்டாயமாக்கி இருக்கிறது.பிரேசிலில்
1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட
அனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்து
பயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்
பட்டிருக்கின்றன. தற்போது அமெரிக்காவிலும்,
பிரேசிலிலும் உற்பத்தியாகும் Flex-fuel எஞ்ஜின்கள்
பெட்ரோல், அல்லது எத்தனால், அல்லது இரண்டும்
எந்த விகிதத்தில் வேண்டுமானாலும் கலந்து
பயன்படுத்தும் விதத்தில் உருவாகின்றன.
நமது வாகனங்களில், எஞ்ஜினில் எந்தவித
மாறுதலும் செய்யாமலே, 15 % அளவிற்கு
எத்தனாலை (பெட்ரோல், டீசலுடன்)கலந்து
பயன்படுத்தலாம்.
இந்தியாவில் கரும்பு உற்பத்திக்கு பஞ்சமே இல்லை.
அபரிமிதமான உற்பத்தி காரணமாக தகுந்த விலை
கிடைக்காமல் விவசாயிகள் போராடுகிறார்கள்.
இங்கு கரும்பானது, சர்க்கரை ஆலைகளில்,
சர்க்கரை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதால்
இந்த நிலை.
கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும்
கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,
அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற
எரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு
பயன்படுத்தவும் துவங்கினால் –
உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும்.
இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்ட
கரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும்
என்பதால் – சர்க்கரை விலை கணிசமாக குறையும்.
கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும்.
இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு
வேலை கிடைக்கும்.
சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையோடு, உபபொருளாக
எத்தனாலும் தயாரிக்க வேண்டி இருப்பதால்,
அதன் பொருட்டு அதிக நபர்களுக்கு வேலை கிடைக்கும்.
எத்தனாலை
உற்பத்தி செய்ய, கையாள,
மற்ற இடங்களுக்கு அனுப்ப,
எண்ணை நிறுவனங்களில் இவற்றை கலந்து
புதிய சதவீதத்தில் எரிபொருளை உற்பத்தி செய்ய –
என்று ஏகப்பட்ட புதிய தொழில்களும்,
வேலைகளும் உருவாகும்.
பெட்ரோலின் விலையில் 4 ல் 1 பங்கு விலைக்கு
எத்தனால் கிடைக்கும் என்பதால் –
பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறையும்.
கச்சா எண்ணை இறக்குமதி பெரும் அளவில் குறையும்.
இதனால் பெரும் அளவில் டாலர் -மிச்சமாகும்.
டாலர் கையிருப்பு அதிகம் ஆவதால் –
நம் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.
எரிபொருளின் விலை குறைவதால் –
சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும்.
எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும்,
காய்கறி,மளிகை சாமான்கள், பால் –
விலை பெருமளவில் குறையும்.
எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை
பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து
செலவு குறையும்.
சரி – இந்த அளவிற்கு பயனளிக்கும் எத்தனாலை
இந்தியாவில்
எந்த அளவிற்கு –
உற்பத்தி செய்கிறோம் ?
எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் ?
நினைத்தாலே ரத்தக் கண்ணீர் தான் வருகிறது.
2002ஆம் ஆண்டு மத்திய அரசு முதல் முதலாக,
முதல் கட்டமாக – எரிபொருட்களுடன் 5% எத்தனாலை
கலந்து பயன்படுத்த ஒரு அரசாங்க ஆணையை பிறப்பித்தது.
முதல் கட்டமாக ஜூலை 2003 க்குள்ளாக,
9 மாநிலங்களில் இதை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
நிபுணர் கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
எத்தனால் பயன்பாட்டை –
காலப்போக்கில் நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கவும்,
இரண்டாவது கட்டமாக பயன்பாட்டை
10 சதவீதத்திற்கு உயர்த்தவும்,
மூன்றாவது கட்டமாக 20 % க்கு உயர்த்தவும்
திட்டங்கள் வகுக்க ஒரு கமிட்டி.
உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை விவசாயிகளும்,
சர்க்கரை ஆலைகளும் – எண்ணை கம்பெனிகளுக்குத்
தான் விற்க வேண்டும். அப்படி வாங்கப்படும்
எத்தனாலுக்கு எண்ணை கம்பெனிகள் லிட்டருக்கு
என்ன விலை கொடுக்கலாம் என்பதை யோசித்து
தீர்மானிக்க ஒரு கமிட்டி –
அப்படி உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கு
உற்பத்தி வரி (excise duty) போடலாமா –
வேண்டாமா ?
போடுவதாக இருந்தால் எவ்வளவு போடலாம் ?
என்பது குறித்து யோசித்து தீர்மானிக்க ஒரு கமிட்டி –
கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்க எந்தெந்த
வித இயந்திரங்களை தருவிக்கலாம் – எங்கிருந்து
தருவிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க
ஒரு கமிட்டி –
எத்தனாலை பெட்ரோல் -டீசலுடன் குறிப்பிட்ட
சதவீதத்தில் கலக்க எண்ணை கம்பெனிகள்
எந்த வகையான இயந்திரங்களை கையாளலாம் –
எங்கிருந்து தருவிக்கலாம்,
எண்ணை தயாரிப்பு நிறுவனங்களில் என்னென்ன
மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும் என்பது
குறித்தெல்லாம் தீர்மானிக்க ஒரு கமிட்டி –
கடைசியாக, 20 % எத்தனால் கலந்த
எரிபொருளை நாடு முழுவதும்
கொண்டு வருவது என்று கொள்கை அளவில்
தீர்மானித்து அதற்கு செயல் வடிவம் கொடுக்க
விவசாயம் மற்றும்
உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் அவர்கள்
தலைமையில் 7 அமைச்சர்கள் மற்றும் திட்டக்கமிஷனை
உள்ளடக்கிய ஒரு கமிட்டி –
உச்சகட்டமாக – 2007 ஜூன் 5ம் தேதி
“உலக சுற்றுச்சூழல் தினத்தை” ஒட்டி, இந்தியாவிற்கு
வருகை தந்திருந்த பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனெசியோ
லுலாட சில்வாவிற்கு, திருமதி சோனியா காந்தி
அவர்களின் முன்னிலையில் நமது மதிப்பிற்குரிய,
செயல்படாதவீரர் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்
– மிக விரைவில் – இந்தியா 20 % எத்தனால் கலந்த
எரிபொருளை பயன்படுத்தத் தொடங்கி -பசுமையான
சூழலை உருவாக்கப் பாடுபடும்
என்று உறுதி அளித்தார்.(இதைச் சொல்லியே
6 ஆண்டுகள் ஓடி விட்டன !!)
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்து,
11 வருடங்களுக்கு முன்னதாக,
செப்டம்பர் 2002 லேயே மத்திய அரசின் ஆணையும்
(gazette notification) பிறப்பிக்கப்பட்ட பின்னரும்
இன்று வரை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும்
எத்தனால் பயன்பாட்டில் காண முடியவில்லை.
இந்த நாட்டையும்,
நாட்டு மக்களின் பொருளாதார நிலைமையையும் –
எவ்வளவோ அளவு உயரத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய
இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராததற்கு யார்
காரணம் ?
மத்தியில் ஆளும் கூட்டணியையும் –
அதன் தலைமையையும் தவிர – வேறு யார் இதற்கு
பொறுப்பேற்க முடியும் ?
பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிக்காக
ஆண்டுக்கு நாம் செலவழிக்கும் தொகை மட்டுமே
சுமார் 150 பில்லியன் டாலர் ..
(பத்து லட்சம் கோடி ரூபாய்)
இதில் எவ்வளவுக்கெவ்வளவு மாற்று எரிபொருளான
எத்தனாலை பயன்படுத்துகிறோமோ – அவ்வளவுக்கு
அவ்வளவு அந்நியச்செலாவணியான டாலர் மிச்சம் !
பின்னர் ஏன் இன்னும் எத்தனால் பயன்பாட்டை
மத்திய அரசு துவக்கவே இல்லை …?
இத்தனை ஆண்டுகளாகியும் வெறும் பேச்சுடன்
நிற்பது எதனால் … ?
எத்தனால் பயன்பாட்டைத் தடுக்கும் எத்தர்கள் யார் ..?



http://www.one.in/niti-central/government-splurges-on-fuel-while-burning-hole-in-aam-admi%E2%80%99s-pocket-425129.html
தில்லியில் அரசாங்க அலுவலர்கள் பெட்ரோலுக்காக மட்டும் செலவழிக்கும் தொகை சுமார் 3000 கோடி ரூபாய்.
வாஜ்பாய் ஆட்சியில் 5 சதவீதம் எத்தனால் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது…..படிப்படியாக அதிகரிக்கவும் திட்டம் இருந்தது……காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் மணிசங்கர் அய்யர் என்ற கோமாளி பெட்ரோலியத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் போட்ட முதல் உத்தரவே எத்தனால் கலப்பை ரத்து செய்வதுதான்……காரணம் சரத் பவார் என்ற சர்க்கரை மாஃபியா…….. காங்கிரஸ் ஆட்சி மாறாமல் நமக்கு விடிமோட்சமில்லை……
எத்தனால் பயன்படுத்தினால் அரசுக்கு ம்… கிடைக்குமா ?
கிடைத்தால் பர்மிசன் கிராண்டட்
மதிகெட்ட மடையர்களிடம் மைக் போட்டு கத்தினாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை நண்பரே 🙂
இவங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாங்க.
உங்கள் கட்டுரை அருமை பாராட்டுகள்
ungaludaya pathivugalayi padika padika kovam kovama varugirathu… but we cant do anything… that’s the reality… even in next election, mathematics is going to rule the country… congress people are good in maths… so no vidivu kalam…
வாக்பாயீ அமைச்சரவை 5சதவீத எதனால் இல் ஆரம்பித்து பின் படிபடி ஆக உயர்த்த எண்ணினார்கள். நமது மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு காங்கிரசு ஆட்சியையும் கொண்டு வந்ததின் விளைவு இப்போது நமது நிலை. என்ன செய்வது. கரும்பு விவசாயிகளும் ஆலை முதலாளிகளும் இணைந்து ஏதேனும்………..ம். என் செய்வது. நம் தலை விதி எண்ணி நம் மீதே கோபம் தன வருகிறது. பரமசிவம்
Sent from http://bit.ly/otv8Ik
The Government can control the huge wasteful expenditure and ban import of high value but non-essential items (or tax the imports prohibitively). Yes, it is an ugly sight to look at the no. of cars following a government dignitary’s vehicle. Due to bad governance, the Indian economy is in the ICU. Unfortunately, the BJP in the next Government does not look promising. A herculean task is ahead for any government. The need of the hour is a wise and capable leadership to guide the rudderless ship, that is India.