விஜய்காந்த் எப்படி ?…சாமர்த்தியசாலியா ?
இல்லையா ? ….
கடந்த தேர்தலுக்கு முன்னர், விஜய்காந்த் –
அதிமுக, மற்றும் திமுக வுக்கு ஒரு மாற்றாக இருப்பார்
என்று தமிழ்நாட்டில் பலர் நம்பினர்.
தமிழ்நாட்டில் அதிமுக, திமுக விற்கு அடுத்தபடியாக
அதிகபட்ச வாக்காளர் வங்கியை ( 8 முதல் 10 சதவீதம்)
கொண்ட விஜய்காந்த் அந்த மக்களின் நம்பிக்கையை
நிறைவேற்றா விட்டாலும், தன் வித்தியாசமான
செயல்பாடுகளால் ஒரு சுவாரஸ்யமான மனிதராகவே
இருக்கிறார்.
விஜய்காந்த் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே –
இன்றிலிருந்து சுமார் 13 வருடங்களுக்கு முன்னர்,
அரசியலில் நுழையாத நிலையில்,
கட்சி ஆரம்பிக்காமல்,
கொடி மட்டும் அறிவித்திருந்த நிலையில்,
விஜய்காந்த் கொடுத்த
ஒரு பேட்டியிலிருந்து சில பகுதிகள் –
(குறிப்பு – இந்த பேட்டி எடுக்கப்பட்ட சமயத்தில்,
கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக
இருந்தார் )
கேள்வி- உங்க படங்கள்ல பொதுவா மக்களோட பிரதிநிதியா,
ஒரு கோபக்கார இளைஞனாவே வர்றீங்களே.. இது
நீங்க திட்டமிட்டு பண்ணிக்கிட்ட பார்முலாவா ?
பதில் -“எனக்கு சிஸ்டம் சரியில்லைன்னு ஒட்டுமொத்தமா
குற்றம் சாடுறது பிடிக்காது. இது நாம் விரும்பித்
தேர்ந்தெடுத்த சிஸ்டம். பொதுவா தப்பு சொல்றது
ரொம்ப ஈஸி. அதை யார் வேணும்னாலும் சொல்லிட்டு
கைதட்டல் வாங்கிட்டுப் போயிடலாம்..
என் படங்கள்ல பார்த்தீங்கன்னா, ஒரு படத்துல நான்
தப்பைத் தட்டிக்கேட்கிற ஆளா வருவேன். அடுத்த
படத்துல அதே சிஸ்டத்துல ஒரு அதிகாரியா வந்து
தவறுகளை சரி பண்ணப் போராடுகிற ஆளா வருவேன்.
இந்த பாசிடிவ் அப்ரோச் தான் எனக்குப் பிடிக்கும்.
நான் ஒரு இலவச ஆஸ்பத்திரி நடத்தறேன். சொல்றதுக்கு
சின்ன விஷயம். ஆனா, டாக்டர் நேரத்துக்கு வர்ராறா ?..
சிகிச்சைகள் நல்லபடியா நடக்குதா ? மருந்து,மாத்திரை
தேவைக்கு கிடைக்குதா ? இடம் சுத்தமா இருக்கா ?
தண்ணி வசதி சரியா இருக்கான்னு ..
அதை பராமரிக்கிறதுக்கே எழுபத்தெட்டு கேள்விகள் வருது.
ஒரு ஆஸ்பத்திரிக்கே இத்தனை கஷ்டம்னா …
அரசாங்கத்தோட நிலைமையை யோசிச்சு பாருங்க.
வெளியே இருந்து வேடிக்கை பார்க்கறது சுலபம்.
உள்ளே இறங்கி வேலை பார்த்தா தான் அந்தச் சிரமம்
புரியும்.”
கேள்வி – மதுரை மில்லுல இருந்த விஜய்ராஜுக்கும்,
இப்ப இருக்கிற கேப்டன் விஜய்காந்துக்கும் என்ன
வித்தியாசம் ?
பதில் – “எனக்குள்ள எந்த மாற்றமும் இல்ல. வாழ்க்கைல
வசதிகள் கூடியிருக்கு. அன்னிக்கு என்னோட யார்
இருந்தாங்களோ, அவங்க தான் இன்னிக்கும் என்னோட
இருக்காங்க. வேட்டி சட்டையோட தான் வெளியில
அலைவேன். எனக்கு இன்னமும் இங்கிலீஷ் பேசத்தெரியாது.
தெரியல்லையேன்னு துளி வருத்தமும் கிடையாது.”
கேள்வி –உங்க ரசிகர் மன்றத்துக்கு தனிக்கொடி கட்டிட்டீங்க.
திடீர் திடீர்னு சுற்றுப் பயணங்கள் போயிட்டு வர்றீங்க..
எதாவது திட்டம் வெச்சிருக்கீங்களா ?
பதில் –“ரசிகர்கள் ரொம்ப நாளா நமக்குன்னு ஒரு கொடி
வேணும்னு கேட்டுட்டு இருந்தாங்க. அதுனால டிசைன்
பண்ணினது. டூர் போறது எப்பவும் பண்ற விஷயம் தான்.
இந்த முறை அது பரபரப்பானதுக்கு ஒரே காரணம் –
இந்தக் கொடி தான்.
தவிர, எனக்குப் பெரிசா ஆசைகள் கிடையாதுங்க. எனக்கு
ஒரு ரசிகர் கூட்டம் இருக்காங்க. உயிரையே வெச்சிருக்காங்க.
முடிஞ்ச வரைக்கும் நம்மால முடிஞ்ச நற்பணிகள்
செய்வோம்னு அவங்களை ஒரு ராணுவம் போல தயார்படுத்தி
இருக்கேன். எந்த சக்தியும் அவங்களை திசை திருப்பி விட
முடியாது.எனக்கும் என் ரசிகர்களுக்கும் நடுவே வேறு
யாரும் விளையாட முடியாது.
மற்றபடி – திட்டம்னு எதுவும் இப்போதைக்கு இல்லை.”
கேள்வி – அரசியல் பத்தி உங்க ஐடியாதான் என்ன ?
பத்திரிகைகளில் அரசியல் பத்திப்பேசும் போது வர்ரதா
இருந்தா நிச்சயம் வருவேன்னும் சொல்றீங்க.. அதுல
உங்களுக்கு குழப்பம் இருக்கா ?
பதில் – “என்னை யாருடனும் ஒப்பிடாதீங்க.
வருவாரா … மாட்டாரான்னு யாரையும் கிறுக்குப்
பிடிக்கவிட நான் இடம் தர மாட்டேன்.
அரசியல் ஆசை எனக்குள்ள இருந்ததுன்னா
தலைவர் கலைஞர் இருக்கார்.. ஐயா மூப்பனார்
இருக்கார். அப்படி யாரோடவாவது சேர்ந்திருக்கலாமே.
எனக்கு அப்படி திட்டம் எதுவும் கிடையாது.
ஆனா – நான் ஒரு நடிகனா ஆவேன்னு யோசிச்சுப்
பார்த்தது கூட கிடையாது. இன்னிக்கு நடிகர் சங்க
தலைவரா வர்ற அளவுக்கு கொண்டு வந்துருக்கு வாழ்க்கை.
அதுனாலதான் சொல்றேன்….
அரசியலுக்கு வர்றதா இருந்தா – நிச்சயம் வருவேன் !”
கேள்வி – அதாவது தேர்தல்ல வோட்டுப் போடறதைத்
தவிர, வேற அரசியல் இப்போ கிடையாதுங்கறீங்க ?
பதில் – “அதது எப்போ வருமோ, அப்போ பார்க்கலாம்.
இப்போ எனக்கு அடுத்த ஷாட் ரெடி. நான் போகணும் “.
மேலேஉள்ளது 13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது.
கீழேஉள்ளது – லேடஸ்ட் – கடந்த வார நிகழ்வு …!
கடந்த ஞாயிறு – பாராளுமன்ற தேர்தல் பற்றி
விவாதிக்க என்று அழைக்கப்பட்ட தேமுதிக, மாவட்ட
செயலாளர்கள் மற்றும் செயற்குழு கூட்டம்.
கடைசியாகப் பேசிய விஜய்காந்த் –
“உங்க எல்லோரையும் இப்போ நான் வரச்சொன்னதுக்கு
காரணமே நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம தயாராகணும்.
அதுக்கு கட்சிக்கு பணம் தேவை. பணம் இல்லேன்னா
நாம எலெக்ஷனை சந்திக்க முடியாது. இந்த கூட்டம்
முடிஞ்சதும் நம்ம கட்சியில் இருக்கும் 59 மாவட்ட
செயலாளருக்கும் டொனேஷன் வசூல் பண்ற புத்தகம்
கொடுக்கச் சொல்லி இருக்கேன். ஒவ்வொருத்தரும்
கட்டாயம் 50 லட்சம் வசூல் பண்ணணும். அப்படி
செஞ்சா மட்டும் தான் நாம தேர்தலை தைரியமா
சந்திக்க முடியும்”
….
என்னோட பிறந்த நாளுக்கு புதுச்சேரியுடன் சேர்த்து,
நம் கட்சியின் 61 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்
திறனாளிகளுக்கு ஸ்கூட்டி கொடுக்கறதா சொல்லி
இருந்தேன். சென்னையில நான் கொடுத்துட்டேன்.
மற்ற ஊர்களுக்கு ஸ்கூட்டி ரெடியா இருக்கு. ஒவ்வொரு
மாவட்டச் செயலாளரும் 55,000 ரூபா கொடுத்து
அந்த ஸ்கூட்டியை வாங்கிட்டுப் போயிடுங்க.
அதை நீங்க யாருக்கு வேணும்னாலும் கொடுங்க !”
(வெளியே வந்த மாவட்ட செயலாளர்களிடம்
டொனேஷன் புத்தகத்தை நீட்டியபோது, அவர்களில்
சிலர் “யாரிடம் போய் பணம் கேட்க சொல்றீங்க ?”
என்று கேட்டதற்கு “உங்களால் வசூல் பண்ண
முடியல்லைன்னா சொல்லிடுங்க. யாரு வசூல்
பண்றாங்களோ அவங்களுக்கு உங்க பதவியைக்
கொடுத்துக்கறோம்” என்று விஜய்காந்தின்
உதவியாளர்களால் சொல்லப்பட்டதாம்..! )
———–
நண்பர்களே -நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
உங்கள் பார்வையில் விஜய்காந்த் எப்படி ….?




dangerous person.. i thought he will be a good alternate fro dmk / admk. but he seems to be worst than both of them.. tey are better
விஜயகாந்த் அப்படி (சொன்னாரா?.சொல்லியிருந்தால் வியப்பில்லை.
சொல்லியிருக்கா விட்டால்தான் ஆச்சரியம். எதையும் ஆரம்பிப்பது
மிக எளிது. தொடர்வது கடினம். அது அரசியல் கட்சியாக இருந்து
விட்டால், இன்னமும் கடினம். காரணம்.
தேசிய மாநில வட்டார என்கிற பேதமில்லாமல் எல்லா அரசியல்
கட்சிகளும் நிதி வசூல் செய்கின்றன. வசூல் செய்யாத கட்சிகள்
இல்லவே இல்லை. திமுகவும் அதிமுகவும் நிதிநிலையில்
முன்னணியில் இருக்கின்ற மாநில கட்சிகள். தேவைப்படுகின்ற
(தேர்தல்) காலங்களில் அவை கூட்டாளிகளுக்குக் கூட நிதியுதவி
செய்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயங்களில் இக்கட்சிகளுக்கு பெரும்
நிதி கிடைக்கின்றன. சமயங்களில் அவை பொதுக் கூட்ட மேடைகளில்
காசோலை வடிவில் அக்கட்சிகளின் மாவட்ட செயலர்களின் மூலம்
கொடுக்கப்பட்டு வர்வது வாடிக்கை (வேடிக்கையும் தான்). இவர்களில்
யார் “அதிக” நிதி வசூலித்துக் கொடுத்தாரோ அவர் ஆட்சி அதிகாரம்
வரும் காலத்தில் ”தக்க” பதவி பெற்று உரிய கெளரவம் அடைவர்.
தேசியமும் திராவிடமும் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு இவர்
மட்டும் வசூல் செய்யாமல் போனால் எப்படி?
கேப்டன் பேசியதை நேரில் கேட்ட தொனியில் எழுதிவிட்டு, மாவட்ட
செயலர்கள் “சொன்னார்களாம்” என்று எழுதியுள்ளீர்களே ஏன்?
—
அது சரி. கேப்டன், சோ இவர்களுடன் இன்னொருவரும் “விருந்தில்”
மகிழ்ந்தாரே அவரை படத்தில் காணவில்லையே. வெட்டி விட்டீரோ?
—
தமிழக அரசியல் கட்சி தலைவர்களில், திரு.விஜயகாந்த் நிச்சயமாக
பல வகையில் வித்தியாசமானவர்தான். ஆபத்தானவர் அல்ல.
“இது நாம் விரும்பித் தேர்ந்தெடுத்த சிஸ்டம். பொதுவா தப்பு சொல்றது ரொம்ப ஈஸி. அதை யார் வேணும்னாலும் சொல்லிட்டு கைதட்டல் வாங்கிட்டுப் போயிடலாம்………………..
வெளியே இருந்து வேடிக்கை பார்க்கறது சுலபம்.
உள்ளே இறங்கி வேலை பார்த்தா தான் அந்தச் சிரமம்
புரியும்.”
இதைச் சொன்ன பொழுது அவர் தெளிவாக இருந்தார்.
ஆனால் ஊடகங்களும் (திரு சோ உட்பட) அரசியல்வியாதிகளும் தமிழக அரசியலில் மாற்றத்தை உண்டுபண்ணும் ஒரு “மாபெரும் பெரிய சக்தி”என்று அவரை எண்ண வைத்துவிட்டார்கள். ஊழல் அதிகரித்த கழகங்களுக்கு எதிராக ஒரு மாற்றுக்கட்சி வரவேண்டும் என மக்கள் நினைத்து திரு மூப்பனார் அவர்களுக்கு வாக்களித்தனர் திரு மூப்பனார் உருவாக்கிய கட்சியை, அவர் மகனும் ப.சியும் பதவி பணம் இவற்றுக்கு ஆசைப்பட்டு காங்கிரசுக்கு விற்றுவிட்டனர்.
அடுத்து மக்கள் திரு விஜயகாந்தை நம்பினர் ஆனால் அவரோ ஒரு நல்ல சாமர்த்தியசாலியான, (புரட்சித்தலைவரே நம்பிய ) திரு பண்டுருட்டியாரை அருகில் வைத்திருந்தும், உறவுகளின் உபதேசத்தால், மதிமயங்கி குறுகிய காலத்தில் “எதிர்க்கட்சித்தலைவர்” என்ற ஒரு மாபெரும் இடம் கிடைத்தும், அதனைப் சிறப்பாகப் பயன்படுத்த வாய்ப்பிருந்தும், பயன்படுத்தத் தெரியாமல் இழந்து கொண்டிருக்கிறார். (உண்மையோ பொய்யோ) அவரைக் குடிகாரர் என்று அழுத்தமாக முத்திரை குத்திவிட்டார்கள் “குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தா போச்சு” என்ற வகையில், இப்பொழுது அவருக்கு அரசியல் ஒரு வியாபாரம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் அவருக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பிரிக்கும் வழியினை நாடுமென நம்புகிறார்.
மொத்தத்தில் “ விடலைப்பிள்ளை” (அரசியலில்) அனுபவம் போதவில்லை.
MGRக்குப் பிறகு ஜெயலலிதாவை அப்புறப் படுத்த அதிமுகவின்
முன்னனி தலைவர்கள் எல்லாம் “ஒருகாலில்” நின்ற போது, ஜெ.வால்
தான் கட்சிக்கு எதிர்கால்மென்று தமிழகம் முழுவதும் கருத்துரைப்
பரப்பிய அறந்தாங்கி திருநாவுக்கரசு இப்போது எங்கே? இன்ஷியல்
புகழ் ராமச்சந்திரன் எங்கே? அழகு திருநாவுக்கரசு எங்கே?
சேடப்பட்டிக்கும் தாமரைக்கனிக்கும் கிடைத்த மரியாதை என்ன?
திருவாளர்கள் அருண்பாண்டியனும், பாண்டியராஜனும், ராயப்பனும்
சுந்தர்ராஜனும், சாந்தியும் கேப்டனின் உறவுகளுக்குக் கிடைக்காத
உயர்வைத்தான் அடைந்தார்கள். இழிவை அல்ல. இதில் குறிப்பாக
சாந்தி முன்னதாக அதிமுகவில் இருந்த போது விரும்பியும் கிடைக்காத
பதவியை அடைந்துள்ளார் என்பதை அறிவீர்களா?
அண்மையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின், இந்திய அரசியல் அறிவு (“NRI Political research Report” )குறித்து சவுதி அரேபியா,ஆஸ்த்ரேலியா, பிரிட்டன், கனடா மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் ஏறக்குறைய 5000 பேரிடம் “அடுத்த இந்தியப் பிரதமராகும் தகுதி யாருக்கு?” என்று கல்வித்தகுதி, அனுபவம் பொதுஜன ஆதரவு, உலக அறிவு மற்றும் தலைமைப் பண்பு என 10 அளவுகோலின் அடிப்படையில் (திரு காவேரி மைந்தன் போல) திரு பொன் மொகைதீன் பிச்சை (Pon Mohaideen Pitchai) என்கிற வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர் ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அதன்படி அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, திரு மோடியைவிட செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அதிகம் எனத் தெரியவருகிறது. செல்வி ஜெயலலிதாவுக்கு 86 விழுக்காடும், திரு மோடிக்கு 81 விழுக்காடும் வாக்கு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இளவரசராகச் சித்தரிக்கப்பட்ட திரு ராகூல் கூட 51 விழுக்காடு பெற்றிருக்கிறார் ஆனால் அனுபவசாலிகள் எனக்கருதப்பட்ட திருவாளர்கள் அத்வானி, நித்திஷ்குமார் போன்றோர் இந்த ஆய்வில் பங்கேற்பதற்கான அடிப்படைக் குறியீட்டு மதிப்புக்களைக்கூடப் பெறவில்லையாம். இதில் சிறப்பான செய்தி, திரு மோடி எல்லாவிதத்திலும் சிறப்பாக செல்வி ஜெயலலிதாவுக்கு இணையாகக் கருதப்பட்டாலும் கட்சியினரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் செல்விக்குள்ள “ஆளுமைப்பண்பு” அவரிடமில்லையென்பதுவும், சில சமயங்களில் அவரது கட்சியே அவரைக் கைவிட்டுவிடுவதுவும் காரணமாகக் காட்டப்படுகிறதாக அந்த ஆய்வு சொல்கிறது. (அண்மையில் பாராளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவின் மீது நடந்த விவாதத்தில், “உணவுப்பாதுகாப்பு இறுதியாக மானிலங்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே நடத்தப்படக்கூடும் என்கிற நிலையில்,அது குறித்து இறுதி முடிவெடுக்கும் முன், அனைத்து மானில முதல்வர்களுடன் விவாதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திரு மோடி எழுதிய கடிதம் திரு முரளி மனோகர் ஜோஷியால் விவாதத்தில் குறிப்பிடப்படவேயில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பிடப்பட்டிருந்தால், இம்மசோதா ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாணய மதிப்பு குறைந்திருக்காது. இது “கட்சியிலேயே வேறு ஒரு தகுதியான” வேட்பாளரை கண்டறியாத நிலையில், மதச்சாயல் பூசப்பட்ட பாஜக, ஒரு கட்டாயத்தின் பேரில் திரு மோடியைப் பிரதமர்-வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டியிருந்ததோ என எண்ணத் தூண்டுகிறது. ஆனால் ஆட்சியில் இல்லாத பொழுதும் கட்சியைக் கட்டிக் காத்து, தக்க வியூகங்களை வகுத்து, மறுபடி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்து பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை அமுல்படுத்தும், மதச்சாயல் பூசப்படாத, நிலைமை, செல்வி ஜெயலலிதாவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்ததோ என்று தோன்றுகிறது.)
நடத்தியவர் திரு பொன் மொகைதீன் பிச்சை என்பதையும், இது செல்வி ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் வேலை என்பதையெல்லாம் விடுத்துப்பார்த்தால், அடுத்த பிரதமருக்கு “ஆளுமைப்பண்பு” அவசியம் என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின், இந்திய அரசியல் அறிவு (“NRI Political research Report” )குறித்துப் பெருமைப்படலாம்
இதன் மூல ஆங்கிலப் பதிப்பிற்கான இணைப்பு இதோ
Read more at: http://www.firstpost.com/politics/amma-modi-and-then-rahul-who-the-nris-want-for-pm-1026075.html?utm_source=ref_article
ஆளுமை பண்பும் இல்லை; மண்ணும் இல்லை. கேப்டனும்
கலைஞரும் உற்வு என்னும் மாய வலையில் சிக்குண்டு இருக்கிறார்கள்
என்பது உண்மையானால், இவர் “நட்பின்” வலையில் அல்லது பிடியில்
இருக்கிறார் என்பது ஆயிரத்து நூறு சதவீத உண்மை. First Post-இல்
வந்த இந்த செய்திக்கும், ”வருங்கால பாரதமே”, “நாடாளுமன்றமே”,
”பிரதமரே” போன்ற HIGH DIGITAL பேனர்களுக்கும் வித்தியாசம் ஒன்றும்
இல்லை. இந்திய வியாபாரிகள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என
விரும்பினால் பலன் உண்டு. அயல் நாட்டில் வாழும் இந்தியர்களின்
விருப்பத்திற்கு என்ன பலன் இருக்க முடியும்?
—
விஜயகாந்த் ஒரு குடிகாரர் என்கிற கருத்தை அம்மையார் தான்
அறிமுகம் செய்து வைத்தார். அதற்குரிய பதிலை அப்போதே
கேப்டன் அளித்து விட்டார். காமெடியன் வடிவேலு, தமிழகம்
முழுவதும் அக்கருத்தை தூக்கிச் சென்று (கலைஞர் மற்றும் சன்
தயவில்) அலுத்து விட்டார். ஒரு காமெடியனாக தான் கேப்டனிடம்
தோற்று விட்டதாக ஒத்துக் கொண்டு ஒதுங்கிவிட்டார்.
—
கலைஞரும் ஜெயலலிதாவும் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர்
செய்து கொள்ளாத வாதத்தை, கேப்டன் செய்ய துணிந்ததுதான்
இப்போதுள்ள பிரச்சனை.
பண்ருட்டியாரை MGR நம்பியிருக்காலாம். அதற்கு காரணங்கள் பலவுள. முன்னாதாக மருத்துவர் ஐயாவும் நம்பவில்லை என்பதை அறிவீர்களா?
—
MGR தனது அரசியல் வாரிசாக வென்னிற ஆடை நிர்மலாவைத்
தான் கருதியிருக்கக் கூடும். அதனால் தான், நிர்மலா இடம் பெறாத (மேல்) சபையே தமிழகத்திற்குத் தேவையில்லை என்று முடிவெடுத்த்திருக்க
வேண்டும். இல்லாது போனால் கற்றவ்ர்களும் அறிஞர்களும் ப்ங்கு கொண்டிருந்த சபையை ஏன் கலைக்க வேண்டும்?
—
அன்னிய மண்ணில் வாழும் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, தாய்த்
தமிழ் நாட்டில் வாழும் டாஸ்மாக் தள்ளாட்ட தமிழர்களும் நூறு சதவீதம்
வாக்கினை அளிப்பார்கள் என்பதில் ஐயமில்லை (எனக்கு).
—
எங்கள் ஊரில் ACCORD ஹோட்டல் இருக்கிறது. அதில், வெள்ளி இரவை
LADIES NITE என்று நடத்துகிறார்கள். அதில் பெண்களுக்கு FREE complimentary drinks (limited) தருகிறார்கள்.
அவரு புத்திசாலிங்க கட்சி நடத்த்த பணம் வேண்டாம்மா
இன்னொன்றும் சொல்ல மறந்து விட்டது. காலஞ் சென்ற நாவலர்
நெடுஞ்செழிய்ன் “ நால்வர் “ அணி கண்டிருந்த சமயம், “உதிர்ந்த ரோமம்”
என்று கருத்து சொன்னது தான், ஆளுமையின் உச்சம்.
பின்னாளில், நீலி பிருங்காதியெல்லாம் இல்லாமல் உதிர்ந்தவை
ஒட்டிக் கொண்டது விசித்திரம்.
நல்ல வேளை. விசுவநாதன் திரும்பி வந்தும் மணம் குணம் காரம்
குறையாமல் இருந்த்தைக் கண்டு VIT ஆரம்பித்து விட்டார்.
கொஙுகு நாட்டினிலே ஒரு வாய்ச்சொல்லுண்டு “மாப்பிள்ளை
நல்லவனா இருந்து என்னத்த பண்ண. மாமியா கொடுமைக்காரி”
சென்று. அது நினைவுக்கு வருகிறது.
விவாதம் –
சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத்தை விட
சுவையாகவே, சரக்கு (!) உள்ளதாகவே
இருக்கிறது.
எனக்கு விமரிசனம் வலைத்தள நண்பர்களின்
மீது நம்பிக்கை இருக்கிறது.
தரம் குறையாமல், சரக்கை (!) கொடுப்பார்கள்
என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்