மஞ்சள் சீனம் ஜெயிக்க காரணம்
கம்யூனிஸச் சிவப்பா ?
அல்லது ……….
(கொ.த.கொ.வி. Part-4)
————
கிட்டத்தட்ட ஒரே சம காலத்தில் தான்
நம் இரண்டு நாடுகளும் சுயேச்சையாக இயங்கத் துவங்கின.
1947-ல் நாம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இயங்கத் துவங்கினோம்.
1949-ல் சீன மக்கள் குடியரசின் கம்யூனிஸ்டு கட்சி
அதிகாரத்தை ஏற்றது.
200 ஆண்டுக்கால காலனி ஆதிக்கத்தின் பாதிப்பிலிருந்து
நாம் புதிதாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருந்தது.
முடியாட்சி, நீண்ட கால உள்நாட்டுப்போர் மற்றும்
ஜப்பானுடனான 1937 முதல்1945 வரையிலான 7
ஆண்டுக்கால போர், போரில் படுதோல்வி,
போருக்கும், புரட்சிக்கும்
பலி கொடுக்க வேண்டியிருந்த லட்சக்கணக்கான
உயிர்கள் – இத்தனை பாதிப்புகளிலிருந்தும் சீனா
வெளிவர வேண்டி இருந்தது.
1948 முதல் 1975 வரையிலான சீனாவில் பெரிய
அளவிலான முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் இல்லை.
ஆனால் 1978-ல் அறிமுகப்படுத்தப்பட்டு கொஞ்சம்
கொஞ்சமாக திடப்பட்டு உருவெடுத்த புதிய பொருளாதார
கொள்கை (mixed economy or market economy)
ஒரு விதத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் என்று
சொல்லக்கூடும்.
இந்த புதிய பொருளாதார கொள்கை
“socialism with Chinese characteristics”.
என்று பெயர் சூட்டப்பட்டு சீன அரசியல் சட்டத்தில்
டிசம்பர் 1982ல் சேர்க்கப்பட்டது.
தாராளமயமாக்கலில்,
உலகப் பொருளாதாரச் சந்தையில் சீனா கலப்பதற்கான
அடித்தளம் இது.
கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் தொகையைக்
கொண்ட ஒரு நாடு,
அதில் 30% மேல் மக்கள் – உடலுழைப்புக்குத்
தகுதி இல்லாதவர்களைக் கொண்ட ஒரு நாடு,
சுமார் 35 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று,
இன்று உலகின் முதல் பொருளாதார சக்தியாக
( number 1 GDP nation )
உருவெடுத்து இருப்பது எப்படி ?
ஏற்றுமதி வர்த்தகத்தில் உலகத்தில் நம்பர்-1.
பொருளாதார வளர்ச்சியில் – நம்பர்-1.
வாங்கும் சக்தி கொண்ட நாடுகளில் – நம்பர்-1.
உலக நாடுகளில், (அமெரிக்காவைத் தவிர)
அதிக அளவில் அமெரிக்க டாலரை கையிருப்பு
(reserve foreign exchange )
வைத்திருக்கும் ஒரே நாடு !
அமெரிக்க பொருளாதாரத்தை அசைக்கும் அளவிற்கு
சக்தி கொண்ட ஒரு நாடு !
உலகின் அதிக அளவு படைவீரர்களைக் கொண்ட நாடு.
(largest standing army )
ஐக்கிய நாடுகள் சபையில் (வீட்டோ அதிகாரம்
கொண்ட) பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக
உள்ள ஒரு நாடு.
உலகின் அதிவேக மற்றும் அதிக தூரத்திற்கு
ஓடும் புல்லெட் ரெயில்.
உலகின் 3 மிகப்பெரிய, மிக நீளமான மேம்பாலங்கள்.
உலகில் அதிகபட்ச தூரத்திற்கு உள்நாட்டு
நீர்வழிப்பாதையையும், அதில் போக்குவரத்தையும்
உருவாக்கி இருக்கும் நாடு.
உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தி உற்பத்தி
நிலையத்தை உருவாக்கி இருக்கும் நாடு.
உலகில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு.
பாதுகாப்புத் துறையிலும், ராணுவ சாதனங்களின்
உற்பத்தியிலும் தன்நிறைவு பெற்ற நாடு.
1990ல் இருந்து 2010 வரையுள்ள காலத்தில்,
தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு சராசரி
GDPயை -11 % க்கு தக்க வைத்துக்கொண்ட நாடு.
1970 வரை சீனாவைக் கண்ட
வெளிநாட்டவர்கள் மிகச்சில பேரே.
ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தபோது
“இரும்புத்திரை” போட்ட நாடு என்று சொல்வார்கள்.
சீனாவோ – இரும்புக்கோட்டையாகவே இருந்தது.
அதில் வெளியார் யாரும், டூரிஸ்ட் என்கிற பெயரில் கூட
உள்ளே போக முடியாத நிலை தான் இருந்தது.
ஆனால் – 1970களின் இறுதிப் பகுதியில்,
டெங் ஜியோபிங் (Deng Xiaoping ) அதிகாரப்
பொறுப்பேற்ற பிறகு, சீனா உலக நாடுகளின்
பார்வைக்கு திறந்து விடப்பட்டது.
உலகம் முழுவதிலுமிருந்து டூரிஸ்டுகள் பெரும்
உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார்கள்.
இன்று – உலகில் அதிக அளவில் டூரிஸ்டுகள்
விரும்பும் நாடுகளில் 3வது நாடாக சீனா திகழ்கிறது.
2010ஆம் ஆண்டில் மட்டும் சீனாவிற்கு
விஜயம் செய்த டூரிஸ்டுகளின் எண்ணிக்கை
-54.7 மில்லியன்.
வாதத்திற்காக –கம்யூனிஸ்ட் கட்சி ஆள்கின்ற
காரணத்தால் தான்
சீனா இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று
எடுத்துக் கொண்டால், உலகில் இன்னும்
எவ்வளவோ கம்யூனிஸ்ட் நாடுகள் உள்ளனவே –
அவை எல்லாம் இந்த அளவிற்கு முன்னேற்றம்
காண முடியாதது ஏன் ? என்கிற கேள்வி எழுகிறது !
மேலும் – தனியார் சொத்துரிமையையும்,
தாராளமயமாக்கலையும்,
சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும்
ஏற்றுக்கொண்ட பிறகு சீனாவில் இருப்பது கம்யூனிசம்
என்று எப்படிச் சொல்ல முடியும் ?
சீனாவை ஆள்வது கம்யூனிஸ்ட் கட்சி என்று
சொன்னாலும் – கொள்கை, கோட்பாடுகளின்
அடிப்படையில் பார்த்தால் இன்றைய நிலையில்,
சீன கம்யூனிஸ்ட் கட்சியை
கம்யூனிஸ்ட் கட்சி என்று கார்ல் மார்க்ஸை
ஏற்றுக் கொண்டவர்களால் ஒப்புக் கொள்ள முடியுமா ?
அங்கே இருப்பது ஒரு கட்சி ஆட்சி.
அந்த கட்சிக்கான கொள்கைகளை, லட்சியங்களை –
அவர்களுக்குத் தேவைப்பட்ட விதத்தில்,
அவர்களே ஏற்படுத்திக்
கொண்டுள்ளார்கள். அவ்வளவு தான்.
எனவே சீன வளர்ச்சிக்கு காரணம் கம்யூனிச சிவப்பு அல்ல
என்று கொள்ளலாமா ?
பின்னர் – இதெல்லாம் எப்படி சாத்தியமாகியது ?
(தொடர்வோம் …!)
பின்குறிப்பு – நண்பர்களே, இந்த இடுகையின்
பொருள் பற்றி -உங்கள் கருத்துக்களை
பின்னூட்டங்களில் தாராளமாகச் சொல்லலாம் –
இந்த தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டதே
விவாதத்திற்காகவும்,
கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும் தான் !!




அற்புதமாக எளிமையாக சொல்லி இருக்கீங்க. உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் எதிர்பாராத விதமாக ஏற்கனவே நான் எழுதியுள்ள பதிவுகளைத்தான் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்க.
சீனா — மாயவலையும் மந்திர வேலைகளும்
http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post_19.html
சீனா — முத்துமாலை திட்டம்
http://deviyar-illam.blogspot.in/2011/06/blog-post_27.html
சீனாவின் கண்பார்வையில் இந்தியா
http://deviyar-illam.blogspot.in/2011/06/blog-post_28.html
சீனாவின் பொருளாதார அடியாள் — 3
http://deviyar-illam.blogspot.in/2011/06/3.html
சீனா குறித்து எழுத வேண்டும் என்று நிறைய புத்தகங்களை படித்து முடித்த போது எனக்கு மனதில் தோன்றிய சில விசயங்கள்.
இந்தியாவில் சிந்தி மற்றும் குஜராத் மார்வாடிகள், அதைப் போன்று யூதர்கள் இதைப் போல சீனர்கள்
இவர்கள் அத்தனை பேர்களுக்கும் எப்போதும் ஒரு ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமை உண்டு.
பணம் தான் முதலில். மற்றது எல்லாமே அதன் பிறகே.
நன்றி ஜோதிஜி,
நீங்கள் குறிப்பிட்டுள்ள 4 இடுகைகளையும்
உடனேயே படித்து விட்டேன்.
நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
நீங்கள் சீனாவை எடுத்துக் கொண்டது
வேறு நோக்கத்தில்…
நான் சீனாவை எடுத்துக் கொண்டிருப்பது
வேறு காரணங்களுக்காக ..!
இடுகையின் அடுத்தடுத்த பகுதிகளில்
பயணிக்கும்போது என் இடுகையின்
நோக்கம் தெரிய வரும்..!
“சீனர்களுக்கு பணம் தான் முதலில் –
மற்றவை எல்லாம் பிறகே” என்று சொல்லி
இருக்கிறீர்கள் அல்லவா ?
நான் இதை வேறு மாதிரி பார்க்கிறேன்.
உலகையே ஆட்டி வைக்கும் பிரம்மாண்டமான
சக்தியாக உருவாக சீனா விரும்புகிறது.
அதை நோக்கி திட்டமிட்டுப் பயணிக்கிறது.
இன்று ரஷ்யாவே சீனாவைக் கண்டு
அஞ்சுகிறது என்றால் …. ?
-ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறிக்
கொண்டதற்கு நன்றி ஜோதிஜி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இந்த தொடரில் நீங்க சொல்ல வேண்டியதாக நான் கருதுவது சீனாவின் முதலீடு எந்த அளவுக்கு அமெரிக்காவில் உள்ளது. நண்பருடன் உரையாடிய போது ஒரு தகவலைச் சொன்னார். இன்றைய சூழ்நிலையில் சீனா அமெரிக்காவில் வைத்துள்ள தங்கம் மற்றும் பணம் சார்ந்த முதலீடுகளை (அப்படி நடக்காது என்றாலும்) திடீரென்று எடுக்க நேர்ந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் அம்பேல் என்றார். இது தவிர சீன தொழில் அதிபர்களின் முதலீடு என்பது தனியாக வருகின்றது.
இதைப்பற்றியும் எழுதுங்க.
உழைப்பு. அதை தவிர வேறொன்றும் இல்லை.
சாம்பலிலிருந்து ஜப்பானியர்களைத் தலை நிமிர வைத்த
அதே உழைப்பு தான் சீனர்களின் பன்முக வளர்ச்சிக்குக்
காரணம்.
government policies only made it
மிக அருமையான தகவல்கள் நன்றி…..
காவிரி மைந்தன் உள்ளிட்ட ஏனைய நண்பர்களுக்கு வணக்கம்,
உங்கள் தேசபக்தி நிறைந்த சுவாரசியமான இடுகைகள் அதற்கு வரும் பின்னூட்டங்கள் எல்லாமே அருமை.
நான் பலமுறை இங்கு சொல்லியுள்ளேன்.நம் நாட்டில் இருப்பது DEMOCRAZY
அது உள்ளவரை ,தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்தியா உருப்படாது.
இப்பொழுது உள்ள உளுத்துப்போன சட்டதிட்டங்கள்,அரசியல் நிர்யனைய சட்டம் உள்ளவரை இந்தியா உருப்படாது.அடுத்து வரும் பொதுத்தேர்தல் எப்பேர்பட்ட கேலி கூத்தாக அமையப்போகிறது என நாம் பார்க்கப்போகிறோம்.ஏதோ மோடிதான் cure all எனும் பாணியில் பேசப்படுகிறது.அது தவறு.உட்கட்சி பூசலே அவரை செயலற்றவராக்கி விடும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.1977 இல் இந்திராவைப்போல வெறுக்கப்பட்ட தலைவர் யாரும் இல்லை.தூக்கி எறியப்பட்டார்.ஆனால் சரியாக மூன்றே ஆண்டுகளில் மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்தனர்.
நல்லாட்சி செய்த வாஜ்பாயி விலக்கப்பட்டு உபயோகமற்ற மண்மோகன் சிங் பத்தாண்டுகளாக நாற்காலியை நிரப்பியுள்ளார்.
சீனாவின் வெற்றிக்கு முதல் காரணம் அங்கு ஜனநாயகம் இல்லை தேர்தல்கள் இல்லை.நம் நாட்டில் மொத்தம் 30 மாநிலங்கள்.எனவே சராசரியாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாநிலத்தேர்தல்!!.எப்படி உருப்படும்.??
இன்று நம் நாட்டை ஆள்வது சுயநலமும்,கபடமும் நிறைந்த தொழிலதிபர்கள்,ஊடகங்கள்,அரசு அதிகாரிகள் மற்றும் கிரிமினல்கள்.
சற்று காரமான எதிர்மறை பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்
நன்றி..
what ganpat said is correct. there is no sonia, pawar, mulayam and karuna in china.