ஸ்டாலின் வீட்டில் “ரெய்டு” -ப.சி.அவர்களின் அறிக்கை –
“எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை”
இப்போதெல்லாம் அரசின் முடிவுகளையோ, அமைச்சர்களின்
செயல்பாடுகளையோ குறித்து விமரிசித்தால் கூட –
கிரிமினல் பிரிவுகளின் கீழ் “உள்ளே” தூக்கிப் போட்டு
விடுகிறார்கள். வலைத்தளங்களில் விமரிசனம் என்பது
ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக, கருத்து கூறலாகவே எடுத்துக்
கொள்ளப்பட வேண்டுமே தவிர – அவமதிப்பாக அல்ல.
யாரையும் அவமதிக்கும் நோக்கம் நமக்குக் கிடையாது.
விமரிசனத்தில் சிறிது கிண்டலும் கேலியும் கலந்திருக்கலாம்.
அதையெல்லாம் கூட சீரியஸாக எடுத்துக் கொண்டால், பிறகு
ஜனநாயகத்திற்கு என்ன தான் அர்த்தம் ?
இருந்தாலும், ஒரு 4 நாட்கள் கூட “உள்ளே” போய்
வசிக்கும் அளவிற்கு என் உடல் நிலை இல்லாததால்,மிகவும்
ஜாக்கிரதையாகவே என் கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
இன்று காலை பரபரப்பான செய்தி வெளிவந்திருக்கிறது.
– திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டில் சிபிஐ ரெய்டு.
வெளிநாட்டுக் கார்கள் வாங்கியது-விற்றது தொடர்பான
முறைகேடுகள் நிகழ்ந்தது குறித்து சிபிஐ விசாரணை செய்தது.
ஆவணங்கள் தேடப்பட்டன – என்று செய்தி.
ஸ்டாலின் எத்தனை கார் வைத்திருக்கிறார் –
அதில் எத்தனை வெளிநாடு ?
எத்தனை உள்நாடு ? அவர் மகனும், மருமகனும்
எந்தெந்த வெளிநாட்டுக் கார்களை வைத்திருக்கிறார்கள் ?
அவர் மருமகன் வைத்திருந்த எந்தெந்த வெளிநாட்டு கார்கள்
குறித்து முன்னால் வழக்குகள் இருந்தன ?
அவை முன்பு திமுக ஆட்சியின் போது எப்படி கைவிடப்பட்டன
-என்பது குறித்தெல்லாம் நமக்கு என்ன தெரியும் ? ஒன்றும்
தெரியாத நிலையில் இவற்றைப் பற்றி
கருத்து கூற நமக்கு அருகதை ஏது ?
ஆனாலும் பொதுவாக இந்த விஷயம் குறித்து
சில கேள்விகள் எழுகின்றன !
முதல் கேள்வி – இந்த ரெய்டு குறித்து, மத்திய நிதியமைச்சர்
தொலைக்காட்சி நிருபர்களிடத்தே “நேற்றைய தினம்
திமுக கூட்டணியிலிருந்து விலகி இருக்கின்ற நிலையில் –
இன்று இந்த ரெய்டு நிகழ்ந்திருப்பது – தவறாக புரிந்து
கொள்ளப்படும். நான் இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்”
என்று கூறுகிறார்.
அமைச்சர் கூற வருவதென்ன ? சிபிஐ அன்றாட அரசியல்
சூழ்நிலைகளை கவனித்து, அதற்கேற்றாற்போல் தான் தங்கள்
நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றா ?
“நேற்றைய தினம் ஆளும் கூட்டணியிலிருந்து
திமுக விலகிய நிலையில், இன்றைய தினம்
அதன் தலைவரின் மகன் வீட்டில் ரெய்டு நிகழ்த்தினால் –
மத்திய அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடுமே” என்று யூகித்து,
யோசித்து, இன்றைய ரெய்டை தவிர்த்திருக்க வேண்டும் என்றா ?
அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம் ?
-மத்திய அரசின் விருப்பு, வெறுப்பு, சௌகரியங்களைப்
பொறுத்தும், மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் கெட்ட பெயர்
வராமலும் சிபிஐ செயல்பட வேண்டும் என்றா ?
சிபிஐ என்பது முற்றிலும் சுதந்திரமான ஒரு அமைப்பு.
மத்திய அரசு அதன் மீது எந்தவிதமான செல்வாக்கையோ,
அதிகாரத்தையோ -பயன்படுத்துவதில்லை என்றல்லவா
அடிக்கடி மத்திய அரசு பாராளுமன்றத்தில் கூறி வருவதாக
நினைவு ?
“எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்று
ஒரு கிராம வழக்குச் சொல் உண்டு. ஏனோ அது இப்போது
நினைவிற்கு வருகிறது !
வயதாகி விட்டதே தவிர என் சிற்றறிவிற்கு இதெல்லாம்
இலேசில் விளங்க மாட்டேனென்கிறது. புரிந்தவர்கள் யாராவது
இதை எனக்கும், மற்றவர்களுக்கும் புரியும்படி எடுத்துச்
சொன்னால் தேவலை !
இரண்டாவதாக இன்னொரு சந்தேகம் –
ஸ்டாலின் கார் குறித்த புகார்கள் திடீரென்று நேற்று
முளைத்திருக்க முடியாது. ஏற்கெனவே –
மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ – சிபிஐ யிடம்
ஆலோசனையில் இருந்திருக்க வேண்டும்.
மத்திய நிதியமைச்சகத்தில் பழனிமாணிக்கம், பழனிமாணிக்கம்
என்று திமுகவைச் சேர்ந்த தஞ்சாவூர்க்காரர் ஒருவர் இருந்தார்.
ஜீபூம்பா கதையில் பாட்டிலை அழுத்தி மூடி அடைத்திருந்த
கார்க்கை எடுத்தவுடன், பூதம் படீரென்று
வெளிவந்து விடுவது போல் –
இந்த பழனிமாணிக்கம் நேற்று ராஜினாமா செய்து நகர்ந்தவுடன் –
வெளிநாட்டு காருக்கு திடீரென்று வழி கிடைத்து,
வழக்கு நகர்ந்திருக்குமோ ?
ஸ்டாலின் காலையில் நிருபர்களிடம் பேசும்போது “நேற்றிரவு
கூட்டணியில் இருந்து விலகியதன் விளைவு – இன்று இந்த
உருட்டல், மிரட்டல் எல்லாம் வந்திருக்கிறது –
நான் எதற்கும் பயப்பட மாட்டேன் –
எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம்” என்று கூறி விட்டார்.
டி.ஆர்.பாலுவோ “நெருப்புடன் விளையாடுகிறார்கள்”
என்கிறார்.
தலைவர் கலைஞர் ஒருவர் தான் பொறுப்போடு –
“இது பழிவாங்கலாகவும் இருக்கலாம். இல்லாமலும்
இருக்கலாம்” என்று கூறுகிறார்.
நான் மட்டும் ஏன் எதையாவது சொல்லி –
வம்பை வரவழைத்துக் கொள்ள வேண்டும் ?
நான் எதையும் தவறாகச் சொல்லி விடவில்லை தானே ?



எல்லாம் ஒரு ” கணக்கு ” தான்…
இன்னும் என்னென்ன ” விளையாட்டு ” நடக்கப் போகிறதோ…?
உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்!
திணை விதைத்தால் திணை… வினை விதித்தால் வினை!
ஆல் பார்ட் ஆஃப் த கேம்!
– சிதம்பரம் எதிர்ப்பை ஏற்று ரெய்டு பாதியில் நிறுத்தப்பட்டது என்று ஒரு செய்தி படித்தேன்.
– நாராயணசாமியை இது விஷயமாக சோனியா வறுத்து எடுத்தார் என்றும் செய்தியும் படித்தேன். பாவம், உடனடியாக மஞ்சள் தண்ணீர் தெளித்து பீடத்தில் நிறுத்த இவர் தான் கிடைத்தார் போல.
– அப்புறம் (பிஎஸ்பி, சமாஜ்வடி) கண்ணுகளா, சேட்டை பண்ணாம சமத்தா இருக்கோணும் என்று அவர்களுக்கு ஒரு டிரைலர் போட்டதாக கூட இருக்கலாம் என்றும் சிலர் இணையத்தில் எழுதுகிறார்கள்.
– சற்று முன் “ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனையில், மத்திய அரசுக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்” என்ற செய்தியை படித்தேன். எனவே அப்பன் மட்டும் இல்லை குடும்பமே குதிருக்குள் இல்லாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை என்று கூறினாலும் ஏற்புடையதாக் இருக்கும் என்று நம்ப தோன்றுகிறது.
எனக்கு மட்டும் களி தின்ன அசையா என்ன?!) … எப்பூடி!!!
//அப்புறம் (பிஎஸ்பி, சமாஜ்வடி) கண்ணுகளா, சேட்டை பண்ணாம சமத்தா இருக்கோணும் என்று அவர்களுக்கு ஒரு டிரைலர் போட்ட//
இதுதான் உண்மையும் கூட, எழில் ஸார்
Raman aandalum Ravanan aandalum———–
நண்பர்களுக்கு வணக்கம்.
சில உண்மைகள் வெளியாகின்றன –
சிலர் தங்களையும் அறியாமல் சில விஷயங்களை
வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் –
1) சிபிஐ – மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை
என்கிற அவர்களது வாதத்தை, அவர்களே, அவர்களையும்
அறியாமல், அவசரத்தில் உடைத்து விட்டார்கள்.
2) ரெய்டு நடந்ததற்கு காரணம் தான்அல்ல என்று திமுக
தலைவரை நம்ப வைக்க ப.சி. காட்டிய அவசரம்
கூட்டணி முறிவு இறுதியானதல்ல என்றும், கூட்டு தொடர்வதில்
காங்கிரசுக்கு உள்ள ஆர்வத்தையும் காட்டுகிறது.
3) ம.மோ.சி. ரொம்பவுமே உணர்ச்சி வசப்பட்டு விட்டார் !
இது குறித்த செய்தி –
“திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து
பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கையில் தான் மிகவும் அப்செட் ஆகியிருப்பதாக
அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அரசு மிகவும் அப்செட்டாக உள்ளது.
சிபிஐ சோதனை நடத்தப்பட்ட நேரம் பொருத்தமற்றது, தேவையற்றது!(சிபிஐ ரெய்டு
எப்போது தேவை என்பதை தீர்மானிப்பது யார் – தெரிகிறதா ? ) துரதிர்ஷ்டவசமானது.
இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்படும்”(அய்யோ பாவம் நாராயணசாமி !!)
4) கலைஞர் அதல பாதாளத்திற்கு சரிந்த தன் இமேஜை
இந்த தற்காலிக பிரிவின்மூலம் ஓரளவு சரி செய்து கொண்டு, பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்
மீண்டும் காங்கிரசுடன் சேர வாய்ப்பு இருக்கிறது.
(இருவருக்கும் வேறு வழி ? )
5) எனக்கென்னவோ – முலாயம் சிங், மாயாவதி வரிசையில்
கலைஞரையும் “வழி”க்கு கொண்டு வர “அன்னை”செய்த
முயற்சியாக இது இருக்கலாம் என்று தோன்றுகிறது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Mr P.C. sivaganga vil vetri petratharkku M.Ka. virkku mika mika mika mika kadamai pattirukkirar.
victory chidambara ragasyam.