விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு – விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !

விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு –
விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !

அண்மையில் நண்பர் ஜோதிஜி கச்சத்தீவு பற்றி எழுதிய
ஒரு கட்டுரை தான் என்னை இதை  எழுதத்தூண்டியது.

அதில்  நண்பரின் கண்ணோட்டத்தில்  ஒரு வாசகம் –

“கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட –
துண்டு நிலம் என்பதே எதார்த்தம். அதில் இனி எந்த
காலத்திலும் சொந்தம் கொண்டாடுவது என்பது கற்பனையில்
வேண்டுமானால் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக்
கொள்ளலாம்.

காரணம் இந்த ஒரு பிரச்சனையில் இந்தியா தமிழர்களுக்கு
மகிழ்ச்சியளிக்க என்று கைவைத்தால் வைத்த கை சுட்டுவிடும்
என்பதை விட கையே இல்லாமல் போய்விடக் கூடிய அபாயமும்
உண்டு”

“கை வைத்தால், வைத்த கை சுட்டு விடும் என்றும்
கையே இல்லாமல் போய்விடக்கூடிய அபாயமும் உண்டு “
என்றும் நண்பர் எப்படிக் கூறுகிறாரோ –
எனக்குத் தெரியவில்லை !

ஆனால் – நான் இதை முற்றிலும் வேறான
கோணத்தில் பார்க்கிறேன்.
நம்பிக்கையுடன் பார்க்கிறேன்.
இன்றில்லா விட்டாலும் எதிர்காலத்தில் –
கச்சத்தீவும், மீனவர் பிரச்சினையும்  நிச்சயமாகத்
தீர்க்கப்படக் கூடியவை தான்.

இரண்டு வழிகள் உண்டு.

– துணிச்சலான, தமிழகம் சொல்லும் நியாயத்தை உணர்ந்து,
ஏற்று, செயல்படக்கூடிய மத்திய அரசு இருந்தால் – 24 மணி
நேரத்தில் இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வரலாம்.
எப்படி ?

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் –
ஜூன் 28, 1974 அன்று கையொப்பமிடப்பட்ட
கச்சத்தீவு பற்றிய இந்திய-இலங்கை உடன்படிக்கை
பிரிவுகள் 5 மற்றும் 6ன் படி –

“பாரம்பரியமாக இரு நாட்டையும் சேர்ந்த
மீனவர்கள் அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும்
அவர்கள் தொடர்ந்து, எந்தவித கட்டுப்பாடும் இன்றி
அனுபவிப்பார்கள். கச்சத்தீவு பகுதிக்கு அவர்களது
மீன்பிடி படகுகள் சென்று வர இலங்கை அரசிடமிருந்து
எந்தவித விசாவோ, அனுமதியோ தேவையிலை”
என்று கூறப்பட்டுள்ளது.

(Article 5 – Subject to the foregoing,
Indian fishermen and pilgrims will enjoy
access to visit Kachchativu as hitherto,
and
will not be required by Sri Lanka
to obtain travel documents or visas
for these purposes.

Article 6 –The vessels of Sri Lanka
and India will enjoy in each other’s waters
such rights as they have traditionally
enjoyed therein.)

கச்சத்தீவு உடன்படிக்கை பற்றிய அறிக்கையை இந்திய
பாராளுமன்றத்தில் வெளியிட்ட அப்போதைய வெளியுறவு
அமைச்சர் ஸ்வரண் சிங் கூட –

“மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த இடங்களில்
தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய எந்த தடங்கலும்
இருக்காது” என்று உறுதி அளித்துள்ளார்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் -நமது மீனவர்கள்
கச்சத்தீவு அருகே செல்வதோ, மீன் பிடிப்பதோ –
எல்லை தாண்டுவதாகும் என்று இலங்கை எப்படி முடிவு செய்யலாம் ?

இந்திய அரசு காங்கிரஸ் தலைமையின்
சொந்த விருப்பங்களுக்கிணங்க, சும்மா இருப்பதால் தானே
இலங்கை வாலாட்டுகிறது. இதை அடக்க வழியா இல்லை ?

முதலில், இந்திய  அரசு தன் கௌரவத்தையும்,
உரிமையையும் நிலை நாட்டவும், இந்திய(தமிழக ?)
மீனவர்கள் நலனை பாதுகாக்கவும் உறுதி எடுத்துக்
கொள்ள வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படியே, இந்திய மீனவர்களுக்கு
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க  உரிமை இருக்கிறது
என்பதை மத்திய அரசு முதலில்
இலங்கையிடம் வெளிப்படையாக அறிவித்து,

இலங்கை கடற்படையினராலோ, மீனவராலோ
அங்கு வரும் தமிழக மீனவர்களுக்கு எந்த வித
அச்சுறுத்தலோ, துன்புறுத்தலோ – நிகழக் கூடாது
என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும்.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு
இந்திய கடற்படைக்கு உத்திரவு இடப்பட்டுள்ளது
என்றும் இலங்கை கடற்படை விதிமீறினால்,
இந்தியக் கடற்படை  பொறுத்துக் கொள்ளாது என்றும்
இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதை உறுதி செய்ய –
கச்சத்தீவு அருகே இந்திய கடலோர காவல்படையின்
கப்பல்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு, அங்கு
மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட  வேண்டும்.

இதையும் மீறி இலங்கை கடற்படை தொந்திரவு
கொடுக்குமேயானால், கச்சத்தீவு பற்றிய ஒப்பந்த
விதிகளை இலங்கை மீறுவதை  காரணம் காட்டியே,
இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒரு தரப்பாக ரத்து செய்து
கச்சத்தீவை நிரந்தரமாகத் தன் பொறுப்பில்
ஏற்க வேண்டும்.

(ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படியே கூட,
இரு நாடுகளிடையே சில விதிகளுக்கு உட்பட்டு
ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு,

பிற்காலத்தில் எதாவது ஒரு தரப்பினர் அந்த
விதிமுறைகளின்படி நடக்கவோ, ஏற்கவோ மறுத்தால்,

அந்த காரணங்களுக்காகவே ஒப்பந்தத்தை ரத்து செய்யும்
உரிமை எதிர் தரப்பினருக்கு கிடைக்கிறது.)

அடுத்த வழி – நீதிமன்ற வழி !!

உச்சநீதிமன்றத்தில்( சுப்ரீம் கோர்ட் )
நீண்ட காலமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்
கச்சத்தீவு பற்றிய வழக்கை, தொடர்ந்து நிகழும் மீனவர்
படுகொலைகளை காரணம் காட்டி, அவசர வழக்காக
விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும்.

அடிப்படையிலேயே – இந்திய -இலங்கை அரசுகளால்
செய்து கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டரீதியாக
செல்லத்தக்கது அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.

உண்மையில் கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லத்தக்கதா ?

இந்திய மண்ணில் ஒரு அங்குல நிலத்தைக் கூட
அண்டை அயல் நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க
வேண்டுமானால், எல்லைகளை மாற்ற அரசியல் சட்ட
திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஏற்றுக்
கொள்ளப்பட வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்த விவகாரத்தில் –
இந்த நடைமுறை பின்பற்றப்படவே இல்லை !

சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழ் நாட்டையும்
கலந்து ஆலோசிக்காமல் –
பாராளுமன்றத்தின் அனுமதியையும் கோராமல் –
இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் தன்னிச்சையாக
இலங்கையுடன் ஜூன் 28, 1974 அன்று ஒப்பந்தத்தில்
கையெழுத்து போட்டு விட்டு –

பின்னர் பாராளுமன்றத்திற்கு அதனை ஒரு தகவலாக
மட்டுமே தந்தார்– அதையும் வெளியுறவுத் துறை அமைச்சராக
இருந்த ஸ்வரண் சிங்கின் ஒரு அறிக்கை மூலமாக.
முறைப்படி பாராளுமன்ற அங்கீகரிப்பிற்காக ஒப்பந்தம்
முன்வைக்கப்படவே இல்லை !

அதிமுக்கியமான விஷயம் –
இப்படி ஒரு ஒப்பந்தம் போடவே இந்திய அரசுக்கு
அதிகாரமோ, உரிமையோ இல்லை.

ஒப்பந்தத்தின் வாசகங்களே தவறானவை.
கச்சத்தீவு இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள
பிரச்சினைக்குரிய ஒரு பகுதியாக ஒப்பந்தத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவே தவறு.

கச்சத்தீவு – எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல்,
ராமநாதபுரம் ஜமீனின் – இந்தியாவின் –
ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்பது
கீழே காணப்படும் விவரங்களிலிருந்து புரியும் –

In 1947 one Mr.Mohammed had taken lease
of the island of Katcha Theevu which was
registered in the Sub-Registrar’s office of

Indian town
of Rameswaram (Ref: Reg.No. 278/1948.)

After India attained independence,
the Indian State of Madras by way of

Government Order No: 2093 dated 11.8.1949

declared that Katcha Theevu as barren land

under Rameswaram revenue village
Survey Number: 1250 in an area of
285 acres and 20 cents.
Thus for centuries Katcha Theevu was
under the Princely state of Ramnad
in British India, and under Government of

Madras in Independent India.

இவ்வாறு சந்தேகத்திற்கே இடமில்லாமல், தமிழ் நாட்டின்
ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை –
அரசியல் சட்டப்படி அதற்குரிய அதிகாரம் இல்லாமலே
இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்நாளைய
இந்திய அரசின் செயல் சட்ட விரோதமானது.

இந்த உண்மையை தகுந்த ஆதாரங்களுடன்,
சிறந்த வழக்கறிஞர்களின் துணையோடு நிச்சயமாக
உச்ச நீதி மன்றத்தில் நிரூபித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்தை
ரத்து செய்யும் ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து
பெற முடியும்.

எனவே –நிச்சயமாக, கச்சத்தீவு முடிந்து போன கதை அல்ல.
அதற்குரிய நேரமும்,அதனை செய்து முடிக்கத்தகுதியுள்ளவர்களும் இன்னும் வரவில்லை – அவ்வளவே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு – விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !

  1. todayandme's avatar todayandme சொல்கிறார்:

    ஜோதிஜி கச்சத்தீவு கட்டுரை – “http://deviyar-illam.blogspot.in/”
    /// ஆனால் மீனவர்களின் பிரச்சனையைப் பற்றி பேசுபவர்கள் அத்தனை பேர்களும் கடைசியில் ஒரு புள்ளியில் வந்து தான் நிற்கிறார்கள்,

    “கச்சதீவை இந்தியா கைப்பற்ற வேண்டும்” என்கிறார்கள்.,

    கச்சத்தீவு என்பது இவர்கள் சொல்வது போல என்ன இடுப்பில் கட்டியிருக்கும் கச்சைதுணியா? நினைத்த போது மாற்றிக் கொள்ள முடியுமா?

    இந்தியா நினைத்தால் கச்சத்தீவை மீண்டும் எடுத்துக் கொள்ளத்தான் முடியுமா?

    ஏன் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டி மீனவர்களின் பிரச்சனைகளைக் கண்டு பாராமுகமாக இருக்கிறது என்று பார்த்தால் மீனவர்களின் வலைகளை விட இது மிகவும் சிக்கலாகவே இருக்கிறது, தெளிவற்ற இந்திய அரசாங்க்த்தின் வெளியுறவுக் கொள்கை, தமிழர்களின் பிரச்சனைகளில் ஆர்வமற்ற அதிகாரவர்க்கத்தினர் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட துண்டு நிலம் என்பதே எதார்த்தம், அதில் இனி எந்த காலத்திலும் சொந்தம் கொண்டாடுவது என்பது கற்பனையில் வேண்டுமானால் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்,

    காரணம் இந்த ஒரு பிரச்சனையில் இந்தியா தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்க என்று கைவைத்தால் வைத்த கை சுட்டுவிடும் என்பதை விட கையே இல்லாமல் போய்விடக் கூடிய அபாயமும் உண்டு,

    இது தான் உண்மை, ////

    ஜோதிஜி !
    கண்ணால் காண்பதுவும் பொய்.
    காதால் கேட்பதுவும் பொய்.
    தீர விசாரித்து அறிவதே மெய் !

    தமிழனாகவாவது, இந்தியனாகவாவது, மீனவனாகவாவது, அட்லீஸ்ட் ஒரு மனுஷனாகவாவது இந்த பிரச்சினையை பாருங்கள்.

    கிணற்று தவளையைப் போல் தனக்குத் தெரிந்தது தான் உண்மை என்று, சும்மா வதந்தியைப் பரப்பி விடாதீர்கள்.

    ஒன்றும் புரியவில்லை என்றால் காவிரி மைந்தன் எழுதுவதைப் படித்துக் கொண்டு, copy and paste in your ப்ளாக்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மன்னிக்கவும் நண்பரே.

      ஜோதிஜியின் எழுத்தில் குறை காண்பது எனக்கு
      ஏற்புடையது அல்ல.
      அவர் பார்வையில், அவர் கோணத்தில் –
      அவர் எழுதுகிறார்.
      என் பார்வையில், என் கோணத்தில் –
      நான் எழுதுகிறேன்.
      அவரது உழைப்பை நான் மிகவும் மதிக்கிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. ஆர்.ராஜகோபாலன்'s avatar ஆர்.ராஜகோபாலன் சொல்கிறார்:

    முதுகெலும்புள்ள, சொந்த செல்வாக்குள்ள,
    மக்களின் மதிப்பைப் பெற்ற உண்மையான தலைவர்
    ஒருவர் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும். இத்தாலியத்
    தலைமைக்கு பினாமியாக வந்து நின்றால், பாராளுமன்றத்தில்
    பேசும்போது கூட ஏதோ ஒரு பொம்மை பேசுவதைப் போன்ற பிரமை தான் ஏற்படுகிறது.

    இலங்கை நம்மை மதிக்காததில் அதிசயம் ஏதுமில்லை.
    இந்த நாட்டை இன்று யார் மதிக்கிறார்கள் ? அக்கம் பக்கத்தில்
    உள்ள சின்னஞ்சிறிய நாடுகளான மாலே, மொரீஷியஸ், பர்மா, பங்களா தேஷ், போன்ற நாடுகள் எதுவுமே இந்தியாவை சட்டை செய்வதே இல்லை. சுயநலமற்ற, துணிவுள்ள தலைவர் ஒருவர் பொறுப்பிற்கு வந்தால், காவிரிமைந்தன் சொல்வது போல்
    24 மணி நேரத்தில் இலங்கையை வழிக்கு கொண்டு வந்து விடலாம். பிரச்சினை தீர நமக்குத் தேவை மத்தியில் ஒரு துணிச்சலான தலைமை.

    ஆர்.ராஜகோபாலன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே,

      நானும் அதையே தான் சொல்ல முயற்சிக்கிறேன்.
      மத்தியில் – மக்களின் நலனில்
      உண்மையான அக்கரையுடைய,
      வலுவான ஒரு தலைமை வந்தால் –
      கச்சத்தீவு/தமிழக மீனவர் பிரச்சினை
      தீர்க்கப்படக் கூடியதே !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    மிக அற்புதமான கட்டுரை. மிக்க நன்றிகள் கா.மை. அவர்களுக்கு.
    தங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி தங்கள் பார்வையில் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். ஜோதிஜிக்கு சில விவரங்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம்; அல்லது ஊன்றி கவனிக்காமல் இருந்திருக்கலாம். அதற்காக todayandme சொல்லியிருப்பதுபோல எழுதக்கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஜோதிஜி எழுதியபிறகுதான் நமக்கு இப்படி ஒரு கட்டுரை கிடைத்திருக்கிறது என்பதையும் உணரவேண்டும். நிச்சயமாக தற்போதைய இந்திய அரசியலாளர்களுக்கு இது தெரியாமல் இருக்காது என்றே நம்புகிறேன். ஆனால் அவர்களிடம் அதற்கான முனைப்பு இல்லை – இது எந்தவகையிலும் அவர்களுக்கு லாபகரமாக இருக்காது என்பதனால்!!!

  4. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ஐயா,
    இன்றைய இக்கட்டுரையைப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். அதைப் பதிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வர்மா கமிசன் பதிவிலும் இதே பின்னூட்டத்தைப் போட்டிருக்கிறேன்.

    பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!

  5. வினோத்'s avatar வினோத் சொல்கிறார்:

    என் பின்னுட்டம் என்ன ஆட்சு

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வினோத்,

      தங்களிடமிருந்து பின்னூட்டம் எதுவும் வந்ததாகத்
      தெரியவில்லையே. தயவுசெய்து மீண்டும் ஒரு முறை
      அனுப்பவும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    WHAT HAPPENED TO THE CASE IN SUPRE COURT?
    ANY FOLLOW UP? ON WHAT PRIORITY SC IS TAKING UP THE CASES?

  7. rathnavel natarajan's avatar rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு. நன்றி.
    நமது அரசாங்கத்துக்கு முதுகு எலும்பு வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.