(இதற்கு முந்தைய இடுகையை படிக்காதவர்கள் –
தயவு செய்து அதை முதலில் படித்து விடவும்.
இது அதன் தொடர்ச்சியே )
நாட்டில் இருக்கும் வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை.
இருக்கின்ற வளங்கள், செல்வங்கள் அனைத்தையும்
பொதுவில் வைக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாமும்
கிடைக்க வேண்டும்.
ஆனால், இருக்கின்ற அனைத்தையும் அனைவருக்கும்
பங்கு போட்டு கொடுத்தால் கூட –
120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் –
உழைக்காமல் –
அல்லது ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டும் உழைத்து –
அனைவரும் உட்கார்ந்து சாப்பிட வழியுண்டா ?
சேற்றில் இறங்கி உழவு செய்யும் விவசாயி –
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் உழைத்தால் –
நமக்கு ஆண்டு முழுதுவதும் உட்கார்ந்து சாப்பிட
சோறு கிடைக்குமா ?
குளிரடிக்குது, மழை பெய்யுது, சூடான டீயோ, காப்பியோ
குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோமே –
அது நமக்கு கிடைக்க எவ்வளவு ஆயிரக்கணக்கான தோட்டத்
தொழிலாளர்கள் நடுங்கும் குளிருலும், மழையிலும்
தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது ?
அவர்கள் ஒரு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் ?
துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லையேல் – நகரம் எப்படி
நாறுகிறது ?
பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டேக்சி, மின்ரயில்
இல்லா விட்டால் ஒரு நாள் காலந்தள்ள முடியுமா நம்மால் ?
அதிகாலை 4 மணிக்கு நகரம் முழுதும் பால் விநியோகம்
செய்கிறார்களே – அவர்கள் இல்லை யென்றால் ஒரு நாள்
ஓடுமா நமக்கு ?
மருத்துவமனைகளில், அழுகிப்போன புண், சிரங்கு,
ரத்தம் ஒழுகும் காயங்கள் – இவற்றை சுத்தம் செய்து
மருந்து போடுகிறார்களே அவர்கள் ?
சுகமாக ஓட்டல்களில் போய் உட்கார்ந்து கொண்டு
வேண்டியதை கேட்டு விரும்பி வாங்கி சாப்பிடுகிறோமே-
நமக்காக தட்டு தூக்கும், பாத்திரம் விளக்கும் அவர்கள் ?
காவல் துறையினர் …?
தபால், ராணுவத் துறையினர் … ?
இத்தனை பேரும், இவர்களைப் போன்ற கடினமான –
ஆனால் மிக மிக அவசியமான பணிகளில் ஈடுபட்டிருப்போர்
பலரும் –
தங்கள் வேலையை, வேண்டி விரும்பி, ஆசையுடன்
செய்வதில்லை.பலர் பிழைப்புக்கு வேறு வழியில்லை.
அதனால் செய்கிறார்கள். சிலர் சமுதாயத்தின் நன்மையை
கருதி செய்கிறார்கள் !
இவர்கள் அனைவரும் “ஞானி” அவர்கள் கூறுவது போல்
இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் வேலை செய்வேன்.
ஆனால் எனக்குத் தேவையான சம்பளத்தை கொடுக்க வேண்டும்
என்றால் …?
சரி – இவர்கள் எல்லாரையும் நீங்கள் ஒரு மணி நேரம்
உழைத்தால் போதும். மற்ற நேரங்களில் உங்களுக்கு
விருப்பமானதைச் செய்யுங்கள் என்று கூறுகின்றீர்கள்
என்றே வைத்துக் கொள்ளுங்கள் – பிறகு என்ன ஆகும் ?
இவர்கள் எல்லாம் ஞானி கூறுவது போல் –
இசை,
ஓவியம்,
சிற்பம்,
இலக்கியம், விளையாட்டு, கண்டுபிடிப்பு –
-போன்றவற்றிலா ஈடுபட்டிருப்பார்கள் ?
பாதி பேர் டாஸ்மாக் கடைகளில் தவம் இருப்பார்கள்.
கொஞ்சம் பேர் திரையரங்குகளில் –
கொஞ்சம் பேர் சூதாட்ட கிளப்புகளில் –
சிலர், அரசியல், ஊர்வம்பு – அடிதடிகளில் –
நிறைய பேர் தொலைக்காட்சியின் முன்னர் –
என்று பலரும் “தங்களுக்கு பிடித்த விதத்தில்”
தங்கள் நேரத்தை செலவழித்துக் கொண்டிருப்பார்கள்.
சோம்பேறி மடங்களும், சூதாட்டக்கூடங்களும் தானே
வளர்ந்து கொண்டிருக்கும் ?
இன்னும் பள்ளிக் குழந்தைகளுக்கும்,கல்லூரி காளைகளுக்கும்
இதே பார்முலா வை தந்தால் எப்படி இருக்கும் ?
கட்டிடத் தொழிலாளர்கள், சாலைப்பணியாளர்கள்,
மேம்பால இணைப்பில் உழைப்பவர்கள், அடிப்படை கட்டமைப்பு
விஸ்தரிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் –
இத்தனை பேருக்கும், இதே ஒரு மணி நேர வேலை
அனுபவத்தை கொடுத்தால் … ?
நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியனவா இத்தகைய
கருத்துக்கள் ?
வறுமையையும், சோம்பேறித்தனத்தையும்
பங்கு போட்டுக் கொள்வதிலா இருக்கிறது மகிழ்ச்சியும்,
சுதந்திரமும் ?
———————
மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட வேண்டும்.
அதற்கான பணிகளில் ஆக்க பூர்வமாக ஈடுபட வேண்டும்.
நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கையில் போய்க் குவிவதை
தடுக்க வேண்டும்.
வசதி படைத்தவர்களிடம் உள்ள செல்வத்தின் பயன்
மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும்படி திட்டங்களை
நிறைவேற்ற வேண்டும்.
குறைந்த பட்ச ஊதியத்திற்கும் –
அதிக பட்ச ஊதியத்திற்கும் –இடையே உள்ள
இடைவெளியைக் குறைக்க வேண்டுமே தவிர –
(எல்லாருக்கும் ஒரே ஊதியம் தான் –
ஞானி அவர்கள் வாங்கும் சம்பளம் தான் உங்களுக்கு
என்று கலைஞானியிடமும் (கமலஹாசன்),
இசைஞானியிடமும் (இளையராஜா) கூறினால்
ஏற்றுக் கொள்வார்களா ?
அல்லது
கலைஞானியும், இசைஞானியும் பெறும் சம்பளத்தை
எனக்கும் கொடுக்க வேண்டுமென்று –
நமது ஞானி அவர்கள் தான் கேட்க முடியுமா ?)
உழைப்பிற்கேற்ற நல்ல ஊதியம் கிட்டச் செய்ய வேண்டும்.
நல்ல உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கிட்டச் செய்ய வேண்டும்.
வேலை நேரங்கள் – சுமையாக இல்லாத அளவிற்கு
ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
பணி இடங்களில் வசதிகள் பெருக்கிக் கொடுக்கப்பட
வேண்டும். காறறோட்டமான, சுத்தமான சூழ்நிலை,
மின்விசிறிகள், இயன்ற வரை உட்கார்ந்து
வேலை செய்யும் வசதி – என்று தொழிலாளர்கள் தங்கள்
வேலையை இயன்ற அளவு சிரமம் இல்லாமல் செய்வதற்கான
சௌகரியமான சூழ்நிலையை
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தரமான மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சுலபமாக
கிடைக்கச் செய்ய வேண்டும்.
கல்வித்தந்தைகள் – ஒழிக்கப்பட்டு,
கல்வி, சுகாதாரம், உடல்நலப்பணிகள் –
முழுவதுமாக அரசின் பொறுப்பில்
கொண்டு வரப்பட வேண்டும்.
பெண்களுக்கு அவர்கள் பணி புரியும் இடங்களில்
உரிய பாதுகாப்பும், கௌரவமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவை எல்லாம் நடந்தால் …. ?
மக்கள் மகிழ்ச்சியுடன் உழைப்பார்கள்.
உழைப்பு பெருகும். தொழில் வளம் பெருகும்.
உற்பத்தித் திறன் கூடும். நாட்டின் ஒட்டு மொத்த
வளர்ச்சி பெருகும். வளர்ச்சியின் பயன் ஒரு சிலரிடம்
குவியாமல், சாதாரண மக்கள் அனைவருக்கும்
போய்ச்சேரும். அதன் பலனாக மக்களின்
வாழ்க்கைத் தரம் உயரம். வசதிகள் கூடும்.
ஆக – நாட்டின் மொத்த உற்பத்தியைப் பெருக்கினாலொழிய
நாடு வளம் பெற்றாலொழிய –
மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வசதியையும்
எப்படிப் பெருக்க முடியும் ?
இதை விட்டு விட்டு – அரசாங்க ஊழியர்களுக்கு
உள்ளது போல் -குறைந்த வேலையும் அதிக சம்பளமும்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் –
உருப்படுகின்ற வழியா இது ?
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும்
சொல்ல விரும்புகிறேன்.
இங்கு நான் கூறும் எதையும் ஞானி அவர்களின் மீதான
தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ளாமல், அவரது
கருத்துகளுக்கான எதிர்ப்பு என்று தான்
கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஞானி அவர்கள் – தான் சொன்ன கருத்துக்கள் தவறு
என்று கொள்ளப்படுமோ என்கிற ஐயத்தில் தான் –
துவக்கத்திலேயே – இத்தகைய கருத்துக்களை தனக்கு
முன்பே கார்ல் மார்க்ஸும், உள்ளூர் மார்க்ஸும்,
பாரதியும் கூட கூறி இருக்கிறார்கள் என்று பின்னூட்டத்தில்
கூறி இருக்கிறார் போலும். அவர் யாரைத் துணைக்கு
அழைத்தாலும், தான் கூறியுள்ள கருத்துக்களுக்கு
ஞானி அவர்கள் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் –
விளக்கம் அளிக்க வேண்டும்.
தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டு
யோசிப்பதால் வரும் பிரச்சினை இது என்று தோன்றுகிறது.
இத்தகைய சிந்தனைகளை உதிர்க்கும்போது, அவர்
தன்னை மட்டுமே கருத்தில் கொண்டு யோசிக்கிறார்.
பெண்கள், வயதான குடும்பஸ்தர்கள், நோயாளிகள்,
எதிர்காலக் கனவுகளோடு காத்திருக்கும் இளைஞர்கள் –
ஆகியோரின் நிலைகளில் நின்றுகொண்டு இப்படியெல்லாம்
யோசிக்க முடியுமா ? இத்தகைய கருத்துக்களைச்
சொல்ல முடியுமா ?
தன் பெற்றோர்கள், உடன்பிறந்தோர், மனைவி,
குழந்தைகள் – இவர்களுக்காக உழைப்பது தன் கடமை அல்ல-
அவரவர் பாட்டை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்
என்று ஒரு மனிதர் நினைப்பதும், அவ்வாறு மற்றவர்களையும்
நினைக்கத் தூண்டுவதும் ஆரோக்கியமான சிந்தனையா ?
தன் குடும்பத்தை நேசிக்காத ஒருவர் –
தன் குடும்பத்துக்காக உழைக்கத் தயாராக இல்லாத ஒருவர் –
எப்படி சமுதாயத்தை மட்டும் நேசிக்க முடியும் ?
உண்மையில் தங்கள் சுகத்தையும்,
சௌகரியத்தையும் பற்றி மட்டுமே அவர்கள்
கவலைப்படுகிறார்கள் –
எந்நேரமும் தங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தால்
சௌகரியமாக இருக்கும் என்றே
சிந்திக்கிறார்கள் -இது தான் பிரச்சினை !
நமது சமுதாயம் உருவான வரலாற்றை பின்னோக்கி
நோக்கினால் –
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் –
காட்டுமிராண்டி காலத்திலிருந்து,
ஆதிவாசிகளாக வேட்டையாடித் திரிந்த காலத்திலிருந்து,
ஆற்றங்கரைகளில் விவசாயம் செய்ய ஆரம்பித்து
நிலையாக ஓரிடத்தில் இருக்க ஆரம்பித்ததிலிருந்து,
குழுக் குழுவாகவும், கிராமம் கிராமமாகவும்
பண்பாட்டுக் குழுக்களாக வாழத் துவங்கியதிலிருந்து –
இன்று வரை உள்ள காலம் வரை பார்த்தால் –
மக்கள் பல்வேறு பரிசோதனைகளுக்கும்,
அனுபவங்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
ஆட்பட்ட பிறகு தான், பல்வேறு மாறுதல்களுக்கு
உட்பட்ட பிறகு தான் இருப்பதற்குள் சிறந்த ஒன்றாக –
இன்றைய “குடும்பம்” என்கிற ஒரு கலாச்சாரம்
உருவாகி – நிலை பெற்றிருக்கிறது.
கணவன்-மனைவி, அப்பா-அம்மா, அண்ணன்-தம்பி,
அத்தை-மாமன், சித்தப்பா-பெரியப்பா,
அக்காள்-தங்கை, பிள்ளைகள்-பெண்கள் என்கிற உறவுகள்
பலப்பட்டு நிலைப்பட்டு இருக்கிறது.ஒருவருக்காக ஒருவர்
கவலைப்படுவதும், உதவுவதும் ஒரு இயற்கையான
கடமையாக உருவெடுத்திருக்கிறது.
இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு உண்டாகி இருக்கிற
இந்த குடும்பச் சூழலை, பண்பாட்டுச் சூழலை –
சட்டென்று தூக்கிப் போட்டு உடைக்கிற,
தூக்கி எறிகிற ஒரு முயற்சி தமிழகத்தில் திரு ஞானி,
கமலஹாசன் போன்றவர்களால் உருவாகி இருக்கிறது.
விரும்புகிற ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ -திருமணம்
என்கிற பந்தம் ஒன்று எதற்கு என்று கேள்வி எழுப்புகின்றனர்
இவர்கள். நினைத்தபோது, நினைத்தவருடன் கூடிப்பிரிகிற
சுதந்திரத்தை ஏன் திருமணம் என்கிற சடங்கின் மூலம்
இழக்க வேண்டுமென்று கேட்கிறார்கள்.
நான் பல தடவை கமலஹாசனுக்கும் எழுதினேன் –
ஞானி அவர்களுக்கு கூட மின்-மடல் எழுதி இருக்கிறேன்.
(இவை எல்லாம் சில காலங்களுக்கு முன்னர் )
“சரி – உங்கள் கூற்றுப்படி திருமண பந்தம் வேண்டாமென்றே
வைத்துக் கொள்வோம். இதற்கு மாற்றாக உங்களிடம்
உள்ள திட்டம் என்ன ? இந்த உறவின் விளைவாகப் பிறக்கும்
குழந்தைகளுக்கு, அவற்றின் எதிர்காலத்திற்கு –
யார் பொறுப்பு ஏற்பார்கள் ?
ஆணா ? பெண்ணா ? இல்லை அரசு நடத்தும் அநாதை
இல்லங்களில் இந்த குழந்தைகளையும் சேர்த்து வளர்க்க
வேண்டுமா ? மனிதர்களுக்குள் உறவு முறைகளே
தேவை இல்லையா ?” என்று கேட்டு.
இதுவரை இதற்கு எந்தவித விளக்கமும் கிடைக்கவில்லை !
திருமணம் என்கிற சடங்கு அநாவசியம் என்று –
இருக்கிற ஒரு ஏற்பாட்டை உடைக்க முற்படுபவர்கள்,
அதற்கு மாற்றாக ஒரு ஏற்பாட்டை முன்வைக்க
வேண்டும் அல்லவா ?
இதற்கு ஏன் பதிலோ, விளக்கமோ தர மறுக்கிறார்கள் ?
இந்த வலைத்தளத்தை ஞானி அவர்கள் படிக்கிறார் என்பதை
அவரே உறுதிப்படுத்தி விட்டதால் – இப்போதாவது,
இதற்கான விளக்கத்தை அவசியம் கொடுப்பார் என்று
நம்புகிறேன்.
அவரது விளக்கம் வந்தால் தான் இந்த இடுகை
முழுமை பெறும் என்று நான் நினைக்கிறேன்.
இது குறித்து மற்ற நண்பர்களும் தங்கள் கருத்தைக்
கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



பொதுவாக தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் பிரபல்யம் என்பதற்கு நமக்கு தெரியாமல், வெளியே தெரியாத ஒரு முகம் உண்டு. இருக்கும். ஆனால் அவர்களின் வெளியே தெரிகின்ற பிம்பம் வேறு விதமாக இருக்கும்.
நீங்களும் சென்னையில் இருப்பதால் ஒரு முறை ஞாநி (ஞானி அல்ல) அவர்களை நேரில் சந்தித்துப் பாருங்கள்.
மற்றவர்களைப் போல ஒரு வட்டத்திற்குள் இருப்பவர் அல்ல. எளிதாக சந்திக்கும் நிலையில் இருப்பவர். கேணி கூட்டங்களில் ஒரு முறை கலந்து கொள்ள முயற்சிக்கவும்.
மற்றபடி இரண்டு கட்டுரைகளில் உள்ள கருத்துக்களை அவருடன் உரையாடும் போது உங்களால் இன்னமும் பல விசயங்களை புரிந்து கொள்ள முடியும்.
சொல்லும் செயலும் எண்ணமும் நோக்கமும் ஒரே மாதிரியாக போலித்தனம் எதுவும் இல்லாமல் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஞாநி அவர்கள் எனக்கு முதன்மையாக தெரிகின்றார்.
இது ஞாநி எழுதிய இந்த கட்டுரை குறித்த என்னுடைய விமர்சன கருத்தல்ல. அவரை நீங்கள் ஒரு முறை சந்திக்க வேண்டும் என்பதற்காக.
நன்றி ஜோதிஜி,
இடுகைகளின் உள்ளடக்கத்தைப் பற்றியும்
உங்கள் கருத்தோட்டத்தை வேண்டுகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஒரு பக்கம் மிகவும் உடலை வருத்தி உழைக்கும் மக்கள், இன்னொரு பக்கம் அவர்களின் உழைப்பை நோகாமல் உறிஞ்சத் தெரிந்த பிரிவினர். விரல் விட்டு என்னும் அளவில் உள்ள பணக்காரர்கள், நூறு கோடிக்கும் மேலான சனத்தின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள். இந்த பாகுபாட்டை உடைக்க வேண்டுமென்பதில் சந்தேகமேயில்லை அனால் ஒரு மணி நேர உழைப்பு எல்லோருக்கும் ஒத்து வராது.
\\விரும்புகிற ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ -திருமணம்
என்கிற பந்தம் ஒன்று எதற்கு என்று கேள்வி எழுப்புகின்றனர்
இவர்கள். \\ பொறுப்பில்லாத பேச்சு.
//உழைப்பு பெருகும். தொழில் வளம் பெருகும்.
உற்பத்தித் திறன் கூடும். நாட்டின் ஒட்டு மொத்த
வளர்ச்சி பெருகும்.//
உலகம் மாசுபடும் , காலநிலை மாறும் , நோய் நொடிகள் வளரும் நாம் வேறு கிரகத்தை நோக்கி பயணிப்போம். 🙂
//தன் குடும்பத்தை நேசிக்காத ஒருவர் –
தன் குடும்பத்துக்காக உழைக்கத் தயாராக இல்லாத ஒருவர் –
எப்படி சமுதாயத்தை மட்டும் நேசிக்க முடியும் ?//
புத்தன் ,காந்தி,ஏசு ,முகமது நபி, பாரதி, பெரியார்,அன்னை தெரசா, ஐன்ஸ்டின்,எடிசன் இவர்கள் குடும்பத்தையா நேசித்தார்கள் ?
இவர்கள் வெவ்வேறு தளத்தில் வேலை செய்தாலும் இவர்கள் விரும்பி இரவு பகலாக உழைத்தனர்.அவர்களால் நன்மை விளைந்ததா தீமை விளைந்ததா என்பது வேறு விடயம்.
கமல் கூட விரும்பியே சினிமா துறையில் உழைக்கிறார். பிணம் எரிக்கும் ஒருவர் கூட தான் விரும்பியே இதை செய்வதாக கூறி இருந்தார்.
மற்றவர்களை விடுங்கள் புத்தனையும்,வள்ளலாரையும் புரிந்துகொண்டால் நீங்களும் புத்தனாகி விடுவீர்கள்.
இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கர்ம,பக்தி,யோக,ஞான மார்க்கங்களைத்தான் இப்புவியில் பிறந்தவன் பின்பற்றியாக வேண்டும்.
இதுபடிதான் உலகம் இயங்கும் இதுவே உலக நியதி. நீங்கள் இப்பொழுது கர்ம மார்க்கத்தில் இருப்பதாக எண்ணுகிறேன்.அடுத்த நிலைக்கு வர முயலுங்கள். இதில் ஒரு சிக்கலான விடயம் ஒன்று உண்டு. ஒரு நிலையில் உள்ளவன் மற்றவர்களை முட்டாளாகத்தான் எண்ணுவான். ஒரு சிலரே அனைத்தையும் புரிந்து கொள்வர். எவ்வுயிரையும் தம்முயிர் போல எண்ணி வாழ்பவனே அவன்.
நண்பர் கா.மை,அவர்களே,
ஞாநி கூறியதை நீங்கள் அப்படியே உரை அர்த்தம (literal meaning)செய்வதால் வந்த குழப்பம் இது என நான் நினைக்கிறேன்.அவர் உழைப்பின் மகத்துவத்தையோ,முக்கியத்துவத்தையோ குறைத்து சொல்லவில்லை.உழைப்பு என்ற பேரில் இவ்வுலகில் கோடானு கோடி மக்கள் செக்கு மாடு போல உழல்வதைத்தான் சாடியுள்ளார்.
இன்று வேலை செய்யும் மக்களிடம் “உங்களுக்கு இந்த வேலை பிடித்துதான் செய்கிறீர்களா?” என்ற வினாவை எழுப்பினால் குறைந்த பட்சம் 80 விழுக்காடு “இல்லை” என்றுதான் பதிலளிப்பர்.இந்த நிலையைத்தான் ஞாநி குறை கூறுகிறார்.
செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விணகலம் அனுப்பும் திறன் கொண்ட நமக்கு நம் கிருக நரகலை அள்ள ஆள் தேவைப்படுகிறது .இது ஒரு வேலையா?
பெரிய நகரங்களில் காணப்படும் தொழிற்நுட்ப வளர்ச்சி ,சிறு நகரங்களிலோ,கிராமங்களிலோ அறவே இல்லை.இது வேலை சுமையை அதிகரித்து வர்க்க வேற்றுமையை உருவாக்குகிறது.நம் நாட்டில் இன்னும் மனிதன் முதுகுதான் மூட்டை தூக்க பயன் படுகிறது.எட்டு மணி நேரம் மூட்டை தூக்கி உழைக்கும் ஒருவன் உறிஞ்சப்படுகிறான்.அவன் உழைப்பு வீண்.ஏனெனில் அது அவன் உடல் நிலையை நிச்சயம் பின்னால் பாதிக்கும்.இதை எதிர்ப்பது உழைப்பதை எதிர்ப்பது ஆகாது.
ஆனால் ஒன்று …ஊழலும் சுயநலமும்,அதிகார துஷ்பிரயோகமும் மலிந்த நம் நாட்டில் எந்த நல்ல கருத்தும் சந்தேக கண்ணுடன் தான் நோக்கப்படும்.மேலும் “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” என்பது ஒரு ஒரு “Utopia” -பகல் கனவு.
700 கோடி பேர் உள்ள இவ்வுலகில் அது சாத்தியம் இல்லை.
பல்லக்கு இருந்தால், ஒருவனுக்கு உண்ண உணவிருக்கும். .இருவருக்கு அது சுமாரான அளவில் இருக்கும்.அதை ஒழித்து விட்டாலோ, அந்த ஒருவனுக்கு (தொடர்ந்து) உணவிருக்கும்.அந்த இருவரோ பட்டினிதான்.
நன்றி,
நண்பர் கண்பத்,
//“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” என்பது
ஒரு “Utopia” -பகல் கனவு.//
ஆனால் –
//ஓரிரு மணி நேரத்துக்கு மேல் பொருள் ஈட்டுவதற்கான
உழைப்பில் ஈடுபடும் தேவையே இருக்கக் கூடாது.
மீதி நேரங்களை மனிதர்கள் இசை,
ஓவியம், சிற்பம், இலக்கியம், விளையாட்டு, கண்டுபிடிப்பு
என்று அவரவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மட்டும்
செலவழிக்கும் வசதி வரவேண்டும்.//
-என்பது யதார்த்தம் – இதைத்தானே சொல்கிறீர்கள்
கண்பத் ?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !
நான் மேற்கண்ட இடுகையில் இரண்டாம் பகுதியில்
கூறி இருக்கும் விஷயங்களைப் பற்றியும்
உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாமே !
(விரும்புகிற ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ –
திருமணம் என்கிற பந்தம் ஒன்று எதற்கு ?)
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பர் காவிரி மைந்தனுக்கு இன்னும் சில விளக்கங்கள்:
1)உங்கள் முந்தைய பதிவில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்:
//மிக உயர்ந்த கருத்து.ஆனால் இது சாத்தியப்பட திரு ஞாநி அகில உலக சர்வாதிகாரியாக வேண்டும்.(அதாவது அவர் நம்பாத கடவுளுக்கு அடுத்த நிலை)//
இதற்கு பொருள் இது சாத்தியப்படாத பகல் கனவு என்பதே! அதை நீங்கள் எப்படி யதார்த்தம் என பொருள் கொண்டீர்கள் என விளங்கவில்லை!
2)திருமண பந்தங்களை பற்றிய கமல்/ஞாநி கருத்துக்களுக்கு நான் உங்கள் பழைய பதிவிலேயே என் கருத்தை சொல்லியிருக்கிறேன்.இப்பொழுது
அதை மீண்டும் சொல்கிறேன்.இதில் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை.
இன்னும் சூடாக சொன்னால் “அபத்தம்”.மேலும் இவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையும் எனக்கு உடன்பாடில்லை.சோ அவர்களின் பல அரசியல்/சமூக கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடில்லை.
நன்றி.
அருமை
வெறும் ஓரிரு மணி நேரங்களிலான உழைப்பு நடைமுறைக்கு ஒத்துவராது என்றே கருதுகிறேன். எட்டு மணி நேர உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால் இன்று 12, 14, 16 மணி நேரங்கள் கூட உழைக்கின்றனர். இதுமாதிரியான கடினமான உழைப்புதான் தேவையற்றது. இலக்கியம் படைக்கக்கூட அனுபவங்கள் தேவைப்படுகிறது. அதாவது ஒரு கட்டிடத் தொழிலாளி கொளுத்தும் வெயிலில் நின்று மெய்வருத்தம் பாராது பத்து மணி நேரம் உழைத்தால் அவனது அனுபவங்கள் ஒரு சிறுகதை வடிவமெடுக்கப் பெறலாம். அவன் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே பணி செய்து விட்டு சென்றால் நம்மால் இலக்கியம் பெற இயலாது என்று கருதுகிறேன்.
ஞானி என்றொரு இன்னொரு எழுத்தாளரும் உண்டு. அவரை கோவை ஞானி என்று அழைப்பர். ஆகவே ஞாநி என்று இவர் எப்படி அறியப்படுகிறாரோ அவ்வாறே அழைப்பதும் சரியானது, முறையானது.
ஞாநி அவர்களின் விருப்பம் சிறந்த ஒன்றே. மார்க்ஸ் சொன்னாரோ, பாரதி சொன்னாரோ விவேகானந்தர் சொன்னாரோ.. யார் வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் அவ்விருப்பம் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை ஏற்பதற்கில்லை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு பொருளீட்டுவதற்கு உழைப்பை (உடல் மற்றும் மூளை) செலுத்தலாம். அதே நேரம் விருப்பமில்லாவிட்டாலும் எந்நேரமும் பொருளீட்டுவதன் பின்னால் சென்று உழன்று கொண்டே இருப்பதில் என்ன நன்மை இருக்கிறது? மனிதன் அப்படி இருக்கத்தான் பிறந்தவனா?
இந்த உலகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிடாது என்று சொல்கிறார்கள். இவ்வுலகத்தில் வாழ எல்லாருக்கும் இயற்கையன்னை அள்ளி அள்ளிப் படைத்திருக்கிறாள். அவற்றை மனிதனே துவம்சம் செய்துவிட்டு முறையற்ற வகையில் நுகர்ந்துகொண்டு சக மனிதனுக்கு எதுவும் கிடைக்கவிடாமல் ஒரு சிலரே தமக்கு இயற்கையை சொந்தமாக்கிக்கொண்டு திரிகிறார்கள். கடைசியில் நாமே இதுதான் யதார்த்தம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறோம். என்ன கொடுமை இது!
இப்போதுள்ள சமுதாய அமைப்பு மனிதனை ஒரு அதீத நுகர்வோனாக மாற்றி வருகிறது என்பதை கா.மை ஏற்றுக்கொள்கிறாரா எனத் தெரியவில்லை. தேவையோ தேவையில்லையோ மனிதன் எல்லாவற்றையும் நுகர்ந்துகொண்டே இருக்கிறான். ஒரு சில இடங்களில் அளவற்றுக் குவியும் பணத்தினால் மதிப்பு மிகுந்த மனித உழைப்பு பல இடங்களில் சுரண்டப்பட்டு சக்கையாக்கப்படுகிறது. சொத்துடைமை எனும் கான்செப்ட்தான் இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாகிறது. தண்ணீர் பணமாக்கப்படுகிறது. நிலம் பணமாக்கப்படுகிறது. எல்லாமே பணமாக்கப்படுகின்றன. ஆனால் பணம் ஏதாக மாற்றப்படுகிறது? இயற்கை செல்வங்களை அதீதமாய் நுகர்வதற்கே அது பயன்படுகிறது.
தன் குடும்பத்தைக் கவனித்திராதவர்கள் சமுதாயத்தை காக்க முடியாது என்பதை முற்றுமுழுதாக ஏற்பதற்கில்லை. பகுதியாகவே ஏற்கமுடியும். சோனியா தன் குடும்பத்தை நன்கு கவனிக்கிறார். சமுதாயத்தையும் அதுபோல பாவிக்கிறார் என்று நினைக்கிறீர்களா? காமராஜர் தன் குடும்பத்தை காத்தவர் அல்ல. சமுதாயத்தில் அவரது பங்களிப்பு என்ன? குடும்பத்தையும் சமுதாயப் பங்களிப்பையும் ஒரே தட்டில் ஏந்திச் செல்வது மிகுந்த சவாலான ஒன்று. இருப்பினும் சாத்தியமாகக்கூடியதே!
முடிவாகச் சொல்வதானால், இப்போதுள்ள சமுதாய அமைப்பில் மனிதனிடமிருந்து வெளிவரும் கலைப்படைப்புகள் அனைத்தும், அறிவியல் சிந்தனைகள் அனைத்தும், மருத்துவ முன்னேற்றங்கள் அனைத்தும் பணத்தை மையமாகக் கொண்டே வெளிவருகின்றன. மூலதனத்தை பெருக்கும் நோக்கில்தான் வருகின்றன. அவனது உன்னதமான உள்ளார்வத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அல்ல.. அந்த நோக்கு ஒரு byproduct என்பது வெளிப்படை.
மிகச்சரியாக சொன்னீர்கள், ரிஷி ஸார்!
We buy things we do’nt need,
Using the money we haven’t earned
To impress those we don’t like
எனும் மேற்கோள்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
what a wonderful quote! I wonder how i missed this all these years!
இங்கு ஒருவருக்கு முற்போக்கு எழுத்தாளர் என்று யாராவது எந்த காலத்திலேயாவது முத்திரை குத்தி விட்டால், அவர் எப்போது எதை எழுதினாலும் போற்றி பாராட்ட சிலர் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். அவர் எழுதியதற்கு பதவுரை,பொருளுரை,பொழிப்புரை எல்லாவற்றையும் இவர்களே வழங்குவார்கள். ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து பெரும் துரோகம் இழைத்து எழுதி வரும் இந்த மனிதரை யாராவது ஏனென்று கேட்கிறார்களா ?இவர் என்ன ஞாநோதயம் பெற்ற புத்தரா. இவர் உதிர்ப்பவை எல்லாம் புனிதம் பெற்றவையா? இவர் கருத்து சரியல்ல என்று நீங்கள் விமரிசனம் செய்தால், நீங்கள் பிற்போக்காளர் ஆகிவிடுவீர்களா?காவிரிமைந்தன் அய்யா உங்களைப் போன்ற சிலர் இங்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.தயக்கமின்றி தொடருங்கள்.
காவிரிமைந்தன் அவர்களின் வாதங்கள் நடைமுறை சாத்தியங்களின்
அடிப்படையில் அமைந்திருக்கின்றன.
ஞாநி அவர்களின் எழுத்து கனவுலகில் மிதப்பவரின் நடக்கவொண்ணாத பேச்சாகப் படுகிறது.நமக்கு தேவை நடைமுறையா அல்லது கனவா என்பது தான் கேள்வியாக இருக்க முடியும். சமூகவியல் எழுத்தாளர்கள் சமுதாயத்திற்கு எது தேவையோ, அதைத்தான் எழுத வேண்டும். வறட்டுத்தனமான தத்துவங்களை அள்ளி வீசுவதால் யாருக்கென்ன பயன் ? “எனக்கு வேலை செய்யவே பிடிக்காது /ஒரு மணி நேரம் வேலை செய்வதே அதிகம்”என்று ஒருவர் எழுதுவதும் ஊருக்கும் அதையே உபதேசம் செய்வதும் நிச்சயமாக பாராட்டக்கூடியவையே இல்லை. இந்த
வார்த்தைகளை யாராவது தங்கள் பிள்ளைகளுக்கு கூற முடியுமா? கடினமாக உழைக்கும் மக்களின் சுமை குறைக்கப்பட வேண்டும் என்கிற வாதத்தை இப்படியா சொல்வது ?
காவிரிமைந்தன் அவர்களே- உங்கள் வாதம் எனக்குப் புரிகிறது. ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை விமரிசனம் செய்யும்போது ஏற்படக்கூடிய பாதிப்பு இது என்பது என் கருத்து/
நன்றி.
நன்றி நண்பர் ரமேஷ்,
கிட்டத்தட்ட இதுவே என் கருத்தும்.
திரு “ஞாநி” அவர்களின் விளக்கத்திற்காக
நான் காத்திருக்கிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஒரு சில மாதங்களுக்கு முன் ஆரம்ப பள்ளியில் படிக்கும் என் மகன் கேட்டான் “If home work is a work then why aren’t we paid? “. இதை இங்கே சொல்ல காரணம் உழைப்பு என்பது வயது வந்தவர்களுக்கு மட்டுமா? பொருள் ஈட்டினால் தான் அது உழைப்பா? ஐந்து முதல் எட்டு மணி நேரம் வரை பள்ளியிலும் பின் இரண்டு மூன்று மணி நேரம் வீட்டிலும் கல்வி என்ற பெயரில் கடுமையாக உழைக்கும் குழந்தைகளுக்கு ஞாநி அவர்கள்கூறும் தீர்வு என்ன? ஒரு மணி நேர கல்வியும் மற்றைய நேரம் அவர்கள் விருப்பபடி தானா (இன்றைய தேதியில் சிறுவர்களுக்கு பிடித்த இரண்டு செயல்கள் கம்ப்யூட்டர் கேம் வியாளியாடுதல், கார்டூன் பார்த்தல்).? அப்படி இல்லை எனில் நாம் மட்டும் விரும்பியபடி இருந்து விட்டு சிறார்களை மட்டும் வன்கொடுமை செய்யும் கயவர்கள் ஆகி விட மாட்டோமா?
திரு.காவிரி மைந்தன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
அன்பின் கா.மை அவர்களுக்கும், கண்பத் அவர்களுக்கும் மற்றும் இத்தள வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி ரிஷி ஸார்!
ஒரிஜினல் நரகாசுரன் அழிந்துவிட்டான்
ஆனால் ஊழல நரகாசுரன் கொழுத்துவிட்டான்
என்று கிருஷ்ணனை தேடினால்,
நாடு முழுதும்,
ராவணர்கள்,
மாரீசர்கள்,
துரியோதனாதிகள்,
இரண்யகசிபுகள்
பலர் தென்படுகிறார்களே ஒழிய,
கிருஷ்ணன் கண்ணிலேயே படவில்லையே!
அப்படி அவர் சாயலில் உள்ளவர் கூட
பரவாயில்லை என நினைத்து அவர் பின் போனால்,
அவரும் N.S.கிருஷ்ணன் ஆகவல்லவோ
இருக்கிறார்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
“தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்”
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
காவிரி மைந்தன் ஐயா மற்றும் இதை வாசிப்போர் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்.
உழை க் காமல் வாழ வே ண் டு மா ? அரசியல்வாதி ஆகவேண்டும். சரித்திர காலம் முதற்கொண்டு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருந்து வந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா ? அப்துல்கலாம்
கூறியது போல் கனவு காணுங்கள் . இதுதான் இன்றைய சூழ்நிலை.
http://en.wikipedia.org/wiki/35-hour_workweek
The 35-hour working week is a measure adopted first in France, in February 2000, under Prime Minister Lionel Jospin’s Plural Left government; it was pushed by Minister of Labour Martine Aubry. The previous legal duration of the working week was 39 hours, which had been established by François Mitterrand, also a member of the Socialist Party. The 35-hour working week was already in the Socialist Party’s 1981 electoral program, titled 110 Propositions for France.
The 35 hours was the legal standard limit, after which further working time was to be considered overtime.
The main stated objectives of the law were twofold:
>>To reduce unemployment and yield a better division of labor, in a context where some people work long hours while some others are unemployed. A 10.2% decrease in the hours extracted from each worker would, theoretically, require firms to hire correspondingly more workers, a remedy for unemployment.[citation needed]
>>To take advantage of improvements in productivity of modern society to give workers some more personal time to enhance quality of life.