ப்ளாக் மெயிலிங் என்றால் என்ன – வெள்ளை முகத்தில் (நிலக்)கரியைப் பூசுவதா ? திருமதி சோனியா காந்தியை கேட்க வேண்டும் !

நாடு உறக்கத்தில் இருந்தது உண்மை தான்.
ஆனால் எப்போதுமேயா உறங்கிக் கொண்டிருப்பார்கள் ?

நிலக்கரி ஊழலின் முடை நாற்றம் எல்லாரையும் எழுப்பி விட்டதே –
ஒரு லட்சத்து எண்பத்தையாயிரம் கோடியா – எப்படி,
எப்படி – என்று தான் அண்ணாந்து பார்த்து யோசித்து
கொண்டிருக்கிறார்கள். Comptroller and
Auditor General சொல்வது அவர்களுக்குப் புரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தால், யோசித்தால் – எப்படி
என்பது எல்லாருக்கும் புரிய ஆரம்பித்து விடும்.

முதலில் கி.மு.- கி.பி. என்பது போல், 2003க்கு முன்,
2003க்குப் பின் என்று பிரித்துக் கொள்ள வேண்டும் .
1993ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை உள்ள
காலத்தில் கொடுக்கப்பட்ட நிலக்கரி சுரங்க  உரிமங்களின்
மொத்த எண்ணிக்கை 70 மட்டுமே.

ஆனால் 2004க்கும் 2009க்குமான இடைப்பட்ட காலத்தில்
காங்கிரஸ் அரசு கொடுத்துள்ள நிலக்கரி சுரங்க உரிமங்களின்
எண்ணிக்கை 142.

காரணம் 2003க்கு முற்பட்ட காலத்தில், நிலக்கரிக்கான
தேவை உலக அளவில் மந்தமாகவே இருந்தது. உலகச்
சந்தையில் நிலக்கரி டன்னுக்கு 30-32 டாலர் அளவிலேயே
விலை இருந்தது. இந்தியாவில் நிலக்கரியின் உற்பத்திச்
செலவு கிட்டத்தட்ட 35 டாலர் அளவில் இருந்தது.
எனவே இந்திய நிலக்கரி சுரங்கங்கள் நஷ்டத்திலேயே இயங்கி
வந்தன. எனவே சும்மா கொடுத்தாலும் – நிலக்கரி
சுரங்க உரிமைகளை வாங்குவதற்கு ஆளில்லை !

2003ல் துவங்கியது சீனாவின் ராட்சதப் பசி. மிகப்பெரிய
அளவில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு, கட்டுமான வேலைகள்
காரணமாக, சீனாவிற்கு மிகப்பெரிய அளவில் நிலக்கரித் தேவை
ஏற்பட்டது. உலகெங்கும் நிலக்கரியின் விலை உயர ஆரம்பித்தது.
60, 80,100 என்று ஒரு சமயத்தில் 180 டாலர் வரை கூட
போனது. பின்னர் கிட்டத்தட்ட 105 டாலரில் விலை
நிலை கொண்டது.
இந்தியாவிலும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக,
கட்டுமான வேலைகளுக்காக சிமெண்டும், இரும்பும்,தேவைப்பட
ஆரம்பித்தது. கூடவே  பெரிய அளவில் அனல் மின் உற்பத்தி
நிலையங்களும். இவை அனைத்துக்கும் மிகப்பெரிய அளவில்
நிலக்கரி தேவை.

எனவே நிலக்கரியின் விலை  தங்கத்திற்கு ஒப்பாக உயர
ஆரம்பித்தது. நிலக்கரி சுரங்கங்களுக்கு டிமாண்ட் அதிகரித்தது.
இந்த சமயத்தில் தான், 2004-ல் காங்கிரஸ் கட்சி (UPA-1)
அதிகாரத்திற்கு வந்தது.

நிலக்கரிக்கு தேவை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்
உரிமங்களை இனாமாகத் தருவது சரி அல்ல என்றும்,
இவற்றை “பொது ஏல” முறையில் கொடுப்பது தான்
பொருத்தமாக இருக்கும் என்றும் – மீடியாவிலும்,
நிலக்கரி துறை அமைச்சகத்திலிருந்தும்,  தணிக்கை
அதிகாரிகளிடமிருந்தும் யோசனைகள் வர ஆரம்பித்தன.

விரைவில், இனாம் முறை போய் ஏல முறை வரும்
என்பதைப் புரிந்து கொண்டார்கள் ஆளும் கட்சியினர்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ
அதைச் செய்ய ஆரம்பித்தனர்.

வியாபாரம் தெரிந்தவர்கள் !
பதவிக்கு  வந்து ஐந்தே மாதங்களில்,(29/11/2004 அன்று)
நிலக்கரி சுரங்க உரிமைகளை அளிக்கும் முறையை
(procedure) மாற்றி,
புதிய விதிகளை ஏற்படுத்தினார்கள்.  ஏற்கெனவே இருந்த
கடுமையான நிபந்தனைகளை மாற்றி, விண்ணப்பங்கள்
நிலக்கரி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டாம் என்றும்
அனைத்து விண்ணப்பங்களும் ஸ்க்ரீனிங் கமிட்டிக்கு
நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

ஸ்க்ரீனிங் கமிட்டி சர்வ அதிகாரங்களும் கொண்ட கமிட்டியாக
மாற்றப்பட்டது. விண்ணப்பங்களை பெறுபவர்களும் அவர்களே.
பரிசீலிப்பவர்களும் அவர்களே. உறுதி செய்வதும், இறுதியாக
ஒப்புதல் அளிப்பதும் அவர்களே.

எந்தவிதமான checks and balances-உம் கிடையாது.

இந்த ஸ்க்ரீனிங் கமிட்டி முடிவுகளுக்கு நிலக்கரித் துறை
அமைச்சர் (அதாகப்பட்டது -மகாகனம் பொருந்திய திருவாளர்
ம.மோ.சிங் அவர்கள் !)இறுதியாக(காங்கிரஸ் தலைமை
கூறுகிற விதத்தில் தான் !) ஒப்புதல் அளிப்பார்.

ஸ்க்ரீனிங் கமிட்டியில் – நிலக்கரி துறை செயலாளரைத் தவிர,
இரும்பு, சிமெண்ட், மின்சார, சுரங்க துறை செயலாளர்களும்,
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களும்
உறுப்பினர்களாக இருப்பார்கள்.

விண்ணப்ப தாரர்களுக்கு –
ஏற்கெனவே இந்த துறையில் அனுபவம்,தகுதியும்
இருக்க வேண்டும்,
தகுந்த தொழில் முன் அனுபவமும்  வேண்டும்,
தேவையான நிதிவசதிகள் உடையவராக இருக்க வேண்டும்,
உரிமம் கொடுத்தால், உடனடியாக நிலக்கரி உற்பத்தியில்
ஈடுபடக்கூடியவராக இருக்க வேண்டும் என்று வெளியே
சொல்லிக் கொள்ள பல நிபந்தனைகள்.

ஆனால் –

உண்மையில் நடந்தது என்ன ?

அம்பானி, டாட்டா, ஜிண்டால், தவிர காங்கிரஸ்
தலைமைக்கும்  இதர முக்கிய தலைவர்களுக்கும்
வேண்டியவர்களுக்கெல்லாம் உரிமங்கள் வாரி வாரி
வழங்கப்பட்டன. இதில் பலர் காங்கிரஸ் தலைமையின்,
காங்கிரஸ் அமைச்சர்களின் பினாமிகள் !

இதைத்தான் சுஷ்மா ஸ்வராஜ் சொன்னார் –
நிலக்கரி சுரங்க ஊழலில் மன்மோகன் சிங்கிற்கு
ஒன்றும் கிடைக்கவில்லை – ஆனால்,
காங்கிரஸ் தலைமைக்கு கிடைத்தது “மோட்டா மால்”என்று.

ஸ்க்ரீனிங் கமிட்டி விதிகள் எல்லாம் காற்றில் பறக்க
விடப்பட்டன.

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு –
உரிமங்கள் பெற்றவர்களில் – குட்கா தயாரிப்பாளரும்,
சிடி,டிவிடி விற்பவரும் கூட இருப்பது இப்போது
கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது !

ஒரே நாளில் 17 கம்பெனிகளுக்கு 34 ப்ளாக்குகள்
ஸ்க்ரீனிங் கமிட்டியால் உரிமங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

விதிகளின்படி, விண்ணப்பதாரர் கமிட்டியின் முன் ஆஜராகி
தங்கள் திட்டத்தை விவரமாக விளக்க வேண்டும்.
(personal presentation). ஆனால், விண்ணப்ப
தாரரோ அவர் சார்பாக வேறு எவருமோ வராத நிலையில்
கூட 12 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிருந்த பல விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு
வந்திருந்தும், அவர்கள் ஸ்க்ரீனிங் கமிட்டியால் அழைக்கப்படவே
இல்லை. அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான
காரணங்கள் எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை !
(கப்பம் கட்டாதவர்கள் என்று எப்படி காரணம் காட்டுவது ?)

இன்ன காரணத்திற்காக விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படுகின்றன
என்கிற ஒப்பீட்டு முறை எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஸ்க்ரீனிங் கமிட்டியின் நடவடிக்கைகளை மேற்பார்வை
இடவோ, பரிசீலனை செய்யவோ, அதற்கு மேற்பட்டு எந்தவித
அமைப்பும் இல்லை.

05/02/2008 அன்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர்
சுபோத் காந்த் சகாய், பிரதமர் மன்மோகன் சிங் பெயருக்கு
ஒரு வேண்டுகோள் கடிதம் கொடுக்கிறார். அத்துடன்
இணைக்கப்பட்டுள்ள
SKS Ispat Ltd. என்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு
(கம்பெனி அவருடைய சகோதரருடையது ) இரண்டு
நிலக்கரி சுரங்க உரிமங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று.
அன்றே அந்த கடிதம் ஸ்க்ரீனிங் கமிட்டிக்கு பிரதமர்
அலுவலகத்தால் அனுப்பப்பட்டு, மறுநாளே (06/02/2008)
இரண்டு உரிமங்களுக்கான அனுமதி, ஸ்க்ரீனிங் கமிட்டியால்
அளிக்கப்படுகிறது.

(மன்மோகன் சிங்,முந்தாநாள் –  பாராளுமன்றத்திலிருந்து
வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களிடம்
அழுத்தந்திருத்தமாகச் சொல்லி அழுதார் – அனைத்து
உரிமங்களும், மிக நேர்மையான முறையில் கொடுக்கப்
பட்டிருக்கின்றன என்றும், அனைத்திற்கும் குறிப்பிட்ட
காலத்தில் நிலக்கரி அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்கிற
முறையில் தான் பொறுப்பேற்பதாகவும் ! )
சுபோத் காந்த் சகாய் விஷயம் ஒன்று போதாதா சாம்பிளுக்கு !

இதைத்தவிர, தற்போதைய (நிலக்)கரி அமைச்சர்
ஜெய்ஸ்வாலின் உறவினர்கள் 5 பேருக்கு மொத்தம்
8 ப்ளாக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்க்ரீனிங் கமிட்டி கடைசியாகக் கூடியது 2009ஆம் ஆண்டில்
தான். ஆனால், 2010லும், 2011லும் கூட சில
உரிமங்கள் (நிலக்)கரி அமைச்சரால் (நேரடியாகவே)
கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்க்ரீனிங் கமிட்டி கூடாமலே
ஒப்புதல் எப்படி கொடுக்கப்பட்டது என்று எந்த காலத்திலாவது
சிபிஐ விசாரிக்க போனால் – பைல்கள் எல்லாம் காணாமல்
போய் விடும் அல்லது அலுவலகமே தீ விபத்துக்கு
உள்ளாகி விடும் !

உரிமங்கள் கொடுக்கப்படும்போது 36 முதல் 42 மாதங்களுக்குள்
நிலக்கரி உற்பத்தி தொடங்கப்பட்டாக வேண்டும்  என்று
விதிகள் விதிக்கப்பட்டன.

ஆனால் பெரும்பாலான கம்பெனிகள் லைசென்சு வாங்கியதோடு
சரி. வேறு எந்த முனைப்பையும் காட்டவில்லை.
இதைத்தான் நிதியமைச்சர் பெருமையோடு சொன்னார்
“நிலக்கரி வெட்டி எடுக்கப்படாத வரையில், “அன்னை பூமியின்
மடியிலேயே” அது இருக்கும் வரை, அதை நஷ்டம்
என்று எப்படி சொல்ல முடியும்.எந்த வித நஷ்டமும்
கிடையாது –ஜீரோ லாஸ்” என்று.

ஆனால் பெரும்பாலான கம்பெனிகளின் ஷேர்மார்க்கெட் மதிப்பு
லைசென்சு பெற்ற உடனேயே பல மடங்கு உயர்ந்து,
அவற்றிற்கான லாபத்தை – சுரங்கம் தோண்டாமலே
அந்த கம்பெனிகள் பார்த்து விட்டன.

இத்தனை அவலங்களும் – Comptroller and Auditor
General ரிப்போர்ட்டில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றன.
அதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் இப்போது
விதிகளை மீறி கொடுக்கப்பட்டுள்ள இந்த 142 உரிமங்களை
ரத்து செய், இதற்கு பொறுப்பானவர்கள் மீது கிரிமினல்
நடவடிக்கை எடு என்று சொன்னால் –

“அன்னை” சொல்கிறார் ப்ளாக் மெயில் செய்கிறார்கள் என்று.
ப்ளாக் மெயில் என்றால் என்ன அர்த்தம் அம்மையாரே?
வெள்ளை முகத்தில் (நிலக்)கரியைப் பூசுவதா  ?
அல்லது தானே பூசிக்கொள்வதா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ப்ளாக் மெயிலிங் என்றால் என்ன – வெள்ளை முகத்தில் (நிலக்)கரியைப் பூசுவதா ? திருமதி சோனியா காந்தியை கேட்க வேண்டும் !

  1. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    நாம் என்னதான் கரடியாக கத்தினாலும் ஒன்றும் ஆகபோவதில்லை. நல்லதையே நினைக்கும் ஒரு சர்வாதிகாரி
    வரவேண்டும். அதுவரை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

  2. பாரதி's avatar பாரதி சொல்கிறார்:

    எல்லோரும் ஒரு நாள் மண்ணுக்குத்தானே போகப் போகிறார்கள். அதற்குள் ஏன் இந்த பண வெறி?

  3. ரமேஷ்'s avatar ரமேஷ் சொல்கிறார்:

    “ஜீரோ லாஸ்” நிதியமைச்சர் பற்றி ஒரு செய்தி

    இன்று தினமலரில் வந்திருப்பதை கீழே காணுங்கள் –

    “ராஜாதி ராஜ …ராஜ மார்த்தாண்ட
    அமைச்சர் பராக்….பராக்….பராக் !

    சிவகங்கைமாவட்டம், மானாமதுரை அருகே பாங்க் ஆப்
    மஹாராஷ்டிரா புதிய வங்கிக்கிளையை திறந்து வைக்க,
    மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வந்தார்.
    பிரதான சாலையிலிருந்து உள்ளே தள்ளி அமைந்திருந்த மேடைக்கு
    செல்லும் வரை, இரு புறமும் மாணவர்கள் நின்று, பூக்கள் தூவி,
    மத்திய அமைச்சரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேடையிலுள்ள ஒலிபெருக்கியில், “ராஜாதி ராஜ,
    ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க, ராஜ சிங்க, ராஜகம்பீர,
    ….மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகிறார். பராக்….பராக்…
    பராக்” என ஒருவர் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.
    அவரை வரவேற்க வரிசையாக நிறுத்தப்பட்ட மாணவர்களும்
    “ரிப்பீட்” செய்தனர். சிதம்பரம் மேடையை நெருங்கிய பிறகும்
    கூட அவர்கள் அதை நிறுத்தவில்லை. சிதம்பரம் உதவியாளர்
    ஒருவரை அழைத்து “அதான் வந்துட்டேன்ல ..போதும்.
    நிறுத்தச் சொல்லுங்க” என்றார்.

    (இதெல்லாம் எதற்காக -ஏன் இப்படி செய்கிறீர்கள்
    என்று கேட்கவில்லை ! )

    நன்றி.

    ரமேஷ்

  4. tink's avatar tink சொல்கிறார்:

    PMji
    Better you sell india to some international venture capitalists and deposite the money to your madam account.
    you are capable of doing that diligently in the name of honesty

  5. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    கோல்கேட் பற்றி நண்பர் கா.மை அருமையாக விவரித்த பின் அதில் சேர்த்திட அதிகமில்லை.ஆனால் “சிலநேரங்களில் சில மனிதர்கள்” நடந்து கொள்ளும் விதம விநோதமாக உள்ளது.

    மன்மோகன் சிங்:
    “I am the PM and have Madam Sonia’s permission to say so” என்ற வாசகம் தாங்கிய அட்டையை கழுத்தில் தொங்கவிட்டபடி கடந்த எட்டு ஆண்டுகளாக குப்பைக்கொண்டிருப்பவர்.தமிழ் திரையில் சிறந்த நகைச்சுவை நடிகர் நாகேஷா,குமரிமுத்துவா என்ற விவாதத்தில் கூட ஒருமுனைப்படாத தமிழக (இந்திய) மக்களை,சுதந்திர இந்தியாவின் மிக உபயோகமற்ற பிரதமர் எனும் கருத்தை நூறு சதவிகிதம் அங்கீகரிக்க செய்து தேச ஒற்றுமையை வளர்த்தவர்.
    CAG யின் நானூறு பக்க அறிக்கைக்குப் பதிலாக “அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை” என்ற மூன்றுவார்த்தை விளக்கம் போதும் என நினைக்கும் அதி புத்திசாலி.”எத்தனை அடித்தாலும் தாங்கராண்டா;இவன் நல்லவன்டா” எனும் வடிவேலுவின் காமெடி காட்சியை மெய்யாக்கியவர்.ஒய்வு பெற்றதும் “நான்: பிரதமர்” எனும் புத்தகத்தை பிரசுரிக்கப்போகிறார் எனக் கேள்வி.அது மாணவர்களுக்கு ஒரு நல்ல நோட்டுப்புத்தகமாக பயன்படும்.;-)

    சோனியா:
    “சோனியா! சோனியா!! சொக்கவைக்கும் சோனியா! ஊழலில் நீ எந்த வகை கூறு?ஊழலிலே ரெண்டு வகை ;2G உண்டு கரி உண்டு “என்று மக்கள் பாட “சில நாள் 2G உண்டு;சில நாள் நிலக்கரி உண்டு;உன் தேவையை எடுத்துக்கொண்டு;சும்மா இருப்பது நன்று” என்று பதில் சொல்லாமல் BJP யை எதிர்க்க சொல்லி தன் சோப்ளாங்கி சேனைக்கு வீர உரையாற்றும் அற்புத அன்னை.”மக்கள் என்னய ரொம்ப திட்டாரங்கம்மா”எனக் குமுறும் பிரதமரை “இன்னும் கொஞ்ச நாளில் ராகு காலத்தை பிரதமராக்கியவுடன் பாருங்கள்.உங்களை எப்படி புகழப்போகிறார்கள் என்று!” : என தேறுதல் கூறுபவர்.

    ப.சி:
    எத்தனை பணம் அடித்தாலும் அடங்காத பசி இவருக்கு.ஒன்றுமில்லை என்பதும் ஸீரோ என்பதும் ஒன்றுதான் என்று அறியா நிதி மந்திரி.(நஷ்டம் ஒன்றுமில்லை என்றுதான் சொன்னேன்;ஸீரோ லாஸ் என்று சொல்லவில்லை!)
    முன்னாள் நிதிமந்திரி சரியாக வேலை செய்யவில்லை என அவரை ஜனாதிபதி ஆக்கிவிட்டு,அவரிடத்திற்கு சரியாக வேலை செய்யாத உள்துறை மந்திரியை கொணர்ந்து ,அந்த இடத்திற்கு சரியாக வேலை செய்யாத மின்துறை மந்திரியை
    கொணர்ந்த அன்னையின் “அறிவுபூர்வமான ” செயலால் நிதி மந்திரி ஆனவர்.
    இவருக்கும் நீதிக்கும் வெகு தூரம் என்பது நாம் அறிந்ததே.இனி அறியப்போவது: இவருக்கும் நிதிக்கும் அதைவிட அதிக தூரம் என்று!

    கபில் சிபல்(Kapil Sibal):
    நம் அறிந்த சைபால் புண்களை குணப்படுத்தும்.இந்த Sibal புண்களை ஏற்படுத்தும்.முழு யானையை ஒரு பானைக்குள் அடைக்கவேண்டுமா ? இதோ இருக்கிறார் நம் சிபல்.பொய்யிற்புலவர்.ஒரு நாட்டில் ஜனநாயகத்தால் வரும் ஆபத்துகளுக்கு ஒரு உதாரணம்.

    அத்வானி:
    பெரிய ஊழலை எதிர்ப்பதில் வல்லவர் ஆனால் சிறிய ஊழல்களை அடக்கத்தெரியாதவர்.மடியில் எட்யூரப்பா என்ற பூனையைக்கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பவர்.

    ஜெயா,சந்திரபாபு நாயுடு,ஜகன் மோகன் ஏனைய கறை படியா தலைவர்கள்:
    அடுத்த “ஆட்ட”த்திற்கு “ஆவலு”டன் காத்திருப்பவர்கள்.

    நான்,இந்தியன்:
    “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!அம்மம்மா பூமியிலே யாரும் வஞ்சம்!” எனும் பாடலை நம் தேசிய கீதமாக்க விரும்பும் ஒரு அப்பாவி.

    காவிரிமைந்தன்…
    தன் முயற்சியில் சற்றும் மனதளராமல் வேதாளத்தை சுமக்கும் ….. விக்கிரமாதித்தன்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.