“ரன் அண்ட் ஜம்ப் – ஆர் ஐ வில் த்ரோ யு இன் வாட்டர்” – பாவம் என்ன செய்வார்கள் சிறுவர்கள் .. ?

8 வயது சிறுவர்- சிறுமியர்.
இரண்டாம் வகுப்பு கல்வி ஆண்டின் கடைசி 2 வாரங்கள்.
15 நாட்கள்(வார விடுமுறைகளை கழித்து) பயிற்சி.
அதற்கு தனியே கட்டணம் -750 ரூபாய்.
ஒரு பயிற்சியாளர் – 2 உதவியாளர்கள்.
35 சிறுவர்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடத்தில் இத்தனை
பேருக்கும் பயிற்சி –

என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும் ?
தண்ணீரின் பயமே போயிருக்காதே.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன் –
நீச்சல் வகுப்பு கட்டாயம் (compulsory).
ஒரு வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்
மெடிகல் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும்.

பயந்து நடுங்கிக் கொண்டே தான் நீச்சல் வகுப்பிற்கு
போகிறார்கள் பெரும்பாலான சிறுவர்கள்.

நீச்சல் குளம் ஒரு பக்கம் (shallow) மூன்றரை அடி
ஆழத்தில் ஆரம்பித்து அடுத்த பக்கத்தில(deep) ஏழரை அடி
ஆழத்தில் முடிகிறது. இந்த வயதில் – சிறுவர்களின் உயரமே
மூன்றரை அடியிலிருந்து நான்கு அடிக்குள் தான்.

shallow பக்கமாக இறங்கும்போதே அவர்களுக்கு பயமாக
இருக்கிறது. ஒன்றிரண்டு மாதங்கள் shallow வில் பழக
விடுகிறார்கள். பின்னர் shallow விலிருந்து deep க்கு
போகச் சொல்கிறார்கள். சில சிறுவர்கள் இதில்
ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள்.( அவர்கள் வெளியே
நட்சத்திர ஓட்டல்களில், பெற்றோர்கள் துணையுடன்
ஏற்கெனவே நீச்சல் பழகியவர்கள் !) பெரும்பாலான  
குழந்தைகள் நடுங்குகிறார்கள்.

மறுநாள் நீச்சல் வகுப்பு இருக்கிறதென்றால் – முதல் நாளே
வீட்டில் அழத்துவங்கி விடுகிறார்கள். துவக்கத்தில்
பெற்றோர்கள் கொஞ்சம் ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால்,
நாளாவட்டத்தில் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை.
(தன் குழந்தை மற்றவர்களை விட மட்டமாகி விடுவானே
என்கிற ஈகோ ஒரு பக்கம் – பள்ளியில் சென்று எப்படி
கேட்பது என்கிற தயக்கம் இன்னொரு பக்கம் )
விளைவு –
குழந்தைகள் பயங்கர டென்ஷனுடன் நீச்சல் வகுப்பிற்கு
போகிறார்கள். 8 வயது குழந்தை வேறு என்ன செய்ய
முடியும் ?

இன்னும் சில நாட்களில் – deep பக்கத்திலிருந்து
ஜம்ப் பண்ணச் சொல்கிறார்கள். பயப்படும் சிறுவர்களை
நீயாக குதிக்கிறாயா அல்லது நான் தள்ளி விடட்டுமா
என்று மிரட்டுகிறார்கள் பயிற்சியாளர்கள்.
(quick – Run and jump –
OR I will throw you in water).

deep-ல் குதிக்கும் சிறுவர்கள் ஏழரை அடி ஆழத்தில்
மிதக்கத் தெரியாமல் உள்ளே போய் விடுகிறார்கள்.
சில விநாடிகள் மூச்சுத் திணறி, திக்கு முக்காடித்
திணறுகிறார்கள். சில குழந்தைகள் அதன் பின்னர்
எப்படியோ சமாளித்துக் கொண்டு மேலே வந்து விடுகிறார்கள்.
பலர் உள்ளேயே திணறுகிறார்கள்.

கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்து விட்டு, அவர்களால்
மேலே வர முடியவில்லை என்றால், வெளியிலிருந்து
அந்த குழந்தையின் அருகே ஒரு குச்சியை நீட்டுகிறார்
பயிற்சியாளர்.( பெரும்பாலும் பயிற்சியாளர் தண்ணீரில்
இறங்குவதே இல்லை – தண்ணீரிலேயே இருந்தால்
தோல் கறுத்து விடுமாம் !)
தட்டுத் தடுமாறி அதை பிடித்துக் கொள்கிறது
அந்த குழந்தை. பயிற்சியாளர் கூறுகிறார் – “4 தடவை
திணறினால் தானாக வெளியே வரத் தெரிந்து விடும் “!

பொதுவாகவே சாப்பிட்டவுடன் நீச்சல் பண்ணக்கூடாது –
இது அடிப்படை விஷயம். காலையில் அவசர அவசரமாக
டிபன் சாப்பிட்டு விட்டு ஓடி வரும் குழந்தைகளுக்கு
முதல் வகுப்பே நீச்சல் – இது தவறு என்று எப்படி யாருக்கும்
தோன்றவில்லை ?

CBSC சிலபஸிலும் சரி மாநில சிலபஸிலும் சரி –
நீச்சல் பயிற்சி கட்டாயம் கிடையாது.
பின் ஏன் வற்புறுத்துகிறார்கள் ?
வருமானம் !

பேராசை கொண்ட பள்ளி உரிமையாளர்கள் செய்தது –
செய்வது மிகப் பெரிய பாவம். காசு பண்ணுவதைக் கூட
பொறுத்துக் கொள்ளலாம். அறியாத வயதுச் சிறுவர்களை
இப்படி சித்ரவதை பண்ணுகிறார்களே –
இவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் –
இரவில் படுத்தால் தூக்கம் வராது. அநியாயமாக
செத்துப்போன அந்தச் சிறுவனின் பால் மணம் மாறாத
முகம் தான் நினைவிற்கு வரும்.

ஏற்கெனவே கோடி கோடியாகச்
சேர்த்த – பணம் இருக்கலாம்.
பத்திரிகைகளை விலைக்கு வாங்கி விடலாம்.
பதவிக்கு அருகாமையில் இருக்கலாம்.
இன்று தண்டனையிலிருந்து தப்பி விடலாம்.
ஆனால் – இறுதி நாளில் ஒருவனுக்கு பதில்
சொல்ல வேண்டி இருக்கும். அவனை  விலை
கொடுத்து வாங்க முடியாது ! அவன் கொடுக்கும்
தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது.

பெற்றோர்களுக்கும் ஒன்று சொல்வேன். உங்களுக்கு
உங்கள் குழந்தைகள் முக்கியமா “பெத்த பள்ளி”யில்
படிக்கிறான்  என்கிற பெருமை முக்கியமா ?
கார்பரேஷன் பள்ளியில் படிக்கிற குழந்தைகளுக்கு
இன்று கிடைக்கும் பாதுகாப்பும், வசதியும்,
சந்தோஷமும் கூட இந்த பள்ளியில் படிக்கும்
குழந்தைகளுக்கு கிடையாது என்பதை உணருங்கள்.

உங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் பள்ளியை
கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.
எதற்காக கட்டாய நீச்சல் பயிற்சி ?
சிலபஸில் இல்லாததை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்
என்று கேள்வி எழுப்புங்கள். உங்கள் உரிமையை
நிலை நாட்டுங்கள்.

மிஞ்சி இருக்கும் குழந்தைகளாவது நிம்மதியாக
பள்ளிக்குச் செல்லட்டும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to “ரன் அண்ட் ஜம்ப் – ஆர் ஐ வில் த்ரோ யு இன் வாட்டர்” – பாவம் என்ன செய்வார்கள் சிறுவர்கள் .. ?

  1. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    நீங்கள் ஒருவராவது இதைப்பற்றி எழுதியதற்கு

    நன்றி.
    முதலில் வந்த செய்தியில் நீச்சல் வகுப்பு முடிந்து வெளியே
    வந்த பிறகு எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது கண்டு
    மீண்டும் சென்ரு பார்த்தபோது பையன் நீச்சல் குளத்துக்குள்
    மூழ்கிக் கிடந்ததை பார்த்தார்கள் என்று சொல்லப்பட்டது.
    அடுத்ததாக பையனுக்கு நீஞ்சும்போது வலிப்பு வந்து விட்டது
    என்று சொன்னார்கள். பிற்பாடு பையனுக்கு கையில் ஏதோ
    காயம் இருந்ததால் பைப்பை பிடித்துக் கொண்டு ஏற முடியவில்லை
    என்று சொன்னார்கள். அதற்கும் பின்னர் பரப்பிய செய்தியில்,
    பையன் இரண்டு முறையும் நிறைய தண்ணீர் குடித்து விட்டான். மூன்றாவது முறை போகும்போது மூச்சு திணறி மூழ்கி விட்டான்
    என்று செய்தி பரப்பினார்கள். இது வரை பள்ளியின் தரப்பிலிருந்து
    எந்த காரணத்தால் இந்த விபத்து நேர்ந்தது என்று இன்னும்
    சொல்லப்படவில்லை.
    நீங்கள் சொன்னது மிகவும் சரி-தெய்வம் நின்று கேட்கும்.அப்போது
    பதில் சொல்லித்தானாக வேண்டும்.
    இதைப்பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி காவிரிமைந்தன்.

  2. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    19 -8 -2012 -தேதிய தினமலர் வாரமலர் பக்கம் 6 –இல் சீனாவின் சித்திரவதை கூடங்கள் என்ற தலைப்பில் ஒலிம்பிக்
    வெற்றியின் பதற வைக்கும் பின்னணி என்ற கட்டுரையை படித்துப்பாருங்கள் பின்னர் அதில் உள்ள படங்களை பாருங்கள். நம் கண்ணில் நீர்வடியும். ஒலிம்பிக்கில் தங்க மெடல் பெறுவதற்காக ஆரம்ப பாடசாலையில் படிக்கும் சிறார்களை கொண்டுபோய் பயிற்சி என்ற பேரில் சித்திரவதை செய்து போட்டிக்கு அனுப்பி மெடல் வாங்குகிறார்கள்.
    இப்படியும் உலக அரங்கில் பரிசு வாங்கித்தான் ஆக வேண்டுமா? இந்த கட்டுரையை பள்ளி நிர்வாகிகள் படிக்க
    நேர்ந்தால் நீச்சல் வகுப்பை நிறுத்தி விடுவார்கள். அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் படித்தால்
    பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தி விடுவார்கள்.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மிகத் தேவையான பதிவு.நன்றி நண்பர் கா.மை.

    ஐந்து வயது சிறுவன் முதுகில் ,
    பத்து கிலோ புத்தகங்களை ஏற்றி,,
    பதினைந்து பேர்களுடன் ஆட்டோவில் திணித்து,
    இருபது பாடங்களை மனப்பாடம் செய்யவைத்து,,
    இருபத்தைந்து பரிட்சைகள் எழுதவைத்து,,போதாகுறைக்கு,
    முப்பது மாணவர்களுடன் தண்ணீரில் தள்ளிவிட்டு,
    முப்பத்தைந்து மாணவர்கள் உள்ள வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்
    என மூளைச் சலவை செய்து,அவன் குழந்தை பருவத்தை குட்டிசுவராக்குவது,
    நாற்பது வயதில் அவன் நாலு லட்சம் சம்பாதிக்கவாம்!!
    வயதில் முப்பதும்,அறிவில் ஐந்தும் ஆன இவன் பெற்றோர்
    சொல்கின்றன(ர்).

  4. சிவா's avatar சிவா சொல்கிறார்:

    இந்த செய்தி வந்த பொழுது (அல்லது) வந்த பிறகாவது பெற்றோர்கள் ஒரு சினிமாவின் பகுதியை மீண்டும் பார்க்க வேண்டும். அது “அபியும் நானும்” திரைப்படத்தில், பள்ளிகூட நேர்காணல். பள்ளி முதல்வர் குழந்தைக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்பார், அதற்கு பிரகாஷ்ராஜ் “அவ இப்போ தான் நடக்கவே தொடங்கிருக்கா என்று சொல்வார். இதை கேட்ட நொடியில் சிரிக்க தோன்றும், ஆனால் இது இந்த கால பெற்றோர்களுக்கு (முக்கியமாக ஈகோ காரணமாகவோ அல்லது சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ பெரிய பள்ளிகூடங்களில் சேர்க்க முண்டி அடிக்கும்) இயக்குனர் கொடுக்கும் சாட்டை அடி

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    consumer rights எனும் நுகர்வோர் பாதுகாப்பில் கல்வித்துறையை கண்டிப்பாக கொண்டுவரவேண்டும். அப்போதுதான் இவர்களின் இந்த கல்வி வியாபாரத்தில் நம் உரிமைகளை பாதுகாக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தான் பேருந்து ஓட்டையிலிருந்து விழுதல்/நீச்சல் குளத்தில் மூழ்குதல் அல்லது கல்வித்தந்தை/தாய்களிடமிருந்து நம் பிள்ளைகளை காக்க முடியும்.

  6. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    //இன்று தண்டனையிலிருந்து தப்பி விடலாம்.
    ஆனால் – இறுதி நாளில் ஒருவனுக்கு பதில்
    சொல்ல வேண்டி இருக்கும். அவனை விலை
    கொடுத்து வாங்க முடியாது ! அவன் கொடுக்கும்
    தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது.//

    உண்மை. உண்மை. 100 % உண்மை. அதற்கும் கூட இந்த ஜென்மங்கள் பரிகாரங்கள், சாந்தி, ஹோம, அன்னதானங்கள் செய்து பாவத்திலிருந்து, கடவுளின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணி முயற்சிகள் செய்யும். அப்படி முயற்சிகள் செய்வோரையும் நாம் பார்த்து வருகிறோம்.

    இவர்கள் அறிவதில்லை; அவையெல்லாம் ஒருக்காலும் பலன் தாராது என்பதை. இவர்கள் மட்டுமல்ல; இந்த மாதிரி படுபாதகச் செயல்களைச் செய்வதால் அவர்கள் குடும்பமும் சேர்ந்து பாதிக்கும் என்பதை ஏனோ உணர்வதில்லை.

    தெய்வம், நிச்சயம் நின்று கொல்லும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.