கீழே காண்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில்
சுதந்திர தினத்தன்று சுதந்திரத்தை கொண்டாட கூடிய டீம் !
டீம் லீடர் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் !
சிப்பாய்கள் (!) காந்தி தொப்பியுடன் வரவேற்பு
கொடுக்கின்றனர் !
இந்த மாபெரும் தேசத்தின் இன்றைய மகோன்னத நிலைக்கு
காரணமாக இருக்கும் டீம் லீடருக்கும் டீமுக்கும் நம் சல்யூட் !
(சில முக்கிய மெம்பர்கள் – மிஸ்ஸிங்.
நம் சல்யூட் அவர்களுக்கும் சேர்த்து தான் !!)
பகுதி-2
இப்போது தான் படித்தேன் – தினமணி நாளிதழின் ஆசிரியர்
திரு கே.வைத்தியநாதன் அவர்கள் சுதந்திர தினத்தை
முன்னிட்டு 15/08/2012 அன்று திருப்பூரில் நிகழ்த்திய
உரை !
இதை அனைவரும் படிக்க வேண்டும் என்று தோன்றியது –
இந்த இடுகையிலேயே போடுவது இன்னும் பொருத்தமாக
இருக்கும் என்று தோன்றியது. எனவே கீழே தருகிறேன்.
—————–
இந்தியாவில் ஊழல் மலிந்திருக்கிறது, நிர்வாகம் சரிவர
நடக்கவில்லை. 65 ஆண்டுகளாகியும் ஒருவேளை கஞ்சிக்கு
வழியில்லாத மக்கள் தெருவோரங்களில் வசிக்கின்ற நிலை
தொடர்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
பிறகு எதற்காக நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்
என்று கேட்கலாம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய
முடியும். சுதந்திரம் இருந்தால்தானே இந்த நிலைமைகளுக்கு
நாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால்தான்
அடையாளமாக இருந்தாலும்கூட ஆரவாரமாக சுதந்திர
தினத்தைக் கொண்டாடியாக வேண்டும்.
ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய உரைகள் இரண்டு
உண்டு. எல்லா பள்ளிகளிலும் இவை பாடமாக வைக்கப்பட
வேண்டும். முதலாவது உரை, இந்தியா சுதந்திரம் பெற்ற
அந்த நள்ளிரவு வேளையில், அன்றைய பாரதப் பிரதமர்
பண்டித ஜவஹர்லால் நேரு, நாடாளுமன்றத்தில் ஆற்றிய
“விதியுடனான நமது போராட்டம்’ என்று தொடங்கும் உரை.
மற்றொன்று, அன்றைய சட்ட அமைச்சராக இருந்த பாபா
சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியல்
சட்டத்தை முன்மொழிந்து அரசியல் நிர்ணய சபையில்
ஆற்றிய நிறைவுரை.
“உலகிலுள்ள எல்லா அரசியல் சட்டங்களையும் அலசி
ஆராய்ந்து, அவற்றின் நல்ல அம்சங்களை எல்லாம்
தேர்ந்தெடுத்துத் தொகுத்து நாங்கள் இந்த அரசியல்
சாசனத்தை சுதந்திர இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறோம்.
இனிமேல் இந்தியாவை வழிநடத்தப் போவது இதுதான்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவேளை இந்த அரசியல்
சாசனம் எதிர்பார்த்த பலனை அளிக்காவிட்டால் –
எங்களைக் குறை கூறாதீர்கள். அது இந்த அரசியல்
சாசனத்தை செயல்படுத்திய அயோக்கியர்களின்
தவறாகத்தான் இருக்க முடியும்!” என்பதுதான்
டாக்டர் அம்பேத்கர் சொன்ன கருத்து.
அதுதான் நடந்திருக்கிறது. அப்படி ஏன் நடந்தது
என்று யோசித்துப் பார்த்தால், தவறு ஆட்சியாளர்களிடம்
மட்டும் இல்லை, நம்மிடமும் இருக்கிறது. நாம்
இன்னும் காலனிய ஜமீன்தாரி அடிமைத்தன
மனோபாவத்திலிருந்து விடுபடாமல் இருப்பதும்,
அரசும், ஆட்சியும், நிர்வாகமும் நம்முடையது என்கிற
எண்ணம் நம்மில் யாருக்குமே இல்லாமல் இருப்பதும்தான்
அதற்குக் காரணம்.
வட்டாட்சியர் அலுவலகமாக இருந்தாலும் சரி,
மாவட்ட ஆட்சியர் அலுவலகமானாலும் சரி, தலைமைச்
செயலகமானாலும் சரி, பிரதமர் அலுவலகமே ஆனாலும் சரி,
அது சராசரி இந்தியக் குடிமகனுக்கு சேவை புரிவதற்காகத்தான்
என்பதை நாம் உணரவில்லையே?
அந்த உரிமையைத் துணிந்து கேட்டுப் பெறத்
தயாராக இல்லையே.
தவறுகளைத் தட்டிக் கேட்கும் மனோபாவம்
நம்மிடையே இல்லையே?
அதுதான் சுதந்திரம் முறையாகச் செயல்படாமல்
இருப்பதற்குக் காரணம்.
பிரிட்டிஷார் ஆட்சியில், அந்நியர்களின் காலனியாக
இந்தியா இருந்தபோது, அதை எதிர்த்துப் போராடப் பல
சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள். ஆனால்,
ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை உள்ள சுதந்திர
இந்தியாவில் தவறுகளைத் தட்டிக் கேட்க யாருக்கும்
தைரியம் இல்லை. இன்னும் பஞ்சாயத்து உறுப்பினர்களைக்
கூடத் “தலைவா’ என்றழைத்துத் தலைவணங்கத்
தலைப்படுகிறோமே தவிர, நமக்காகப் பணியாற்றும்
சேவகர்கள்தான் அவர்கள் என்று உணர மறுக்கிறோமே,
அதனால்தான் 65 ஆண்டுகளாகியும் சுதந்திரம்
எந்தவித பலனையும் தராமல் இருக்கிறது.
நாம் வசிக்கும் தெருவில் யாரும் பட்டினியுடன் தூங்காமல்
பார்த்துக் கொண்டால், நமது வீட்டில் பொங்கல்,
தீபாவளி என்று கொண்டாடும்போது செலவோடு செலவாக
ஏதாவது ஒரு ஓலைக் குடிசையில் வாழும் குடும்பத்தின்
கொண்டாட்டச் செலவையும் ஏற்றுக் கொண்டால்,
நமது பகுதியில் இருக்கும் அரசு அலுவலகமோ,
காவல் நிலையமோ, பள்ளிக்கூடமோ உடைந்த நாற்காலியும்,
ஆவணங்களையும் அடுக்கி வைக்க அலமாரி இல்லாமலும்
இருப்பதை அந்தப் பகுதியில் வாழும் மக்களே மாற்ற
முன்வந்தால், நமக்காக அரசு, நமக்காக நிர்வாகம்
என்பதைப் புரிந்து கொண்டு விட்டால், காலனிய
அடிமைத்தன மனோநிலையிலிருந்து மீளத் தலைப்பட்டால்,
அப்போதுதான் சுதந்திரம் செயல்படத் தொடங்கும்.
சுதந்திர தினத்தைத் கொண்டாடுவதன்மூலம் சுதந்திர
அடையாளத்தை நாம் பாதுகாக்கிறோம். ஆனால்,
சுதந்திரத்தின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படும்போது
தான் சுதந்திரத்தின் பலனை நாம் அடைய முடியும்”
(நன்றி – திரு கே.வைத்தியநாதன் அவர்களுக்கு )




காவிரிமைந்தன் சார் –
சீரியஸ் இடுகைல ஜோக் கடிக்கறதுக்கு மன்னிச்சுக்குங்க.
அந்த மன்மோகன் சிங்ஜியின் தலையிலும் ஒரு
காந்தி குல்லா போட முடியாதா ? போட்டா எப்படி இருக்கும் ?
இந்தியனுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க இன்னும் 50 –ஆண்டுகள் ஆகும். காரணம் 1 — நமக்கு சுதந்திரம் பெற்று தந்த உண்மையான தியாகிகள் நிறைந்த காங்கரஸ் கட்சி இப்போது இல்லை. 2 –பிரிந்து சென்ற பல்வேறு காங்கிரசில் ஒன்றுதான் இப்போது ஆட்சி யில் உள்ளது. அதுவும் பலமற்ற மற்றவர்கள் தாங்கி பிடிக்கும் கட்சியாகத்தான் உள்ளது. 3 –நம் ஆட்சி நடக்கிறது எனவே நமக்கு போகத்தான் மீதம் இருப்பது ஒட்டு போட்டவர்களுக்கு என்ற நிலை உள்ளது. 4 –ஒட்டு போடுபவர்களும் விலைக்குத்தான் விற்கிறார்கள். 5 –சேவை
மனப்பான்மை பொதுமக்களிடம் குறைந்து விட்டது 6 –நாட்டில் ஜனநாயகம் என்ற பேரில் பல்வேறுகட்சிகள் என்ற நிலையை மாற்றி இரண்டு கட்சிகள் என்ற (ஆளும் கட்சி, எதிர் கட்சி ) முறை வரவேண்டும். 7 –மாமேதை அம்பேத்கர் கூறியுள்ளதை போல் அரசியல் முறையாக செயல்படுத்த படவில்லை. 8 — வெற்றி பெற்ற வேட்பாளர்களை திரும்ப பெறும் அதிகாரம் பொதுமக்களுக்கு அளிக்கப்படவேண்டும். 9 – பொதுமக்களும் எனது நாடு என்ற உணர்வுடன் செயல்பட பழகி கொள்ளவேண்டும். 10 – ஊழலில் ஈடுபடும் நபர்களை தைரியமாக காட்டி கொடுக்கும் மனப்பான்மை வரவேண்டும். 11 — இளைஞ்சர்கள் நாட்டு நலனில் ஈடுபடவேண்டும்.
திரு.வைத்தியநாதனின் உரையை இடுகையில் இட்டமைக்கு
நன்றி.
இன்றைய வேளையில் நமக்கு எந்த மாதிரியான செயல்பாடுகள்
தேவை என்பதை சொன்னது திரு.வைத்தியநாதன் ஐயர்; அவர்
“இனமணி”யின் ஆசிரியர் என பகுத்தறிவு கொண்டு பாகுபடுத்திப்
பாராமல் வாசித்தமைக்கும்,வாசிக்க வைத்தமைக்கும் எனது
சிறப்பு நன்றி.
காங்கிரஸ் தலைமை ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்றும்,
குடியரசு தினத்தன்றும் சம்பிரதாய முறையில் (customary party
on the eve of…) கொண்டாடும் வைபவத்திற்கும், அதில் பங்கேற்ற
மஹானுபாவர்களுக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும்
குடியரசுக்கும் யாதொரு தொடர்பு இல்லை.
பிசாசை மணந்து கொண்ட பின், என் மாமியார் பேய் என புலம்பி
ஆகப் போவது என்ன?
திரு வெங்கடரமணி,
//அவர்
“இனமணி”யின் ஆசிரியர் என பகுத்தறிவு கொண்டு பாகுபடுத்திப்
பாராமல் வாசித்தமைக்கும்,வாசிக்க வைத்தமைக்கும் எனது
சிறப்பு நன்றி.//
நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என எனக்குப்புரியவில்லை.
நண்பர் காவிரிமைந்தனை குறித்து மேற்கண்ட கருத்தை நீங்கள் சொல்லியிருந்தால்,அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.உங்களின் இந்த கருத்து அபாண்டமானது,முற்றிலும் தவறானது என்ற என் கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.
நண்பர் கண்பத்,
எனது நோக்கம் நண்பர் கா.மை மீது அபாண்டமான
குற்றச்சாட்டினை வைப்பதல்ல. எனது பின்னூட்டம் தவறான
பொருள் அளிக்குமேயானால், அதற்காக வருந்துகிறேன்.
***
நான் பெரிதும் விரும்பி வாசிக்கும் பிளாக் நண்பர் கா.மை-
னுடையது.
அவர், தனது ஓய்வு காலத்தை தனக்கும் பிறர்க்கும்
உபயோகமான விதத்தில் கழிக்கிறார் என்பது அவர் கையாளும்
விஷயங்களைக் கொண்டே அறியமுடியும். விஷயங்களை
in depth ஆகவும் detail ஆகவும் தருகிறார். அவரது பிளாக்-ல்
இருந்து தெரிந்து கொண்டது அதிகம். அபாண்டமாக
குற்றம் சொல்லும் வகையில் இருவருக்குமிடையே யாதொரு
பிரச்சனையும் இல்லை. நன்றி.
***
உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.!உங்கள் இடுகையை
தவறாக புரிந்துகொண்டதிற்கு வருந்துகிறேன்.தயவு செய்து
மன்னிக்கவும்.
நண்பர்களே,
பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதோர் பற்றிய
பரஸ்பர குற்றச்சாட்டுகள் என்னும் மாயவலையில்
இந்த வலை சிக்க வேண்டாம் என்று
வேண்டுகோள் வைக்கிறேன்.
என்னுடைய நோக்கில் -இந்த வகை குற்றச்சாட்டுக்களுக்கும்,
விவாதங்களுக்கும் முடிவே கிடையாது.
இரு தரப்பினரும் அவரவர் பக்கம் உள்ள சார்பு கருத்துக்களை
சொல்லிக் கொண்டே இருப்பதில் தான் இது தொடரும்.
இதனால் எந்த உருப்படியான பலனும் விளையப்போவதில்லை.
முடிவில்லாத இந்த வாதத்தில் நாம் சிக்க வேண்டாம்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய நோக்கம்,ஆசை, லட்சியம் எல்லாம் –
“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்”என்பது.
அந்த நோக்கம் நிறைவேறும்போது –
ஜாதிப் பிரிவினைகள் பொருளற்றதாகி விடும்.
ஜாதிகளைப் பற்றி இங்கு பேசுவதை தவிர்த்து விடுவோமே!
தயவு செய்து நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்க
வேண்டுகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்