ஏஞ்ஜலினா ஜோலி – தா ப்ரோம் – ஜெயவர்மன் –
நமக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் ?
ஏஞ்ஜலினா ஜோலியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன் ?
அழகான பெண் என்பதாலா ?
சிறந்த ஹாலிவுட் நடிகை என்பதாலா ?
கோல்டன் க்ளோப், ஆஸ்கார் அவார்டுகள்
வாங்கியவர் என்பதாலா ?
37 வயது ஆகியும் –
3 குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னரும் –
கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கிறார் என்பதாலா ?
இவை எல்லாவற்றையும் மீறி –
ஏஞ்ஜலினா ஜோலியை எனக்குப் பிடிப்பது
கீழ்க்காணும் விஷயங்களுக்காகத் தான் –
ஹாலிவுட் கதாநாயகி என்கிற அந்தஸ்தைப் பற்றி
கவலைப்படாமல், 3 குழந்தைகளைப் பெற்றுக்
கொண்டிருக்கிறார். வெளியிடங்களில் இடுப்பில் ஒரு
குழந்தையும் கையில் ஒரு குழந்தையுமாக
சகஜமாக காட்சி அளிக்கிறார்.
தான் பெற்றுக்கொண்ட 3 குழந்தைகளுக்கு இணையாக,
3 அநாதைக் குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் !
எங்கிருந்து ?
கம்போடியாவில் அகதிகள் முகாமிலிருந்து
ஒரு பையன் -மாடக்ஸ்
எத்தியோப்பிய முகாமிலிருந்து ஒரு அநாதைப்
பெண் குழந்தை – ஜஹாரா
வியட்னாமிலிருந்து ஒரு 3 வயதுப்பையன் -பேக்ஸ்
வசதிகளில் எந்தவித குறைச்சலும் வைக்காமல்
தன் குழந்தைகளுக்கு ஈடாக இவர்களையும்
தன் இருப்பிடத்திலேயே வைத்து வளர்க்கிறார் !
கடந்த பத்து ஆண்டுகளாக –
உலகில் போர் நிகழ்ந்த – எத்தியோப்பியா,காங்கோ,
வியட்னாம், கம்போடியா, ஈராக், ஆப்கானிஸ்தான்
போன்ற நாடுகள் அனைத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின்
(UNHCR) நல்லெண்ணத் தூதுவராக பயணம் செய்து,
மனிதாபிமான அடிப்படையில் என்னென்ன உதவிகள்
செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்து
கொண்டிருக்கிறார் !
நம்பர் ஒன் ஹாலிவுட் நடிகையாக தான் சம்பாதித்த/
சம்பாதிக்கும் -பணத்தை மூன்றாகப் பிரித்து –
ஒரு பங்கு தன் குடும்பச்செலவிற்காகவும்,
ஒரு பங்கு எதிர்கால சேமிப்பிற்காகவும்,
மூன்றாவது பங்கு முழுவதையும்
உலகெங்கும் உள்ள அகதிகள் முகாம், அநாதைக்
குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக அளிக்கிறார் !
அவரது புகைப்பட ஆல்பங்கள், அவரது குழந்தைகளின்
புகைப்பட ஆல்பங்கள், அவர் எழுதிய புத்தகங்களின்
ராயல்டி – அத்தனையையும் ஐக்கிய நாடுகள் சபையின்
மனிதாபிமான கவுன்சிலுக்கு கொடையாகக் கொடுக்கிறார்.
சரி எப்போதிருந்து இதெல்லாம் ?
2000ஆவது ஆண்டு ஏஞ்ஜலினா ஜோலி நடித்த
Lara Croft – Tomb Rider
என்கிற படத்திற்கான ஷூட்டிங் சில மாதங்களுக்கு
கம்போடியாவில் உள்ள டா ப்ரோம் (Ta Prohm) என்கிற
இடத்தில் நடந்தது. அந்த சமயத்தில், அருகில் இருந்த
ஏழ்மை தவழும் இடங்களுக்கும், அகதிகள் முகாம்களுக்கும்
போகக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிட்டியது.
அந்த மக்களின் -குறிப்பாக பெண்களின்
துயரம் தோய்ந்த வாழ்க்கை, வறுமை,
ஆரோக்கியம் இல்லாத -படிப்பறியாத குழந்தைகள் –
இவை எல்லாம் அவர் மனதில் ஒரு பாதிப்பை
உண்டு பண்ணி அவர் சிந்தனைகளை புதியதொரு
திசையில் திருப்பின. அப்போது ஆரம்பித்தது தான்
சமுதாயப் பணி – அறக்கொடைகள் !
கடந்த 10 ஆண்டுகளாக இன்னும் தொடர்கிறது !
சக மனிதர்களைப்பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ –
எந்தவித அக்கரையும் கொள்ளாத மேற்கத்திய
கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் -நாடுகளின்
எல்லைகளைக் கடந்து மனிதாபிமான நோக்குடன்
செயல்படுவது தான் ஏஞ்ஜலினா ஜோலியை
எனக்கு பிடிக்கக் காரணம் !
இப்போது ஏஞ்ஜலினா ஜோலியை
உங்களுக்கும் பிடிக்கிறது – அல்லவா !?
சரி – ஏஞ்ஜலினா ஜோலியை மாற்றிய அந்த
டா ப்ரோமில் என்ன இருக்கிறது ?
அடர்ந்த காட்டின் நடுவே, நெடிது வளர்ந்த மரங்களுக்கிடையே,
இடிபாடுகளுக்கிடையே –
சுமார் 600 ஆண்டுகள்
வெளியுலகிற்கே தெரியாமல் – மனிதர்கள்
பார்வையே படாமல் மறைந்து கிடந்த அற்புதமான
கலை நயம் நிறைந்த கோயில்கள் !
யார் கட்டியது ?
தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின்
மகோன்னத ஆட்சி நடந்து கொண்டிருந்தது. காலத்தால்
அழியாத சாட்சியாக இன்றும் விளங்கும் மாமல்லபுரத்தை
உருவாக்கிய மகேந்திரவர்மன் கி.பி. 600
முதல்–630 வரையும், அவர் மகன் நரசிம்மவர்மன்
கி.பி.630 முதல் 668 வரையும் ஆண்டனர்.
இன்றைய கம்போடியா, நேற்றைய கம்பூச்சியா,அந்நாளில்
காம்போஜம் என்றழைக்கப்பட்டு வந்தது.
பல்லவ மன்னர்கள் வலிமை வாய்ந்த மிகப்பெரிய
கப்பற்படையை உருவாக்கி, காம்போஜம் வரை
படையெடுத்துச்சென்று, மாபெரும் வெற்றிகளைக் குவித்து,
தங்கள் தளகர்த்தர்களையே அங்கே அரசராக
நியமித்து விட்டு வந்தார்கள்.
பிற்பட்ட காலத்தில், சோழ வம்சம் தலை தூக்கி,
பல்லவ வம்சம் நலிந்த காலத்தில், காம்போஜத்தில் ஆட்சி
புரிந்து வந்த பல்லவ குலத்தினருக்கும், பின்னர் அவர்கள்
வழிவந்தவர்களுக்கும் தமிழ் நாட்டுடன் இருந்த தொடர்புகள்
கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுப் போய் – அவர்கள்
அந்த கலாச்சாரத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு
விட்டார்கள். துவக்கத்தில் இந்து மதத்தை ஆதரித்து வந்த
இவர்கள் காலப்போக்கில் – புத்த மதத்தை தழுவினார்கள்.
அற்புதமான 6 நூற்றாண்டுகள் –
9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை
இந்த கம்போடியா நாட்டை ஆண்டு கொண்டிருந்த –
ஜயவர்மன், இந்திரவர்மன், யசோவர்மன்,
சூர்யவர்மன், ஜயவர்மன் -2, 3, 4, 5, 6, 7 –
ஆகிய அத்தனை பேரும்
தமிழ் மன்னர் குலத்தோன்றல்கள் தான் !
கி.பி. 1186 ஜெயவர்மன்-7 காலத்தில் நிறைவு பெற்றவை
தான் டா ப்ரோம் -ல் காணப்படும் கோயில்கள். துவக்கத்தில்
இந்து கடவுளர்களையும் பிற்காலத்தில் புத்த மதத்தின்
தாக்கத்தில் போதிசத்வரையும் மூலவராகக் கொண்டது
ராஜவிஹாரா என்றழைக்கப்பட்ட இந்த கோயில். கோயில்
அமைந்துள்ளது சுமார் 2.5 கிலோமீட்டர் பரப்பளவில் தான்
என்றாலும், இதன் சுற்றுச்சுவர் 148 ஏக்கர் நிலப்பரப்பை
உள்ளடக்கி இருக்கிறது. இங்கு கிடைத்த தகவல்கள் மூலம்
இந்த வளாகத்தையொட்டி(18 பூசாரிகளும், 615 நடன
மங்கையரும் உட்பட) சுமார் 12,500 பேர் பணியாற்றி
வந்ததாகத் தெரிகிறது.
15ஆம் நூற்றாண்டில், அந்நியர் (வியட்னாமியர்)
படையெடுத்ததையொட்டி, இந்த நகரம் கைவிடப்பட்டு
மக்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள்.
ஓங்கி வளர்ந்த மரங்களாலும், அடர்ந்த காடுகளாலும்,
மறைக்கப்பட்டு விட்ட இந்த டா ப்ரோம் அடுத்த
6 நூற்றாண்டுகளுக்கு மனிதரின் நடமாட்டமே அற்றுப்போய்
இருந்திருக்கிறது.
விளைவு – கீழேயுள்ள புகைப்படங்களில் தெரியும்.
600 வயது மரங்கள் கோபுரங்களைப் பிளந்து கொண்டும்,
சுற்றி அணைத்துக் கொண்டும் -உலகில் வேறு எந்த
பழங்காலச்சின்னங்களிலும் காணப்படாத ஒரு அற்புதத்
தோற்றம்.
கம்போடியா மீண்டும் அந்நியர் ஆதிக்கத்திலிருந்து 1953-ல்
விடுபட்ட பிறகு, உலகம் இந்த அரிய சின்னங்களை
ஆச்சரியத்தோடு பார்க்கத் துவங்கியது.யுனெஸ்கோ இதனை
பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இடிந்து கிடந்த
பகுதிகளை அதன் தொன்மை மாறாமல் சீரமைக்கும் பொறுப்பை
இந்திய தொல்பொருள் துறை ஏற்றுக் கொண்டது.
இன்று சீரமைப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன.
உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கில்
டூரிஸ்டுகள் விரும்பி வரும் இடமாகி விட்டது தமிழன்
உருவாக்கிய டா ப்ரோம் – ராஜவிஹாரா !
அதன் அழகு ததும்பும் புகைப்படங்கள் கீழே –
(பின் குறிப்பு – இந்த இடுகையை எழுதும்போதே
மனதில் மிகப்பெரிய ஏக்கம். நம் முன்னோர்கள்,
மூத்தோர்கள், நவீன விஞ்ஞான சாதனங்கள் எதன்
துணையும் இல்லாத காலத்திலேயே எவ்வளவு தொலைவு
சென்றிருக்கிறார்கள் – பார் புகழ ஆட்சி செய்திருக்கிறார்கள் !
பண்பாட்டைப் பதிவு செய்திருக்கிறார்கள் !
இன்றைய தமிழராகிய நாம் எப்படி இருக்கிறோம் ?
பெருமை கொள்ளும் நிலையிலா ?
சொந்த நாட்டிலேயே, விரும்பியே – அடிமைகளாக,
கொத்தடிமைகளாக இருக்கிறோம் !
லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை,
கற்பழிப்பு, சாராயம், மணல், கிரானைட் கடத்தல் –
போலி லாட்டரி, போலி அரசியல்வாதிகள்,
நான்காம்தர டிவி நிகழ்ச்சிகள் ……
இந்த சமுதாயம் மாறுவதற்கு –
நாம் என்ன செய்யப்போகிறோம் ? )
PHOTOS –
கூகுள் மேப்ஸில் சாட்டிலைட்டிலிருந்து
எடுக்கப்பட்ட டா ப்ரோம் படம் –
அடர்த்தியான காட்டிற்குள் எப்படி இருக்கிறது பாருங்கள்!























வாயை பிளக்கச் செய்த ஒரு செய்திதான் இது.
திரு காமை ஐயா அவர்களே, உங்களுக்கும் குசும்பு அதிகம்தான். செய்தியை செய்தியோடு நிப்பாட்ட வேண்டியதுதானே அது என்ன அன்றைய மன்னர்களை இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பீடுவது!
இதெல்லாம் ரொம்ப ஓவர்
வெளிஉலகத்துக்கு தெரிந்து நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்து கோவில்களை பொறுத்தவரை தமிழத்திலும் பராமரிக்கப்படாத
கோவில்கள் நிறையவே உள்ளது. பாக்கிஸ்தானில் ஒரு சிவன்கொவிலை ஸ்லாட்டர் ஹவுசாகவே மாற்றியுள்ளார்கள். எது எப்படி இருப்பினும் அந்த காலத்தில் தமிழ் மன்னர்கள் பல்வேறு நாடுகளில் கோவில்களை
கட்டியிருப்பதன் மூலம் தமிழ் கலாசாரம், கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றை பரப்பியுள்ளார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்து மதத்தை சார்ந்த நாஸ்தீகவாதிகளே கோவில்களை இடிப்பதும்
இந்துமதத்திற்கு எதிராகவும் செயல்படுகிறார்கள். மேலும் ஆன்மீகவாதி என சொல்லிகொள்பவர்களோ அங்கங்கே கோவிலை கட்டிக்கொண்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். கோவில்களில் அந்தக்காலத்தில் இருந்ததெல்லாம் மெய்யானவை. இந்தகாலத்தில் இருப்பதெல்லாம் பொய்யானவை.
thanks
காவிரிமைந்தன் – உங்கள் எழுத்து பிரமிக்க வைக்கிறது. It is really fantastic. இந்த மாதிரி தலைப்பில் இவ்வளவு அற்புதமான விஷயங்களை எப்படித்தான் கொடுத்தீர்கள் ? இரண்டு விஷயஙளுமே -ஏஞ்ஜலினா ஜோலி, தா ப்ரோம்
படிக்கவே பற்றியவை பரவசம் தருகின்றன.
அந்த பின் குறிப்பை போட்டு சந்தொஷத்தை கெடுத்து
விட்டீர்கள். அந்த பின்குறிப்பை நீக்கி விடுங்களேன் –
நாங்கள் படித்துவிட்டு சந்தோஷப்படுவதோடு நிறுத்திக்
கொள்கிறோம்.எங்கள் குற்ற உணர்வு உறுத்தாமல் இருக்கும்.
நன்றி.வாழ்த்துக்கள்.
ஏஞ்ஜலினா ஜோலியை தவிர மற்ற அனைத்துமே இது வரை அறியாத அரிய தகவல்கள். மிக்க நன்றி காவிரி மைந்தன் ஐயா.
இப்படி தான் இப்போது தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று 12 ஆம் திகதி மேடை போட்டு உலகுக்கு உணர்த்த இருக்கும் நிலையில் எப்படி எல்லாம் தமிழர் வாழ்ந்தார்கள் எனும் உங்கள் பதிவு மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா!
தன்னலமற்றது தாயின் உள்ளம். உண்மை அன்பு யார்,
என்ன குலம், கோத்திர பின்னணி என்ன என்பதெல்லாம்
பார்த்து பரிவு காட்டாது என்பதை ஏஞ்சலினாவின் செயல்
நினைவுபடுத்துகின்றது.
ஏஞ்சலினா பற்றி முன்னம் கொஞ்சம் அறிந்திருந்தாலும்,
தங்கல் இடுகை முழுமையான செய்தியை தந்திருக்கின்றது.
நன்றி.
****
பாரத தேசத்தில் உள்ள தமிழகம் என்கிற பகுதியை,
விருதுநகர் (வியாபாரி என எண்ண வேண்டாம்) காரரிடம்
இருந்து கைப்பற்றி, கருணாநிதி என்கிற சோழ ராசா
(விட்டு விட்டு) ஆண்டு வந்தார்.
அவரும் “கட்டிடக்கலை” பிரியர் தான். எனவே, தலைநகரிலும்
இன்ன பிற பகுதிகளிலும், தேவையோ இல்லையோ கட்டிடங்களை,
மேம்பாலங்களைக் கட்டியிருக்கிறார் (அவர் விருப்பத்தோடு கட்டிய
(?) பூம்புகார் கலைக்கூடம் கவனிப்பாரற்று, யாராவது வந்து
பார்த்துவிட்டு போகமாட்டார்களா என்று தவம் கிடக்கிறது என்பது
வேறு செய்தி. உள்ளே போக வேண்டுமானால் கட்டாயம் துணை
வேண்டும். தனித்துப் போனால் ஒருவித பயம் கவ்விக் கொள்ளும்).
பழைய ராசாக்கள் எல்லாம் அடுத்தவரின் நிஜ புலமையைப் பாராட்டி,
புலவர்களைக் கலைஞர்களை ஆதரித்து வந்தனர். இந்த சோழ ராசாவே
கலைஞர் ஆனபடியால், படைப்புகள் பலவற்றை “படைத்து”
(உ.ம் தொல்காப்பிய பூங்கா) தன் கட்டுப்பாடிற்குட்பட்ட (மாவட்ட)
ஜமீன்களிடம் “விற்று” (தன்) கஜானாவை நிரப்பியிருக்கிறார். பல
பல்கலை”கழகங்களிடம்” இருந்து கெளரவ டாக்டர் பட்டம்
“வாங்கி”யிருக்கிறார்.
எனவே, தமிழக ராசாக்கள் தமிழர்கள் கெளரவப்படும் வண்ணம்
ஒன்றும் செய்யவில்லை என்பதை மறுக்கின்றேன்.
****
எனக்கு யார் மீதும் எதற்காகவும் கோபமில்லை.
***