யார் நிற்கிறார்கள் குறுக்கே ? கண்டு பிடித்து தூக்கி எறிய முடியாதா ?

யார் நிற்கிறார்கள் குறுக்கே ?
கண்டு பிடித்து தூக்கி எறிய முடியாதா ?

பெட்ரோல் விலை கணிசமாக குறைய வாய்ப்பு !
அந்நியச் செலாவணி எக்கச்சக்கமாக மிச்சமாக வாய்ப்பு !
ரூபாயின் மதிப்பு உயரவும் வாய்ப்பு !

காய்கறி, மளிகை சாமான்கள், பால் – அன்றாடத்
தேவைகள் அனைத்தின் விலைகளும் குறைய வாய்ப்பு !

ஆட்டோ, பஸ் – கட்டணங்கள் குறைய வாய்ப்பு !

புதிதாக நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு !
விவசாயிகளுக்கு பெரும் அளவில் வருமானம்
அதிகரிக்க வாய்ப்பு !

சுற்றுச்சூழல் மாசுபடுதலில் இருந்து பெரும் அளவில்
விடுதலை பெற வாய்ப்பு !

இருக்கின்ற எரிபொருள் தீர்ந்து விட்டால்
என்ன செய்யப் போகிறோம் எதிர்காலத்தில்
என்கிற  கவலையில்  இருந்து விடுதலை !

என்ன கனவு காண்கிறீர்களா ?-
என்று கேட்பது புரிகிறது !
கனவல்ல நிஜம் தான்.

மிகச்சுலபமாக இந்த கனவை நினைவாக்கலாம்.
எப்படி ?

எப்போதாவது செய்தித்தாள்களில் வரும் –
எங்கேயோ கேள்விப்பட்டிருப்போம் –
எத்தனால் என்கிற பெயரை  !!

முதலில் எத்தனால் பற்றி கொஞ்சம் விவரங்கள் –

”  Ethanol (ethyl alcohol, grain alcohol,
(ETOH) is a clear, colorless liquid
with a characteristic, agreeable odor. In dilute

aqueous
solution, it has a somewhat sweet
flavor, but in more concentrated solutions it has

a burning taste.
Ethanol, CH3CH2OH, is an alcohol,
a group of chemical compounds
whose molecules contain a hydroxyl group, -OH,

bonded to a carbon atom. ”

எத்தனால் என்பது – விவசாயப் பொருட்களிலிருந்து
தயாரிக்கப்படும் –
எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய,
ஆக்சிஜனை உள்ளடக்கிய,
ஒரு நிறமற்ற  திரவம். (CH3CH2OH )

அமெரிக்காவில் இது சோளத்திலிருந்து (கார்ன் )
விளைவிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் இது
அமோகமாக விளையும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
உருளைக்கிழங்கிலிருந்தும், கோதுமையிலிருந்தும் கூட
(சிறிய அளவில்) தயாரிக்கலாம்.

இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப்
பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை
பயன்படுத்தும்போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புற
சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.

ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது,
கரும் புகை வெளிப்பாடு குறைந்து,
ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி,
சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

இது பற்றி நான் எழுதுகின்ற விஷயங்கள் எதுவும்
புதிதல்ல – விஞ்ஞானிகளின் எதிர்காலக் கனவும் அல்ல.
ஏற்கெனவே சில நாடுகளில் நடைமுறைக்கு வந்து
அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் –
நடைமுறையில் மிகச்சுலபமாக கொண்டு வரக்கூடிய
ஒரு முறை தான்.

ஏற்கெனவே இப்போது அமெரிக்காவில் ஓடும் அனைத்து
வாகனங்களும் 10 % எதனால் கலந்த கேசோலினை
(எரிபொருள்) பயன்படுத்தி தான் ஓடுகின்றன.

உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும்
பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன்
85 % எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை
கட்டாயமாக்கி இருக்கிறது.பிரேசிலில்
1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட
அனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்து
பயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்
பட்டிருக்கின்றன. தற்போது அமெரிக்காவிலும்,
பிரேசிலிலும் உற்பத்தியாகும் Flex-fuel எஞ்ஜின்கள்
பெட்ரோல், அல்லது எத்தனால், அல்லது இரண்டும்
எந்த விகிதத்தில் வேண்டுமானாலும் கலந்து
பயன்படுத்தும் விதத்தில் உருவாகின்றன.

இந்தியாவில் கரும்பு உற்பத்திக்கு பஞ்சமே இல்லை.
அபரிமிதமான உற்பத்தி காரணமாக தகுந்த விலை
கிடைக்காமல் விவசாயிகள் போராடுகிறார்கள்.
இங்கு கரும்பானது, சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை
தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை.

கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும்
கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,
அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற
எரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு
பயன்படுத்தவும் துவங்கினால் –

உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும்.
இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்ட
கரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும்
என்பதால் – சர்க்கரை  விலை கணிசமாக குறையும்.

கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும்.
இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு
வேலை கிடைக்கும்.

சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையோடு, உபபொருளாக
எத்தனாலும் தயாரிக்க வேண்டி இருப்பதால்,
அதன் பொருட்டு அதிக நபர்களுக்கு வேலை கிடைக்கும்.
எத்தனாலை உற்பத்தி செய்ய, கையாள, மற்ற
இடங்களுக்கு அனுப்ப, எண்ணை நிறுவனங்களில்
இவற்றை கலந்து புதிய சதவீதத்தில் எரிபொருளை
உற்பத்தி செய்ய – என்று ஏகப்பட்ட புதிய தொழில்களும்,
வேலைகளும்  உருவாகும்.

பெட்ரோலின் விலையில் 4ல் 1 பங்கு விலைக்கு
எத்தனால் கிடைக்கும்  என்பதால் –
பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறையும்.
கச்சா எண்ணை இறக்குமதி பெரும் அளவில் குறையும்.
இதனால் பெரும் அளவில் டாலர் -அந்நியச் செலாவணி
மிச்சமாகும். டாலர் கையிருப்பு அதிகம் ஆவதால் –
ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.

எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து
எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக
கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் –
விலை பெருமளவில் குறையும்.

எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை
பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து
செலவு குறையும்.

ஏற்படும் பலன்களை யோசித்து யோசித்து,
சொல்லிகொண்டே போகலாம்.

சரி – இத்தனை பயனளிக்கும் எத்தனாலை இந்தியாவில்
எந்த அளவிற்கு –
உற்பத்தி செய்கிறோம் ?
எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் ?
நினைத்தாலே ரத்தக் கண்ணீர்  வருகிறது.

2002ஆம் ஆண்டு மத்திய அரசு முதல் முதலாக,
முதல் கட்டமாக –
எரிபொருட்களுடன் 5% எத்தனாலை கலந்து பயன்படுத்த
ஒரு அரசாங்க ஆணையை பிறப்பித்தது –

அதன் ஒரு பகுதி கீழே பார்வைக்கு –

———————-

THE GAZETTE OF INDIA:
EXTRAORDINARY [PART I- SEC. I]

MINISTRY OF PETROLEUM AND NATURAL
GAS RESOLUTION

NEW DELHI, 3RD September, 2002
No. P-45018/28/2000-C. C. –

With a view to give boost to agriculture
sector and reduce environmental pollution,

Government of India have been examining
for quite some time supply of ethanol-
doped-petrol in the country.
In order to ascertain financial and
operational aspects of blending 5% ethanol
with petrol as allowed in the
specifications of Bureau of Indian Standards for

petrol. Government had
launched three pilot projects;

—————————-

முதல் கட்டமாக ஜூலை 2003 க்குள்ளாக,
9 மாநிலங்களில் இதை செயல்படுத்த
ஆலோசிக்கப்பட்டது.

நிபுணர் கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

எத்தனால் பயன்பாட்டை –
காலப்போக்கில் நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கவும்,

இரண்டாவது கட்டமாக பயன்பாட்டை
10  சதவீதத்திற்கு உயர்த்தவும்,

மூன்றாவது கட்டமாக  20 % க்கு உயர்த்தவும்  
திட்டங்கள்  வகுக்க ஒரு கமிட்டி.

உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை விவசாயிகளும்,
சர்க்கரை ஆலைகளும் – எண்ணை கம்பெனிகளுக்குத்
தான் விற்க வேண்டும். அப்படி வாங்கப்படும்
எத்தனாலுக்கு எண்ணை கம்பெனிகள் லிட்டருக்கு
என்ன விலை கொடுக்கலாம் என்பதை  யோசித்து
தீர்மானிக்க ஒரு கமிட்டி –

அப்படி உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கு
உற்பத்தி வரி (excise duty) போடலாமா –
வேண்டாமா ?
போடுவதாக இருந்தால் எவ்வளவு போடலாம் ?
என்பது குறித்து யோசித்து தீர்மானிக்க ஒரு கமிட்டி –

கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்க எந்தெந்த
வித இயந்திரங்களை தருவிக்கலாம் – எங்கிருந்து
தருவிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க
ஒரு கமிட்டி –

எத்தனாலை பெட்ரோல் -டீசலுடன் குறிப்பிட்ட
சதவீதத்தில் கலக்க எண்ணை கம்பெனிகள்
எந்த வகையான இயந்திரங்களை கையாளலாம் –
எங்கிருந்து தருவிக்கலாம்,
எண்ணை தயாரிப்பு நிறுவனங்களில் என்னென்ன
மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும் என்பது
குறித்தெல்லாம் தீர்மானிக்க  ஒரு கமிட்டி –

கடைசியாக, 2017 ஆம் ஆண்டுக்குள் 20 %
எத்தனால் கலந்த எரிபொருளை நாடு முழுவதும்
கொண்டு வருவது என்று கொள்கை அளவில்
தீர்மானிக்க விவசாயம் மற்றும்
உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் அவர்கள்
தலைமையில் 7 அமைச்சர்கள் மற்றும் திட்டக்கமிஷனை
உள்ளடக்கிய ஒரு கமிட்டி –

உச்சகட்டமாக – 2007 ஜூன் 5ம் தேதி
“உலக சுற்றுச்சூழல் தினத்தை” ஒட்டி, இந்தியாவிற்கு
வருகை தந்திருந்த பிரேசில் ஜனாதிபதி  லூயிஸ் இனெசியோ
லுலாட சில்வாவிற்கு, திருமதி சோனியா காந்தி  
அவர்களின் முன்னிலையில் நமது மதிப்பிற்குரிய,
செயல்வீரர் பிரதமர் மன்மோகன் சிங்  அவர்கள்
மிக விரைவில் – இந்தியா 20 % எத்தனால் கலந்த
எரிபொருளை பயன்படுத்தத் தொடங்கி -பசுமையான
சூழலை உருவாக்கப் பாடுபடும்
என்று உறுதி அளித்தார்.(இதைச் சொல்லி 5 ஆண்டுகள்
தான் ஆகின்றன !)

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக  பேசப்பட்டு வந்து,
10 வருடங்களுக்கு முன்னதாக,
செப்டம்பர் 2002 லேயே  மத்திய அரசின் ஆணையும்
(gazette notification) பிறப்பிக்கப்பட்ட பின்னரும்
இன்று வரை  குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும்
எத்தனால் பயன்பாட்டில் காண முடியவில்லை.

நீங்கள் யாராவது எத்தனாலை பார்த்திருக்கிறீர்களா ?
எப்படி முடியும் ?
உருவானால் தானே ?
ஓரளவிற்கு விவரம் தெரிந்த கரும்பு விவசாயிகளுக்கும்,
சர்க்கரை ஆலைகளைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே
எத்தனால் பற்றி கொஞ்சம் விவரம் தெரிய
வாய்ப்பு இருக்கிறது !

இந்த நாட்டையும்,
நாட்டு மக்களின் பொருளாதார நிலைமையையும் –
எவ்வளவோ அளவு உயரத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய
இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராததற்கு யார்
காரணம் ?

அரசாங்கத்தின் மெத்தனம் மட்டுமா காரணம் ?

நாட்டின் 70 % பெட்ரோல் தேவை இன்னும் இறக்குமதி
மூலம் தான் நிறைவு செய்யப்படுகிறது. டாலர் கையிருப்பு
கரைந்து கொண்டே போகிறது. இறக்குமதியாளர்கள்
தவிக்கிறார்கள். ஒவ்வொருவராக தலையில் துண்டை போட்டுக்கொண்டு
காணாமல் போகிறார்கள். ஆனால் இந்த நாட்டின்
பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போடக்கூடிய
இந்த விஷயத்தில் மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தவே
மாட்டேன் என்கிறது.

ஏன் இப்படி ?

எண்ணை கம்பெனிகளுக்கு இது விஷயத்தில் ஈடுபாடு
இல்லை என்பது ஒரு பக்கம் தெரிகிறது.
ஏன் அப்படி ? யோசியுங்கள் .

அது மட்டுமல்ல வெளிப்படையாகத் தெரியாத
வேறு சில சக்திகளும் எத்தனால் எரிபொருள்
பயன்பாட்டிற்கு வருவதை –

தடுக்க,
தவிர்க்க,
தள்ளிப்போட

தீவிரமாக செயல்படுகின்றன.
(அரசின் மெத்தனத்திற்கும், அமைச்சர்கள் கண்டு
கொள்ளாமல் இருப்பதற்கும்  ஒரு விதத்தில்
அவையே காரணம் )

வெளிப்படையாக புலப்படாத,
பின்னணியில் இருந்துகொண்டு  செயல்படும்
அந்த சுயநல சக்திகள் எவை –
உங்களுக்கு தெரிகிறதா ?

சுயநலத்தை முன்னிறுத்தி –
இந்த நாட்டின் வளர்ச்சியை,
இந்த நாட்டின் பொருளாதாரத்தை,
மக்களின் மகிழ்ச்சியை, நல்வாழ்வை -கெடுக்கும்
அந்த சக்திகளை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா ?

யார் காரணமாக இருக்க முடியும் – கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு புலப்படுவதை எழுதுங்களேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

20 Responses to யார் நிற்கிறார்கள் குறுக்கே ? கண்டு பிடித்து தூக்கி எறிய முடியாதா ?

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மன்னிக்கவும்…
    என்னால் ஒன்றுதான் சொல்ல முடிகிறது..
    “பாவம் ஸார் நீங்க!”
    ஏழையை மேலும் ஏழையாக்கினால்தான்,
    பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆக முடியும்.
    எனும் சித்தாந்தப்படி கடந்த அறுபது ஆண்டுகளாக செயல்படும்
    காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்த்தி விட்டு
    இது எதனால்,அது எதனால் என்று ஆராய்ச்சி செய்வதில் பயன் என்ன?
    தப்பும் தவறுமாக ஒட்டைப்போட்டு போட்டு தொட்டியையே ஒட்டையாக்கிவிட்டோம்!!
    இனி செய்வதென்ன??

  2. ராஜராஜ சோழன்'s avatar ராஜராஜ சோழன் சொல்கிறார்:

    பொறுக்கிகளும், பெரும் கொள்ளைக்காரர்களும்,
    பதவிக்காக எதையும் செய்யத் துணிந்தவர்களும்
    நிறைந்த ஒரு ஆட்சியில் மக்கள் நலத்தைப்
    பற்றி யார் கவலைப்படுகிறார்கள் ?
    மூன்று பெரிய அளவிலான குற்றச்சாட்டுக்களுக்கு
    உள்ளானவர் ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கிறார்.
    அவர் போட்டியே இன்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
    என்று சிலர் துடிக்கிறார்கள்.இவர் ஜனாதிபதி ஆவதன்
    மூலம் அவர்களும் விசாரணையிலிருந்து நிரந்தரமாக
    தப்பிக்கப் போகின்றனர்.

    இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு முழு ஆதரவு
    கொடுத்தவர் ஜனாதிபதி ஆவதற்கு தமிழினத்தலைவர்
    சிறப்பு வரவேற்பும், நட்சத்திர ஓட்டலில் விருந்தும்
    கொடுக்கிறார்.

    அடுத்த பிரதமர் என்று சொல்லப்படுபவருக்கு இன்று
    பிறந்த நாள். ஆள் எங்கு, எந்த நாட்டில்
    ஆடிக் கொண்டிருக்கிறார் என்று யாருக்கும்
    தெரியாது. ஆனால் அடிமைகள் வாழ்த்து தெரிவித்து
    ஊர் பூராவும் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர்.

    சூனியக்காரர்கள் வசம் சிக்கி விட்ட இந்த நாட்டில்
    நம்மால் என்ன செய்ய முடியும் என்று மக்கள்
    நம்பிக்கையே இன்றி ஒதுங்குகின்றனர்.

    நீங்கள் மட்டும் விடாமல் எழுதிக்கொண்டே
    இருக்கிறீர்கள். கடமையை செய் – பலனை
    எதிர்பார்க்காதே என்று சொன்னது இங்கு தான்
    மிகவும் பொருந்துகிறது.

    நீங்கள் எதிர்பார்க்கும் பலன் விளைகிறதோ இல்லையோ, காவிரிமைந்தன் அவர்களே உங்கள் மீது எங்களுக்கு
    அன்பும், ஆதரவும் பெருகுகிறது.
    உங்கள் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறோம்.

    உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு.
    ராஜராஜ சோழன் மற்றும் நண்பர்கள்

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    இந்த தலைப்பில் நான் படித்தவைகளில் இருந்து சிலவற்றை கூற விரும்புகிறேன்.

    அமெரிக்காவில் 10 % வரை கலந்து விற்கப்படும் காசொலீன் சில நுகர்வோரால் ஒரு கான்ஸ்பிரசியாகவே பார்க்க படுகிறது. உதாரணமாக எத்தனாலுக்கு முன்னர் காலனுக்கு 34 மைல் ஓடிய கார் எதனால் கலந்தபின் 28 மைல் ஓடுவதாகவே கூறுகிறார்கள். ஆனால் விலையில் உள்ள சிறிய வித்தியாசம் மேற்கொண்டு காரை 6 மைல் ஓட்ட எரிபொருள் போடுவதற்கு சரியாகி விடுகிறது.

    மேலும் அந்த 28 மைல் ஓட்டுவதற்கு எரிக்கப்படும் எரிபொருளில் 90 % பெட்ரோல் இருப்பதால் முன்னை விட 10 % குறைவாக மட்டுமே கார்பன் கழிவு சுற்று சூழலில் கலக்கிறது. முன்னது போலவே மேற்கொண்டு 6 மைல் போவதற்கு செலவாகும் எரிபொருளில் உள்ள 90 % பெட்ரோலினால் வெளியாகும் கார்பன் கழிவையும் சேர்த்தால் முன்பு முழுமையாக பெட்ரோலில் வண்டி ஓடுவதற்கும் E10 எனும் எதனோல் கலவையினால் வண்டி ஓட்டுவதனால் குறைக்கப்படும் கார்பன் கழிவு வெறும் 7 அல்லது 8 % மட்டுமே.

    ஆகவே இந்த E10 ஆல் நுகர்வோருக்கோ சுற்று சூழலுக்கோ பெரிய நன்மை இல்லை. ஆனால் சோளம் விவசாயிகள் நன்மை அடைகிறார்கள்; அத்தோடு உள்நாட்டு பொருளாதாரம் விருத்தியாகிறது. அந்த வகையில் நாட்டுக்கு நன்மை தான். ஆனால் நமது அரசுக்கோ விவசாயிகள் பரம வைரிகள் ஆச்சே. என்றைக்கு அவர்களை ஒழித்து வெளிநாட்டுகாரனுக்கு அந்த இடத்தில் ஆலை கட்ட அனுமதிக்கலாம் என்று பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் பிரேசிலில் நிலைமை வேறு. அங்கு 95 % வரை எதனால் கலக்கிறார்கள். மேலும் நீங்கள் கூறியது போல் அத்தனை நன்மைகளும் அங்கு விளைகிறது. நாமும் பிரேசிலை போல விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு தான். ஆனால் நாட்டை ஆளுபவர்கள் தான் இறக்குமதி செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு எப்படி விவசாயிகள் மீது கரிசனை வரும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உங்கள் பகிர்தலுக்கு நன்றி நண்பர் எழில்..

      உங்களுக்கு அமெரிக்க அனுபவம் உண்டா ?
      ஒரு வேளை தற்சமயம் அங்கு தான் இருக்கிறீர்க்ளா ?

      சில விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன் –
      அதற்காகத் தான் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        ஐயா அதெல்லாம் ஒன்றும் இல்லை. வாசிப்பிலும், பிறர் அனுபவங்களில் இருந்து கற்று கொள்வதிலும் நாட்டமுள்ள சாதாரண மிடில் கிளாஸ் கூலி தொழிலாளி நான்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நன்றி நண்பர் எழில்.

          நல்ல கருத்துக்களை பொருத்தமாக எழுதுகிறீர்கள்.
          அனுபவமும், ரசனையும் தான் முக்கியம்.
          தொடர்ந்து கருத்துக்களை எழுதுங்கள்.

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

  4. பிரபு's avatar பிரபு சொல்கிறார்:

    அதான் சார் இருக்காரே –
    இந்தியாவின் நும்பர் ஒன் பணக்காரர் -அம்பானி அய்யா !
    எண்ணைக் கெணத்துல எவ்ளோ பணம் கொட்டி இருக்காரு.
    திரும்ப எடுக்க வேணாவா ?

  5. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    ஆட்சி அதிகாரம் படைத்தவர்களும், அரசியல்வாதிகளும்
    “பல வழிகளிலும்” பணம் பார்த்து வருகிறார்கள்;
    படித்தவர்கள் “இதற்கு மாற்றாக” இதை செய்(திருக்கலாம்)
    அல்லது இதை தவிர்த்திருக்கலாம் என்று எழுதுகிறார்கள்;
    அரசியல்வாதிகளின் இன்ஸ்டண்ட் திட்டங்களினால் பணம்
    படைத்தவர்களும், தோழிகளும், உடன்பிறப்புகளும்
    பணக்காரர்களாகி வருகிறார்கள்; ஏழைகள் இன்றைய
    சோத்துக்கு என்ன பண்றது என்பதிலேயே கவனமாய் இருக்கிறார்கள்….

    இந்த நிலையில் “எத்தனாலை” எதனுடன் சேர்த்து
    உபயோகித்தால் நாட்டில் வளம் கொழிக்கும், விலைவாசி
    கட்டுக்குள் நிற்கும்… என்பதையெல்லாம் எவன் யோசிக்கப்
    போகிறான். எல்லோருக்கும் நிறைய வேலை இருக்கிறது..

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இதைத்தான் வள்ளுவரே ,
    “எதனை எ(த்)தனால் எவன்முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன்கண் விடல்.”
    என்று தன் 517(A) ஆம் எண் குறளில் என சொல்லியுள்ளாரோ??
    ;-))

  7. N.Rathna Vel's avatar N.Rathna Vel சொல்கிறார்:

    நாட்டை ஆளுபவர்கள் தான் இறக்குமதி செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு எப்படி விவசாயிகள் மீது கரிசனை வரும்.

  8. N.Rathna Vel's avatar N.Rathna Vel சொல்கிறார்:

    எந்தௌ முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

  9. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    பெட்ரோலை பொறுத்தவரை அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் , இலங்கை, நேபால் போன்ற நாடுகளில் இந்தியாவை விட குறைந்த விலைதான் உள்ளது. எனவே சர்வதேச சந்தையை காரணமாக கூற முடியாது.
    இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தங்களது வரிகளை தள்ளுபடி செய்தால் ஒரு லிட்டர் பெட்ரோல்
    ரூபாய்.25 –௦௦ ௦௦க்கு விற்கலாம். அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள். தாங்கள் கூறிய எத்தனால் குறித்த விவரங்கள்
    நூற்றுக்கு நூறு உண்மை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பண முதலைகள் மற்றும் அரசியல்வாதிகள்
    இதை செய்ய விடமாட்டார்கள். எனவே பொதுமக்களாகவே தங்களுக்கு தேவையான எத்தனாலை தயார் செய்து
    பயன்படுத்தினால்தான் உண்டு.

  10. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    Thankalathu Pani Thodarattum. Vaazhththukkal.

  11. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    விமர்சனம் இதுநாள்வரை எனது ஈமெயில் மூலமாக எனக்கு வந்துகொண்டிருந்தது. நானும் அதை படித்து பார்த்து
    எனது கருத்துக்களை எழுதி வந்தேன் ஆனால் சிறிது நாட்களாக ஈமெயில் மூலமாக விமர்சனம் வருவதில்லை.
    எனவே என்னால் விமர்சனங்கள் படிக்க முடிவதில்லை. எனவே ஒவ்வொரு முறையும் விமர்சனம் குறித்த
    ஈமெயிலை எனக்கு அனுப்பித்தர கேட்டுக்கொள்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      வலைப்பதிவின் கீழே, வலது புறத்தில்,
      + குறியுடன் follow என்று ஒரு குறியீடு வரும்.
      அதை க்ளிக் செய்து, வெளிவரும் பெட்டியில் (box )
      உங்கள் email ID யை பதிவு செய்யவும்.

      உங்களுக்கு ஒவ்வொரு பதிவும் யீமெயிலில் வரும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  12. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    பெட்ரோல் மற்றும் எத்தனால் குறித்த விமர்சனம் பகுதியில் பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய எனது கருத்தைக் கூறி
    எத்தனாலை பொறுத்தவரை பொதுமக்களாகவே நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு என கூறியிருந்தேன்.
    26–6–12 –தேதிய தினமலர் பத்திரிகையில் பெட்ரோலுக்கு பதிலாக எத்தனால் பயன்படுத்துவது குறித்து கோரிக்கையை
    தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானித்துள்ள செய்தி
    பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தங்களுடைய விமர்சனத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

  13. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    தங்களது விமர்சனத்தை தொடர்ந்து தினமலர் செய்தி வந்துள்ளதை பார்க்கும்போது இன்றில்லாவிட்டால் நாளையாவது நடக்கும் என்று தாங்கள் கூறுவது உண்மையாகி கொண்டு வருகிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் பத்மனாபன் போத்தி.

      நம்பிக்கை தானே வாழ்வு !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.