குப்புற விழுந்தாகி விட்டது – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை !! – எப்படி ? -simple -மீசை வைத்துக் கொள்ளாதீர்கள்…!

குப்புற விழுந்தாகி விட்டது – ஆனால்
மீசையில் மண் ஒட்டவில்லை !! – எப்படி ?
-simple -மீசை வைத்துக் கொள்ளாதீர்கள்…!

அரசியல்வாதிகளுக்கும் -சூடு,சொரணைக்கும் ரொம்ப
தூரம் என்பது நம் எல்லாருக்கும் பழக்கமாகி விட்ட
ஒரு நிலை தான்.  இருந்தாலும் …. நடப்பதை
தடுக்கவோ, திருத்தவோ – நம்மால் ஒன்றும் செய்ய
முடியாது என்கிற கையாலாகாத நிலையில்,
வயிற்றெரிச்சலை மனம் திறந்து வெளியேயாவது
கொட்டலாம் அல்லவா ?  அந்த வகையிலான ஒரு
முயற்சி தான் இது.

2009 மே மாதம் தேர்தல் நடக்கிறது.தில்லுமுல்லு
செய்து ரிசல்டை மாற்றி அறிவித்து விட்டார்கள் என்று
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை
எதிர்த்து, தோற்றுப் போனதாக அறிவிக்கப்பட்ட
வேட்பாளர் வழக்கு போடுகிறார்.

இந்த வழக்கு-அடிப்படையிலேயே  விசாரிக்க தகுதியற்றது
என்று தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்தரப்பு
பதில் மனு போடுகிறது. இந்த மனு நிராகரிக்கப்படுகிறது.

தோற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர், தன் மனுவில்
ரிசல்ட் எந்த வகையில் செல்லத்தகாதது என்பதை
காரணங்களுடன் 29 பத்திகளில் விவரிக்கிறார்.இதன்
அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட
வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

இங்கு எதிர்மனுதாரர் -இந்த காரணங்களில் ஒன்று கூட
விசாரிக்க தகுதியானது அல்ல. எனவே தன்னை  எந்த
விசாரணைக்கும் உட்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம்
உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

வழக்கின் அடிப்படைத் தன்மையை ஆராய்ந்த நீதிமன்றம்
4 மற்றும் 5-வது பத்திகளில் கூறப்பட்டுள்ள
காரணங்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மற்ற புகார்களின் அடிப்படையில் விசாரணை தொடர
வேண்டும் என்று உத்திரவு போடுகிறது.

இதுகுறித்த சட்டவிதிகள் பற்றி இங்கு ஒரு சிறு விளக்கம் –

Representation of the People Act,1951
(மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்) பிரிவு 86 (6) –

உயர்நீதிமன்றங்கள் தேர்தல் வழக்குகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவற்றை
தொடர்ந்து தினசரி அடிப்படையில், விசாரணை
நடத்தி முடிக்க வேண்டும் –

– என்று சொல்லுகிறது.

இதே சட்டத்தின் அடுத்த பிரிவு அதாவது 86 (7) –

ஒவ்வொரு தேர்தல் வழக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு,
விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையை
6 மாதங்களுக்குள்ளாக முடித்து தீர்ப்பு அளிக்கப்பட
அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் –

– என்று சொல்லுகிறது.

ஏற்கெனவே 3 ஆண்டுகள் கடந்து விட்டன !
இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை
எதிர்த்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்
உச்சநீதிமன்றத்தில்(சுப்ரீம் கோர்ட்) அப்பீல் செய்தால் –
தீர்ந்தது -மிச்ச சொச்ச மீதி 2 ஆண்டுகளும் ஓடி விடும்.
5 ஆண்டுகள் முடிந்த பிறகு –
என்ன முடிவு வந்தால் தான் என்ன ?

இப்போது வந்திருக்கும் தீர்ப்பைப் பற்றி –
வெற்றி பெற்ற வேட்பாளர் சொல்வது என்ன ?

” எதிர்க்கட்சிகள்  அநாவசியத்திற்கு குதிக்கிறார்கள்.
இது என்ன கிரிமினல் வழக்கா ? After all –
election petition !-  தானே “

” (ஏளனச் சிரிப்போடு) ஏதோ அதிசயமாக என் மீது
மட்டும் வழக்கு இருப்பது போல் பேசுகிறீர்களே –
நீதிமன்றங்களில் இதைப் போல் இன்னும்
111 வழக்குகள் நிலுவையில் உள்ளன தெரியுமா ?!”

“குற்றச்சாட்டு இன்னும் பதிவு கூட செய்யப்படவில்லை.
விசாரணையே இன்னும் துவங்கவில்லை. சொல்லப்
போனால் – இன்னும் ஒரு சாட்சி கூட விசாரிக்கப்படவில்லை.
அதற்குள் தீர்ப்பே வந்து விட்டது போல் பேசுகிறார்கள்.”

–  இவர் போன்ற சட்ட  மேதைகளின் குதர்க்க வாதங்களுக்கு
எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நமக்கு சட்ட அறிவு
இல்லை தான்.

ஆனால் நாம் யோசிப்பது வேறு அடிப்படையில் –
தர்ம நியாயங்களின் அடிப்படையில் –
மனசாட்சியை மதிக்கும் சராசரி மனிதன் என்கிற
அடிப்படையில்  –

1) அரசியலுக்கு வந்து விட்டாலே சூடு, சொரணை எதுவும்
இருக்கக் கூடாது என்று எதாவது விதியா என்ன ?
இத்தனை பேர் – தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும்,

எதிர்க்கட்சிகளும், தொடர்ந்து -அவர் பதவி விலக வேண்டும்
என்றும், மறுத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும்
கோரிக்கை விடும் அளவிற்கு விஷயத்தை வளர விடுவானேன் ?

அடிப்படையில் –

ஓட்டு எண்ணிக்கையிலோ,
முடிவு அறிவிப்பிலோ –
தவறு எதுவும் நடக்கவில்லை என்றால்,
தான் தில்லுமுல்லு எதையும் செய்யவில்லை என்றால் –  
குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே  ஒருவர்
தானாகவே முன்வந்து விசாரணைக்கு
உட்பட்டிருக்க வேண்டாமா ? விசாரணையை தவிர்க்க
கடைசி வரை ஆனது அனைத்தையும் செய்வது ஏன் ?

தானாகவே விசாரணைக்கு முன்வந்திருந்தால்,
நேர்மையும், பெருந்தன்மையும் வெளிப்பட்டிருக்குமே !
இப்படி ஆளாளுக்கு குறை சொல்ல மாட்டார்களே !

2) 2006 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெளியான
ஒரு காங்கிரஸ் எம் எல் ஏ வின் வெற்றியை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கில் 2011ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்
அவர் தேர்தலில் ஜெயித்தது செல்லாது என்றும் கடந்த
5 ஆண்டுகளில் அவர் வாங்கிய சம்பளத்தை திரும்பக்
கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது.

வாங்கிய சம்பளத்தை மட்டும் திரும்பக் கொடுத்து
விட்டால் – நியாயம் நிலை நிறுத்தப்பட்டதாகக் கொள்ள
முடியுமா ?

3) அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராகத்
தகுதி பெறாத ஒரு நபர் – கேபினட் அமைச்சராக
நிதி அமைச்சகத்திலும், உள்துறை அமைச்சகத்திலும்
பார்த்த கோப்புகள், எடுத்த முடிவுகள், அதன் விளைவுகள் –
இவை எல்லாம் –

எந்த அளவிற்கு சட்டபூர்வமானவை
என்பதை விடுங்கள் -இவை உணர்வுபூர்வமாக எந்த
அளவிற்கு நியாயமானவையாக  அமையும் ?

4)  நான் மட்டும் தானா இப்படி ? என்னைப்போல்
இன்னும் 111 பேர் இருக்கிறார்கள் – அவர்கள்
மீதும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று
சொல்வது இதனை நியாயப்படுத்துமா ?
நான் மட்டும் தானா அயோக்கியன் – ஊரில் இன்னும்
எவ்வளவு அயோக்கியர்கள் இருக்கிறார்கள் – என்னை
மட்டும் ஏன் சொல்கிறீர்கள் என்று ஒருவர்  கேட்டால்
எப்படி இருக்கும் ?

5) அது சரி – நிலுவையில் உள்ள வழக்குகளில்
எத்தனை பேர் இப்படி கேபினட் அமைச்சராக செயல்பட்டுக்
கொண்டு இருக்கிறார்கள் ?

6) சட்டவிதிகளின்படி 6 மாதங்களுக்குள் தேர்தல்
வழக்குகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய
அரசும் சரி, தேர்தல் கமிஷனும் சரி, அரசியல்
கட்சிகளும் சரி – யாரும் வலியுறுத்தாதது ஏன் ?

7) சுப்ரீம் கோர்ட்டும் தேர்தல் வழக்குகளை
விசாரித்து முடிப்பதில்  அநியாயத்திற்கு காலதாமதம்
ஆவது குறித்து கவலைப்படாமல் இருப்பது ஏன் ?

நான் இப்படி ஏன் ஏன் என்று கேள்விகளை எழுப்புவதால்
எதுவும் நடந்து விடப்போவதில்லை – புரிகிறது.

இருந்தாலும் –
கேட்காமல் இருக்க முடியவில்லையே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to குப்புற விழுந்தாகி விட்டது – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை !! – எப்படி ? -simple -மீசை வைத்துக் கொள்ளாதீர்கள்…!

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    அருமையான பதிவு காவிரி மைந்தன்.
    சிறந்த கேள்விகள். இந்தப் பதிவினை அனைவரும் அனைத்து சமூக வலைப் பின்னல்களிலும் பகிரப்பட வேண்டும். ப்பீ சிதம்பரத்திற்கு (நான் இனிஷியலைச் சொன்னேன்!!!) இச்சேதி சென்று சேர வேண்டும். அந்த ஆள் பதில் சொல்லவேண்டும்.

  2. dharma's avatar dharma சொல்கிறார்:

    super !!!!!! but wt v have to do !!!!!!!!!! one possible if one youth rule the india (not telling R_gh__)
    In chennai mayor election,people are not support youth candidate sarath babu !!! bublic have to give supprt youths in political!!!

  3. Srini's avatar Srini சொல்கிறார்:

    சூப்பர் பதிவு சார்.. ஆனால் ஒரு சாதாரண குடிமகனாக இருக்கும் நம்மை போல் ஒருவர் என்ன செய்ய முடியும். உங்கள் ஆல் முடிந்தது ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள், என்னை போல் இருப்பவர் ஒரு கமெண்ட்ஸ் போடலாம் , facebookil ஷேர் பண்ணலாம் …. நிரந்தர தீர்விற்கு அடுத்த electionla மாத்தி வோட்டு போடலாம் ….. ஆனால் இருக்கும் எல்லா அரசியல்வதிகள் எல்லாம் வியதிகளா தானே இருக்கு … யாருக்கு மாத்தி போடறது…. நமக்கு தேவை ஒரு நல்ல நேர்மையான திறமையான leader …..

    உங்களால் ஒரு நல்ல தலைவரை காண்பிக்க முடிந்தால், என்னை போல் இருப்பவர் தோள் கொடுக்க தயாரா இருக்கோம் … செய்வீர்களா kavirimainthen அவர்களே….

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் சீனி,

      சேர்ந்து தேடுவோம் – நிச்சயம் கிடைப்பார் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    அவர் தான் மீசை வைத்துக் கொள்வதில்லையே.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் வெங்கட்ரமணி –

      ???

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. ராஜ ராஜ சோழன்'s avatar ராஜ ராஜ சோழன் சொல்கிறார்:

    இதோ நான் படித்த பத்திரிகையில் வந்திருக்கும்
    ஒரு செய்தியின் சுருக்கம் உங்கள் கவனத்திற்கு-

    நாகூர் ஆண்டவரின் சகோதரராகிய ‘படே சாகிப்
    குல்கானி அவுளியா’ தைக்காலில் இந்து முஸ்லிம்
    இணந்த விசேஷ பிரார்த்தனை கூட்டம் நடத்தி,
    அதில் அடுத்த பிரதமராக சிதம்பரம் ஆக வேண்டும்
    என்று வழிபாடு நடத்தி இருக்கிறார்கள் சில
    காங்கிரஸ்காரர்கள்.
    கும்பகோணம் அருகே பம்பைபடையூர்
    கிராமத்தில் இருக்கிறது பல அற்புதங்கள் நிகழ்த்தி,
    வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்து,
    மெய் சிலிர்க்க வைத்து ஜீவசமாதி அடைந்த
    படே சாகிப் குல்கானி அவுளியா தைக்கால் !

    இதை ஆர்கனைஸ் செய்த காங்கிரஸ் தலைவர்
    சொன்னது –
    “தற்போதைய சூழ்நிலையில், மூத்த காங்கிரஸ்
    அமைச்சரான பிரனாப் முகர்ஜி ஜனாதிபதி ஆகிவிடும்
    வாய்ப்பு இருக்கிறது. மன்மோகன் சிங் கெட்ட பெயர்
    வாங்கி கட்டாய ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு
    விட்டார். அன்னை சோனியாவிற்கு பிரதமர் பதவியில்
    விருப்பம் இல்லை. ராகுல் காந்திக்கு இன்னும்
    வயதும், அனுபவமும் போதாது.
    இந்த சூழ்நிலையில் பிரதமர் பதவிக்கு அனைத்து
    வகையிலும் பொருத்தமான ஒரே சீனியர் அமைச்சர்
    சிதம்பரம் தான்.
    எனவே எல்லாம் நல்லபடியாக நடந்து சிதம்பரம்
    அவர்கள் பிரதமர் பதவி ஏற்கவே இந்த பிரார்த்தனை”

    “வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுக்கும்”
    படே சாகிப் குல்கானி அவுளியா தைக்கால் இவர்களை
    மட்டும் கைவிட்டு விடுமா என்ன ?

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மிகவும் உண்மையான,நேர்மையான,தெளிவான பதிவு.வாழ்த்துக்கள்.

    வருடம் 1938.
    இந்தியா தேசிய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானத்தின் மேல் வாக்கெடுப்பு. மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே இருந்த உறவும் சற்று (கொள்கைரீதியாக)விரிசல் அடைந்த தருணமது.

    அந்த தீர்மானம் காந்திஜியால் கொண்டுவரப்பட்டு,கட்சி தலைவராக இருந்த நேதாஜியால் எதிர்க்கப்பட்டது.எனவே இந்த வாக்கெடுப்பு.

    வாக்கெடுப்பு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன .
    முடிவை பார்த்த நேதாஜி சொன்னார்..

    “இதில் தவறு இருக்கிறது என நினைக்கிறேன்.தீர்மானத்தை எதிர்த்து ஒரு ஒட்டு வந்துள்ளது.தீர்மானத்தை என்னைத்தவிர ஏனைய உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்றும் நான் அறிவேன்.நானோ என் ஓட்டை,தார்மீக அடிப்படையில், ஆதரவிற்குதான் போட்டேன்.எனவே இந்த ஒரு ஒட்டு எப்படி வந்திருக்க முடியும்?”

    காந்திஜி சொன்னார்.

    “அது என் ஓட்டுதான்.நான் என் ஓட்டை தார்மீக அடிப்படையில்,
    எதிர்ப்பிற்கு போட்டேன்!”

    இப்பேர்பட்ட மகான்கள் அலங்கரித்த ஒரு கட்சியில்,இப்படி பல புல்லுருவிகள் நுழைந்து சின்னாபின்னமாக்கியது எப்படி.??

    சிதம்பர ரகசியம்தான்!

    முடிவாக ஒன்று..

    “குரங்கு கையில் பூமாலை” என்பது நம்மிடையே நிலவும் பிரசித்தி பெற்ற சொலவடை.இது “சின்னாபின்னம்” என்பதை குறிக்கும்.

    ஆனால் சில சமயம் குரங்குகள் கூட பூமாலையை சிறிது பிய்த்துவிட்டு தூக்கி எறிந்து விடலாம்.எனவே

    உண்மையான ,

    முழுமையான ,

    நூறு சதவிகிதம் ,அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நிரூபிக்கப்பட்ட,

    “சின்னாபின்னம்” என்பதை குறிக்கும் சொலவடையை,

    நான் தருகிறேன்..அது..

    “இந்தியர்கள் கையில் ஜனநாயகம்!”

  7. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    “சிதம்பரம் பதவி விலக தேவையில்லை” என்று நம்ப தாத்தா ஒரு “googly ” போட்டார் கவனித்தீர்களா? இக்கட்டான நேரங்களில் ஒரு திருடனுக்கு இன்னொரு திருடன் தான் தோள் கொடுப்பான் என்பது எவ்வளவு உண்மை!

  8. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    யாருக்கும் வெட்கமில்லை.

  9. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.