“சத்யமேவ ஜெயதே ” – (மவுலானா) ஆமீர் கான் (ஆசாத்)
இந்த மாதம் 12-ந்தேதி துவங்கி – ஒவ்வொரு ஞாயிறு காலையும் 11 மணி முதல் 12.30 வரை அனைத்து ஸ்டார் சானல்களிலும், ஈ டிவி சானல்களிலும் தூர்தர்ஷனின நேஷனல் மற்றும் அனைத்து மாநில சானல்களிலும் ஒளிபரப்பப்படுகிறது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆமீர் கான் தயாரித்து வழங்கும் “சத்யமேவ ஜெயதே” என்கிற தொடர்.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் தடவையாக இந்தியில் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு (டப்பிங் செய்யப்பட்டு) வெளியிடப்படுகிறது.
முதலில் இந்த தொலைக்காட்சி தொடர் பற்றிய சில சிறப்புகள் – விவரங்கள் –
இது ஒரு சமுதாய விழிப்புணர்வு தொடர். இந்திய சமுதாயத்தில் நிலவும் சில அவலங்களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பற்றி விவரமாக தொகுத்தளிக்கிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பு ! எந்த தலைப்பு என்கிற விவரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் வரை மிகவும் ரகசியமாக பாதுகாக்கப் படுகிறது. துவக்கத்தில் பதிமூன்று வாரங்கள் வரை இந்த நிகழ்ச்சி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டார் குழுமமும் , ஆமீர் கான் குழுவினரும் சேர்ந்து இந்த தொடருக்கான கான்செப்ட்களை (யோசனைகளை) உருவாக்கி – சுமார் இரண்டு வருடங்களாக இந்தியாவில் பல மாநிலங்களுக்கு பயணம் செய்து பல விவரங்களை சேகரித்து படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
முதலில் தலைப்பு பற்றிய ஒரு விளக்கம். பின்னர் பாதிக்கப்பட்ட சில நபர்களுடன் பேட்டி – கலந்துரையாடல், அதுபற்றிய புள்ளி விவரங்கள், அந்த அவலத்தை போக்க சமூகம் எந்த வகையில் ஆக்கபூர்வமாக செயல்படலாம் என்பது பற்றி சில கருத்துகள். விறுவிறுப்பு குறையாமல் இருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆடியன்ஸ் கூட்டம் -இடையிடையே அவர்களுடன் உரையாடல் – ஒன்றிரண்டு பாடல்கள் – இப்படி போகிறது தொடர்.
முதல் வாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு – “பெண் சிசுக் கொலை” இரண்டாவது வாரம் – “பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர் சிறுமியரின் நிலை” மூன்றாவது வாரம் ( 20/05/2012 ) – ” வரதட்சிணை கொடுமை”
இந்த தொடரை துவக்கும் முன்னர் இந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. விளம்பரங்கள் புதிய உத்திகளுடன் செய்யப்பட்டன. சாதாரணமாக திரைப்படங்களை பற்றி தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வரும். ஆனால் இது விஷயத்தில் நேர் எதிராக திரைப்பட அரங்குகளில் இந்த டிவி தொடர்பற்றிய விளம்பரங்கள் செய்யப்பட்டன. பெரிய நகரங்களில் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களின் நுழைவாயில்களில் திரைப்படங்களை காண வரும் பொதுமக்களுடன் பேட்டிகள் நடத்தப்பட்டு தியேட்டரில் – இடைவேளையில் அவை திரையிடப்பட்டு பரபரப்பாக அது பற்றி மக்களிடையே பேச வைக்கப்பட்டன.
அமீர்கானுக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து காரணமாக நிஜமாகவே நிறைய பேர் இந்த நிகழ்ச்சி குறித்து ஆர்வமாக இருந்தனர்.
இந்த தொடரின் இடையே விளம்பரங்கள் வருவது குறித்து ஆமீர்கான் மிகக் கடுமையான நிலையை மேற்கொள்கிறார் என்றும் விறுவிறுப்பை குறைக்கும் வகையில் அதிக விளம்பரங்கள் வருவதை அவர் விரும்பவில்லை என்றும் எனவே அதிக விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என்றும் செய்தி பரப்பப்பட்டது..
அதற்கேற்றாற்போல் – முதல் வாரம் – கிட்டத்தட்ட விளம்பரமே கிடையாது என்று சொல்லலாம். நிகழ்ச்சி முடிந்தவுடன் தயாரிப்பாளர்களால் பல புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்தியா முழுவதும் சுமார் எட்டு கோடி பேர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்ததாகவும், நிகழ்ச்சி முடிந்தவுடன் சுமார் ஒரு லட்சம் பேர் ஆமீர் கானுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது வாரம் சில விளம்பரங்கள் இருந்தன.
மூன்றாவது வாரம்( நேற்று முன் தினம் ) 90 நிமிட நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் விளம்பரங்கள் வந்தன ! அதிக விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று சொன்னதன் மூலம் – போட்டி போட்டுக் கொண்டு விளம்பரதாரர்களை வரவழைத்ததே ஒரு புதிய உத்தி !!
நல்ல மார்க்கெட் வால்யூவுடன் இருக்கும் ஒரு முன்னணி நடிகர் இவ்வாறு ஒரு சமுதாய நோக்குடன் தொலைக்காட்சி தொடரை தயாரித்து நடிப்பது நிச்சயமாக ஒரு பெரிய விஷயம் தான். அவரது சமுதாய அக்கறை பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் சினிமா நடிகர்கள் யாரும் செய்ய துணியாததை செய்ய முன் வந்ததற்காக அமீர்கானுக்கு பாராட்டுகள் குவிந்தன ! ஆமீர்கான் லட்சக்கணக்கானோரின் மனசாட்சியை உலுக்கி எடுத்து விட்டார். அவர் நிகழ்த்துவது டிவி தொடர் அல்ல – ஒரு மிகப்பெரிய இயக்கம். ஆமீர்கான் காட்டும் பாதையில் பயணம் செய்வதே சமுதாயத்திற்கு விடிவை ஏற்படுத்தும் – என்கிற ரீதியில் – ஏகப்பட்ட பாராட்டுகள் !
தொடர் பற்றிய விவரங்கள் முடிந்தன – இப்போது ஆமீர்கான் பற்றிய சில விவரங்கள் –
47 வயதாகும் ஆமீர் கான் இந்தி திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். இவரது தந்தை தாகிர் ஹுசேன் அந்த நாளைய (1960 களில் ) இந்தி திரைப்பட தயாரிப்பாளர். மாமா நாசிர் ஹுசேன் – திரைப்பட தயாரிப்பாளரும் ஒரு புகழ் பெற்ற அந்நாளைய (1970- 80 ) முன்னணி குணசித்திர நடிகரும் கூட ! (நான் கூட இவர் படங்களை பார்த்திருக்கிறேன் ! ) எனவே ஆமீர்கான் மிகச்சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 21 வயதில் இவரை கதாநாயகனாக வைத்து இவரது மாமா நாசிர் ஹுசேன் தயாரித்த “கயாமத் சே கயாமத் தக்” ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். அதிலிருந்தே இவர் முன்னணி கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
அந்த படத்தில் தன்னுடன் நடித்த ரீனா தத்தா என்கிற நடிகையை தன்னுடைய 21-வது வயதிலேயே காதல் திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளும் பிறந்த பின்னர் – ரீனா தத்தாவை விவாகரத்து செய்தார். குழந்தைகள் தாயுடன் இருக்கின்றன.
பின்னர் தன்னுடன் துணை இயக்குனராக பணியாற்றி வந்த கிரண் ராவ் என்கிற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இருவரும் சேர்ந்து – வாடகைத் தாய் (surrogate mother) மூலம் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டனர். அந்த ஆண் குழந்தைக்கு ஆமீர் காண சூட்டியுள்ள பெயர் – ஆசாத் ராவ் கான் !
(சுதந்திர போராட்ட வீரரான மவுலானா அபுல் கலாம் ஆசாத் இவருக்கு தூரத்து சொந்தம். எனவே – ஆசாத் – அவரை நினைவு கொள்ளவும், – ராவ் – மனைவியைக் குறிக்கவும் (கிரண் ராவ் ! ) – கான் – இவரது பரம்பரை என்று குறிப்பிடவும் ! )
ஆமீர்கான் மிகவும் யோசித்து செயல்படுபவர். ஒவ்வொரு அடியையும் மிக கவனத்துடன் எடுத்து வைப்பவர். மிகவும் முயன்று ஒரு இமேஜை உருவாக்கி, மிக கவனமாக அதை பாதுகாத்து வருகிறார் ! இந்தி திரையுலகில் என்றும் பேசப்படக்கூடிய “லகான்” “தாரே ஜாமீன் பர்” போன்ற மிகச்சிறந்த இந்தி படங்கள் சிலவற்றை ஆமீர் கான் தயாரித்திருக்கிறார். வெறும் நடிகர் மட்டுமல்ல – ஒரு சிறந்த சிந்தனையாளர் – சமுதாய அக்கறை உள்ளவர் என்கிற அளவில் ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார்.
ஆமீர்கான் புராணம் முடிந்தது –
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
திரைப்படத்துறையில் நன்கு சம்பாதிக்கக் கூடிய நேரத்தில் சமுதாய நோக்குடன் தொலைக்காட்சி தொடர் எடுப்பதில் நேரத்தையும் கவனத்தையும் செலுத்துகிறாரே – என்று பத்திரிகைகளும், வலையுலகமும், இவரை பாராட்டித் தள்ளுகின்றன.
எல்லாம் சரி தான் – ஆனால் இந்த தொடர் மற்றும் ஆமீர்கான் குறித்த இரண்டு முக்கியமான விஷயங்கள் நெருடுகின்றன –
ஒன்று – தயாரிப்பிற்கான முழு செலவையும் ஸ்பான்சர் ஏற்கிறார். ஆமீர் கான் ஒவ்வொரு எபிசொடுக்கும் ( அதாவது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ) மூன்றரை கோடி ரூபாய் தனியே .சம்பளம் பெறுகிறார் ! இந்த விஷயம் வெளியில் சொல்லப்படுவதில்லை. அதாவது நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு தான் சமூக சேவை செய்கிறார் என்பது வெளியில் தெரியாமல் அவர் நன்கு சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகளை தியாகம் செய்து சமூக சேவையாக இந்த தொடரை தயாரிப்பது போல் இமேஜ உருவாக்குகிறார்கள். உண்மையில் இந்த 13 வாரங்களில் அவர் சுமார் 45.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பார் !! ( நான்கு திரைப்படங்களில் அவர் பெறக்கூடிய மொத்த ஊதியம் !)
இரண்டு – அவர் எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும், திட்டமிட்டு எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் போடுவது போல் அமைகின்றன.
உதாரணம் – இந்த வார நிகழ்ச்சியின் போது – ஆமீர்கானிடம் – தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியன்சில் – ஒருவர் – ” நீங்கள் சுதந்திர போராட்ட வீரர் மவுலானா அபுல் கலாம் ஆசாதின் ரத்தமல்லவா – உங்களைத்தவிர வேறு யாரால் இத்தகைய நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு போக முடியும் ?” என்று கேட்கிறார் !
இந்த தொடருக்கு வசன அமைப்பு, டைரக்ஷன் – மேற்பார்வை எல்லாமே ஆமீர்கான் தான். மேலும் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்டுதான் படமாக்கப்படுகின்றன. எனவே இது தற்செயலாக நடந்ததாக கூற முடியாது. திட்டமிட்டு சேர்க்கப்பட்ட வசனம் தான் இது !!
இன்னொரு முக்கியமான விஷயம் – இந்த தொடர் தயாரிப்பின் பின்னணியில் முழுமையாக இருந்து செயல்படுவது – இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி !!!
ஏற்கெனவே மாநில அளவில் பல திரைப்பட நடிகர்களை அரசியல் தலைவர்களாக உருவாக்கி விட்டு – நாம் பட்டுக்கொண்டிருக்கும் அவஸ்தை போதாதென்று –
இப்போது அகில இந்திய அளவில் – எல்லாருக்கும் பொதுவாக அறிமுகமான – எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் சமூக சிந்தனை உடையவரான ஒரு நடிகரை அரசியலில் இறக்கத் திட்டம் உருவாவதாகத் தோன்றுகிறது.
இந்த பின்னணிகளை எல்லாம் மனதில் இருத்திக்கொண்டு – இந்த “சத்யமேவ ஜெயதே” தொடரை தாராளமாக அனைவரும் பார்க்கலாம் !!!




நிறைய தகவல்கள் – நன்றி அதற்க்கு. நானும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தேன் – கண்ணில் நீர் வராமல் இதை பார்க்க முடியாது – இது டிவி தான் / கணணி தான் என்று நன்கு தெரிந்தும் அழாமல் இருக்க முடியவில்லை – அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள்.
இதை பற்றி நண்பரிடம் பேசிய பொழுது – வேறு ஒரு பரிணாமம் அறிந்தேன்… அதாவது இது வரை நடந்த உலகப்போர் , பேரழிவு ..போன்றவற்றில் நிறைய ஆண்கள் அழிந்தாலும் , இயற்க்கை தானாகவே அந்த விகிதாசாரத்தை சமன் படுத்தி விடும் என்று வரலாறு சொல்கிறது . ( ஒரு நீண்ட கால கட்டத்தில் ) …
அடுத்த நிகழ்ச்சி சிறார் பாலியல் பற்றியது… கொஞ்சம் நிறைய பயபடுத்தி விட்டாரோ என்று தோன்றியது, இது போன்ற தவறுகள் இப்போ கொஞ்சம் கூடி விட்டாலும், அவர் கூறுவது போல் 50% அதாவது ஒன்றில் இரண்டு குழந்தை பாதிப்பு உண்டாகும் என்பது கொஞ்சம் கூடுதல் தான், ..ஆனால் அவர் குழந்தைகளுடன் நடத்திய அந்த workshop அருமை
மூன்றாவது நிகழ்ச்சி தான் கொஞ்சம் நெருடல் … பெண்களை போலவே இப்போது 498 a மூலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஏராளம். எனக்கு தெரிந்து கேரளாவில் முஸ்லிம் சமூகத்தில் இந்த கொடுமை ( வரதட்சனை ) நிறைய உண்டு – அதனால் அவர்கள் மாப்பிளை கிடைக்காமல் வாணியம் பாடி / வேலூர் போன்ற ஊர்களில் உள்ள வேலை ( விலை) வெட்டி இல்லாத தமிழ் பசங்களுக்கு கட்டி கொடுத்து அதனால் வரும் கொடுமை இத்தியாதி …. நான் தமிழ் வார இதழ்களில் வாசித்ததுண்டு… ஆனால் நிகழ்ச்சியில் , இது போன்ற கொடுமை முஸ்லிம் சமூகத்தில் இல்லை அல்லது வெகுவாக குறைந்து விட்டது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கினார்.
எனக்கு தெரிந்து இது ப்ராமின சமுதாயத்தில் வெகுவாக குறைவு. இருந்தாலும் போக வேண்டிய பயணம் வெகு தூரம் ( காஞ்சி பெரியவர் – பட்டு புடவை கல்யாணத்தில் உண்டென்றால் மடத்தில் பத்திரிக்கை வைக்க கூடாது என்று சொன்னதாக ஒரு தகவல் உண்டு …அதெல்லாம் அந்த காலம் )
சத்யமேவ ஜெயதே! தலைப்பு நன்றாகவே உள்ளது. எனக்கு இந்த தொடரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் தங்களது விமர்சனத்தின் அடிப்படையில் எனது கருத்து என்னவென்றால் 1 — கோடிகணக்கில்
சம்பளம் வாங்கி கொண்டுதான் சமுதாயப் பணி செய்கிறார். ஒரு முறையேனும் சம்பளம் பெறாமல் பணி
செய்திருந்தால் அதை சமுதாயப்பணியாக ஏற்றுக்கொள்ளலாம். மேலும் குறைந்த விளம்பரம் என்று கூறியே
அதிக விளம்பரத்தை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதுபோல் வசனத்தை தொடரின் விறுவிறுப்புக்காக
உரிய முறையில் சேர்த்து கொள்ளலாம். (உதாரணம் . கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது
கொல்றாங்கப்பா என்ற வசனம் இடையில் செருகபட்டதாக கூற கேட்டுள்ளேன் ) பொதுவாக நாடகத்தை
சமுதாய பணியாகவும். உண்மையான சமுதாயப்பணியை நாடகமாகவும் திருத்திக்கூறலாம். எனவே இது
நாடகமா? அல்லது சமுதாயப்பணியா? என போகப்போகத்தான் தெரியும். சமுதாயப்பணியாக இருப்பின்
மனதார பாராட்ட வேண்டியது நமது கடமை.
காவிரி மைந்தன் அவர்களே,
மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
நடுநிலை தவறாமல், நல்ல தொடரையும் குறை
சொல்லாமல், அதே சமயத்தில் பின்னணியில் என்ன
நடக்கிறது என்பதையும் அலசி ஆராய்ந்து
அனைத்து விவரங்களையும் தொகுத்து –
உண்மையிலேயே உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது.
நீங்கள் புதிதாக ஏதாவது எழுதி இருக்கிறீர்களா என்று
உங்கள் வலைத்தளத்தை தினமும் ஆவலுடன் பார்க்கிறேன்.
உங்கள் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி.
காவிரிமைந்தன்,
தான் சொல்ல வந்ததை சரியாகவும், அதே நேரத்தில் பல விஜயங்களை திரட்டி ஒரு கோர்வையாக எப்போதும் படைத்து, மற்றவர்கள் மேல் திணிக்காமல், அவரவர் புரியும் தன்மைக்கு விட்டு விடுவது சிறப்பு
உங்கள் படைப்புக்கு நன்றி,
இரா. கண்ணன்
நல்ல அலசல்..அருமையான பதிவு..
இந்தியா மக்களை “ரட்சிக்க” இன்னொரு “கோஷ்டி” கிளம்புகிறது எனத்தோன்றுகிறது.
இவர்களிடமிருந்து இந்தியர்களை இறைவன் ரட்சிப்பாராக!
அமீர்கான் பற்றி நிறைய தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.சத்யமேவ ஜெயதே பகுதிகளையும் கொஞ்சம் அலசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கு,
சம்பளம் வாங்கியும் கடமையை செய்யாத அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர் போன்றோர் இருக்கும் நாட்டில் ஒரு Entertainer சம்பளம் வாங்கி சமூக விழிப்புணர்ச்சி உண்டு பண்ணுவதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. நான்கு படத்தில் காதல் பண்ணுவதற்கு பதில் இதை தேர்ந்து எடுத்ததற்கு அவரை பாராட்டலாம். இந்தியாவில் எத்தனை நடிகர்கள் இதை செய்கிறார்கள்? இதை வைத்து அரசியலில் நுழைய அடித்தளம் போடுகிறார் என்பதை கூட அவரது குறிக்கோளுக்கான உழைப்பு என்றே பார்க்க தோன்றுகிறது.
என்ன நமது முன்னாள், இந்நாள் முதல்வர்கள் போல பதவியை அடைய குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காவிட்டால் சரி.
நிற்க, ஒரு முழுமையான கட்டுரையை ஒவ்வொரும் முறையும் பதிவிட உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி!