கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..!

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..!

மனம் ஒரு விசித்திரமான பிரதேசம். அங்கு யாருக்கு இடம் கொடுக்கலாம், யாருக்குக் கூடாது என்பதை நாம் தீர்மானிக்க முடிவதில்லை.

அது தானாகவே முடிவெடுத்து விடுகிறது ! சட்டம், சம்பிரதாயம், சூழ்நிலை, உத்தியோகம் – இவை எல்லாவற்றையும் தாண்டியது மனசாட்சி. மனசாட்சி சொல்கிற வழியில் வாழ முடிந்தால் – அதை விடப் பெரிய கொடுப்பினை வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை.

அரசாங்க ஊழியராக வேலை செய்யும்போது, ஒருவரால் எவ்வளவு தூரம் மனசாட்சிக்கு இடம் கொடுத்து வேலை செய்ய முடியும் ? நான் சில வித்தியாசமான சம்பவங்களை என் உத்தியோக வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கிறது. அவற்றில் ஒன்றினை இங்கு சொல்ல விரும்புகிறேன். (இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை மாற்றி இருக்கிறேன்.)

உத்திரப் பிரதேசத்தில், மீரட் நகருக்கும் – காஜியாபாத் நகருக்கும் இடைப்பட்ட ஒரு ஊர். அங்கிருக்கும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த தொழிற்சாலை ஒன்றில், நிர்வாகப் பிரிவில் ஒரு முக்கியப் பொறுப்பில் பணி புரிந்து வந்தேன் நான். நான் வேறு ஒரு ஊரிலிருந்து அப்போது தான் அங்கு மாற்றலாகி வந்திருந்தேன். முற்றிலும் புதிய சூழ்நிலை ! எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் – பொதுவாகவே உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் தான் இருக்கும். கொலை, கொள்ளைகள் சர்வ சகஜம்.

நான் பணி புரிந்த தொழிற்சாலையிலேயே பல தொழிலாளர்கள் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிக்கி இருந்தார்கள்.கோர்ட்டில் வழக்கு நடக்கும் அதே நேரத்தில், இலாகா ரீதியாகவும் அந்த வழக்குகளை கையாள வேண்டி இருந்தது. பொதுவாக, அரசு ஊழியர்கள் ஏதேனும் கிரிமினல் வழக்குகளில் சிக்கி இருந்தால், அவர்கள் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் (suspend) செய்யப்படுவார்கள். வழக்கு முடிந்த பிறகு, தண்டனை பெற்றால் -அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். ஒரு வேளை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டால் – மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

நிர்வாகத்தில் – இந்த பொறுப்பை கையாளும் அதிகாரி – அடிக்கடி கிரிமினல் கோர்ட்டுகளுக்கு போக வேண்டி இருக்கும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை -கோர்ட்டில், நேரில் சந்திக்க நேரிடும். பொதுவாக இந்த தொழிலாளர்கள் – நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரோத நோக்கிலேயே பார்ப்பார்கள். எனவே – சங்கடமான இந்த வேலையை, புதிதாக அங்கு போய்ச்சேர்ந்த என் தலையில் கட்டி விட்டார்கள் உள்ளூர் அதிகாரிகள். எனக்கு சட்டப் படிப்பு பின்னணியாக இருந்தது அவர்களுக்கு காரணம் காட்ட சுலபமாகி விட்டது. அதில் ஒரு வழக்கு –

தொழிற்சாலையில், மெயின்டெனன்ஸ் பிரிவில், வெல்டராகப் பணிபுரிந்து வந்த பிஜெந்தர் சிங் சம்பந்தப்பட்டது. அவன், அங்கீகாரம் பெறாத ஒரு முரட்டு யூனியனின் செயலாளரும் கூட. பக்கத்து கிராமம் ஒன்றைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவரைக் கொலை செய்து விட்டதாக அவன் மீது கொலைக் குற்றச்சாட்டு. நான் அந்த ஊருக்கு போவதற்கு முன்னரே,வழக்கு, காஜியாபாத் கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது. துவக்கத்தில், கொலைக்குற்றத்திற்காக, போலீசாரால், அவன் கைது செய்யப்பட்டவுடன், வேலையிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறான். பின்னர், சில மாதங்கள் கழித்து ஜாமீன் பெற்று, வெளியே வந்து விட்டான். ஆனால் வழக்கு முடியும் வரை பணி நீக்க உத்தரவு அப்படியே தான் இருக்கும். ஒவ்வொரு ஹியரிங்குக்கும் அவன் கோர்ட்டுக்கு வர வேண்டும்.

தொழிற்சாலை நிர்வாகமும் இந்த வழக்கில் ஒரு சாட்சியாகப் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், ஒவ்வொரு ஹியரிங்குக்கும் நானும் செல்ல வேண்டி இருந்தது. எனக்கு முன் இதை கையாண்டு வந்த அதிகாரியுடன், பிஜெந்தர் சிங் விரோதமாகவே பழகி இருக்கிறான்.

என்னைப் பொருத்த வரையில், எனக்கு இத்தகைய அணுகுமுறைகளில் நம்பிக்கை இல்லை. எதையும் வெளிப்படையாக, மனசாட்சியுடன் அணுக வேண்டும் என்று நினைப்பவன் நான். என் பார்வையில் – எனக்கு இதில் தனிப்பட்ட முறையில் பிஜெந்தர் சிங்கோடு எந்த விரோதமும் இல்லை. காவல் துறை அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறது. தொழிற்சாலை நிர்வாகத்திடமிருந்து, பிஜெந்தர் சிங் பற்றிய சில தகவல்களை அதிகாரபூர்வமாக பெறுவதற்காக, தொழிற்சாலை நிர்வாகம்- இந்த வழக்கில் ஒரு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறது. நிர்வாகத்தின் பிரதிநிதியாக நான் போகிறேன்.

வழக்கு பற்றிய விவரங்களை எல்லாம் படித்து விட்டு, நான் முதல் நாள் கோர்ட் போனவுடன், பிஜெந்தர் சிங யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவனுடன் என்னை அறிமுகம் செய்து கொண்டு விட்டு, சகஜமாக இந்தியில் பேச ஆரம்பித்தேன். பிஜெந்தர் சிங்கிற்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். தொழிற்சாலை நிர்வாகம் சார்பாக வந்திருக்கும் அதிகாரி, கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் அவனுடன் சகஜமாக அறிமுகம் செய்து கொண்டு பேசுவது -அவனுக்கு அதிசயமாக இருந்திருக்கிறது !

இது போன்ற வழக்குகள் எல்லாம் அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ளப்படாது. இழுத்தடித்துக் கொண்டே இருக்கும். ஐந்து- ஆறு ஹியரிங்குகள் கடந்த நிலையில் – பிஜெந்தர் சிங் எனக்கு மிகவும் பழக்கமாகி விட்டான். கோர்ட் இடைவேளையில், ஒன்றாகவே டீ, பஜ்ஜியா சாப்பிடும் அளவிற்கு நெருங்கி விட்டோம். என் சுபாவத்தை நன்கு புரிந்து கொண்ட அவன், மதராசிகள் (தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்) மிகவும் நல்லவர்கள். இந்த ஊர்க்காரர்கள் போல் அல்ல என்று என்னிடமே கூற ஆரம்பித்து விட்டான் !

ஒரு நாள், கோர்ட் இடைவேளையில், வெளியே மரத்தடியில் நின்று சும்மா பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம், விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தானாகவே மனம் திறந்து அந்த கொலை  சம்பவம் பற்றிய உண்மை விவரங்களை கூறினான். அந்த சம்பவம் இப்படிப் போகிறது –

(இடுகை நீண்டு விட்டது – நாளை தொடர்கிறேனே…)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..!

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    தொடருங்கள்.

  2. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    சரியான இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து வீட்டிர்களே சார் 🙂 காத்திருக்கிறேன்.

  3. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    முதிர்ச்சியடைந்த பணியாளரின் சரியான அணுகுமுறை.

  4. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    // நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் –

    சட்டப்படி, கொலைக் குற்றத்திற்காக பிஜெந்தர் சிங் தண்டனை பெற்றிருக்க வேண்டும் என்றா ? அல்லது

    ராஜ்குமார் சிங்கிற்கு, சட்டமும் – நீதிமன்றமும் கொடுக்கத் தவறிய தண்டனையைத் தான் பிஜெந்தர் சிங் கொடுத்தான் – எனவே, அவன் தப்புவதற்கு துணை நின்றதில் எந்த தவறும் இல்லை என்றா ? அல்லது

    அரசு ஊழியராக நான் என் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்றா ? //

    சட்டம் சினிமா தவிர வேறு எங்கும் தன் கடமையை சரியாக செய்ததில்லை.
    அதனால சட்டத்த விடுங்க…
    சரியா தவறான்னு பார்க்க ஆரம்பிச்சா அது முடிவற்றது …
    கொலைக்கு சாட்சிய இருந்த வேலையளுக்கு தெரியும் என்ன நடந்தது னுன்னு
    இப்ப அந்த வேலையளுக்கு சாட்சி சரியா இருந்தா கொலை பண்ணினனலும் தப்பிக்கலாம்னு புரிஞ்சு இருக்கும்.
    அரசு ஊழியர் கடமைன்னு பார்த்தா கோர்ட்டுக்கு போய் சாட்சி சொல்வதுடன் முடிஞ்சது .

    இப்போ முக்கியமான பிரச்சன்னை என்னன்னா உங்களுக்கு ஆகாதவங்க .. இல்லை கொல்லப்பட ராஜ்குமாற்கு வேண்டியவங்க அல்லது வழக்கில் அரசு சார்பா ஆஜரான பி பி …இத படிச்ச மறுவிசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்யலாம்.
    பொய் சாட்சி சொல்லி தப்புவதற்கு துணை நின்றேனு நிங்களே சொல்லி இருக்கீங்க கோர்ட்டு அவமதிப்பு , பொய் சாட்சி சொன்னது , குற்ற சதிக்கு உடந்தைன்னு நிங்களும் உள்ள போக வேண்டியும் வரலாம்…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வினோத்,

      உங்களுக்கு தான் நான் உள்ளே போவதில் எவ்வளவு மகிழ்ச்சி !

      அப்பாடா – இவ்வளவு நல்ல நண்பர் கிடைக்க நான் எவ்வளவு
      கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      உங்கள் நல்லெண்ணத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நண்பரே உங்களின் நிலையில் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். நீங்கள் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு, இருக்கின்ற தஸ்தாவேஜுகளைக் கொண்டு, கூறவேண்டியதை சரியாக கூறியுள்ளீர்கள்.
    ராவணனை கொன்றதை தீபாவளியாக கொண்டாடவில்லையா?
    அவளைப்பொறுத்த வரை கொல்லப்பட்டவன் ராவணனே!
    கொலை செய்தவனோ, வேறு எந்த உள்நோக்கோடும் இதை செய்யவுமில்லை.
    so
    குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்
    என்பது போல,
    கொல்லப்பட்டவன், கொல்லப்படவேண்டியவனே!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர்களே.

      என் பணிக்காலத்தில் நிகழ்ந்த சில பதைப்பூட்டும்
      நிகழ்ச்சிகளை என் மனைவியிடமோ மற்ற குடும்ப
      உறுப்பினர்களிடமோ கூட இது வரை சொன்னதில்லை –
      அவர்களுக்கு டென்ஷன் ஏற்படுத்த வேண்டாம் என்பதே
      காரணம் !

      இப்போது என் எண்ணங்களை வெளியிட இந்த வலைத்தளம்
      ஒரு பெரும் வடிகாலாக இருக்கிறது.
      உங்களுக்கு இது பிடித்திருந்தால் – இது போன்ற
      இன்னும் சில முக்கிய நிகழ்வுகளையும் நேரம் வரும்போது
      உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

      நன்றி.
      – வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • vinoth's avatar vinoth சொல்கிறார்:

        இந்த மாதிரி விசயத்த எழுதும்போது எச்சரிக்கைய இருங்கன்னு சொன்னேன்

        அவ்வளவு தன்

  6. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    // உங்களுக்கு தான் நான் உள்ளே போவதில் எவ்வளவு மகிழ்ச்சி !
    அப்பாடா – இவ்வளவு நல்ல நண்பர் கிடைக்க நான் எவ்வளவு
    கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    உங்கள் நல்லெண்ணத்துக்கு மிக்க நன்றி நண்பரே !..//

    அப்படி இல்லை நீங்க உள்ள போவதில் எனக்கு என்ன கெடைக்க போகுது ..

    இந்த மாதிரி விசயத்த எழுதும்போது எச்சரிக்கைய இருங்கன்னு சொன்னேன்

    அவ்வளவு தன்

    நன்றி
    வினோத்

  7. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    சுயநலம் துறந்து சமூகத்தில் அநியாயங்கள் நிகழும் போது பொங்கி எழுந்து தத்தம் வழியில் போரிட்டவர்கள் தான் காந்தி, பகத் சிங், பிரபாகரன் போன்றோர். பிஜெந்தர் சிங் கூட என் பார்வையில் கொலையாளி அல்ல… போராளி! போராளிக்கு துணை நிற்கும் பாக்கியம் சகலருக்கும் கிடைப்பதில்லை. உங்களை பார்த்து பொறாமை படுகிறேன்.

  8. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை.,
    நீங்கள் செய்தது சட்டப்படி குற்றமாக இருக்கலாம்.ஆனால் தர்மத்தின்படி மிக சரியான செயல்.அதே சமயம் வினோத் சொன்னதும் சரி என்றே படுகிறது.இதை பதிவு செய்வது அவ்வளவு உசிதம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.இன்னும் நமக்கு நல்லாட்சி வரவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
    நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் கண்பத், நண்பர் வினோத் –

      “தர்மம் தலை காக்கும்” என்றே நம்புகிறேன்.
      இருந்தாலும் உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  9. thamizhan's avatar thamizhan சொல்கிறார்:

    இரண்டாம் பாகம் திறக்க முடியவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.