நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது ?

நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது  ?

அண்மையில் பரபரப்பான ஒரு செய்தி வெளி வந்தது.
பத்து லட்சம் கோடி நிலக்கரி கொள்ளை –
(COAL-GATE !) என்று !
வெளிவந்த சூட்டிலேயே உடனேயே
அடங்கியும் போனது. அதாவது இப்போதைக்கு
அடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

கல்லில் இருந்து கூட நார் எடுக்க
கற்று வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு
நிலக்கரி சுரங்கங்கள்  போன்ற துறைகள்
கிடைத்தால் என்ன தான்  செய்ய முடியாது ?

விதம் விதமாக, அரசாங்கத்தில் எந்த இலாகாவை
எடுத்துக் கொண்டாலும் அதில் சம்பாதிப்பதற்கு
ஆயிரம் வழிகள் இருக்கின்றன –
ஒன்றுமே இல்லாவிட்டாலும் கூட புதிதாக வழியை
உண்டு பண்ணி விடுகிறார்கள்.

நிலக்கரி சுரங்கங்கள் பற்றிய நேரடி அனுபவம்
நமக்கு அநேகமாக கிடையாது.
நீண்ட நாட்களுக்கு முன் “காலா பத்தர்” என்கிற
பெயரில் அமிதாப் பச்சன் நடித்து ஒரு இந்தி
திரைப்படம் வந்தது. அதைப்  பார்த்தவர்களுக்கு
இது நன்கு புரியும். பீகாரில் ஒரு நிலக்கரி
சுரங்கத்தில் பணி புரியும் தொழிலாளர்களையும்,
அவர்களைச் சுற்றி நகரும் நிகழ்வுகளையும் வைத்து.
மிக மோசமான சூழ்நிலையில்,
(very bad working environment),
பாதுகாப்பற்ற விதங்களில் –
மிகக் குறைந்த கூலிக்கு அங்கு தொழிலாளர்கள்
வதைபடுவதை விவரமாகக் காண்பிப்பார்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் பார்க்கவும்.

இன்றும், சுரங்கத் தொழிலதிபர்களுக்கும்,
அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கும்,
கோடி கோடியாகக் சம்பாதித்துக் கொடுக்கும்
இந்த சுரங்கத் தொழிலாளர்களின் நிலை சற்றும்
மாறவில்லை.

நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றி –
மும்பையில் நிழல் உலகம் என்று தாதாக்களின்
underworld ஒன்று இருப்பது போல் –
coal mafia என்று தனியாக ஒரு கூட்டமே
இருக்கிறது !
சுயநலவாதியான அரசியல்வாதிகள்,
மனசாட்சி இல்லாத அதிகாரிகள்,
எதையும் செய்யத் துணிந்த தனியார் சுரங்கத்
தொழிலதிபர்கள் –
ஆகியோர் ஒன்று சேர்ந்த கூட்டணி இது.

இந்த நிலக்கரி கொள்ளை விஷயம் சரியாகப்
புரியவில்லை. கொஞ்சம் விவரமாக எழுதுங்களேன்
என்று சிலர் மெயில் அனுப்பினார்கள்.
எனக்குத் தெரிந்ததை உறுதிப்படுத்திகொள்ளவும்,
மேற்கொண்டு விவரங்கள் சேகரிக்கவும் நிறையப்
படித்தேன்.

நான் அறிந்து கொண்ட வரையில் ஓரளவு
சுருக்கமாக விளக்கி விடுகிறேன்.

நிலக்கரியை பயன்படுத்துபவர்களில் உலகில்
3வது இடத்தில் இருக்கிறோம்  நாம்.
(சீனா, அமெரிக்கா, இந்தியா )

உற்பத்தியில் உலகில் 4வது இடத்தில் இருக்கிறோம்.
(சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா )

சமையலுக்கு உதவும் நிலக்கரி 1971 லும்
தொழில்  உற்பத்திக்கு உதவும் நிலக்கரி 1973 லும்
இந்திரா காந்தி ஆட்சியின்போது, நாட்டு மக்களின்
நன்மைக்காக (!) என்று சொல்லி நாட்டுடைமை
ஆக்கப்பட்டது !
இவற்றை நிர்வகிப்பதற்காக,
the Coal India Ltd. (CIL) என்கிற பெயரில்
மத்திய அரசு நிறுவனம் ஒன்றும் 1975ல்
உருவாக்கப்பட்டது.

பணம் கொழிக்கும் இந்த கனிம வளம் நாட்டுடைமை
ஆக்கப்பட்டது உண்மையிலேயே  இந்த நாட்டின்
மக்களின் நலம் கருதி என்று நினைத்தால் –
அது நம்முடைய  மடத்தனம்.
வழக்கம்போல் -அரசியல்வாதிகளுக்கும்,
அவர்களை ஒட்டி இருக்கும்
தொழில் அதிபர்களுக்கும் கொள்ளை கொள்ளையாக
பணத்தை அள்ளிக் கொடுக்கவே உருவாக்கப்பட்ட
திட்டம் இது.

இந்தியாவில் நிலக்கரி படிவங்கள் பெரும்பாலும்
அமைந்துள்ள இடங்கள் –

ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், ஜார்கண்ட்,
ஆந்திரா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம்.

(தமிழ் நாட்டில் நெய்வேலியில் மட்டும்.)

இந்த இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்கான
அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு
மத்திய அரசிடம் போதுமான நிதி ஆதாரங்கள்
இல்லை என்றும், இந்த கட்டமைப்புகளை அரசு
ஏற்படுத்த கால அவகாசம்  தேவை என்றும்
காரணம் கூறி, அதுவரை நிலக்கரி உற்பத்திக்காக,
இந்த இடங்கள் அனைத்தும் பல்வேறு
“பிளாக்” குகளாகப் பிரிக்கப்பட்டு,

அவை தனியார் வசம் இலவசமாக –
ஆம் முற்றிலும் இலவசமாக –
ஒப்படைக்கப்பட்டு விட்டது.(ஒரு சில இடங்களை
மட்டும் அரசு தன் வசம் வைத்துக்கொண்டது-
தமிழ் நாட்டின் நெய்வேலி  இதில் அடங்கும் )

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் -இந்த
தனியார் சுரங்க கம்பெனிகள், சுரங்கத்திற்கான
உள்கட்டு வசதிகளைச் செய்ய தங்கள் சொந்த
முதலைப் போடுவதால், முடிந்த  அளவிற்கு
நிலக்கரி உற்பத்தி செய்து,அவர்களே
விற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும்
நிலக்கரிக்கு  அவர்கள் – டன் ஒன்றுக்கு அரசுக்கு
ராயல்டியாக நூறு ரூபாய் மட்டும்
(ரூ.100/- மட்டுமே) கொடுத்தால் போதுமானது.

இன்றைய தினம் உள்நாட்டு நிலக்கரி டன் ஒன்றுக்கு
ஏறக்குறைய ரூபாய் 2800/- என்கிற விதத்தில்
விற்கப்படுகிறது. இதை உற்பத்தி செய்ய
சுரங்க முதலாளிகளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால்
1000 ரூபாய் ஆகலாம். இதில் மத்திய அரசுக்கு
செலுத்த வேண்டிய 100 ரூபாயும் அடக்கம் !

சராசரியாக ஒரு டன்னுக்கு 1800 ரூபாய் வரை
வரை லாபம் பார்க்கும் இந்த தனியார் சுரங்கக்
கம்பெனிகள் கொள்ளை அடிப்பது –
இந்த நாட்டின் கனிம வளத்தை.
இந்த நாட்டு மக்களின் சொத்தை.
உங்களின் – நம்முடைய – பணத்தை !
குடிப்பது – சுரங்கத் தொழிலாளர்களின் ரத்தத்தை !

இப்படி கொள்ளை அடிக்கும் தனியார் சுரங்கக்
கம்பெனிகளின் முதலாளிகளில் பெரும்பாலானோர்
ஆளும் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்கள் –
அல்லது ரெகுலராக கப்பம் கட்டுபவர்கள் !

(இதில் எப்போதும் தர்மபுத்திரர் போல் தோற்றம்
அளிக்கும் ரத்தன் டாடாவும், ஜின்டாலும்,
ரிலயன்ஸ் அம்பானியும்   கூட அடங்குவர் – இதில்
– நவீன் ஜிண்டால் ஒரு காங்கிரஸ் M.P.வேறு !)

இப்படி சகட்டுமேனிக்கு தனியார் தொழிலதிபர்கள்
கொள்ளை அடிப்பதைத் தடுக்கவும்,
நிலக்கரி சுரங்கங்களின் மூலம் கிடைக்கும்
வருவாயின் பெரும்பகுதி அரசாங்க
கஜானாவைச் சேரவும்,
அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை,
பாதுகாப்பு, ஊதியம் ஆகியவை மேம்படுத்தப்படவும்,
தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வியும்,
சுகாதாரமும் கிட்டவும்  வேண்டுமென்றால் –

ஒன்று நிலக்கரி சுரங்கங்களை அரசாங்கமே
ஏற்று நடத்த வேண்டும் –    அல்லது

அரசியல்வாதிகள் தன்னிச்சையாக
தங்களுக்கு வேண்டிய தொழில் அதிபர்களுக்கு எல்லாம்
சுரங்க கம்பெனி நடத்த உரிமம் கொடுக்கும் முறையை
மாற்றி, சுரங்கம் நடத்தும் உரிமைகளை-
வெளிப்படையாக ஏலத்தில் விட வேண்டும் – அல்லது

டன்னுக்கு 100 ரூபாய் என்கிற முறைகளை
எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு,
சுரங்க கம்பெனிகளின் லாபத்தில் -அரசாங்கத்திற்கு
குறிப்பிட்ட சதவீத பங்கு என்று நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு மாறுதல்களைக் கொண்டு வரும்படி,
பல வருடங்களாக, உழைக்கும் மக்களின் சார்பிலும்
நாட்டின் நலனில் அக்கரை உடையோராலும்
வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதில் எதைச் செய்ய வேண்டுமென்றாலும் –
தற்போது நடைமுறையில் உள்ள
THE COAL MINES REGULATIONS ACT, 1957,
என்கிற சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர
வேண்டும்.

இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக
கூறிக்கொண்டே – மத்தியில் ஆளும் காங்கிரஸ்
கூட்டணி இந்த விவகாரத்தை வருடக்கணக்கில்
இழுத்தடித்துக் கொண்டே போகிறது.

இந்த திருத்தங்களுக்கான மசோதா ஒன்று
ஏழு வருடங்களுக்கு முன்னரே 2005-06 ஆண்டில்,
ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது.

ஆனால் – லோக் சபாவில் இது இன்னும்
நிறைவேற்றப்படாததால், மாறுதல்கள் எதுவும்
இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

மாறுதல் வந்தால், வரும்படி போய்விடும் என்பதால்,
அதிகாரத்தில் உள்ளவர்கள் – எதாவது
சாக்குபோக்கு சொல்லிக் கொண்டு கொள்ளையை
தொடர வழி வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.
(42 வருடங்களாக “லோக்பால்” மசோதா
கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டே
இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமா என்ன?)

இந்த நிலையில் –சட்ட திருத்தம் செய்யாமலே கூட
இந்த சீர்திருத்தங்களைச் செய்ய முடியும் என்று கூட
சில சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள் !
ஆனால், மத்திய அரசு
எதையும் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை !

மன்மோகன் சிங் நாமம் வாழ்க !
“அன்னை” சோனியா காந்தி நாமம் வாழ்க !!
அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு போடும் நாமமும்
என்றென்றும் வாழ்க !!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது ?

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நமது அரசியல்வாதிகள் நீக்கமற எல்லாவற்றிலும் கொள்ளை அடித்து விடுகிறார்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்..
    நன்றி.

  2. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வரையில்
    போகிறவர், வருகிறவர் எல்லாரும் “நாமம்”
    போடத்தான் செய்வார்கள் !

    மக்கள் எப்போது விழித்துக் கொள்ளப்போகிறார்கள் ?

  3. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    ஏற்கனவே நான் கூறியுள்ளது போல் ஜனநாயக ரீதியிலான ஒரு சர்வாதிகாரி வரவேண்டும். ஆனால் அதற்கு சர்வாதிகாரியாக இல்லாமல் இருப்பினும் நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் போராட்ட குணத்துடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதா அவர்கள் பாரத பிரதமராக வந்தால் ஊழல்வாதிகள் நிரந்தர ஓய்வுக்கு அனுப்பப்படுவார்கள்.

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஸாரே ஜஹான் ஸே அச்சாஹ்…
    ஹிந்துஸ்தான் ஹமாரா…
    நல்ல காமெடி!

  5. SIVA - BARKAVI's avatar sivaparkavi சொல்கிறார்:

    appadiya…. sethi…

    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi

  6. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    அனைத்து சுரங்க தொழில்களும் அபாயமான தொழில் என அறிவிக்கப்பட வேண்டும். மத்திய அரசு நிர்வாகத்தில் கொண்டுவந்து அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி முன்னுரிமை வழங்கி
    நாலு மடங்கு சம்பளம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும். வேலையின்போது இறக்க நேரிட்டால் தொழிலாளர் இழப்பீட்டு சட்டம் வழங்கும் தொகை மட்டுமின்றி கூடுதலாக பத்து லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வீட்டு அலவன்சுக்கு பதிலாக
    மின்வசதி, தண்ணீர் வசதியுடன் கூடிய வீடு இலவசமாக வழங்கப்படவேண்டும். அவர்தம் குழந்தைகளுக்கு
    கல்வி வசதி முழுமையாக வழங்க வேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      முதலில் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவு
      பிறக்க வேண்டும் !

      பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது –
      இத்தாலிக்காரர்களிடம் அடகு வைக்க அல்ல என்பது
      அவர்களுக்குப் புரிய வேண்டும் !

      எல்லாவற்றையும் கண்டும் காணாமல்,
      சகித்துக் கொண்டு போவதற்கு பதிலாக –
      நம் உரிமைகள் என்ன – அவற்றைப் பெறுவது
      எப்படி என்று மக்கள் யோசிக்க வேண்டும் !

      நாம் வேண்டுவது “நல்ல + சர்வாதிகாரி” யை –
      ஆனால் நாம் பெறுவது பின்பாதியை மட்டுமே !

      காத்திருப்போம் – நம்பிக்கையோடு !!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. ராஜராஜசோழன்'s avatar ராஜராஜசோழன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் அவர்களே –

    சிலரை, சிலர் , சில நாள் ஏமாற்றலாம் –
    எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது !

    இவர்கள் எல்லாரும் கூண்டோடு கைலாசம்
    போகும் நாள் வரத்தான் செய்யும் !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.