அழகிரி மட்டும் இல்லையென்றால் –
கருணாநிதி –
முலாயம் சிங் ஆகி இருப்பார் !!
இந்த தேர்தலின் ஆரம்பம் முதலே – அகிலேஷ்
யாதவ், கட்சி நிச்சயம் ஜெயிக்கும் –
நேதாஜி (தலைவர் – முலாயம் சிங்) தான்
அடுத்த முதலமைச்சர் என்று ஒவ்வொரு
கூட்டத்திலும் சொல்லிக் கொண்டே
தான் இருந்தார். முலாயம் சிங்கும் முதல்வராக
மகுடம் சூடும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்
காத்திருந்தார்.
5 வருடங்களுக்கு முன் உத்திரப் பிரதேசத்தில்,
முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கு –
குண்டர்கள் கட்சி என்று தான் பெயர். அதற்கு
முன் 3 முறை முதலமைச்சராக இருந்த
காலங்களில் முலாயம் சிங்கின் ஆட்சியின் போது,
அந்த அளவிற்கு கட்சியின் வட்டாரத்தலைவர்கள்
குண்டர்களாகத் திகழ்ந்தார்கள். (தமிழ் நாட்டில்
மாவட்டச் செயலாளர்களை கலைஞர் வளர்த்து
விட்ட மாதிரி அவர் ஏகப்பட்ட குண்டர்களை
வளர விட்டார் !).
அடிப்படையில், முலாயம் சிங்கே ஒரு
முன்னாள் குஸ்தி பயில்வான் தான் !
மக்கள் சமாஜ்வாதி கட்சியின் பெயரைச்
சொன்னாலே ஓடும் அளவிற்கு
நொந்து போயிருந்தார்கள்.
அதனால் தான் சென்ற முறை – 2007
தேர்தலின்போது மாயாவதி சுலபமாக ஜெயித்து
ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
ஆனால் கடந்த 3-4 வருடங்களாக,
முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் சிங்
கட்சியை மீண்டும் சீர்படுத்தும் பொறுப்பை
ஏற்றுக் கொண்டு பம்பரமாகச் சுற்றி வந்து
உத்திரப் பிரதேசம் முழுவதும், கட்சியை
இளைஞர்களின் பொறுப்பில் கொண்டு வந்தார்.
BE பட்டதாரியாக இருந்தாலும்,
வெளிநாட்டில் MBA படித்திருந்தாலும்,
கம்ப்யூட்டர் நன்கு தெரிந்திருந்தாலும்,
பொது மக்களின் எதிரே ஆங்கிலத்தில் பேசவே
மாட்டார். கர்வமில்லாமல்,
சாதாரண மக்களின் தோள்களில் கையைப் போட்டுக்
கொண்டு சகஜமாக சிரித்துப் பேசி பழகுவார்.
வார்த்தை ஜாலங்கள் எதுவும் இல்லாமல்
மக்களின் மொழியில் பேசுவது அவர் வழக்கம்.
அகிலேஷ் 3 முறை லோக் சபாவிற்கு போட்டி
போட்டு 3 முறையும் ஜெயித்தவர். இப்போதும்
அவர் எம்.பி.யாகத்தான் இருக்கிறார்.
அகிலேஷை நம்பித் தான் இந்த முறை
உ.பி.மக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டுப்
போட்டார்கள். எனவே ஜெயித்தவுடன்,
தேர்ந்தெடுக்கப்பட்ட MLA க்கள் அத்தனை பேரும்,
ஒரே குரலில்,
முலாயம் சிங்கின் எதிரிலேயே –
அடுத்த முதல்வர் அகிலேஷ் தான் என்று
கோஷம் போடுகிறார்கள்.
பதவியை விடுவதற்கு 73 வயது முலாயம் சிங்கிற்கு
சற்றும் மனமில்லை (87 வயது கலைஞருக்கே
தலைவர் பதவியை விட இன்னும் மனம்
வரவில்லையே ! ).
ஆனாலும் – மகனுக்கு எதிராக ஒரு நிலையை
எடுத்தால், கட்சிக்காரர்களே ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
முலாயம் சிங் முதல்வரானால் மீண்டும் பழைய
குண்டர்கள் செல்வாக்கு பெற்று விடுவார்கள் என்று
எல்லாருக்கும் பயம்.(இங்கும் பழைய மாவட்டச்
செயலாளர்களைக் கண்டு ஸ்டாலின்
பயப்படுவது போல் ! )
ஹோலி கொண்டாட்டங்கள் முடிந்து,
நாளை நடக்கும் கூட்டத்தில் அநேகமாக அகிலேஷ்
முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும்.
வேறு வழி இல்லாமல் முலாயம் சிங் அதை ஏற்க
வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் !
கடந்த பொதுக்குழுவில், கலைஞர் முன்னிலையிலேயே
திமுகவினர் ஸ்டாலினை தலைவர் ஆக்கச் சொல்லி
குரல் கொடுத்தபோது –
இங்கு அழகிரி என்று இன்னொரு போட்டியாளர்
இருப்பதை சாக்காக வைத்துக்கொண்டு கலைஞர்
நான் இருக்கும் வரை நான் தான் தலைவர்
என்று சொல்லி,பதவியை இன்னும் விடாமல் தக்க
வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு வேளை அழகிரி
மட்டும் போட்டியில் இல்லையென்றால் ?
கலைஞர் கதி –
முலாயம் சிங் கதி ஆகியிருக்கும் !!




உண்மை தான்.. அழகிரி விவகாரம் கொஞ்சம் ஆரம்பித்த உடனே ஸ்டாலினுக்கு விட்டு கொடுத்திருக்க வேண்டும்.. பதவி ஆசை யாரை விட்டது?
தங்களுடைய விமர்சனத்தின் அடிப்படை கருத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. ஸ்டாலினை அகிலேஷாக
அல்லது கருணாநிதியை முலாயம் சிங்காக அல்லது அழகிரியை இருவருக்கும் வில்லனாக கூருகிறீர்களா?
இரண்டு இடங்களிலும், தந்தை – மகன்.
கட்சித் தலைமை, ஆட்சித் தலைமை
இரண்டுமே, தான் இருக்கும் வரை தன்னிடமே
இருக்க வேண்டும் என்று அப்பாக்கள்
விரும்புகின்றனர்.
மகன்கள் தங்களுக்குத்
துணையாக இருக்க வேண்டும் – ஆனால்
தங்கள் பதவிக்கு போட்டியாகி விடக்கூடாது –
இது அவர்களின் எதிர்பார்ப்பு.
உத்திரப் பிரதேசத்தில், தேர்தல் நடக்கும் வரை
இருந்த நிலை வேறு. தேர்தல் முடிந்தவுடன்
மக்களும், கட்சியினரும் தெளிவாகச் சொல்லி
விட்டனர் – தந்தையை ஒதுங்கச் சொல்லி.
இங்கும் திமுகவை பொறுத்த வரையில்,
கலைஞர் தான் இருக்கும் வரை பதவியை
விடத் தயாரில்லை. கட்சியில், ஸ்டாலினுக்கு
சாதகமான சூழ்நிலை உருவாகிக்கொண்டு
இருக்கிறது.பொதுக்குழுவிலேயே ஸ்டாலினை
தலைவராக அறிவிக்க வேண்டும் என்கிற
கோரிக்கை கருணாநிதி முன்னிலையிலேயே
எழுந்தது.
போட்டியில் அழகிரி இருக்கிற காரணத்தால்,
கட்சியில் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது
என்பதற்காக, தானே தலைவராகத் தொடர்வதாக
கலைஞர் காட்டிக்கொள்கிறார். அவருக்கு,பதவியை
விட விருப்பம் இல்லை என்பது தான் உண்மை.
அழகிரி போட்டியில் இல்லாத பட்சத்தில்,
கலைஞர் ஸ்டாலினுக்காக
தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டிய
கட்டாயம் ஏற்படும்.
வேறு காரணங்கள் இல்லாத நிலையில் –
ஸ்டாலினுக்கு எதிராக அவர் தலைவர் பதவியில்
தொடர முடியாது. முலாயம் சிங் போலவே
மகனுக்காக விட்டுக்கொடுத்து ஒதுங்க வேண்டியதை
தவிர வேறு வழி இல்லை !
எனவே அழகிரியை காரணம் காட்டித் தான்
கலைஞர் பதவியைப் பிடித்து வைத்துக்
கொண்டிருக்கிறார்.
அழகிரி மட்டும் இல்லையென்றால் –
கருணாநிதி – முலாயம் சிங் ஆகி இருப்பார் !!
சரி தானே பத்மன் ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஆக கருணாநிதி முலாயம் சிங் போல விரைவில் செல்லாக் காசாக்கப் படுவார் சரிதானே?
The article points out how Karunanidhi and Mulayam Singh are thriving hard to retain their power even in their old age. But at the same time in both these parties, who are the contender to the leadership. It is their spouses only. Therefore these regional parties are family oriented and one can expect fight between the family members only and it is nothing surprise.