அண்டார்டிகாவுக்கு கொண்டு போய் …
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் ஆயுள் தண்டனை
விதிக்கப்பெற்ற தண்டனைக் கைதிகளை அந்தமான்
தீவில் கொண்டு போய் பத்திரமாக சிறை வைத்தார்கள்.
இந்த பழக்கம் அவர்களுக்கு எப்படி வந்தது ? –
பிரிட்டிஷ்காரர்கள் முதல் முதலில் ஆஸ்திரேலியாவை
கண்டுபிடித்தபோது, அதில் வெகு சில பழங்குடி
இனத்தவரே இருந்தனர். மிகப்பெரிய,
அந்த பரந்த நிலப்பரப்பை கண்ட பிரிட்டிஷார்,
தங்கள் குடியிருப்பை ஆஸ்திரேலியாவிற்கு
விஸ்தரிக்க விரும்பினர். ஆனால் –
அவ்வளவு தொலைவில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு
போய்க் குடியேறத தயாராக இருந்த பிரிட்டிஷாரை
கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது. எனவே,
அவர்கள் சுலபமான ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள்.
பிரிட்டனில் கடும் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை
பெற்ற குடிமக்களை,ஆஸ்திரேலியாவில் கொண்டு
போய் விட்டு விடும் பழக்கத்தைத் துவங்கினார்கள்.
( penal transportation )
1788 -க்கும் 1868-க்கும் இடைப்பட்ட
80 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்
இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்.
பெரும்பாலும் இன்றைய ஆஸ்திரேலியர்களின்
மூதாதையர்கள் அவர்களே ! (இன்றைய ஆஸ்திரேலிய
கிரிக்கெட் வீரர்களைப் பார்த்தால் அது சொல்லாமலே
விளங்குகிறது- இல்லையா !)
இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன்
என்கிறீர்களா ?
கடந்த ஒரு வாரத்தில் செய்தியில் அடிபட்ட சில
புண்ணியவான்களின் பின்னணி தான் இவற்றை எல்லாம்
யோசிக்கும்படி செய்தது.
யார் அவர்கள் ?
முதலாவது ஆள் ஒரு திடீர் பிரவேசம்.
அகில இந்திய அளவில் நமக்கு அறிமுகம் இல்லாதவர்.
ஆனால், அவர் புரிந்தது அகில உலக சாதனை!
1970களில் மும்பை தெருக்களில் உருளைக்கிழங்கும்
வெங்காயமும் தள்ளு வண்டியில் வைத்து விற்றுக்
கொண்டிருந்தவர்.
இவருக்கு அடைக்கலம் கொடுத்தது –
வழக்கம் போல் இந்திய தேசிய காங்கிரஸ் தான் !
2004ல் மஹாராஷ்டிரா அமைச்சர்.
லேடஸ்ட் பதவி -மும்பை நகர காங்கிரஸ்
கட்சியின் தலைவர் !
இவர் வருமானத்துக்கு மிஞ்சி சொத்து சேர்த்திருப்பதாக,
சஞ்சய் திவாரி என்கிற சமூக நல ஆர்வலர் தொடுத்த
பொது நல வழக்கின் விளைவாக –
மும்பை உயர்நீதி மன்றம் போலீசுக்கு ஒரு
அதிரடி ஆணை கொடுத்தது.
கிருபாஷங்கர் சிங்கின் அசையும் மற்றும் அசையா
சொத்துக்கள் அனைத்தையும் உடனடியாகக் கணக்கெடுத்து,
அட்டாச் செய்யச் சொல்லி.
தேடிப்போன போலீசுக்கு
கடுக்காய் கொடுத்து விட்டு ஆள் காணாமல் போய்
விட்டார். சொத்துக்கணக்கெடுக்கச் சென்ற போலீசுக்கு
அதிர்ச்சி –
ஆமாம் மொத்த சொத்தின் மதிப்பு 300 கோடி ரூபாய் !
காய்கறி விற்றுக்கொண்டிருந்தவர் அரசியல்வாதியாகி
சம்பாதித்த பணத்தின் மதிப்பு 300 கோடி ரூபாய் !!
அடுத்த ஆள் – நம் அனைவருக்கும் தெரிந்தவர் தான்-

லொல்லு பிரசாத் யாதவ்- முன்னாள் பீகார் முதல்வர்.
1990ஆம் ஆண்டில் புகழ்பெற்ற 960 கோடி ரூபாய்
வைக்கோல் போர் ஊழலில் சிக்கி பதவியை இழந்தவர் !
அதன் பின்னர் எம்.பி. ஆகி, சோனியா காந்திக்கு
வேண்டியவராகி, அவர் தயவில் மத்திய மந்திரியும் ஆகி,
அதையும் இழந்து இப்போது வெறும் எம்.பி.யாக
இருப்பவர் –
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு –
சென்ற வாரம் தான் முதல் முதலாக
47 லட்ச ரூபாய்க்கான ஒரு ஊழல்
வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அவர் மீது குற்றப்பத்திரிகை
பதிவு செய்திருக்கிறது. 900 கோடி – 22 ஆண்டுகள்
கழிந்த பின்னர் 47 லட்சமாக சுருங்கி இப்போது
தான் முதல் குற்றப்பத்திரிகை பதிவு !
இதே மாடலில் போனால் – இப்போது வரிசையில்
காத்திருக்கும் டஜன் கணக்கிலான மற்ற ஊழல்
வழக்குகளும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
வழக்கில் சிக்கியுள்ளவர்களின் எதிர்காலமும் எப்படி
இருக்கும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம் !
நம் நாட்டின் சட்ட விதிகளும், நீதிமன்ற
நடைமுறைகளும், நம் கண்ணெதிரே நடக்கும்
நிகழ்வுகளும் – ஊழல் குற்றவாளிகள் தண்டனை
பெறுவார்கள் என்கிற நம்பிக்கையை –
நமக்குத் தரவில்லை !
ஒரு ஆசை- கனவு என்றே வைத்துக்கொள்ளுங்கள்
– மனதில் துளிர்விட்டது.
இந்த மாதிரி ஊழல்வாதிகளை எல்லாம்
நம் சட்டங்களால் நிச்சயம் ஒன்றும் செய்ய முடியாது.
நாம் வேறு வித்தியாசமாக எதாவது செய்தால் என்ன ?
அப்போது தான் மேலே கூறிய, பிரிட்டிஷாரின்
அந்தமான், ஆஸ்திரேலியா அணுகுமுறைகள்
எல்லாம் நினைவிற்கு வந்தது.
நம் லாலு போன்றவர்களை எல்லாம் அந்தமானுக்கு
அனுப்பினால் – ஜாலியாக ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு
திரும்ப வந்து விடுவார்கள்.
ஆஸ்திரேலியாவோ – உள்ளேயே நுழைய விடாது.
யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியம்
இல்லாமல், எந்த ஒரு நாட்டின் விசாவும் இல்லாமல்
இந்த மாதிரி ஆட்களை கண் காணாத இடத்திற்கு
ஏற்றுமதி செய்ய எதாவது வழி உண்டா
என்று யோசித்தேன்.
அருமையான வழி ஒன்று தோன்றியது.
அண்டார்டிகா !
எதாவது ஒரு காரணத்தைக் கூறி இந்த மாதிரி
ஆட்களை அழைத்துக் கொண்டு
அண்டார்டிகா சுற்றுப்பயணம் போக வேண்டும்.
செலவு முழுவதையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
-வாருங்கள் என்று கூப்பிட்டால் – வந்து விடுவார்கள் !
புவி உலகின் தென் முனை – தென் துருவம் !
ஏப்ரல் முதல் நவம்பர் வரை –
8 மாதங்கள் தொடர்ந்து இரவு – இருட்டு –
சூரியனே உதிக்காது – குளிர்காலம்
சராசரி உஷ்ண(குளிர்) நிலை மைனஸ்- -60°C.
அடுத்த 4 மாதங்கள் –
டிசம்பர் முதல் மார்ச் வரை -தொடர்ந்து பகல் –
இருட்டே -இரவே வராது.
உஷ்ண நிலை – மைனஸ் 6 டிகிரி c முதல்
ப்ளஸ் 10 டிகிரி c வரை.
மழையே கிடையாது !
காற்றின் வேகம் – குறைந்த பட்சம் -37 kmh
அதிக பட்ச வேகம் – 248 kmh !!!
மொத்த நிலப்பரப்பு – 1,38,29,430 சதுர கிமீ.
அதில் பனிக்கட்டி இல்லாத தரை –
வெறும் 44,890 சதுர கிமீ மட்டுமே !
பனிப்பிரதேசங்களில் 4.5 கிலோமீட்டர் ஆழத்திற்கு
பனிக்கட்டி.
சாதாரணமாக இங்கு மனிதர்கள் வசிப்பதில்லை.
ஆராய்ச்சிகளின் பொருட்டு சில நாடுகளிலிருந்து,
சில விஞ்ஞானிகளும் – உதவியாளர்களும்
ரொடேஷன் முறையில் சில இடங்களில்
வந்து தங்குகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை
1000 த்திலிருந்து 5000 வரை இருக்கலாம்.
உணவுப் பயிர்கள், தாவரங்கள் எதுவும் கிடையாது.
மனிதனுக்கு உதவக்கூடிய விலங்கினங்கள்
எதுவும் கிடையாது. ஸீல், வால்ரஸ் போன்ற
சில விலங்குகள் உண்டு.கண்ணுக்கு எட்டிய தூரம்
பனி- பனி – பனி தான்.
மார்ச் மாதத்தில் டூர் போய் – கொஞ்சம் சுற்றி விட்டு,
அங்கே விஞ்ஞானிகள் யாரும் திரும்பிக்கூடப் பார்க்காத
ஆள் நடமாட்டமே இல்லாத –
எதாவது ஒரு ஏரியாவில் இவர்களை கொண்டு போய்
DROP செய்து விட்டு (விட்டு விட்டு)
சொல்லாமல் கொள்ளாமல் நாம் திரும்பி விட்டால் ?
அடுத்த 8 மாத இருட்டும், குளிரும் –
அண்டார்டிகா தனிமையும் !
அதைவிட ஒரு பெரிய தண்டனை இருக்க முடியுமா?
பிழைத்திருந்தால் – நவம்பரில் மீண்டும் போய்
பிக் அப் செய்து கொள்ளலாம் !!
நினைக்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எப்பேற்பட்ட சமுதாய சேவை !!
உடனே அண்டார்டிகா பற்றிய மற்ற விவரங்களை
தேட ஆரம்பித்தேன். ஒன்றும் பெரிய
பிரச்சினை இல்லை. இப்போதெல்லாம் நிறைய பேர்
டூரிஸ்டுகளாகப் போகிறார்கள். ஆண்டிற்கு சுமார்
30,000 பேர் வரை டூரிஸ்டுகள் போகின்றனர்.
சம்மரில் – டிசம்பர் முதல் மார்ச் வரை 100 பேர்
வரை கொள்ளும் சிறிய சுற்றுலா கப்பல்கள் செல்கின்றன.

சிறிய விமானத்திலும் செல்லலாம் – கொஞ்சம்
கூடுதல் செலவு. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
வழியாகவும் போகலாம். ஆனால்
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனா வழியாகப்
போவது சிறந்தது.
அர்ஜென்டீனாவிலிருந்து அண்டார்டிக் பயணம்
துவங்குகிறது. யாருடைய அனுமதியும் தேவை
இல்லை – தகவல்களை மட்டும் சம்பந்தப்பட்ட
இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு முன்னர் டூரிஸ்டுகளாகப் போய் வந்தவர்கள்
சிலர் தங்கள் அனுபவங்களை கட்டுரைகளாகவும்,
புத்தகங்களாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதில் சிலவற்றைப் படித்தேன்.
அவர்கள் எடுத்த புகைப்படங்களையும்,
வீடியோக்களையும் பார்த்தேன்.
அத்தனையையும் பார்த்த பிறகு –
பிறகு சொல்கிறேன்.
முதலில் நீங்களும் அந்த அருமையான
புகைப்படங்களில் சிலவற்றைப் பாருங்களேன் –
அத்தனையையும் பார்த்த பிறகு –
எனக்குத் தோன்றியது தான் உங்களுக்கும் தோன்றும் !
உலகிலேயே, மனிதர்களால் – இதுவரை
கெடுக்கப்படாத அற்புதமான ஒரு ஒரு பூமி
இங்கே இருக்கிறது. தூய மண், காற்று, சுற்றுபுற
சூழ்நிலை. கெட்ட எண்ணங்களே உதிக்காத இடம் !
இந்த கேடுகெட்ட மனிதர்களை அங்கே கொண்டு போய்
விட்டு – அந்த மண்ணை, காற்றை, பூமியை –
பாழ் பண்ணிய பாவத்தை
நாம் தேடிக்கொள்ள வேண்டுமா?
போகட்டும் – நாமே அனுபவிப்போம்
இந்த புண்ணிய புருஷர்களின் செயல்களையும்,
விளைவுகளையும் !!!
அண்டார்டிகா வாவது இவர்கள் மூச்சுக் காற்று கூட
படாமல், தூய்மையாக இருக்கட்டும் !
சரி தானே நண்பர்களே ?




















ஏன் சந்திரனுக்கு அனுப்பலாமே?
இல்லையென்றால் மருத்துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாமே?
எதுக்கு தேவையில்லாமல் குரங்கு/எலி/முயலுக்கு புது மருந்து கொடுத்து அவற்றை கொன்று…
இந்த ஜென்மங்களை பயன்படுத்தினாலாவது…
நம் அடுத்த தலைமுறைக்கு உதவியாக இருக்கும்.
(BLUE CROSS நோட் திஸ் பாய்ண்ட்!)
அரசியல்வாதி தானே பிரச்சினை அண்டார்டிகா அல்லவே? நான் மீண்டும் வலியுறித்தி கூறுகிறேன் ஜனநாயக
ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மை செய்யும் ஒரு சர்வாதிகாரி வரவேண்டும்.
//ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மை செய்யும் ஒரு சர்வாதிகாரி வரவேண்டும்.//
இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் எண்ணமும் அதுவே. ஜனநாயகத்தின் மூலம் இவர்களை தண்டிக்க முடியாது. இதற்க்கு ஒரே தீர்வு சர்வாதிகாரம் மட்டுமே.
உங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் நண்பர்களே !
காத்திருப்போம்.
இன்றில்லா விட்டாலும் – நாளையாவது யாராகிலும்
வருவார்கள் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கா மை ஐயா, காய்கறி விற்றுக்கொண்டிருந்தவர் தானே 300 கோடிசம்பாதித்தார். மஞ்சள் பையுடன் மதராசுக்கு திருட்டு ரெயில் ஏறியவர் எத்தனை லட்சம் கோடி சம்பாதித்தார்?! அவரை எங்கு கொண்டு போய் போடுவது! இப்போ கடவுள் கூட அவரை மேல கூப்பிட பயந்து போய் இருக்கிறதா கேள்வி!!
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.
http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html
நண்பர் அருள்,
உங்கள் தகவலுக்கு நன்றி.
உங்கள் வலைத்தளத்தில் என் கருத்தையும்
சொல்லி இருக்கிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அருமையான யோசனை.
இவர்கள் அங்குள்ள இடத்தையும் பிளாட் போட்டு விற்று விடுவார்கள்.
காவிரிமைந்தன் அவர்களே,
இந்த இடுகை மிக நன்றாக அமைந்துள்ளது.
பொறுக்கி அரசியல்வாதிகளைச் சாடும் அதே
நேரத்தில், அண்டார்டிகாவைப் பற்றிய பல அரிய
தகவல்களையும், அருமையான புகைப்படங்களையும்
காணத்தந்திருக்கிறீர்கள்.
இதற்காக நிறைய உழைத்திருப்பீர்கள்.
உங்கள் உழைப்பிற்கு நன்றியும், பாராட்டும்.