நெஞ்சில் தைத்துள்ள முள் .

நெஞ்சில் தைத்துள்ள  முள் ….

எழுத்தாளர் பகவான் சிங் (ஏசியன் ஏஜ்) அண்மையில்-
இலங்கையில் ஒரு பரவலான  சுற்றுப்பயணம்
மேற்கொண்டார். அப்போது தான் சந்தித்தவைகளையும்,
தனக்கு கிடைத்த அனுபவங்களையும் சில கட்டுரைகளில்
பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது  ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே –

—————

கிளிநொச்சியில் ஆசிரியராகப் ப்ணி புரியும்
புண்ணியமூர்த்தியையும், அவரது குடும்பத்தினரையும்
அவரது வீட்டில் சந்தித்தேன்.
அவரது வீட்டிற்கு கதவுகளோ, ஜன்னல்களோ இல்லை.
பழைய புடவைகள் திரைச்சீலைகளாகத் தொங்கிக்
கொண்டிருந்தன. …….
அவரிடம் பேசும்போது அவர் கூறினார் –

“என் வகுப்பில் 21 மாணவர்கள் படிக்கிறார்கள்.
அவர்களில் 7 பேர் பெண் பிள்ளைகள். அவர்களில்
சிலர் யுத்த அடையாளங்களின் சுமையால்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போரினால் உண்டான
வெளிப்புற காயங்கள் ஆறி விட்டன. ஆனால் தங்களது
அன்புக்குரியவர்களது மரணத்தைக் காண நேரிட்டதால்
உண்டான துயரத்தினால், இன்னமும் துன்பப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அவர்க்ளோடு பேசுகிறோம் அல்லது அவர்களை
பேச வைக்க உற்சாகப்படுத்துகிறோம். ஆனால்,
அவர்கள் மௌனம் காக்கவே விரும்புகிறார்கள் என்பது
தான் சோகமான விஷயம். அது மிகுந்த சஞ்சலத்தை
உண்டாக்குகிறது”.

அவரிடமிருந்து விடைபெறும்போது, “போரினால்
பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு அடைக்கலம்
தந்திருக்கும் அனாதை இல்லத்திற்கு சென்று
பாருங்கள்” என்று என்னிடம் வலியுறுத்தினார்.

“மஹாதேவா ஆச்ரமம் – குழந்தைகள் இல்லம்”
என்பது அதன் பெயர். அங்கு 296 குழந்தைகள்
இருக்கிறார்கள். அவர்களில் 160 பேர் பெண்
குழந்தகள். ஆச்ரமத்தில் தங்கி இருக்கும் குழந்தைகளில்
சிலர் அனாதைகள் அல்ல. அவர்களுக்குப் பெற்றோர்
இருக்கிறார்கள்.
ஆனால்- அவர்கள் எல்.டி.டி.ஈ.யில் இருந்தவர்கள்
என்பதால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு
இருக்கிறார்கள்.

ஆச்ரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு
தலா 16 ரூபாய் 66 காசுகளைத்தான் அரசாங்கம்
ஒதுக்கி இருக்கிறது. அரசு ஒதுக்கீடு செய்திருக்கும்
இத்தொகையும் மிகவும் தாமதமாகத்தான் வருகிறது.
கருணை உள்ளம் கொண்ட வெளி நாடு வாழ் தமிழர்கள்
சிலரிடம் இருந்து கொஞ்சம் நன்கொடைகள்
கிடைக்கின்றன. ஆனால், அதுவும் கூட கடந்த
3 மாதங்களாக வற்றிப் போய் விட்டன என்று
ராஜநாயகம் தெரிவித்தார்.
ராஜநாயகம், கிளிநொச்சியில் அரசாங்க  ஏஜெண்டாக
16 ஆண்டுகள் பணி புரிந்தவர். இப்போது ஓய்வு
பெற்ற பின் மஹாதேவ ஆச்ரமம் குழந்தகள் இல்லத்தின்
மேலாளராக இருக்கிறார்.

மிகச்சிறிய அளவிலான உதவிகள் கூட, ஆச்ரமத்தில்
தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் என்பது
யதார்த்த நிலையாக இருக்கிறது.
அப்படி நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள் –
மிகவும் நேர்மையான, குழந்தைகள் இல்ல சேவையில்
தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த
ஆச்ரம நிர்வாகியைத் தொடர்பு கொள்ளலாம்.
அவரது தொலைபேசி எண் – 0094770604950.

—————————

இதைப் படித்த பின் நான் கிளிநொச்சியில் இருக்கும்
திரு ராஜநாயகம் அவர்களோடு
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
சில விவரங்களைக் கேட்டறிந்தேன்.

இந்த ஆச்ரமத்திற்கு நன்கொடை அளிக்க
முன்வருபவர்களுக்கு தேவைப்படும் சில விவரங்களை
அவரிடமிருந்து  கோரி  SMSல் பெற்றேன்.
அந்த விவரங்களைக் கீழே தந்திருக்கிறேன்.
உதவி செய்ய விரும்புபவர்கள் அதைப் பயன்படுத்திக்
கொள்ளலாம் –

“U could Money Bank to Bank
Our Bank is Bank of Ceylon
Killinochi a/c no.9991351.
OUR SWIFT CODE NO BCEY 8A LX ”

———–
Mahadeva Achchirama Children Home
Chairman T.Rasanayagam.

——————————————

பகவான் சிங்கின் கட்டுரை  இதயத்தைத் துளைக்கிறது.

என்ன பாவம் செய்தனர் இந்த குழந்தைகள் ?
இலங்கைத் தமிழர் விஷயத்தில் இந்திய அரசு
செய்ததை/ செய்வதை, மனசாட்சி உள்ளவர்கள்
யாராலும் ஜீரணிக்க முடியாது.

நம் இதயத்தில் தைத்த முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும்
இந்த வலி நீங்கப் போகும் நாள் என்று வருமோ ?

இது விஷயமாக சில மாதங்களுக்கு முன்னர்
இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட
சில விஷயங்களை நினைவு கூறுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர் நான் இமாச்சல பிரதேசம்
சென்றிருந்தேன்.
பரந்து விரிந்த  இமயமலையின்  பசுமையான
இயற்கைப் பரவல்.

தர்மஸ்தலா என்பது  அங்கே உள்ள   ஒரு
உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து
சுமார் 120  கிலோமீட்டர்  தூரத்தில்,
தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி  உயரத்தில்
உள்ள ஊர்.

இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்து
உள்ள இந்த இடம் உலகப்பிரசித்தி  பெற்றதற்கு
காரணம்,  திபேத்தின் புத்த மதத்தலைவரான
தலாய்லாமா இங்கு தங்கி
இருக்கிறார்  என்பதே.

இந்தியாவின் ஒரு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில்
உள்ள தர்மஸ்தலாவில் தான் அமைந்திருக்கிறது –
திபேத்தின் நாடு கடந்த அரசு. (govt. of tibet
in exile). தலாய் லாமா தங்கி இருக்கும்
இடம்  மெக்லியோடு கஞ்  என்று அழைக்கப்படுகிறது.

1959 -ல் கம்யூனிஸ்ட்  சீன அரசு திபேத்தையும்,
தலாய்லாமாவையும் தன் முழு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர முயன்ற போது,
திபேத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தி வந்த தலாய் லாமா
இரவோடு இரவாக தன் ஆதரவாளர்களுடன்( கிட்டத்தட்ட
ஒரு லட்சம்  பேர் ) கால் நடையாகவே
எல்லையைக் கடந்து வந்து இந்தியாவில்
அடைக்கலம் கோரினார்.

நேரு பிரதமராக இருந்த அந்நேரத்தில்  இந்திய அரசு
அவருக்கு அடைக்கலம் அளித்ததுடன்,  அவருடன் வந்த
ஒரு லட்சம் திபேத்திய அகதிகளுக்கும் தஞ்சம் கொடுத்தது.
அப்படி வந்த திபேத்திய அகதிகளுக்காக  இந்திய அரசு
ஒதுக்கிய இடம் தான் மெக்லியோடு கஞ் /தர்மஸ்தலா.  

முதலில், கீழே உள்ள இடம்
இந்திய மக்கள் வாழும்  தர்மஸ்தலா.  இதில்
சுமார்  20,000 இந்தியர்கள்  வசிக்கிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தின் கோடைக்கால தலைநகரம்
இது தான்.  இதற்கு   சுமார் 1500  அடி
உயரத்தில் உள்ள  இடம் மெக்லியோடு கஞ்    
என்று அழைக்கப்படுகிறது.

1960-ல் தலாய் லாமா இங்கு தனது
நாடு கடந்த திபேத்திய அரசை – இந்திய அரசின்
ஒத்துழைப்புடன் நிறுவினார்.  அன்று முதல் இன்று
வரை நாடு கடந்த திபேத்திய
அரசு  இங்கிருந்து செயல்பட்டு வருகிறது.

நான் சென்றிருந்தது, அக்டோபர் மாதத்தில்,
ஒரு மாலை நேரத்தில்.  நடுங்கும் குளிர்.
ஊர் பூராவும் திபேத்தியர்கள் தான்.
டீ கடையிலிருந்து, ஓட்டல்கள், மளிகைக்கடைகள்,
மருந்து கடைகள், டாக்சி  ஓட்டுனர்கள்,
பழ வியாபாரிகள் – எங்கு பார்த்தாலும்
அனைவருமே  திபேத்தியர்கள் தான். அங்கு போகும்
சுற்றுலா பயணிகளைத்தவிர, மருந்துக்கு கூட
இந்தியர் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை.

தலாய் லாமா தங்கி இருக்கும் இடத்தில்
ஒரு அருமையான புத்த விகாரை. மிகப்பெரிய
அளவிலான புத்தர் சிலை ஒன்று.
மிக அழகாகவும், புனிதத்தன்மையோடும்
விளங்குகிறது அந்த இடம். புத்தமதத் தலைவர்
தலாய் லாமா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு
எனக்கு கிட்டியது.  புன்னகை தவழும் முகத்துடன்
அனைவரையும் மகிழ்வோடு சந்திக்கிறார் –
ஆங்கிலத்தில் அன்போடு உரையாடுகிறார் –
தலாய் லாமா அவர்கள்.

ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளுமாக
கிட்டத்தட்ட ஒரு லட்சம் திபேத்தியர்கள்  வசிக்கும்
அந்த இடம் “லிட்டில் லாசா”
என்றே அழைக்கப்படுகிறது (லாசா என்பது
திபேத்தின் தலைநகரம்).( அவர்களது தாய்நாடு )

அவர்களுக்கான பள்ளிகள்,  வருமானத்திற்கான
சிறு சிறு தொழில்கள் –
சகலவிதமான  வசதிகளுடன், முழு சுதந்திரத்துடன்,
தங்கள் கலாச்சாரத்தைப் பின்பற்றி  மகிழ்ச்சியுடன்
வாழ்கிறார்கள்அவர்கள் !

இந்தியாவிலேயே  ஒரு வெளிநாட்டைப் பார்த்த
அனுபவத்துடன்
பயணத்தைத் தொடர்ந்தேன்  நான்.

இந்தியாவுக்கும்  நேபாளத்திற்கும் உள்ள  உறவு –
ஒரு விசித்திரமான உறவு.
இரண்டும் முற்றிலும் சுதந்திரமான
இரண்டு தனித்தனி நாடுகள் – ஆனால்
இரண்டுக்கும் இடையே  மக்கள் போய் வர
எந்தவித கட்டுப்பாடும் கிடையாது.  
பாஸ்போர்ட், விசா போன்ற
சமாச்சாரங்கள் எதுவுமின்றி  ஒரு அந்நிய நாட்டுக்கு
போய் வருவது
உலகில் வேறு எங்காவது நடக்குமா ?

நேபாளிகள் (கூர்க்காக்கள்) –
இந்தியாவின் எல்லா நகரங்களிலும்
வியாபித்திருக்கிறார்கள்.
காவல் பணி – அவர்களுக்கென்றே  ஒதுக்கப்பட்ட
ஒரு துறை.
லேட்டஸ்ட் –  சென்னை சரவண பவன் கிளைகள்
அனைத்திலும் 15-20 வயதுகளில் உள்ள
நேபாள  சிறுவர்கள்/வாலிபர்கள் சிரித்த முகத்துடன்
வேலை செய்வதை பார்க்கலாம்.

இதே போல் –  பங்களாதேஷ்.
இரண்டு நாட்டிற்கும் இடையே பெயரளவில் தான் தடுப்பு.
அஸ்ஸாம்  முழுவதும்,  அருணாசல் பிரதேசம்
முழு வதும், மேற்கு வங்காளத்தில் பல பகுதிகளில்
பங்களா தேஷ் குடிமக்கள்  இந்தியருக்கு உண்டான
எல்லா உரிமைகளுடனும் வாழ்கிறார்கள்.

இதை எல்லாம்  எதற்காக சொல்கிறேன் ?

நம்முடன்  ரத்த சம்பந்தமோ, கலாச்சார மற்றும்
மொழி தொடர்பான  பங்கீடோ
இல்லாத  வேற்று  நாட்டவர் அனைவருக்கும்
முழு மனதுடன் இடம் கொடுத்திருக்கும் –
பரந்து விரிந்த இந்த பாரத நாட்டில் –

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக,
நம்முடன் –
மொழி, இன, கலாச்சாரத் தொடர்புடைய
இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இடம் இல்லாமல்
போய் விட்டது எப்படி ?
எங்கேயோ  இருந்தவர்களுக்கு எல்லாம் இடம்
கொடுத்தபோது இங்கே  20 மைல்  தொலைவில்
இருக்கும்  நம்  தொப்புள்கொடி
உறவுகளுக்கு இங்கே இடம் இல்லாமல் போனது எப்படி ?

இத்தாலியில் இருந்து வந்தவர்களிடம் இந்த
நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து
மீண்டும் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்த
நம்  சகோதரர்களாலா  ?

இந்திய ராணுவத்தில்  ஒரு முக்கிய பிரிவான
“மெட்ராஸ் ரெஜிமெண்ட்”டில்  பணிபுரிந்தவர்கள்  –
நிறைய பேருடன் நான் பணி புரிந்திருக்கிறேன்.
எனக்கு மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச்சேர்ந்த  நண்பர்கள்
நிறைய பேர்  உண்டு.  அவர்களுடன் பேசும்போது
கதை கதையாய் நிறைய  விஷயங்கள்
சொல்லி இருக்கிறார்கள்.

1971-ல்  கிழக்கு பாகிஸ்தான் பங்களா தேஷாக
உருவாகும் சூழ்நிலை. பாகிஸ்தான்  அவர்கள் மீது
போர் தொடுத்தபோது –
இந்த மெட்ராஸ்  ரெஜிமெண்டை சேர்ந்த
நிறைய வீரர்கள் –
ராணுவ சீருடையை  கழட்டி விட்டு,
கைலியும் பனியனுமாக பங்களா தேஷ் உள்ளே புகுந்து
பங்களா தேஷ் மக்களின் சுதந்திரத்திற்காக,
அவர்களுக்கு ஆதரவாக,
பாகிஸ்தான்  ராணுவத்தோடு போரில் ஈடுபட்டார்கள்.

அன்றைய  பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்
வகுத்த யுக்தி அது.

தங்களுக்காக, தங்கள் சார்பாக – போரிட்டு
சுதந்திரம் பெற்றுத் தந்த மெட்ராஸ்  ரெஜிமெண்டை
இன்றும்  பங்களா தேஷ் மக்கள்
நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள்.

கடைசியாக கடந்த சில  வருடங்களில் –
ஈழத்தமிழர்களுக்கு எதிரான
உச்சகட்ட கொடுமைகள் ராஜபக்சே  அரசால்
இழைக்கப்பட்டபோது
நாம் – தமிழர்கள் – கையாலாகாதவர்களாக  
மாநில அரசையும்,
மத்திய அரசையும் – கெஞ்சிக்கொண்டிருந்தோமே !

திபேத்தியர்களுக்கும்,  நேபாளிகளுக்கும்,
பங்களாதேஷிகளுக்கும் காட்டப்பட்ட கருணை –
இலங்கைத் தமிழர்களுக்கு காட்டப்படாதது ஏன்  ?

போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னும்,
இலங்கைத்தமிழர்கள், 4 பக்கமும் ராணுவம்
புடைசூழ அடிமை வாழ்வு நடத்தும் அவலம் ஏன் ?

எழுத்தாளர் பகவான் சிங் எழுதி இருக்கும்
ஒவ்வொரு செய்தியும், மனதில் மிகுந்த துயரத்தை
ஏற்படுத்துகிறது.

இதற்கெல்லாம் விடிவு எப்போது ?  எப்படி ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நெஞ்சில் தைத்துள்ள முள் .

  1. CDR's avatar CDR சொல்கிறார்:

    விரைவில்……

  2. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    பெருமூச்சு முட்ட படித்து முடித்த பதிவு இது.

  3. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    வங்கி தகவலுக்கு நன்றி.

  4. karudan's avatar karudan சொல்கிறார்:

    அட போங்க சார்… அந்த ஆளு மூத்திர பைய வண்டியில வச்சுகிட்டு இன்னும் 15 வருஷம் இருந்து, எந்த குடும்பத்துக்காக காட்டி கொடுத்தானோ அந்த குடும்பம் சின்னா பின்னமாவதை பார்க்காமல் சாக கூடாது.

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னும்,
    இலங்கைத்தமிழர்கள், 4 பக்கமும் ராணுவம்
    புடைசூழ அடிமை வாழ்வு நடத்தும் அவலம் ஏன் ?//

    தமிழ், தமிழன் என்று சொல்லி சொல்லியே இரண்டு தலைமுறையின் உணர்ச்சிகளை பொங்கச் செய்து அறிவையும் வீரத்தையும் மழுங்கடிக்கச் செய்துவிட்டனர்.

  6. ra.venkataramani's avatar ra.venkataramani சொல்கிறார்:

    திபெத்திய தலாய் லாமாவும், பங்களாதேஷ் மக்களும்
    இந்திய அரசிடம் அடைக்கலமும் உதவியும் வேண்டி
    வந்தனர். ஆனால், இலங்கையில் சிங்கள அரசுக்கு எதிரான
    போருக்கு தலைமை ஏற்றவர்கள் இந்திய அரசுக்கு எதிராக
    ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இந்திய மக்களின் ஆதரவை
    இழந்ததோடு, வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார்கள்.
    ராஜீவ் படுகொலை எவராலும் மன்னிக்க முடியாத மகா பாதக
    செயல். அதற்காக இறுதி வரை வருந்தவும் இல்லை.
    தலாய் லாமாவும் முஜிபுர் ரஹ்மானும் இம்மாதிரியான
    காரியங்களில் இறங்கவில்லை.
    அதனால் தான் இறுதியாக நடந்த போரின் போது கூட,
    தமிழகத்திலே மக்கள் அனுதாபப்பட்டார்களே தவிர ஆதரவோ
    அடைக்கலமோ தர தயாராக இல்லை.

  7. லால்குடி நாராயணன்'s avatar லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    ரா.வெங்கட்ரமணி அவர்கலே

    உங்களுக்கு பதில் மேற்படி கட்டுரையிலேயே இருக்கிறது.

    //”உறவுகளுக்கு இங்கே இடம் இல்லாமல் போனது எப்படி ?

    இத்தாலியில் இருந்து வந்தவர்களிடம் இந்த
    நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து
    மீண்டும் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்த
    நம் சகோதரர்களாலா ?”

    இதற்கு முழு முதல் காரணம் – இதுவே தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.