ஐஸ்வர்யா ராய் -சினேகா ……

ஐஸ்வர்யா ராய் -சினேகா ……

தமிழ் மணத்தில் பிப்ரவரி 6 முதல் தொடர்ந்து
ஒரு வார காலம் நட்சத்திர எழுத்தாளராக – தினமும்
எழுத முடியுமா என்று கேட்டார்கள்.
கரும்பு தின்ன யாராவது கூலி கேட்பார்களா ?
உடனே மகிழ்வுடன் ஒப்புக்கொண்டேன்.

புதிதாக இந்த விமரிசனம் வலைத்தளத்திற்கு வரும்
நண்பர்களை  வாழ்த்தி வரவேற்கிறேன்.

நான் பொதுவாக விமரிசனம் வலைத்தளத்தில்
எழுதுவது – அரசியலிலும், சமுதாயத்திலும் காணும்,
நிகழும் அவலங்களைப் பற்றி தான். அவற்றை
ஏற்றுக்கொள்வோரும் உண்டு. எதிர்ப்பாரும் உண்டு.
பல இடுகைகள் சூடான விவாதங்களில் கொண்டு
போய் விடும்.

ஆனால் -நட்சத்திர இடுகைகளைத் துவக்கும்போது –
அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல
செய்தியுடனே துவக்க விரும்புகிறேன்.

ஏற்கெனவே விமரிசனம் வலைத்தளத்தில்”கண் தானம்”
பற்றி இடுகைகள் பதிந்திருக்கிறேன்.
பலபேர் இதுகுறித்து
அறிந்து இருந்தாலும்  கூட,
அடிக்கடி நினைவு படுத்தப்பட வேண்டிய விஷயம் அது.

மேலும்,  இடையில் புதிதாகக் கிடைத்துள்ள
சில தகவல்களையும் சேர்த்துக் கூற விரும்புகிறேன்.
எனவே இந்த இடுகை.

முதலில் சில முக்கியமான தகவல்கள் –

இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப்
பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை
சுமார் 11 லட்சம்.

இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக
நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை
ஆண்டுக்கு சுமார் 32,000 மட்டுமே.இந்த
நிதானத்தில் இருந்தால் இவர்கள் எல்லாரும்
பார்வை பெறுவது என்று ?

கண் தானம் செயவது அப்படி என்ன பெரிய காரியமா?
அப்படி ஒன்றுமில்லை. நாம் நஷ்டப்பட்டுக் கொண்டு
எதையும் பிறருக்கு கொடுக்க வேண்டாம்.
நமக்கு பயன்படாததைத் தான், நாம் பயன்படுத்தி
முடிந்ததைத் தான் –
பிறருக்கு கொடுக்கப் போகிறோம் –
நமக்கு இதில் என்ன கஷ்டம் ?

மண்ணுக்கு கொடுப்பதையோ,
நெருப்புக்கு கொடுப்பதையோ
பார்வை இல்லாத பாவப்பட்ட  மனிதருக்குக்
கொடுத்தால் தான் என்ன ?
புண்ணியமாவது கிடைக்குமே !

ஒருவர் தானம் செய்தால் –
இருவருக்கு பார்வை கிடைக்கும்.
(அதிகம் பேர் பயனடைய வேண்டும் என்பதால் –
ஒருவருக்கு ஒரு கண் மட்டுமே பொருத்துகிறார்கள்)

ஒரு வயது குழந்தையிலிருந்து –
அதற்கு மேற்பட்டவர் –
எவ்வளவு வயதானவராக
இருந்தாலும் கொடுக்கலாம்.

கண்ணாடி அணிந்தவராக இருந்தாலும்,
காடராக்ட் செய்து கொண்டவராக இருந்தாலும்,
ரத்தக்கொதிப்பு உள்ளவராக இருந்தாலும்,
சர்க்கரை நோய் உள்ளவராக இருந்தாலும்,
கண்களைத்தவிர மற்ற இடங்களில் கேன்சர்
உள்ளவராக இருந்தாலும் கூட பரவாயில்லை.
தானம் கொடுக்க தகுதி உடையவர்களே !

இறந்து 6 மணி நேரத்துக்குள்ளாக கண்கள்
சேகரிக்கப்பட வேண்டும்.

இதற்கு ஆகும்  நேரம் வெறும்
20 நிமிடங்கள் மட்டுமே !

இதை எங்கு வேண்டுமானாலும் டாக்டர்கள்
மிகச்சுலபமாக செய்து விட முடியும் – இதற்காக
உடலை மருத்துவ மனைக்கு
கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை.

வீட்டிலேயே ஒரு அறையிலோ, ஆம்புலன்சிலோ –
ஏன் இடுகாட்டிலேயே கூடவோ  செய்யலாம்.
எந்தவித விகாரமும் தெரியாது. அந்த இடத்தில்
செயற்கை கண்கள் உடனடியாக வைக்கப்படும்.

டாக்டர்கள் வரும் வரை,
இறந்தவர் கண்களை மூடி,அதன் மேல்  ஈரப் பஞ்சை
வைத்து கண்களை ஈரமாக வைத்திருந்தால்  நல்லது.

இறந்தவர் தான் தானம் செய்ய எழுதிக்கொடுத்திருக்க
வேண்டும் என்கிற  அவசியம் இல்லை.  
இறந்தவரது நெருங்கிய உறவினர் யாராவது
சம்மதம் கொடுத்தாலே போதுமானது.

அருகில் உள்ள கண் வங்கியிலோ அல்லது அரசு பொது
மருத்துவ மனையிலோ தகவல் கொடுக்கலாம்.
உடனே டாக்டர்கள் வருவார்கள். அகில இந்திய அளவில்
இலவச தொலைபேசி எண் – 1919 க்கு தொடர்பு
கொண்டாலும் ( 24 மணி நேரமும் வேலை செய்யும் )
தேவையான தகவல்களும், உதவியும்  கிடைக்கும்.

நாம் மனம் வைத்து முனைந்தால்-
இரண்டே வருடங்களில்
காத்திருப்போர் பட்டியலே(waiting list)
இல்லாமல் செய்து விடலாம்.

எப்போது, யாரிடமிருந்து இறப்புச் செய்தியைக்
கேள்விப்பட்டாலும்,
சம்பிரதாயமாகப் பேச வேண்டியதைப் பேசிய பின்னால்
தொடர்ச்சியாக, தவறாமல் கேட்க வேண்டிய கேள்வியாக
இதை வைத்துக்கொள்வோமே –

“கண் வங்கிக்கு தகவல் கொடுத்து விட்டீர்களா ?”

சென்னையில் உள்ள விஸ்ராந்தி முதியோர் இல்ல
நிர்வாகியான திருமதி சாவித்ரி வைத்தி அவர்கள்
ஒரு வழக்கத்தை உண்டு பண்ணி வைத்திருக்கிறார்.

இந்த இல்லத்தில் சேரும் அனைவரிடம்
அவர்கள் சேரும்போதே,விருப்பத்தைக் கேட்டறிந்து
பதிவு செய்து  கையெழுத்தும் வாங்கி வைப்பதை
வழக்கமாக வைத்திருக்கிறார் இவர்.

எனவே இந்த இல்லத்தில் எப்போது  இறப்பு
நிகழ்ந்தாலும் எந்தவித பிரச்சினையோ, தாமதமோ
இல்லாமல் கண்களைப் பெற முடிகிறது.

நிறைய பேருக்கு கண்தானம் செய்வதில்
ஈடுபாடு இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் இது அதிக அளவில்
சாத்தியமாவது இல்லை.

சில முக்கிய காரணங்கள் –

கண் தானம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் –
படிவத்தில் கையெழுத்துப்போட்டு எழுதிக்கொடுப்பவர்கள்-  
அதை செயல்படுத்தக்கூடிய தருணம் வரும்போது –
உயிருடன் இருப்பது இல்லை.

இறந்து போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு
இறந்தவரின் விருப்பம் தெரிந்திருப்பதில்லை.

ஒரு வேளை  தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி
யோசிக்கக்கூடிய மன நிலையில் அவர்கள்
இருப்பதில்லை.

அவர்கள் நிகழ்வை அடுத்த நிலைக்கு கொண்டு
செல்வதிலேயே குறியாக இருப்பார்கள்.அநாவசிய
தாமதங்களை தவிர்க்கவே  இத்தருணங்களில்
விரும்புவார்கள்.
எனவே பார்வையற்றோர்  நிறையபேர்  பார்வை
பெறக்கூடிய சந்தர்ப்பஙகள் வீணாகின்றன.

பொதுவாக, எழுதிக்கொடுப்பதை விட –
இதைப்பற்றிய விழிப்புணர்வை – செய்தியை
பரப்புவது தான் மிகவும் முக்கியம்.

இந்த இடுகையைப் படிக்க நேரிடும் நண்பர்களிடம்
ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

இந்த செய்தி பரந்த அளவில் சென்று சேர தங்களால்
இயன்றதைச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
ஒவ்வொருவரும் தன் மெயில் பாக்ஸில் உள்ள
விலாசங்கள் அனைத்திற்கும் இந்த இடுகை ஈமெயில்
மூலம் போய்ச்சேர முயற்சி செய்தால் –
இந்த கண் தான இயக்கத்தில் பங்கு கொண்ட
மகிழ்வு  உங்களுக்கும் கிடைக்கும்.

என்ன நண்பர்களே – செய்வீர்கள் தானே ?
(இந்த இடுகையின் கீழேயே அதற்கான
மெயில் அனுப்பும் வசதி இருக்கிறது )

ஆங்காங்கே செயல்படக்கூடிய சமூக,
பொதுநல அமைப்புகள், தங்கள் நிகழ்ச்சிகள்
நடக்கும்போது  இடையே – கண் தானம் செய்தவர்களின்
குடும்பத்தினரை அழைத்து கௌரவப்படுத்த வேண்டும்.
இது பலரிடையே ஆர்வத்தைத் தூண்டும்.

இடுகை முடியப்போகிறது.
தலைப்புக்கும் இந்த இடுகைக்கும் என்னய்யா சம்பந்தம்
என்று யாராவது ஞாபகமாகக் கேட்கக்கூடும் !!
எனவே அதற்கான விளக்கத்தையும் கொடுத்து
விடுகிறேன்.

ஒன்று –
அழகான பெண்களை –
(atleast புகைப்படத்திலாவது )  
காண்பது
எல்லாருக்கும், மகிழ்வைக் கொடுக்கும்
அனுபவம் தானே ?
எனவே அழகிய புகைப்படங்கள் !!

இரண்டு –  
ஐஸ்வர்யா ராய், சினேகா –
இருவரும் கண்தான இயக்கத்தில் பங்கெடுத்துக்
கொண்டு, தங்கள் கண்களை  தானம் செய்வதாக
எழுதிக் கொடுத்திருக்கின்றனர்.

இப்போது -சரி தானே ?

(நான் கூடத்தான் எழுதிக்கொடுத்திருக்கிறேன் !
ஆனால் என் முகத்தைப்  பார்க்க எவ்வளவு பேர்
விரும்புவீர்கள் ?   அதனால் தான் என் முகத்தைப்
போடுவதைத் தவிர்த்து விட்டேன் !!)

கண் தானம் குறித்து மேற்கொண்டு தகவல்கள்
யாரிடமாவது இருந்தால் – தயவு செய்து
மறுமொழி மூலம் அதைத் தெரிவியுங்கள்.
மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

நாளை மீண்டும் –
சந்திப்போம் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to ஐஸ்வர்யா ராய் -சினேகா ……

  1. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டீர்கள் ஆம் . கேடராக்ட் சுகர் ரத்த அழுத்தம் இருந்தாலும்
    கண் தானம் செய்யலாம் என்று தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி. நண்பர்களுக்கும் இதை பார்வேர்டு
    செய்துள்ளேன்.

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    என்னடா தமிழ்மண நட்சத்திர பதிவர் ஆனவுடன் ஐஸ்வர்யா/சினேகா என்று ஆரம்பித்துவிட்டாரே என்று நினைத்துதான் இதை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நல்ல விஷயத்தை கூறுவதற்கு கொஞ்சம் தேன் கலந்துதான் சொல்லவேண்டியுள்ளது என்பதை புரிந்துக்கொண்டேன் படித்து முடித்தவுடன்.
    நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர் நண்பரே!
    நிச்சயம் இதை மற்றவர்களுடன் பகிர்வோம்!!
    வாழ்த்துக்கள் தமிழ்மண நட்சத்திர பதிவர்க்கு!!!

  3. லால்குடி நாராயணன்'s avatar லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன் அவர்களுக்கு,

    அருமையான, மிகவும் பயனுள்ள பதிவுடன்
    நட்சத்திரப் பதிவைத் துவக்கி இருக்கிறீர்கள்.
    நிச்சயமாக இந்த செய்தி
    அதிகம் பேரைச் சென்றடையும். இதில்
    நாங்களும் கலந்து கொள்வோம்.

    வாழ்த்துக்கள்.

    அதற்காக உங்கள் வழக்கமான, சூடான இடுகைகளை
    விட்டு விடாதீர்கள். ஒவ்வொரு தகிடுதத்தம்
    நிகழும் போதும், உண்மையான, முழுமையான
    விவரங்களை தெரிந்துகொள்ள உங்கள்
    பதிவைத்தான் தேடி வருகிறோம்.
    வணக்கம்.

  4. Gopal Kannan's avatar Gopal Kannan சொல்கிறார்:

    வணக்கம் காவிரிமைந்தன்,

    அருமையான மிக பயனுள்ள கட்டுரை.

    கண் தானம் பற்றிய சில ஐயங்களை முழுவதும் போக்கிவிட்டது, இக்கட்டுரை.

    நன்றி.

  5. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    பிரபல எழுத்தாளர்களே, சமுதாயத்துக்கு என்னத்தை வழங்குகிறோம் என்ற பிரக்ஞ்சையே இல்லாமல் கண்ட குப்பைகளையும் எழுதும் இக்கால கட்டத்தில், சமூக நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஆழமான செய்திகளை எழிமையாக வழங்கி வரும் கா மை ஐயா அவர்களே…நீங்கள் நீடூழி வாழ்க. தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

  6. Sridhar's avatar Sridhar சொல்கிறார்:

    Wishes for a Wonderful post and congrats for Star of Tamilmanam.

  7. Mohan Kumar's avatar Mohan Kumar சொல்கிறார்:

    தமிழ் மண நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட பின், தங்கள் முதல் இடுகையாக இத்தகைய பயனுள்ள இடுகை எழுதியது மகிழ்ச்சி தருகிறது

  8. V.MATHIVANAN's avatar V.MATHIVANAN சொல்கிறார்:

    GOOD MOVE SHOULD BE DONE & I WILL SEE TO THAT FROM MY PART THIS IS TAKEN TO ALL IN MY CIRCLE. MATHI

  9. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.
    தமிழ் மண நட்சத்திர பதிவாளர் ஆனதற்கு வாழ்த்துகள்.
    கண் தானம் பற்றிய அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

  10. dharumi's avatar dharumi சொல்கிறார்:

    நட்சத்திரமானதிற்கு வாழ்த்தும், நல்ல இடுக்கைக்கு பாராட்டும் …

  11. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    என்னுடைய மனப்பூர்வமான நட்சத்திர வாழ்த்துகள். உங்களின் தீவிர வாசகன்.

    ஜோதிஜி

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர்களே,

      வாழ்த்துக்கள் கூறி என்னை
      ஊக்கப்படுத்தும் உங்கள் அனைவருக்கும்
      என் நெஞ்சார்ந்த நன்றி.

      இது உங்கள் வலைத்தளம்.
      தொடர்ந்து உங்கள் கருத்துக்களைக் கூறி
      வலைத்தளத்தை பயனுள்ளதாக்க
      வாருங்கள் என்று அழைக்கிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  12. துளசி கோபால்'s avatar துளசி கோபால் சொல்கிறார்:

    நல்ல ‘விழி’ப்புணர்வு உள்ள இடுகை!

    இங்கே எங்கூரில் ஓட்டுனர் உரிமம் வாங்கும்போது, மரணத்துக்குப்பின் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக எழுதிக் கொடுத்துருக்கோம் நாங்க.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.