மாதவன் நாயரே – ஆட்டம் வேண்டாம் !
இது “பேட்டை துள்ளல்” இல்லை –
சுத்தமான கிரிமினல் கேஸ் !
ISRO வின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் நேற்று
தொலைக்காட்சிகளில் துள்ளிக் குதித்தார். விட்டேனா பார்
அந்த ராதாகிருஷ்ணனை என்றார். ராதாகிருஷ்ணன்
(இந்நாள் ISROவின் தலைவர் ) ஹிட்லர் போல்
நடந்து கொள்கிறார். என் மீது பழி வாங்குகிறார்.
அனைத்திற்கும் அவரே காரணம். எனக்கு இழைக்கப்பட்ட
அநீதிக்கு எதிராக நீதிமன்ற்த்திற்குச் செல்வேன் –
என்றெல்லாம் படபடப்பாகப் பேசினார்.
என்ன விஷயம் ?
இவருக்கு அப்படி என்ன அநீதி இழைக்கப்பட்டு விட்டது ?
நேற்றைய செய்திகளைப் பாருங்கள் –
“இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர்,
இஸ்ரோவின் முன்னாள் அறிவியல்துறை செயலாளர்
கே பாஸ்கரன் நாராயணன், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின்
முன்னாள் நிர்வாக இயக்குநர் கே ஆர் ஸ்ரீதரமூர்த்தி,
இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள்
இயக்குநர் கே என் சங்கரா ஆகிய 4 விஞ்ஞானிகள் மீது
எஸ்.பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகாரில்,
மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்கள் வருங்காலத்தில் அரசுப்பணி ஏற்க தடை
விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் நகல்
நாட்டிலுள்ள அரசுத்துறை செயலாளர்களுக்கு
அனுப்பபட்டுள்ளது.”
இவர்கள் எல்லாருமே அரசுப்பணியில் இருந்து 60 வயது
வரை பணி புரிந்து விட்டு ஓய்வு பெற்றவர்கள்.
அப்படியானால், இவர்களுக்கு இதில் எந்த விதத்தில்
பாதிப்பு ? அங்கே தான் இருக்கிறது விஷயமே.
60 வயது ரிடையர்மெண்ட் சமாச்சாரம் எல்லாம்
நம்மைப் போன்ற சாதாரண ஆட்களுக்கு தான்.
இவர்கள் எல்லாம் ரிடையர் ஆனபிறகும் எதாவது ஒரு
கமிட்டியில் தலைவராகவோ, உறுப்பினராகவோ,
ஆலோசகராகவோ இடம் பெற்று, தள்ளாடி விழும் வரை
முழு சம்பளம் வாங்கிக் கொண்டு காலம் தள்ளுவார்கள்.
மாதவன் நாயர் ரிடையரான பிறகு,
ஏற்கெனவே CSIR-NAL சார்பில்
அமைக்கப்பட்டுள்ள regional transport
aircraft project உயர்மட்ட கமிட்டி ஒன்றின்
தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இன்னும் 4-5
வருடங்களுக்கு சுலபமாக காலம் தள்ளலாம்.
அந்த பதவி இப்போது பறி போய் விடும்.
ரிடையர் ஆன பிறகு பதவி என்பது யாருடைய
உரிமையும் இல்லையே – அது அரசாங்கமாகப் பார்த்து
பொருத்தமானவர்களுக்கு (?) வழங்குவது தானே ?
அதை உரிமையாகக் கேட்டு எந்த கோர்ட்டுக்குப் போக முடியும் ?
இவர் இப்படி துள்ளிக் குதிப்பதற்கு காரணம் இருக்கிறது.
இப்போதே உரத்து குரல் எழுப்பினால் –
இது ஏதோ – ராதாகிருஷ்ணனுக்கும் இவருக்கும்
இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்று கருதி
அரசாங்கம் இதற்கு மேல் எதுவும் நடவடிக்கை எடுக்காது என்று நினைக்கிறார்.
உள்ளுக்குள்ளே பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார் –
எங்கே அரசாங்கம் அடுத்ததாக கிரிமினல் நடவடிக்கை
எடுத்து விடுமோ என்று.
உண்மையில் இந்த நடவடிக்கை வந்ததற்கு கூட
காரணம்-
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முன்னாள்
மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் பிரதியுஸ் சின்ஹா
குழுவின் அறிக்கை தான். இந்த 4 பேர் மீதும் கிரிமினல்
நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காகத்
தான் இந்த நாயர் இப்படி முந்திக்கொண்டு துள்ளிக்
குதிக்கிறார்.
இந்த ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் – எஸ் பேண்டு
சமாச்சாரம் எல்லாம் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி
இருக்கும். ஆனால் என்னவென்று சரியாக
நினைவில் இருக்காது – சரி தானே ?
நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லாமல்
இதே வலைத்தளத்தில் கடந்த feb 11, 2011 அன்று
நான் எழுதியிருந்த பதிவை கீழே தந்திருக்கிறேன்.
முழு விவரமும் நினைவிற்கு வரும்.
———————————————–
feb 11, 2011
நாட்டின் வளங்களைச் சுரண்டும்
நாசகார நாயர்கள் கும்பல் –
“எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் !
2ஜி அலைக்கற்றைகளைப் பற்றிய விவரங்கள்
நமக்கு இப்போது தான் ஆண்டிமுத்து ராஜாவின்
அருளால் விளங்கத் தொடங்கின.
செல்போன் உபயோகத்திற்கு
தேவையான அலைவரிசைகள் இவை.
இதற்கு அடுத்து 3ஜி அலைக்கற்றைகளும்
பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
அறிமுகத்திற்கு வந்து கொண்டிருக்கும் –
வீடியோ இணந்த செல்போன் வசதிகள்
இயங்கத் தேவையான அலைவரிசைகள் தான் 3ஜி.
இதற்கு அடுத்த கட்டமாக இன்னும் சில
ஆண்டுகளில் வர உள்ள 4ஜி அலைக்கற்றைகள்
தான் இப்போது அடிபட்டுக் கொண்டிருக்கும்
“எஸ்”பாண்டு அலைவரிசை.
இதன் முக்கிய பயன் –
செல்போன் டவர் இல்லாமலே
எங்கு வேண்டுமானலும் தொலைபேசி வசதியைப்
பெறலாம். நாட்டின் வளர்ச்சியில் பெரும்
புரட்சியை உண்டு பண்ணக்கூடியது இந்த “எஸ்”பாண்டு
அலைவரிசை.இதை 4ஜி என்றும் கூறுவார்கள்.
இந்த் அலைவரிசையை பயன்பாட்டிற்கு கொண்டு
வருவதற்காகவே அடுத்து இரண்டு செயற்கைக்கோள்களை
ஜிசாட்-6 மற்றும் ஜிசாட்-6ஏ என்கிற பெயர்களில்
விண்வெளியில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில்
மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது
இந்திய அரசாங்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான
இஸ்ரோ.
இவ்வாறு விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்களை
வியாபார நோக்கில் பயன்படுத்துவது தொடர்பான
விஷயங்களை கவனிக்கும் பொருட்டு, இஸ்ரோவின்
துணைப்பிரிவாக “ஆண்ட்ரிக்ஸ்” என்கிற நிறுவனத்தை
உருவாக்கி இருக்கிறது மத்திய அரசு.
செயல்களைப் பொறுத்த வரை இரண்டும் தனித்தனி
நிறுவனங்களாகப் பிரிக்கக்ப்பட்டிருந்தாலும் –
இஸ்ரோவின் தலைவர் தான் ஆண்ட்ரிக்ஸ் க்கும் தலைவர்.
எனவே இரண்டையும் ஒரே நிர்வாகி தான்
கவனிக்கிறார் எனலாம்.
இந்த ஜிசாட்-6 மற்றும் ஜிசாட்-6ஏ செயற்கைகோள்களை
செலுத்துவதற்கான திட்டப்பணிகள் 2003 ஆம் ஆண்டிலேயே
ஆரம்பித்து விட்டன.
இந்த அலைக்கற்றைகளின் மதிப்பு நம்மைப் போன்ற
வெளிமனிதர்களுக்கு தெரியாத காலம் அது.
ஆனால் – இஸ்ரோவில் பணி புரிந்து வந்த மூத்த
அதிகாரிகளுக்கு இது ஒரு பொன் முட்டை இடும்
வாத்து என்பது அப்போதே தெரியும்.
எனவே இந்த “எஸ்”பாண்டு அலைக்கற்றையின்
பயனாக இந்த நாட்டிற்கு கிடைக்க இருக்கும்
அளவில்லாத, விலை மதிப்பு மிக்க வளங்களை
அப்படியே சுருட்டத் தீர்மானித்தனர் அங்கு
பெருத்த எண்ணிக்கையில் பணி புரியும்
விஞ்ஞானிகளான நாயர்களும்,
மேனன்களும், பிள்ளைகளும்.
(இஸ்ரோ அமைப்பு துவக்கத்தில்
திருவனந்தபுரத்திலிருந்தே
செயல்பட்டதால் – இந்த நிறுவனத்தில்
பணிபுரியும் அதிகாரிகளில் பெரும்பாலானோர்
மலையாளிகளே ).
தங்கள் திட்டத்திற்கு விரைவாகச் செயல்வடிவம்
கொடுத்தனர்.முக்கியமான அதிகாரிகள் சிலர்
சேர்ந்து தேவாஸ் மல்டி மீடியா என்கிற தனியார்
நிறுவனம் ஒன்றினை உருவாக்கினர்.இஸ்ரோவில்
பணிபுரிந்து ஓய்வு பெற்ற சந்திரசேகர் என்கிற
அதிகாரி இதன் நிர்வாகத்தை ஏற்றார். இந்த நிறுவனம்
இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன்
ஒரு ஒப்பந்தத்தை போட்டது. சம்பந்தப்பட்ட
எல்லாருமே இஸ்ரோவின் முன்னாள், இந்நாள்
அதிகாரிகள் தான் என்பதால் இது மிகவும்
சுலபமாக நடந்தேறியது.அவர்களுக்கு
சாதகமான எல்லா சங்கதிகளையும்
ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
ஜிசாட்-6 மற்றும் ஜிசாட்-6ஏ செயற்கைகோள்களை
தயாரிப்பதில்/உருவாக்குவதில் தேவாஸ் நிறுவனம்
இஸ்ரோவிற்கு உதவுவது என்றும்,
அதற்கு பிரதியாக –
இரண்டு செயற்கைக்கோள்களும் உருவாக்கும்
“எஸ்”பாண்டு அலைக்கற்றையில்
70 மெகா ஹர்ட்ஸ் அளவிற்கு
தேவாஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள
இஸ்ரோ அனுமதிக்கும் என்றும்,
அதற்கான கட்டணமாக
தேவாஸ் நிறுவனம்
20 ஆண்டுக்காலத்திற்கு 1000 கோடி
ரூபாய் கொடுப்பது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.
அதாவது ஆண்டிற்கு 50 கோடி மட்டுமே.
சுமார் இரண்டு லட்சம் கோடி பெறுமான
அலைக்கற்றைகளை சர்வசகஜமாக
வெறும் 50 கோடிக்கு அள்ளிக்கொண்டு போக
சதி வலை பின்னினர் அங்கிருந்த
கூட்டுக்களவாணிகளான சில அதிகாரிகள்.
வெளியார் யாருக்கும் இது பற்றிய விவரம்
தெரியாது – புரியாது !
இந்த ஒப்பந்தம் போடப்பட்டது ஜனவரி 28,
2005-ல்.
போட்டது தேவாஸ் நிறுவனமும்
ஆண்ட்ரிக்ஸ் நிறுவனமும்.
ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு –
வர்த்தகம் செய்வதற்கான
அதிகாரம் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டிருப்பது
உண்மை தான் என்றாலும், இந்த ஒப்பந்தத்தைப்
போடும் முன்னர், இஸ்ரோ மத்திய அரசுக்கு
முழு விவரங்களையும் தெரிவித்து
அதன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஒப்பந்தம்
செய்திருக்க வேண்டும் – அது தான் நடைமுறை.
உண்மையில் இஸ்ரோ இரண்டு
செயற்கைக்கோள்களையும் தயாரிக்கவும்,
விண்ணில் செலுத்தவும் மத்திய அரசிடம்
முறையான அனுமதியைப் பெற்றாலும்,
அந்த செயற்கைக் கோள்களை பயன்படுத்திக்கொள்ள
தேவாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்
விஷயத்தை மட்டும் ஏனோ மறைத்து விட்டது.
செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும்,
விண்ணில் செலுத்தப்படும் நாள் –
பல காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது.
இதற்குள்ளாக, தேவாஸ் நிறுவனம் தங்களுடன்
பல அந்நிய நாட்டு நிறுவனங்களை பங்குதாரர்களாக
சேர்த்துக் கொண்டு விட்டது.
ஜூலை 2008 லேயே
தனது 17 சதவீத பங்குகளை டாயிட்ஸ் டெலிகாம்
என்கிற ஜெர்மன் நிறுவனத்திற்கு 318 கோடி ரூபாய்க்கு
விற்று செயற்கைக்கோள் பறக்கும் முன்னரே லாபம்
சம்பாதிக்க ஆரம்பித்து விட்டது.
இஸ்ரோ மத்திய அரசின் விண்வெளி கமிஷன் மற்றும்
பிரதமரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருகிறது.
பிரதமர் தான் இந்த துறைக்கான அமைச்சரும் கூட.
இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பது பிரதமருக்குத்
தெரியுமா தெரியாதா என்றால் –
தாடி வைத்திருக்கும் அந்த சிங் முறைக்கிறாரா –
சிரிக்கிறாரா என்பதே யாருக்கும் தெரியவில்லை
என்கிறார்கள்.
பிரதமருக்கு இதைப் பற்றிச் சொல்லப்பட்டதாகத்
தெரியவில்லை என்று முந்தாநாள் பேட்டியில்
சொல்கிறார் –
இஸ்ரோவின் தற்போதைய தலைவர்
ராதாகிருஷ்ணன்.
முன்னர் தெரிந்ததோ இல்லையோ –
குறைந்த பட்சம் டிசம்பர் 2009 லிருந்து இந்த விஷயம்
லேசாக பேச ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
மே 2010 -ல் இது குறித்து இஸ்ரோவில் விரிவாக
விவாதிக்கப்பட்டு, இந்தியாவின் தலைசிறந்த
சட்ட நிபுணர்களில் ஒருவரான மோகன் பராசரன்-
இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு பெருத்த கேட்டை
விளைவிக்கும் எனவே உடனடியாக இதை
ரத்து செய்ய வேண்டும் என்று
மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
இதன் பின்னரும் விழித்துக் கொள்ளாத அல்லது
வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டுள்ள
மன்மோகன் சிங் எந்த வித நடவடிக்கையையும்
எடுக்காமல் கிடப்பில் போட்டார்.
இப்போது திடீரென்று CAG தலைமை கணக்கு
தணிக்கை அதிகாரி வினா எழுப்பியதுடன்,
2ஜி அலைக்கற்றை அனுபவம் காரணமாக,
நாடு முழுதும் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கண்டு
ஒன்றுமே நடக்கவில்லை
இது ஓவர் ரீ ஆக் ஷன் – என்று மழுப்புகிறார்கள்.
வழக்கம் போல், கபில் சிபல் –
சாட்டிலைட்டே இன்னும் மேலே போகவில்லை.
அதற்குள் அலைக்கற்றையை
எப்படி கொடுக்க முடியும் -நஷ்டம் எப்படி ஏற்பட முடியும்
என்று கேள்வி எழுப்புகிறார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை
இஸ்ரோ தலைவராகப்
பணியாற்றியவர் மாதவன் நாயர்.
அவர் ஒத்துழைப்பும்,
பங்களிப்பும் இல்லாமல் இவை எல்லாம்
நடந்தேறி இருக்க வாய்ப்பே இல்லை.
இருந்தும் முந்தாநாள் தொலைக்காட்சி நிருபர்கள்
அவரை விமான நிலையத்தில் மடக்கி
வினா எழுப்பியபோது
அப்படி ஒப்பந்தம் ஏதும் போடப்பட்டதாகவே எனக்கு
நினைவில்லை என்று கூறிக்கொண்டே
வழுக்கிக்கொண்டு ஓடுகிறார்.
அரசியல்வாதிகள் முன் நின்று
நடத்தியது 2 ஜி.
அதிகாரிகள் முன் நின்று
நடத்தி இருப்பது 4 ஜி.(எஸ் பாண்டு)
இன்னும் முழு விவரங்கள் வெளிவரவில்லை.
இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது
தெளிவாகவில்லை.
யார் யாருக்கு பங்கு போகிறது என்றும் தெரியவில்லை.
தொடர்பு டில்லியோடு சரியா இல்லை
இத்தாலி வரை போகுமா என்பதும் தெரியவில்லை !
பிரதமர் விசாரணை கமிட்டி அமைத்து விட்டார் –
எனவே இனி யாரும் இதைப்பற்றி அநாவசியமாகப்
பேச வேண்டிய தேவை இல்லை என்று
காங்கிரசின் மணீஷ் திவாரி டிவி பேட்டியில் கூறினார்.
டிவியில் அவர் பேசுவதைப் பார்க்கும்போது –
அவர் மூஞ்சியிலேயே ஓங்கிக் குத்த வேண்டும் போல்
இருந்தது.
முடியவில்லை !
என்ன செய்வது – முகம் அவருடையதாக இருந்தாலும்
டிவி நம்முடையதாயிற்றே !




”படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் அய்யோன்னு போவான்
அய்யோன்னு போவான்
அய்யோன்னு போவான் “
– இந்த பாரதி வாக்கைத் தவிர வேறு ஏதும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை காவிரி மைந்தன்.
விசாரணை கமிட்டியின் ரிப்போர்ட் இன்னும்
வெளிவராத நிலையிலேயே இந்த ஆள்
இவ்வளவு ஆட்டம் போடுகின்றார் – ரிப்போர்ட்டில்
நிச்சயம் ஏதோ பெரிதாக இருக்கிறது.
ரிப்போர்ட் வெளியாக வேண்டும். இவர்கள்
மீது கிரிமினல் நடவடிக்கை தொடங்க வேண்டும்.
அத்தனை பயல்களும் வெளிநாட்டு வங்கியிலேயே
பணப்பரிமாற்றம் பண்ணி இருப்பார்கள்.
மன்மோகன் சிங் ஆட்சியில்
செய்திருக்கும் உருப்படியான வேலை இது.
கொள்ளை அடித்தவர்கள்/அடிக்க முயன்றவர்கள்,
அரசியல்வாதிகள் யாரையும் கூட்டு சேர்த்துக்
கொள்ளாததால் வந்த வினை இது !
அரசியல்வாதிகள் யாரும் இதில்
சம்பந்தப்பட்டிருந்தால்,
இதுவும் இந்த நடவடிக்கையும் இருந்திருக்காது.
நல்ல பதிவு.
சரியாய் சொன்னிங்க மணீஷ் திவாரி பேசும் போது எனக்கும் அப்படித்தான் தோணும் ………….
டிவியில் அவர் பேசுவதைப் பார்க்கும்போது –
அவர் மூஞ்சியிலேயே ஓங்கிக் குத்த வேண்டும் போல்
இருந்தது.
முடியவில்லை !
என்ன செய்வது – முகம் அவருடையதாக இருந்தாலும்
டிவி நம்முடையதாயிற்றே !
super punch !!!
நல்ல தெளிவான பதிவு
/* என்ன செய்வது – முகம் அவருடையதாக இருந்தாலும்
டிவி நம்முடையதாயிற்றே ! */
பதிவ நச்சுன்னு முடிச்சு இருக்கீங்க. அற்ப்புதம்.
Interesting one!
அதெப்படி காங்கிரஸ் மணிஷ் திவாரி,கபில் சிபல்ன்னு முசுடு முகங்களாக சரியா தேர்ந்தெடுக்குது:)