ர ஜி னி யின் பேட்டி …
என்னை இந்த இடுகையை எழுதத் தூண்டியது –
இன்று படித்த –
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் –
மறுபிரசுரம் ஆகி இருக்கும் ரஜினியின் பேட்டி ஒன்று –
24 1/2 (இருபத்தி நான்கரை) வருடங்களுக்கு முன்
18/03/1987-ல் அவர் கொடுத்த பேட்டி.
ரஜினி ஒரு நல்ல மனிதர்.
நிறைய வசதிகள் இருந்தாலும்,
புகழின் உச்சத்தில் இருந்தாலும்,
மிக மிக எளிமையாக வாழ்பவர்.
ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று
அவரது ரசிகர்களில் பலர் நீண்ட நாட்களாக விருப்பம்
தெரிவித்து வந்திருக்கிறார்கள். அதற்கு இதுவரை ரஜினி
பிடி கொடுத்து பதில் சொல்லவில்லை.
எல்லாம் இறைவன் விருப்பம்- அவன் என்ன
சொல்கிறானோ அதன்படி தான் எதுவும் நடக்கும் என்று
கூறி வருகிறார்.
இருபத்தி நான்கு வருடத்திற்கு முன்னர் –
அரசியலைப் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும்
ரஜினி வைத்திருந்த அபிப்பிராயம் என்ன ?
ஜூ.வி. பேட்டியிலிருந்து சில வரிகள் –
——————-
“அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
மக்களுடைய அறியாமையை முழுமையாகத் தங்களுக்கு
சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நமது ஜனநாயக அமைப்பு முறையே ஏமாற்று வித்தை.
பிரிட்டிஷ் காலத்து அணுகுமுறை.
எல்லாருக்கும் உணவு, உடை, வீடு, சமத்துவம்,
சகோதரத்துவம் என்று எல்லாம்
எழுத்தில் தான் இருக்கிற்து….
ஒரு வேளைச் சோற்றுக்கு வழி இல்லாதவன் கூட
தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை வர வேண்டும்.
ஒரு ஏழை தேர்தலில் நிற்க முடியுமா ?
ஒரு எம்.எல்.ஆ. சட்டசபையில் நுழைய
வேண்டுமானால் – 5 லட்ச ரூபாயாவது (1987-ல் ?)
செலவு செய்ய வேண்டும். அவ்வளவு
செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றவரின்
பொது வாழ்வில், நாம் நேர்மையை எதிர்பார்க்க
முடியுமா ?
ஒரு சாதாரண பியூன் வேலைக்கு
ஆள் எடுக்கும்போது கூட அவரது கல்வித்தகுதி
என்ன என்று கேட்கிறோம். நம்மை
ஆளப்போகிறவர்களுடைய தகுதியைப் பற்றி
நாம் கவலைப்படுவதே இல்லை. அதனால் தான் –
பதவிக்கு வருகிறவர்கள், நம் வாழ்க்கைத் தரத்தைப்
பற்றி கவலைப்படுவது இல்லை”
...”நான் மதவாதி அல்ல – ஆன்மிகவாதி”
———————
ரஜினி சொன்னதில் எதுவுமே தவறு இல்லை.
உள்ளதைத் தானே வெளிப்படையாகச்
சொன்னார் அவர் ?
பரிதாபம் என்னவென்றால் –
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும்
நமது அரசியல் மாற்றம் பெறவே இல்லை.
இன்னும் பல மடங்கு மோசமானது தான் மிச்சம்.
இப்போதெல்லாம் லட்சங்களுக்கு
பதிலாக கோடிகள் -அவ்வளவு தான்
வித்தியாசம் !
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில்
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் மீது
கிரிமினல் குற்றங்கள் இருக்கின்றன.
ரஜினி அரசியலுக்கு வரத் தயங்குவதில் அர்த்தம்
இருக்கிறது. தான் எவ்வளவு தான் சுத்தமாக
இருந்தாலும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள்
சுயநலவாதிகளாகவே இருந்தால் என்ன ஆகும் ?
– என்று யோசிக்கிறார்.
தனக்கு உள்ள மரியாதையும் போய் விடுமோ
என்று பயப்படுகிறார். எல்லாருக்கும் நல்லவராக
இருப்பது போய் – பலரின் பகையை சம்பாதித்துக்
கொள்ள வேண்டுமே என்று யோசிக்கிறார்.
இன்றைய தினத்தில் ரஜினி அரசியலுக்கு வர
நேர்ந்தால் – அவர் நினைப்பது போல நடக்கத்தான்
வாய்ப்பு அதிகம்.
இந்த வயதில், இந்த உடல்நிலையில், புதிய கட்சி
ஆரம்பிப்பது இயலாத காரியம். இருக்கின்ற கட்சிகளில்
பிடித்த ஒன்றில் சேரலாம் –
ஆனால் அதற்கும் ரஜினியே சொல்வது
போல் காலம் வர வேண்டும் –
“அவன் சொல்ல வேண்டும்”.
ஆனால் ரஜினிக்கு மக்களுக்கு எதாவது செய்ய
வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
அது சரியாக, போக வேண்டியவர்களுக்குப்
போய்ச்சேர என்ன செய்வது –
எப்படிச் செய்வது என்று யோசித்துக்
கொண்டிருக்கிறார்.
மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அதிகாரம்
அவசியம் இல்லை. அரசியலிலோ, அதிகாரத்திலோ
இல்லாமலே கூட- நிறைய விஷயங்கள் செய்யலாம்.
ரஜினி ஒரு அறக்கட்டளையைத் துவங்க வேண்டும்.
தனியாக வேண்டாம். வசதி படைத்தவர்கள் நிறைய
பேர் இருக்கிறார்கள். ரஜினியின் செல்வாக்குக்கு,
வார்த்தைக்கு – உட்பட்டு, கட்டுப்படக் கூடியவர்கள்
நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
அவர்களையும் சேர்த்துக்கொண்டு
ஆரம்பிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்
பலரும் சரியான மருத்துவ வசதி இன்றி
துன்பப்படுகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில்
வசதிகள் இருந்தாலும் – அதிகம் செலவு பிடிக்கிறது.
ஏழைகளால், நடுத்தர மக்களால், வீட்டில் யாருக்காவது
பெரிய அளவில் நோய் வந்தால் – தாக்குப் பிடிக்க
முடியவில்லை.
உடம்பு சரி இல்லை – மருத்துவ உதவி தேவை என்று
யாரும் பொய் சொல்லி உதவி கேட்க மாட்டார்கள்.
1) அரசு மருத்துவ மனைகளில் சாதாரணமாக
ஸ்கேனிங் இயந்திரங்கள் இருப்பதில்லை.
ஏழை நோயாளிகள் காசு செலவழித்து ஸ்கேனிங்
செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.
எனவே அறக்கட்டளையின் சார்பாக தமிழ் நாடு
முழுவதும் நிறைய இலவச ஸ்கேனிங் செண்டர்கள்
அமைக்கலாம். தேவைப்படும் நோயாளிகளுக்கு
இலவசமாக ஸ்கேனிங் செய்து கொடுக்கலாம்.
2) கிட்னி பழுது அடைந்தவர்களுக்கு, வாரத்திற்கு
இரண்டு நாட்களாவது டயாலிஸிஸ் செய்ய வேண்டி
இருக்கிறது. அரசாங்க மருத்துவ மனைகளில்
இதற்கும் வசதி இருப்பதில்லை.
காசு செலவழித்து வெளியே டயாலிஸிஸ்
செய்து கொள்ள வசதி இல்லாதவர்களுக்காக
நிறைய இலவச டயாலிஸிஸ் செண்டர்களை
அமைக்கலாம்.
3) கண் மருத்துவம் – அநேகமாக முற்றிலுமாக
தனியார் வசம் போய் விட்டது. முதியவர்களின்
முக்கிய பிரச்சினையே கண் நோய்கள் தான்.
மாவட்டத்திற்கு ஒன்றாக – நல்ல தரமான
கண் மருத்துவமனைகளை அமைத்து, அனைவருக்கும்
இலவசமாக கண் சிகித்சை செய்ய உதவலாம்.
இந்த கண் மருத்துவ மனைகளிலேயே –
கண் வங்கிகளையும் உருவாக்கலாம்.
4) தமிழ் நாட்டின் மத்தியில், திருச்சி, தஞ்சை,
மதுரை போன்ற ஊர்கள் எதிலாவது சகலவித
வசதிகளையும் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிடி
மருத்துவமனை ஒன்றை அமைக்கலாம்.
மருத்துவ உதவி கோரும் யாராக இருந்தாலும்,
சேர்த்துக்கொண்டு – முற்றிலும் இலவசமாக
சிகித்சை அளிக்கலாம்.
நாட்டில் –செல்வந்தர்களுக்கு ஒன்றும்
குறைவே இல்லை.
அவர்களை இணைக்க, மக்கள் பணியில்
நுழைக்க – ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர்
தேவை.
ரஜினியின் நல்ல உள்ளமும்,
செல்வாக்கும், வசீகரமும் இதற்குப் பயன்படட்டுமே !




ரஜினியிடம் நான் எதிர்பார்ப்பது இதுதான். தன்னால் முடிந்த இந்த மாதிரி உதவிகளையாவது அவர் செய்ய வேண்டும் இந்த தமிழ் மக்களுக்கு. காலம் ஒன்றும் கடந்து விடவில்லை
என்னே நம் தலைவிதி!!
நாடு சுதந்திரம் பெற்று 64ஆண்டுகளுக்குப்பிறகும்,
நம்மால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசு செய்யவேண்டிய
நமக்கு உரிமையான,அனைத்துப்பணிகளையும்,
ஒரு தனிமனிதன் செய்யக்கோரி அவரிடம் கையேந்தவேண்டிய நிலை!
கடவுள் காப்பாற்றுவாராக!
வருக கண்பத்,
நொந்துக் கொள்ள வேண்டாம்.
அரசாங்கம் செய்ய வேண்டும் –
உண்மை தான். அது வேறு விஷயம்.
தனி மனிதர் ஒருவர் மற்றவர்களுக்கு
உதவி செய்யக்கூடிய நிலையில்
இருந்தால் – அதை, அவர்,
அவசியம் செய்ய வேண்டும்.
இருப்பவர் -இல்லாதவருக்கு
செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும், தன்னை
உருவாக்கிய சமுதாயத்திற்கு
கடன் பட்டிருக்கிறான். தன்னால்
இயன்ற விதத்தில் அந்த கடனை
திருப்பச் செலுத்த வேண்டும் அல்லவா ?
உங்களுக்குத் தெரியாததா –
“ஊருணி நீர் நிறைந்தற்றே – உலகு
அவாம் பேரறிவாளன் திரு ”
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அன்பின் கா.மை,
ஒரு செல்வந்தர் மனமுவந்து தான தர்ம்ங்கள் செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது.அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.ஆனால் அவர் செய்துதான் ஆகவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு.
அதே சமயம் நம்மால் தேர்தெடுக்கப்பட்ட அரசு நமக்கு நல்லது செய்யவேண்டியது அவர்களின் கடமை.அங்குதான் நாம் தவறி விட்டோம்.கருணா,ஜெயா போன்ற சாபங்கள் நம்மை தொடர்ந்து இன்னலில ஆட்புடுத்துகின்றன.அவர்களை முனைந்து ஒழிப்பது ஒன்றுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
Coming to Rajini,எனக்குதெரிந்தவரை ஒரு பள்ளிக்கூடம் ரஜினி குடும்பத்தாரால் நடத்தப்படுகிறது.சென்னையில் உள்ள costly பள்ளிகளில் அதுவும் ஒன்று.மற்றபடி அவர் குறிப்பிடும்படி எதுவும் வெளிப்படையாக செய்வதாக தெரியவில்லை.நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் இலவச கல்வி திட்டம் ஒன்றை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர்.நடிகர் கமல்ஹாசன்,ரத்ததானம் உடலுறுப்புகள் தானம் இவற்றின் மேன்மையை பரப்பிவருகிறார.நடிகர் அஜித்குமார் மிகவும் தான தர்ம்ங்கள் செய்கிறார் என சமீபத்தில் ஒரு பதிவில் படித்தேன்.ஆக இந்திய அரசியல் வியாதிகளை தவிர ஏனைய அனைத்து இந்தியர்களும் தம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.
நம் தெலுகு கங்கை திட்டத்தை முடிக்கவே சாய்பாபா உதவி தேவைப்பட்டது.ஆனால் அந்த நன்றிக்கடன் கூட இல்லாமல் பல பதிவர்கள் சாய்பாபா மறைந்த போது அவரை தரக்குறைவாக விமரிசனம் செய்தனர்,இதுதான் நம் நன்றயுணர்ச்சி!!
1947 முதல் 1991 வரை இந்திய அரசு ஏழை,பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவர்க்கும் இடைஞ்சலாக இருந்துவந்தது, 1991க்குப்பிறகு இந்நிலை மாறி அது பணக்காரர்களுக்கு உதவி வருகிறது.ஏழைகள் படாத பாடு படுகின்றனர்.அவர்கள் இடும் சாபம் நம் எல்லோரையும் பாதிக்கிறது.
இந்தியா எனும் பெரிய தொட்டியில் இருக்கும் பெரிய ஓட்டை அரசியல்வாதிகள்.அந்த ஓட்டையை அடைக்கும்வரை எத்தனை முயன்று தண்ணீர் நிரப்பினாலும் அது வீண்செயலே!
இது நல்ல யோசனை தான்.
இதை நீங்கள் ரஜினியின்
பார்வைக்கு அனுப்பலாமே.
நன்றி நண்பரே.
இதைப் படிக்கும்
யாரிடமாவது ரஜினியின் email ID
இருந்தால் தயவு செய்து இங்கு
மறுமொழியில் தெரிவியுங்களேன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
நான் மதவாதியல்ல, ஆன்மீகவாதி!,ஏன்யா மதம்சாராத
ஆன்மீகம் எந்த நாட்டில்,ஐயா இருக்கிறது? தலைகீழாகத்
தொங்கும் வவ்வால் மற்ற எல்லாவற்றையும்
தலைகீழ் என்பதுபோல், ஒத்தூதிகள் சிலரல்ல பலர்…!
வருக நண்பர் கோவிந்தன் பக்கிரி,,
சந்தேகமே வேண்டாம்.
புரிந்து கொண்டவர்களுக்கு –
மதம் வேறு, ஆன்மீகம் வேறு தான்.
இதை நான் சொல்வதை விட –
எழுத்தாளர் ஜெயமோகன் மிக அழகாகச்
சொல்லி இருப்பதை கீழே
தருகிறேன் – மிகச்சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
ஜெயமோகன் –
கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள
மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக அமைப்புதான்.
பிறப்பது முதல் இறப்பது வரையிலான
சடங்குகளின் தொகை அது. ஒரு மக்கள்கூட்டத்தை
இணைத்துக்கட்டும் நம்பிக்கை.
ஆனால் -ஆன்மீகம் என்பது நம் வாழ்க்கையை,
மானுட வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும்
அறிவதற்கான ஒரு மானுடமுயற்சி.
ஆன்மீகம் என்பது நாம் நமக்குரிய விடையை
நாமே கண்டடைந்து அதை நம்முள் நிறைத்துக்
கொள்வதாகும்.
அந்நிலையில் –
எல்லா மதநூல்களும் எல்லா ஞானங்களும்
உங்களுக்கு ஒன்றே.
—————————————
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
>>இதைப் படிக்கும்
யாரிடமாவது ரஜினியின் email ID
இருந்தால் தயவு செய்து இங்கு
மறுமொழியில் தெரிவியுங்களேன்.<<
gmail@rajini.com
;-))
friends, rajini is already having a trust called ragavendra and he is doing lot of social works with this trust without any publicity. he is doing more than anybody else in tamilnadu but he never talks about it. if you dont believe me, investigate yourselves.