யார் பார்க்கப் போகிறார்கள் … ?

யார் பார்க்கப் போகிறார்கள் … ?

ஆன்மிகத் தொடர்புள்ள ஒரு செய்தியை
படித்துக் கொண்டிருந்தேன். அதில்
நான் படிக்க நேர்ந்த  ஒரு
விஷயம்  இதை எழுதத் தூண்டியது –

ஒரு தந்தை தன் 6 வயது மகனுடன்
சாலையில் போய்க்கொண்டிருந்தார்.
வழியில் மண் தரையில் ஒரு தங்கச்
சங்கிலியைப் பார்த்தார். அந்த வழியே
போனவர் யாரோ தவற விட்டு விட்டார்கள்
என்பது தெரிந்தது.

சுற்றும் முற்றும் 4 பக்கங்களிலும்
பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை
யாரையும் காணோம். தங்கச்  சங்கிலியை
எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு
மகனுடன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

அவர் செய்ததை எல்லாம்
பார்த்துக்கொண்டிருந்த அவரது 6 வயது மகன்
“அப்பா” என்று மெதுவே அழைத்தான்.
“என்னடா கண்ணா” என்றார் தந்தை.
சங்கிலியை எடுத்ததும் 4 பக்கமும்
பார்த்தீர்கள் இல்லையா ?”
“ஆமாம்”.

“ஆனால் மேலே மட்டும் பார்க்கவில்லையே ?”

சின்னப் பையன் தான். சகஜமாக அந்த
வயதுக்கே உள்ள ஆர்வத்துடன் தான் கேட்டான்.
மற்ற சிந்தனைகள் எதுவும் அவன்
மனதில் இல்லை.

ஆனால் தந்தைக்கு சுருக்கென்றது.
தன் செயலுக்கு வெட்கம் அடைந்தார்.
அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச்
சென்று தங்கச் சங்கிலியை
விவரம் கூறி ஒப்படைத்தார்.

“சந்தர்ப்பம் கிடைக்காத வரை
எல்லாரும் யோக்கியர்கள் தான்”
என்று ஒரு சொல்வழக்கு உண்டு.

ஒரு மனிதன் உண்மையான ஆன்மிகவாதியாக
இருந்தால்- தான்,கடவுளுக்குப் பிடித்தவனாக
இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.
கடவுள் ஏற்றுக் கொள்ளாத விஷயங்களைத்
அவன் தவிர்க்கப் பார்க்கிறான்.
சிறுவன் கூறியதில் –
“4 பக்கமும் பார்த்தாயே – ஆனால்
மேலே இருந்து ஒருவன் பார்த்துக்
கொண்டிருக்கிறானே – அதை மறந்து விட்டாயே”
என்று ஒரு அர்த்தம் வெளிப்பட்டதாகத்
தோன்றியது அந்த தந்தைக்கு. உடனே
கடவுளுக்கு பயந்து சங்கிலியை கொடுத்து விட்டார்.

இதுவே ஒரு உண்மையான நாத்திகவாதியாக
இருந்தாலும் பிரச்சினை இல்லை. அவனிடம் –
கடவுளின் இடத்தில் இருந்து,
மனசாட்சி செயல்படுகிறது.

“இதைத் தொலைத்தவர் என்ன பாடு
படுகிறாரோ பாவம். அவர் துன்பத்திற்கு
நாம் காரணமாக இருக்கக்கூடாது ”
என்று அவரது மனசாட்சி எடுத்துக்கூறும்.
சங்கிலியைக் கொடுத்திருப்பான்.

உண்மையான ஆத்திகனாக இருந்தாலும் சரி
உண்மையான நாத்திகனாக இருந்தாலும் சரி
சமுதாயத்திற்கு ஒன்று தான்.
அவர்களால் எந்தக் கெடுதலும் இல்லை !

பிரச்சினை எல்லாம் போலி மனிதர்களால் தான்.
ஆன்மிகவாதி என்கிற பெயரில்,ஒருவன் கடவுள்
பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறான்.
அதே நாத்திகவாதியாக இருந்தால் –
மனசாட்சியை மறந்து ஊரை ஏமாற்றுகிறான்.

காலை சிற்றுண்டிக்கும் – மதிய உணவுக்கும்
இடையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கில்
மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போதே
சண்டை முடிந்து விட்டது என்று கூறி
உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

கருணை மனு நிராகரிக்கப்பட –
தானே காரணமாக இருந்து விட்டு,
இன்று தண்டனையை
நிறைவேற்றாதே என்கிறார்கள்.

செத்துப்போனவர் உயிரோடிருந்தால் இவர்களை
மன்னித்து இருப்பார் என்று உளருகிறார்கள்.

இப்போது மறுபரிசீலனைக்காக  அனுப்பப்பட்டு
இருக்கும் கருணை மனுவை ஏற்றுக் கொள்வதோ –
நிராகரிப்பதோ – அதை மத்திய மந்திரி சபை
தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய
கேபினட் முடிவு தான் ஜனாதிபதியின் முடிவு.

இவர்களும் உள்ளடங்கியது தானே மத்திய அரசு ?
கேபினட்டில் இவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்
அல்லவா ?

இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது -சரி.
மனசாட்சி என்று ஒன்று இருந்தால் –
கருணை மனுவை மத்திய அமைச்சரவை
ஏற்கச்செய்ய வேண்டும் அல்லவா ?
மறுத்தால் – பதவியை தூக்கி எறிந்து விட்டு
வெளியே வர வேண்டும் அல்லவா ?

ஒன்று கடவுளுக்கு பயப்படு –
இல்லை மனசாட்சியை மதி.

இரண்டையும் செய்யாதவர்
யார் ? மனிதரா அவர் ?“போலி”

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to யார் பார்க்கப் போகிறார்கள் … ?

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அருமையான பதிவு ..நன்றிகள் கா.மை.

    ஆனால் நடப்பது 2011

    இருப்பது ஊழலுக்கே இலக்கணம் வகுத்த
    நாலாவது ராஜராஜன் என புகழப்படும் கருணாநிதி சோழன்,
    ஐந்து முறை ஆட்சி புரிந்த தமிழகம்.

    எனவே உண்மையில் கதை எப்படி செல்லும் என சற்று சிந்தித்தபோது..

    //ஆனால் தந்தைக்கு சுருக்கென்றது.
    தன் செயலுக்கு வெட்கம் அடைந்தார்.
    அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச்
    சென்று தங்கச் சங்கிலியை
    விவரம் கூறி ஒப்படைத்தார்.//

    இங்கிருந்து கதை தொடர்கிறது..

    அந்த சங்கிலியை வாங்கிக்கொண்ட sub-inspector
    சுற்றும் முற்றும் 4 பக்கங்களிலும்
    பார்த்தார். யாரையும் காணோம். மெதுவாக தங்கச் சங்கிலியை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு
    தன பணியைத்தொடர்ந்தார்

    அவர் செய்ததை எல்லாம்
    பார்த்துக்கொண்டிருந்த ஏட்டு எட்டப்பன்
    “அய்யா” என்று மெதுவே அழைத்தான்.

    “என்ன எட்டப்பா?” என்றார் sub-inspector
    .
    சங்கிலியை எடுத்ததும் 4 பக்கமும்
    பார்த்தீர்கள் இல்லையா ?”

    “ஆமாம்”.

    “ஆனால் மேலே உள்ளவரை நினைக்கவில்லையே ?”

    ஏட்டு, தான் சகஜமாக அந்த
    பதவிக்கே உள்ள அனுபவத்துடன்தான் கேட்டான்.
    மற்ற சிந்தனைகள் எதுவும் அவன்
    மனதில் இல்லை.

    ஆனால் sub-inspector க்கு சுருக்கென்றது.
    தான் செய்த தவறு உரைத்தது!

    உடனே பாக்கெட்டிலிருந்து அந்த சங்கிலியை எடுத்தார்.
    சரிபாதியாக cut செய்தார்.ஒரு பாதியை எட்டப்பனிடம் கொடுத்து,

    “நல்ல நேரத்தில் ஞாபகப்படுத்தின!இதைக்கொண்டு இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு வா! ” என விளித்தார்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் கண்பத்,

      பிரமாதம்.

      என் இடுகையை விட
      உங்கள் மறுமொழி
      அருமையாக இருக்கிறது
      என்பதே சரியாக இருக்கும்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நண்பரே,
    இடுகைகள் இரண்டை காட்டிலும்
    அருமையானது,
    சிறந்தது,
    பெரியது…
    உங்கள் பரந்த மனதும்,பெருந்தன்மையும் !
    உங்கள் நட்பு கிட்டியது என் பேறு..
    மனமார்ந்த நன்றி.

  3. chollukireen's avatar chollukireen சொல்கிறார்:

    இடுகையும், மறுமொழியும் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றுகிறது. நல்ல கருத்துள்ள இடுகை.

  4. rengaraj's avatar rengaraj சொல்கிறார்:

    migavum arumayyana karuthukkal

  5. rengaraj's avatar rengaraj சொல்கிறார்:

    good

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.