……………………………………..

…………………………………………….
மறைந்த, ஆனால் – என்றும் நமது நினைவில் நிலைத்து நிற்கும் சுஜாதா அவர்களை —
பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் சரியாக பணம் கொடுக்காமலும், இழுத்தடித்தும், ஏமாற்றியதும் குறித்து சுஜாதா அவர்களே – சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் சில தடவைகள் சொல்லியது உண்டு.
ஆனால், சுஜாதாவின் கதைகளை சற்று மாற்றியும், திருடியும் பயன்படுத்தியவர்களின் பட்டியல் ஒன்றை அண்மையில் ‘சுஜாதா வாசகர்கள் குழு’ ஒன்றில் பார்த்தேன்… அதிலிருந்து கொஞ்சம் கீழே –
………………………………….
சுஜாதாவின் கதைகள், திருட்டுத்தனமாக திரைப்படங்களாக உருமாறிய விஷயம்:
சுஜாதா ஒரு முறை ஒரு வாசகரின் கேள்விக்கு,
‘ மறு பிறவி இருந்தாலும் – ஞாபகத் தொடர்ச்சி இல்லையென்றால் அது மறுபிறவியே அல்ல என்பது என் வாதம் ‘ – என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஞாபகத் தொடர்ச்சி அடிப்படையில் ஒரு தமிழ்ப்படம் வந்தது….
மாயவன் என்ற அந்தப் படத்திற்கு கதை / வசனம் எழுதிய நலன் குமாரசாமி,
சுஜாதா எழுதிய “பேசும் பொம்மைகள்” நாவலின் மையக் கருவான ‘memory download’ என்பதை அப்படியே சுட்டு திரையில் கொண்டு வந்திருந்தார்.
மாயவன் படத்தில், இது நாள் வரை பல தரமான படங்களைத் தயாரித்துள்ள சி.வி. குமரன் முதன்முறையாக இயக்குனர் ஆகியுள்ளார்.
ஆனால், திரைக்கதை / வசனம் எழுதியுள்ள இன்னொரு திறமைசாலி நலன் குமாரசாமி, அட்டகாசமாக, மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதாவின் பேசும் பொம்மைகள் நாவலை மசாலா, பாடல்கள், சில தேவையற்ற காட்சிகளை சேர்த்து இந்தப் படத்தின் திரைக்கதையாகக் கொடுத்துவிட்டார்.
தெளிவான screenplay இல்லாததாலும், நடித்த பெரும்பாலான நடிகர்கள் மிகச் சுமாராக நடித்துள்ளதாலும் படம் ரொம்பவே நொண்டியது.
இது போன்ற புது முயற்சியைப் பாராட்டினாலும், தமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனத்தை நினைத்து கஷ்டமாக இருக்கிறது. பட ஆரம்பத்தில், ஒரு வரி, “மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பேசும் பொம்மைகள் கதையைத் தழுவி எடுத்த படம்” எனப் போட்டிருக்கலாம்.
‘பேசும் பொம்மைகள்’ கதையின் மையக் கருவை நலன் குமாரசாமி மாயவன் படத்துக்காகச் சுட்ட போது வாத்தியாரும் நம்மிடையே இல்லை என்பதால், அப்படியே ஜஸ்ட் லைக் தட் விட்டுவிட்டார்கள்.
வாத்தியாரின் “ஜே.கே” குறுநாவலை அப்பட்டமாக, அப்படியே எதுவும் மாறாமல் காப்பி அடித்து “ஏர்போர்ட்” என்ற பெயரில் படம் எடுத்தார் மலையாள இயக்குனர் ஜோஷி.
சத்யராஜ் / கௌதமி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, என்னைப் போல பல வாத்தியார் ரசிகர்கள் அப்போது அதிர்ச்சி அடைந்தது நிஜம்.
இதன்பின், சுஜாதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த வாசகர்கள்,
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர் பெருந்தன்மையுடன், ‘படத்தின் ஆரம்பத்தில் இந்தக் கதையைத் தழுவியது’ என ஒரு வார்த்தை போட்டிருக்கலாம் எனக் கூறி அதை அதோடு விட்டுவிட்டார்.
அது நடந்தது 1992-’93 சுஜாதா – தமிழ் திரையுலகில் அவ்வளவாகக் கால் ஊன்றாத காலம். இது போல ஹாலிவுட்டில் நடந்திருந்தால், படத் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் கோர்ட்டுக்கு இழுத்து, ஒரு வழி செய்திருப்பார்கள்.
பாரதி ராஜாவின் நாடோடித் தென்றல் –
காப்பி மன்னர் விஜய் இயக்கத்தில் வந்த மதராசப்பட்டினம் –
இரண்டுமே சுஜாதாவின் “ரத்தம் ஒரே நிறம்” கதையின் பாதிப்புதான்.
இதில், நாடோடித் தென்றல் படத்தில் கதை: இளையராஜா, வசனம்: சுஜாதா என்று போட்ட கொடுமையும் நடந்தது.
மணிரத்னம் படங்களையெல்லாம் வெளியான உடன் பார்த்துவிடும் பழக்கம் ஒருகாலத்தில் இருந்தது.
பிறகு, எல்லாப் புகழ்பெற்ற இயக்குனர்களையும் போல creative juice காலியாகி, அவரும் மிக சுமாரான படங்களைக் கொடுக்க ஆரம்பித்ததால், அவர் படங்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.
என் நண்பர் ஒருவர் என்னிடம், “மணிரத்னம் இயக்கி, மண்ணைக் கவ்விய ‘காற்று வெளியிடை’ சுஜாதா எழுதிய ” 14 நாட்கள் ” கதையின் அப்பட்டமான தழுவல்” என்றார்.
பிறகு படத்தைப் பார்த்து திடுக்கிட்டேன்.
இவ்வளவு தூரம் சுஜாதாவுடன் பழகியவர், ரோஜாவில் ஆரம்பித்து கன்னத்தில் முத்தமிட்டால் வரை சுஜாதாவிடம் வசனப் பங்களிப்பைப் பெற்றவர், ‘
காற்று வெளியிடை’ படத்தின் ஆரம்பித்தில், சுஜாதாவின் ’14 நாட்கள்’ கதையைத் தழுவியது என்று போடக்கூடாதா?
தமிழ் சினிமா உலகில் யாருமே விதிவிலக்கில்லாமல் நன்றிகெட்டவர்கள் தாம் என மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
14 நாட்கள் கதையின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டிராமல் கதையில் இருக்கும் விறுவிறுப்பான சம்பவங்களையம் (முறைப்படி உரிமை பெற்று) சேர்த்திருந்தால், படம் நிச்சய வெற்றி பெற்றிருக்கும். படத்தில் கார்த்தி & கோ தப்பிக்கும் காட்சிகளில் எள்ளளவு கூட விறுவிறுப்பு இல்லை. ஏனோதானோ என்றிருக்கும்.
விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 நல்ல படம். மறுப்பதற்கில்லை.
ஆனால், கதை அப்படியே சுஜாதா எழுதிய “ஒரு நாள் மட்டும்” சிறுகதையைப் பார்த்து மிகவும் influence ஆகியிருப்பார்கள். சிறுகதையைப் படித்துவிட்டு படத்தைப் பாருங்கள். ஒற்றுமை விளங்கும்.
கார்த்தி நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வெளிவந்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம்.
வெற்றி பெற்ற இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் சுஜாதா எழுதிய “ஆஸ்டின் இல்லம்” கதையிலிருந்து “inspire” ஆகியிருக்க வேண்டும்.
இயக்குனரைக் கேட்டால் சத்தியமாக என் சொந்தக் கற்பனை என சூடம் அணைத்து சத்தியம் செய்ய (எல்லா தமிழ் இயக்குனர்களையும் போல) வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் திரைப்படக் கதை, சுஜாதா எழுதிய சிவந்த கைகள் கதையை ஒத்து இருக்கிறது என்று அறிகிறேன். இயக்குனர் சிவந்த கைகள் கதையைப் படித்து inspire ஆகி எடுத்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.
ஆர் ஜெ பாலாஜி நடிப்பில் வெளிவந்த LKG எனும் படத்தில் பல சீன்கள் சுஜாதாவின் “பதவிக்காக” நாவலின் கதையை அப்படியே ஒத்தி எடுத்தது போல இருக்கும்.
இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்:
ஆனந்த விகடன் விமர்சனங்களை எல்லோரும் “ஆஹா ஓஹோ” என்பார்கள், ஆனால் அதில் விமர்சனம் எழுதும் அதிபுத்திசாலிகளுக்கு குறிப்பிட்ட படம் எந்தப் படத்தின் / கதையின் தழுவல் / காப்பி என்பது கூட தெரியாமல்தான் விமர்சனம் செய்வார்கள்.
………………………………………
மேற்குறிப்பிட்ட படங்களில், சுஜாதாவைப் பற்றி ஒரு வார்த்தையோ அல்லது நன்றியோ எதுவுமின்றி, கதையை மட்டும் ஈவு, இரக்கமில்லாமல் காப்பி அடித்துவிட்டு, இயக்குனரின் சொந்தக் கதையைப் போல எடுக்கப்பட்ட படங்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் மானசீகமாகவாவது சுஜாதா அவர்களிடம் அவசியம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதனால், பணம் காசு எதுவும் செலவில்லை என்பதால் தைரியமாகச் செய்யலாம்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………..



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…