………………………………………………..

………………………………………………

….
அந்தக் காலத்தில்,1950-களில், தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டு
தலைவர்களின் செல்வாக்கால் பிளவு பட்டிருந்தது.
ஒரு பக்கம் பாமர மக்களின் ஆதரவைப்பெற்றிருந்த, தீரர் சத்யமூர்த்தி
அவர்களின் சீடரான காமராஜ். இன்னொரு பக்கம் புத்திகூர்மை மிக்க
அறிவாளி என்று அறியப்பட்ட ராஜாஜி.
1953-ல் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்திருந்த
ராஜாஜி-க்கு அவர் கொண்டு வந்த ‘குலக்கல்வி’ திட்டம் காரணமாக
பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு, ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை
ஏற்பட்டது…
காங்கிரஸ் கட்சியில் அப்போது காமராஜ் செல்வாக்குடன் இருந்தார்.
அடுத்த முதலமைச்சராக அவர் தேர்வு செய்யப்படக்கூடிய வாய்ப்பு இருந்தது.
இருந்தாலும், தன் அரசியல் எதிராளியான சத்யமூர்த்தியின் சீடர்
என்பதால், காமராஜ் தனக்கு அடுத்து முதல்வர் பதவிக்கு வருவதை
ராஜாஜி விரும்பவில்லை. காமராஜ் படிப்பு குறைந்தவராக இருந்தது ஒரு பலவீனமாக ராஜாஜி குழுவினரால் சுட்டிக்காட்டப்பட்டது.
அவருக்கு எதிராக சி.சுப்ரமணியத்தை கொண்டு வர ராஜாஜி விரும்பினார்.
காமராஜுக்கு எதிராக சி.சுப்ரமணியத்தின் பெயர் முதல்வர் பதவிக்கு
முன் மொழியப்பட்டது. பக்தவத்சலம் அதனை வழிமொழிந்தார்.
ஆனாலும், சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், பெருவாரியான
எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காமராஜ் அடுத்த முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
ஆனால், காமராஜரின் அரவணைப்பான போக்கு காரணமாக
அவர் அமைத்த மந்திரிசபையில், தனக்கு எதிராக போட்டியிட்ட,
சி.சுப்ரமணியம், பக்தவத்சலம் இருவரையுமே முக்கியமான துறைககளைக் கொடுத்து அமைச்சர்களாக ஆக்கிக்கொண்டார்.
காமராஜரின் பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் அனைவரையும்
பெரும் வியப்புக்கு உள்ளாக்கியது. ஆனால் காமராஜரின் நம்பிக்கை
வீண் போகாமல், இவர்கள் இரண்டு பேருமே காமராஜருடன்
ஒன்றிணைந்து, ஒற்றுமையாக பணியாற்றினார்கள். பிற்காலத்தில், அவர்களிடையே எந்தவித சச்சரவோ, ஈகோ பிரச்சினையோ
எழுந்ததே இல்லை. எல்லாருமே ஒழுக்கம் மிகுந்த, திறமைசாலிகள்.
காமராஜர் பள்ளிப்படிப்பையே முடிக்காதவர் …. எட்டாவது வரை தான்
படித்திருந்தார். ஒப்பிடுகையில், அவரைவிட மிக அதிகம் படித்தவர்
சி.சுப்பிரமணியம் (வக்கீல் பட்டம் பெற்றவர்…. ) காமராஜருக்கு எதிராக
முதல்வர் வேட்பாளராகவும் போட்டியிட்டவர்…
பின்னர், ஒரு சமயம் – ஒரு தொழிலதிபர், “உங்களால் எப்படி படிக்காத
காமராஜர் அமைச்சரவையில் பணிபுரிய முடிந்தது…?. உங்களுடைய மனதில் சங்கடம் இருந்திருக்குமே…?” என்று சி.சுப்பிரமணியத்திடம் கேட்டார்.
இதற்கு சி.சுப்பிரமணியம் சொன்ன பதில் சுவாரஸ்யமானது –
“”ஒருமுறை முதல்வர் காமராஜர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார்.
தன்னுடைய அழுத்தமான குரலில், ” பரம்பிக்குளம் ஆழியாறு தண்ணி என்னாச்சுன்னேன்?” என்று கேட்டார்.
“இருவரும் பேசுகிறோம்’ என்றேன்.
“யாரு பேசுறா?’ என்றார் காமராஜர்.
“இரு மாநில பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள்’ என்றேன்.
“ஏன் நீங்கள் பேச மாட்டீர்களா?’ என்று எதிர்வினா தொடுத்தார் அவர்.
“இப்போது அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது’
என்று விவரத்தைச் சொன்னேன்.
“அதிகாரிகளுக்கென்ன…. 58 வயது வரைக்கும் பேசிட்டே இருப்பாங்க..!!!
ரிட்டையர்டு ஆகும் வரை அரசு அவர்களுக்கு ஊதியம் அளிக்கும்.
ஆனால், நமக்கு ஆட்சி அஞ்சு வருஷம்தானே…! அவர்களை நம்பி
விட்டு விட்டா காரியம் எப்படி முடியறது..?’ என்று காமராஜர்
அலுத்துக் கொண்டார்.
அடுத்த விநாடியே தனது உதவியாளரை அழைத்து எதிரில் இருந்த
போனைக் காட்டி, கேரள முதல்வர் நம்பூதிரிபாட்டுக்கு போன் செய்ய
சொன்னார்.
நம்பூதிரிபாட்டிடம், காமராஜர் – “நாம ரெண்டு பேரும் ஒன்றாக சிறையில்
இருந்தவங்க…..! சுதந்திரம் கிடைச்சா நம்ம நாட்டில் பாலாறும், தேனாறும்
ஓடும் என பொதுமக்கள் மத்தியில் அன்று பேசினோம்.
இப்போ உங்க என்ஜினியருங்க தண்ணீர் தர மாட்டேங்கறாங்க.
நீங்க கம்யூனிஸ்ட். நான் காங்கிரஸ். வேற, வேற கட்சி. ஆனால்.
ரெண்டு பேரும் தேசபக்தி உள்ளவங்க..! நமக்கு தேசம் தான் முக்கியம்,
மக்கள் தான் முக்கியம்.
நீங்க தமிழ்நாட்டுக்கு தண்ணியைக் கொடுங்க. நான் கேரளாவுக்கு
அரிசி, மின்சாரம் கொடுக்கிறேன்!’ என்று கூறினார்.
அவ்வளவு தான்….இந்தப் பேச்சுக்குப் பின்னர் பரம்பிக்குளம் ஆழியாறு
பாசனம் உடனே கையெழுத்தானது. இந்தப் பாசனத்தால்
லட்சக்கணக்கணக்கான உயிர்கள், பயிர்கள் செழித்தன.
இத்தகையவர் கீழ் பணிபுரிவது பெருமையல்லவா…?
இதில் சங்கடம் என்கிற பேச்சுக்கே இடமில்லையே
என்றார் சி.சுப்பிரமணியன்.
படிக்காத காமராஜரின் ஆற்றலைப் பார்த்து,
தேசபக்தியைப் பார்த்து, அவருக்கு மக்கள் மீதிருந்த அக்கறையைப் பார்த்து
அந்தத் தொழிலதிபர் ஆச்சரியப்பட்டுப் போனார்.
.
………………………………………………….



இப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழக அளவில் & இந்திய அளவிலும் இல்லை என்பது தான் சோகம்
அறிவில் சிறந்த காமராஜர் இறந்தும் வாழும் கல்வித்தந்தை….