…
…
…
தமிழக அரசு பலமுறை வேண்டுகோள் வைத்து விட்டது;
எந்தவித பதிலும் இல்லை; வற்புறுத்தி பலமுறை
நினைவுறுத்தல் கடிதங்களும் அனுப்பி விட்டது;
அவற்றிற்கும் ஒருவித பதிலும் இல்லை;
இதற்கு மேல் வலியுறுத்தவோ, கடிந்துகொள்ளவோ
தமிழக் அரசால் இயலாத நிலை…..
“கல்லுளி மங்கன்” என்பதற்கு அகராதியில் புது விளக்கம்
தேடவேண்டிய நிலையில்,
தமிழக அரசின் எந்தவித கோரிக்கைக்கும் எந்தவித
ரெஸ்பான்சும் இல்லை என்கிற நிலையில்
டாக்டர் ராம்தாஸ் அவர்கள் இன்று அவர் மத்திய அரசுக்கு
ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார்…
…

…
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் –
“தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக
ஊரடங்கு ஆணை நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு முதல்
முறையாக ஒரு முழு மாதம் (ஏப்ரல்) நிறைவடைந்துள்ள
நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி
பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் கரோனா தடுப்புக்கான மாநில அரசின்
செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமை சமாளிக்க
மத்திய அரசிடமிருந்து தமிழகம் கோரிய நிதியை விரைந்து
பெற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
2020-21-ம் நிதியாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய்
இலக்கு ரூ.1,33,530.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசுக்கு சராசரியாக
ரூ.11,127.30 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், அதில் வெறும் 10% மட்டுமே வருவாயாக
கிடைத்திருப்பதாகவும், அதிகபட்சமாகப் போனால் இது
20% ஆக இருக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை
அதிகாரியை மேற்கோள்காட்டி தி இந்து ஆங்கில நாளிதழ்
செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு நிதியாண்டின் முதல் மாதத்தில் 90% வருவாய் இழப்பு
ஏற்பட்டிருப்பதிலிருந்தே தமிழகத்தின் நிதி ஆதாரங்கள் மீது
கரோனா வைரஸ் எத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கிறது
என்பதை அறியலாம். மற்றொருபுறம் இந்தியாவில் கரோனா
வைரஸ் நோயால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட
மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நோய்ப்பரவல்
கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில்
நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டியுள்ளது. மற்றொரு புறம் ஊரடங்கால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் மட்டும்
தமிழக அரசின் சார்பில் ரூ.3,280 கோடி மதிப்பிலான நலத்திட்ட
உதவிகள் வழங்கப்பட்டன. ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு
மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்
பொருட்களும், அமைப்பு சாராத தொழிலாளர் நலவாரியங்களில்
பதிவு செய்துள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின்
குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம் நிதியுதவியும்
அளிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தக்கட்ட வாழ்வாதார உதவிகள்
வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் பெருமளவில்
நிதி தேவை.
கரோனா ஒழிப்புப் பணிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை
வழங்குவதற்காக முதலில் ரூ.16,000 கோடி நிதி உதவி
கோரியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தக்
கட்டமாக, உணவு தானியங்கள் வாங்குவதற்காக
ரூ.1321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள்
வாங்குவதற்காக தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியிலிருந்து
ரூ.1000 கோடியும் வழங்கும்படி மைய அரசை கோரியிருந்தார்.
ஆனால், இந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசு
இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. வரி வருவாய்
நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு
வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.6,420 கோடியை
மத்திய அரசு வழங்கிய போதிலும், தமிழக அரசு கோரிய நிதி
கிடைக்கவில்லை.
நிலைமையை சமாளிப்பதற்காக தமிழக அரசு கடந்த
ஒரு மாதத்தில் மட்டும் ரூ.8,000 கோடிக்கு பத்திரம் வெளியிட்டு
கடன் திரட்டியிருக்கிறது. நடப்பாண்டில் தமிழக அரசு
நிர்ணயித்த சொந்த வரி வருவாய் இலக்குகளில்
பாதியைக் கூட எட்ட முடியுமா? என்பது ஐயமாகவே உள்ளது.
மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய அனைத்து நிதியுதவிகளும்
கிடைத்தாலும் கூட, கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி
ரூபாய்க்கும் கூடுதலாக கடன் வாங்க வேண்டியிருக்கும்.
நடப்பாண்டில் நிகரக்கடன் ரூ.83,350 கோடி உட்பட
ஒட்டுமொத்தமாக ரூ.83,350 கோடி கடன் வாங்க தமிழக அரசு
திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட வருவாய்
குறைவதாலும், செலவுகள் அதிகரிப்பதாலும் நிகரக் கடனின்
அளவை ரூ.68,066 கோடியாக உயர்த்த மாநில அரசு அனுமதி
கோரியுள்ளது. இதனால் நடப்பாண்டில் தமிழக அரசு வாங்க
வேண்டிய ஒட்டுமொத்தக் கடன் ஒரு லட்சம் கோடியை
தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு வேறு வருவாய் ஆதாரங்களே இல்லாத
நிலையில், மத்திய அரசு தான் உதவியாக வேண்டும்.
அது மத்திய அரசின் கடமையும், பொறுப்பும் கூட.
எனவே, கரோனா ஒழிப்பு பணிக்காக தமிழக அரசு
கோரியுள்ள ரூ.18,321 கோடி நிதியுதவியை மத்திய அரசு
உடனடியாக வழங்க வேண்டும்”.
————–
கடமையும், பொறுப்பும் தெரியாதவர்களா மத்தியில்
ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்…?
திண்டாடட்டும் என்று வேடிக்கை பார்ப்பவர்களை
யாரால் செயல்படுத்த வைக்க முடியும்….?
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற பேதம் இன்றி,
இன்று பல்வேறு பிரச்சினைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கும்
தமிழகத்தை மீட்டெடுக்கும் பணியும், பொறுப்பும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது.
ஆளும்கட்சியைச் சேராத, ஒரு மூத்த தலைவர்
என்கிற நிலையில் மிகவும் பொறுப்பாக –
கெஞ்சலாகவும் இல்லாமல், மிரட்டலாகவும் இல்லாமல் –
இந்த கோரிக்கையை சரியான முறையில் – மத்திய அரசின்
முன் வைத்திருக்கிறார் டாக்டர் ராம்தாஸ்.
இதற்கெல்லாம் மத்திய அரசு மசிந்து விடும் என்கிற
நம்பிக்கை நமக்கு இல்லை; இருந்தாலும் டாக்டர் ராம்தாஸ்
மூலம் பொதுவான, ஒரு matured leadership, தமிழகத்தில்
உருவாகி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
.
—————————————————————————————————-



டாக்டர் ராம்தாஸ் இப்போதெல்லாம் நல்ல
புரிதலுடன், தெளிவாக பிரச்சினைகளை அணுகுகிறார்
என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.
ஆனால், இதன் மூலம் மத்திய அரசிடம் எதுவும்
வந்துவிடும் என்று எதிர்பார்ப்பது
கல்லிலிருந்து நார் உரிப்பது போல் தான்.