…
…
சென்ற வாரம் கேரளாவில் கொட்டிய கடும் மழையும்,
அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளச்சேதங்களும்,
நிலச்சரிவுகளும், அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள்
பறிபோனதும் பற்றியெல்லாம் நமக்குத் தெரியும்.
ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அறியாத சில
அரிய நிகழ்வுகளும் இங்கே நடந்துள்ளன…
மல்லப்புரம் மாவட்டத்தில், நீலாம்பூர் – கவலப்பாரா
என்னும் மலைப்பாங்கான இடத்தில் கடும் நிலச்சரிவு
ஏற்பட்டதில், அங்கிருந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த
சுமார் 60 பேர் உயிரோடு புதையுண்டு போனார்கள்.
தொடரும் கன மழையின் ஊடேயே – நிவாரண குழுவினர்
அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்திருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு
கொண்டு சென்றனர்.
ஆனால், இடிபாடுகளுக்கிடையே பலர், உயிரிழந்த நிலையில்,
பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். அந்த உடல்கள்
உறவினர்களிடையே ஒப்படைக்கப்படும் முன்னர்
பிணப்பரிசோதனை ( postmortem ) செய்யப்படவேண்டிய
கட்டாயம் இருந்தது.
பிணப்பரிசோதனை செய்யக்கூடிய அளவுக்கு வசதிகள்
உடைய மருத்துவ மனை குறைந்த பட்சம் 40 கிலோமீட்டர்
தொலைவில் இருந்தது. மின் வசதிகள் துண்டிக்கப்பட்டு,
போக்குவரத்து முற்றிலுமாக சீர்குலைந்திருந்தது.
இருந்த கொஞ்ச வாகனங்களை காயமடைந்தவர்களை
எடுத்துச் செல்ல பயன்படுத்த வேண்டியிருந்தது.
தொடர்ந்து பெருமழை பெய்துகொண்டே இருந்தது.
சாலை வசதிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார்
60 சிதிலமடைந்த உடல்களை 40 கி.மீ. தொலைவில்
உள்ள மருத்துவமனைக்கு, வாகனங்களில், உரிய முறையில்
எடுத்துச்சென்று அத்தனை உடல்களையும்,
பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, மீண்டும்
பாதுகாப்பாக எடுத்து வரும் அளவிற்கு ஏற்படக்கூடிய
கால தாமதம் குறித்த கவலையும் பதற்றமும், இறந்தவர்களின்
உறவினர்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தியது.
…

…
அந்த உடல்களை பிணப்பரிசோதனை ( postmortem ) செய்ய
வேறு வழியின்றி, திகைத்து காத்திருந்த சமயத்தில் –
உள்ளூரிலிருந்த ஒரு மசூதி (Salafi Juma Masjid ) நிர்வாகத்தினர்
தாமாகவே உதவிட முன்வந்திருக்கின்றனர்.
50-60 உடல்கள் கிடத்தப்படவும், டாக்டர்களின் குழு
அவற்றை அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யவும்,
பெரிய ஹால் ஒன்றும் சில டேபிள்களும் தேவைப்பட்டன.
மசூதி நிர்வாகத்தினர், மசூதியில் வழக்கமாக தொழுகை
நிகழும் பெரிய ஹாலையும், அவர்களது நிர்வாகத்தில்
இருந்த சில மேஜைகளையும் இதற்காக கொடுத்து உதவி
இருக்கிறார்கள்….
பிணப்பரிசோதனை செய்யப்பட்டவர்களில் –
சந்திரன், சரஸ்வதி, சாக்கோ, மேத்யூ, முகம்மது – என்று
பல மதத்தினரும் இருந்திருக்கிறார்கள்… எந்தவித
வித்தியாசமும் பார்க்காமல் – அந்த மசூதி ஹாலில் அனைவரது
பிரேதப் பரிசோதனையும் நடைபெற மசூதி நிர்வாகத்தினர்
ஒத்துழைத்திருக்கிறார்கள்.
பிரேத பரிசோதனைகளை முன்னின்று நடத்திய,
மஞ்சேரியைச் சேர்ந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்
பரமேஸ்வரன், சஞ்சய் ஆகியோர் சொல்லித்தான்
இந்த தகவல் வெளியே தெரிந்திருக்கிறது.
ஒரு புனிதமான பிரார்த்தனை கூடத்தை, பிணப்பரிசோதனை
செய்யும் கூடமாக பயன்படுத்திக் கொள்ள உதவிய
அந்த பெரிய, பரந்த நெஞ்சங்களை என்ன சொல்லி
பாராட்டுவது….?
இங்கே, இந்த இடத்தில் –
மதங்களை மிஞ்சி விட்டது மனிதம்….
இந்த உலகில் மனிதாபிமானத்தை விட சிறந்த மதம்
எதுவும் இல்லை என்பதற்கான சிறந்தவொரு உதாரணம் இது.
இத்தகைய நன்னெஞ்சங்கள் எங்கும் -எல்லா இடங்களிலும் –
எல்லா மதங்களிலும் பரவ –
மனிதாபிமானம் செழிக்க…
மனமார பாராட்டுவோம் Salafi Juma Masjid – மக்களை….!
.
————————————————————————————————————-



இது போன்ற செய்திகளுக்கு
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்
ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை ?
எனக்குத் தெரிந்து, தமிழ் தொலைக்காட்சிகள்
எதிலும் இந்த செய்தி சொல்லப்படவில்லை.
என்ன சார் இதெயெல்லாம் எப்படி செய்தியாக சொல்லுவது அப்புறம் மக்கள் மதங்களை மறந்துவிட்டு மனித நேயத்தை நம்ப தொடங்கி விடுவார்கள் அதானல் யாருக்கு என்ன இலாபம்?
மனிதமில்லாவிடத்தில் (பத்திரிக்கைகள் ) மனிதத்தை எதிர்பார்க்கலாமா? பெரும்பாலான பத்திரிக்கைகள் வியாபார தளமாக மாறி விட்டன.
தருமத்தை அல்லது பத்திரிகை தருமத்தையாவது கடைப்பிடித்தால் நல்லது.