சுஜாதாவின் மறக்கமுடியாத ” அப்பா ” –


சுஜாதா – தனக்கும் தன் தந்தைக்கும் இருந்த உறவு –
நிகழ்வுகளைப்பற்றி சொல்வதோடு
நில்லாமல், சாதாரணமாக, பிராம்மண குடும்பங்களில்,
மூத்தவர்கள் இறந்து போனால், நிகழக்கூடிய
சம்பிரதாய சடங்குகளைப் பற்றி கூட,
இதில் நுட்பமாகச் சொல்லி இருக்கிறார்…

ஏற்கெனவே இதைப்படித்த ஞாபகம் இருக்கிறது.
பகிர்ந்து கொண்டேனா இல்லையா என்று
நினைவில்லை… இருந்தாலும் மீண்டும் பதியலாம்…
தவறில்லை.

இதைப்படிக்கும்போதே, படிப்பவர்களுக்கு,
அவரவர் அப்பா’க்களின் நினைவு நிச்சயம் வரும்…
இது போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு…
( என் அப்பா ஒரு சுதந்திர போராட்ட காலத்து மனிதர்…..
காந்திஜியின் தலைமையை/அழைப்பை ஏற்று,
வேலையை உதறித்தள்ளி விட்டு, பல
சத்தியாக்கிரகங்களில் கலந்து கொண்டு,
சொத்து சுகத்தை இழந்தவர்…… போராட்ட
காலங்களில் (சுதந்திரத்திற்கு முந்தைய) ராஜாஜிக்கு
நெருக்கமாக இருந்த சிலரில் ஒருவர்……
ஆனால் – அரசியலுக்கு தகுதி இல்லாத மனிதர்……!!!
அதாவது ஒரு அந்த காலத்து ஜென்டில்மேன்….. !!

சுதந்திரம் கிடைப்பது உறுதியானவுடன்,
காந்திஜி காங்கிரஸை கலைத்து விட்டு, அவரவர்
வேலையைப் பார்க்க போகச்சொன்னபோது,

காங்கிரஸை கலைத்தார்களோ – இல்லையோ,
இவர் அதை சீரியசாக எடுத்துக்கொண்டு –
அரசியலிலிருந்து விலகி விட்டார்…
அதற்குப் பிறகு தான் தன் குடும்பத்தை கவனிக்கத்
துவங்கியதே… அவரிடமிருந்து நிறைய அந்த
காலத்திய சம்பவங்கள் பற்றியெல்லாம்
கேள்விப்பட்டிருக்கிறேன்…!!!)

தனது அப்பாவைப்பற்றி, முக்கியமாக சுஜாதா
சொல்லும் இந்த சில விவரங்கள் எனக்கு மிகவும் பிடித்தது –

ஸ்ரீரங்கத்தை பூர்விகமாக கொண்டு,
அங்கேயே செட்டில் ஆன ஒரு முதிர்ந்த வைஷ்ணவ
பிராம்மணருக்கு – இத்தகைய பார்வை/சிந்தனை
மிக அபூர்வம் –

——-

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து
ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது.
ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன்
கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில்
நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ?

சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும்
அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை”…

பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக்
கேட்டது நினைவுக்கு வருகிறது.

———–

இனி சுஜாதாவின் எழுத்துகளில் – “அன்புள்ள அப்பா..”

——-

என் அப்பா இறந்துபோய் மூன்று வாரம் ஆயிற்று.

யுதிஷ்டிரனை நச்சுப் பொய்கையில் யக்‌ஷன் கேட்கும்
கேள்விகளில் ஒன்று – எது பெரிய விந்தை, அதிசயம்?
அதற்கு யுதிஷ்டிரன் தினமும் மனிதர்கள் இறந்துபோவதைப்
பார்த்தாலும் தானும் இறப்பேன் என்று யாருக்கும்
நினைப்பு வராததுதான் பெரிய விந்தை என்று பதில்
சொல்வான்.

பனிரண்டு பதின்மூன்று வயதில் படித்தபோது,
அட! என்று தோன்ற வைத்தது. அதே நிலைதான்.

தானும் தன்னவர்களும் இறப்பார்கள் என்று தோன்றுவதே
இல்லை, இன்னும் கொஞ்ச நாள் இருப்பார்கள் என்றேதான்
நினைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் அவர்
போன வருஷம் பெரிய விபத்தில் அடிபட்டு எங்களை
பயப்படுத்தி எப்படியோ தப்பித்தார்.

நாற்பது வருஷமாக உயர் ரத்த அழுத்தம்.
இதய அறுவை சிகிச்சை எல்லாம் நடந்திருக்கிறது.
ஸ்ட்ரோக் வந்திருக்கிறது. இருந்தாலும் சின்னச் சின்ன
உடல் உபாதைகளோடு இன்னும் நாலு வருஷம்
இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன்.
டக்கென்று போய்விட்டார்.

சின்ன வயதில் எல்லா மகன்களுக்கும் அப்பா
ஹீரோதான். பதின்ம வயதில் அப்பாவுக்கு ஒன்றும்
தெரியாது என்று நிச்சயமாகத் தெரிகிறது. கல்யாணம்
எல்லாம் ஆகி, குழந்தைகள் பிறந்து வாழ்க்கையில்
அடிபட்டு வெற்றிகள் அடைந்து அனுபவம் வந்த
பிறகுதான் அப்பாக்களின் குறைநிறைகள்,
அவர்கள் பட்ட கஷ்டங்கள், அவர்களின் வெற்றி
தோல்விகள் எல்லாம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது.
ஆனால் அவற்றைப் பற்றி அவரிடம் பேச முடிந்ததில்லை.

பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது.
நான் சௌக்கியம் நீ சௌக்கியமா, உன் உடல்நிலை
என் உடல்நிலை, பேரன்கள் பேத்திகள் என்ன செய்கிறார்கள்,
அண்ணன்களும் தங்கைகளும் அத்தைகளும் மாமாக்களும்
அவர்கள் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் என்ன
செய்கிறார்கள் என்பதைப் பற்றிய ஸ்டேடஸ் ரிப்போர்ட்
மட்டும்தான் பேச்சு. பேச ஒரு பொதுவான புள்ளியே
இல்லாமல் போய்விடுகிறது. இன்று அதுதான்
குறையாக நிற்கிறது.

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம்
போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.
“எங்கே வந்தே?” என்றார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன்.
“நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது.
டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள்.
சாப்ட்டியா?” என்றார்.

“எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”

“என்னப்பா வேணும் உனக்கு?”

“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா.
அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”

சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.

பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை
போலத்தான் இருந்தார்.

நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம்
படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு
“நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி
“உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய்
விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக்
கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது.
முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய்
சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார்.
கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார்.
“பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது.
சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால்
கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று
ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில்
குறித்து வைக்கிறேன்”

“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன்
வருகிறது தெரியுமோ?”

“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது.
எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம்
என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”

“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”

“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று.
இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து
விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும்.
அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி
வருகிறது. அப்போது வநதால் போதும்.
நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது.
காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப்
போ” என்றார்.

காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.

பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள்
மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ்
பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”

“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”

“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த
மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”

ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன்.
படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி.
காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று
ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது.
சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும்
வயிற்றைக் கவ்வியது.

கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை
அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன்.

கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை.
“நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன்.

பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை
மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை
அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.

“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார்
அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”

படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச்
சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன்.

இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு
சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால்
கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம்
முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட்
சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில்
ஒரு ஃபர்லாங் நடந்தவர்?

“என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும்
போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம்
மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன்
என்று காணமால் போனவர் இவரா?

“ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”

மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம்
யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.-

“பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”

ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து
“நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான்
ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி
ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில்
எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும்
நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.

“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”

“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார்.
ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம்.
அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப
கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ்
ஆஃப் லாஸிக்ஸ்!”

எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான்,
நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…

ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே
படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம்
வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன்.
கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம்
முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம்
விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய்
இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா
தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார்.
முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது.
கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.

“என்னப்பா?”

“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று
மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின்
கட்டுரை ஞாபகம் வருகிறது.

If I had strength enough to hold a pen,
I would write how easy and
pleasant it is to die.

பொய்!

ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு
அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம்
என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி
பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு
வரதட்சணை வாங்காமல் கல்யாணம்
செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும்
ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து
பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப்
பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல்
மனப்பாடமாக அறிந்ததா?

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும்
சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப்
பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா?
ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத
ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர்
“பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி
தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ?
சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும்
அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை”

பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச்
சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.
மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை
எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ்
வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு
கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது.
கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.”
மெல்ல நாக்கை நீட்டுகிறார்.

“பேர் சொல்லுங்கோ”

“சீனிவாசரா..”

“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ்.
ஹி இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி!”

புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema)
என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை
வீழ்த்தியது.

சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல்
மூன்று மணிக்கு இறந்து போனார். உடன்
அப்போது இருந்த சித்தி “கண் வழியா
உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி
வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும்
அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக்
கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு
வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள்.

நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில்
எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை
வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா
கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக
எரித்தோம்.

காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று
பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில்
இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல
செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப்
போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின்
பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண
போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம்
சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக்
கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக்
கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால்
ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்!
அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை
சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு
முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ்
சொன்னதை மறுபடி படி!”

“Death is nothing to us
since so long as we exist
death is not with us but
when death comes, we do not exist”.

ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம்
நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக
அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்”
என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின
ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா
இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா
எடுததுண்டு எழுதுங்களேன்!”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும
சொம்புகளுக்கும் அலைந்தோம்.

ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து
எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும்
ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும்
சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” –
இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.

“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு
அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி
சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு
குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும்
ஒழுங்கா பண்ணிடுஙகோ”.

சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக
சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல்
திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து
காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு
ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு
டைட்டில் கேட்டு.

பங்களுர் திரும்பி வருவதற்கு
முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.

Ask Rangarajan about Bionics!

ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து
சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள்.
அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில்
அவர் தகனத்துககு ஆன செலவு
முழுவதும் இருக்கிறது!

.
——————————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சுஜாதாவின் மறக்கமுடியாத ” அப்பா ” –

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // எழுத்தாளர் சுஜாதாவின் ” அப்பா ” ….!!!
    Posted on ஏப்ரல் 17, 2018 by vimarisanam – kavirimainthan // … என்ன இந்த பதிவில் உங்களைப்பற்றி உபரியாக உள்மன ஆசைகள் சில : —

    //என் குறிப்பு –

    இதைப்படிக்கும்போது, என் அப்பாவின் நினைவு வந்தாலும் கூட,
    அதை சட்டென்று தாண்டி –

    “என் நினைவு” தான் எனக்கு வந்தது.
    நெருங்கிய, பழைய நண்பர்களை, அபூர்வமாக நேரில்பார்க்கும்போது –
    அவர்கள் கேட்கும் முதல் வார்த்தையே ” எப்படிடா இன்னும் …??? “”
    தான்….!

    அவர்களுக்கு தெரியும்…என் பழைய கதைகள் எல்லாம்.

    இப்போது ஓடுவது “போனஸ் கணக்கில்”… முதல் ஹார்ட் அட்டாக்
    வந்து, 17 ஆண்டுகளைத் தாண்டியும் இன்னமும் தாக்குப் பிடித்தால்…?

    பதிலுக்கு நான் சொல்வது..” pack பண்ணி வெச்சுட்டு, ரெடியா காத்துக்
    கிட்டிருக்கேன்… Flight வந்தா கிளம்ப வேண்டியது தான்…”
    ஆமாம்.. I am always ready to FLY…!!!

    சுவாமி சின்மயானந்தா அவர்கள் ஒருமுறை சொன்ன செய்தி
    மனதில் ஆழப் பதிந்து விட்டது தான் …
    நான் எந்தவித பயமுமின்றி இருக்க காரணம்…..

    ” நாம் இருக்கும் வரை சாவு வரப்போவதில்லை…
    சாவு வந்து விட்டால் – நாம் இருக்கப்போவதில்லை…
    பின், ஏன் அசட்டுத்தனமாக அந்த சாவை நினைத்து அஞ்ச வேண்டும்…? ”

    ஒரே ஒரு பிரார்த்தனை தான் – கடைசி வரை உருப்படியாக
    எதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும்….
    “சட்டென்று பறந்து விட வேண்டும்…”

    ————————-

    ஒரே ஒரு ஆசை தான்… அதைமட்டும் விட முடியவில்லை…!
    கண்கள் தானம் செய்யப்பட வேண்டும்…
    காவிரிக்கரையில் எரிக்கப்பட வேண்டும்…!

    இது என் கையில் இல்லை….
    இன்னும் ஒரு ஆண்டு கழித்து, இங்கே சென்னையில், என் தேவைகள்
    முடிந்து விடும்….

    பிறகு, மீண்டும் காவிரிக்கரைக்கே, திருச்சிக்கே – சென்று settle ஆகி விடலாமென்று உத்தேசம்…

    அதுவரை Flight வராமல் இருந்தால்… 🙂 🙂 🙂 //

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      அற்புதம்… உங்கள் memory power …
      மீண்டும் ஒரு முறை நன்றி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      நண்ப செல்வராஜன்,

      எப்படி இப்படி…!

      Awesome.

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        நண்பரே … ! எல்லாம் திரு .கா.மை , அவர்களின் பதிவுகளின் பால் உள்ள ஒரு ஈடு பாடு மற்றும் கொஞ்சம் ” ரி கால் ” மெமரி …! அவ்வளவே … !

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


          அறிவழகு.

          His ” ” ரி கால் ” மெமரி …!”
          is not “அவ்வளவே … !”
          – It is simply superb….!!!

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.