ஆகா கான் மாளிகை ஒரு கடினமான சூழ்நிலையில் – காந்திஜியும், அவரது மனைவியும், மகனும்…


இதைப்படித்த பிறகு, கொஞ்ச நேரத்திற்கு என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை… மனதை மிகவும் ஆழமாக பாதித்தது அந்த
சம்பவம்…

கொண்ட கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கும் பொது மனிதர்களின் சொந்த வாழ்க்கையில் தான் எத்தனையெத்தனை இழப்புகள், அவமானங்கள், துயரங்கள்…

அவரது கொள்கைப் பிடிப்பு, பிடிவாதம் காரணமாக அவரும், அவரால் அவரது குடும்பத்தினர் படும் துயரங்கள்…

மகாத்மா என்று சுலபமாக அழைத்து விட்டு, கடந்து போய்க்கொண்டே
இருக்கிறோம். ஆனால், அந்த மனிதரின் சொந்த வாழ்க்கை எப்படி இருந்தது….?

ஆபிதீன் பக்கங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும்….திரு. அசோகமித்திரன் அவர்கள் எழுதிய ‘ஆகா கான் மாளிகை’ என்னும் ஓரங்க நாடகத்தை படிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக….

என்னை மிகவும் பாதித்த அந்த ஒரு சூழ்நிலையை, இந்த தளத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தேன்… கீழே –

——————————————————–

‘ஆகா கான் மாளிகை’ (ஓரங்க நாடகம் ) – அசோகமித்திரன்

———

நண்பர் அழகிய சிங்கரின் ‘நவீன விருட்சம்’ – 101 இதழில் (Jan’2017,
அசோகமித்திரன் ஓர் ஓரங்க நாடகம் எழுதி இருக்கிறார். பெயர் ‘ஆகா கான் மாளிகை’ – அது காந்தியைப் பற்றியது.

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது, காந்தியுடன்,
கஸ்தூரிபாயும் கைது செய்யப்பட்டு, பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, சுவாசக் கோளாறால், அவதிப்பட்டு மரணம் கொள்ளும் தறுவாயில் கஸ்தூரிபாய் ! –

தாயைக் காண காந்தியின் மூத்தமகன் ஹரி, ‘ஆகா கான் மாளிகை’க்கு
வருகிறார்.

ஹரி அங்கு வருகிற போது, காந்தி – கஸ்தூரிபாய் – ஹரி ஆகிய மூவருக்குமான உரையாடலை அசோகமித்திரன் ஓர் காட்சியாக மிக வலுவாக எழுதியுள்ளார்.

அசோகமித்திரன் இத்தனை கடுமையான மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தி எந்தவோர் ஆக்கத்தையும் இதற்கு முன் எழுதி – நான் வாசித்ததில்லை.

காந்தியின் அடுத்த மகனான தேவ்தாஸும் அம்மாவை காண வருகிறார்.
அந்த மகனிடமும் காந்தி நிகழ்த்தும் தர்க்கமும் சகஜமானதல்ல!

தாயைக் காண – ஹரி வந்திருந்த போதான நிகழ்வு – குறிப்பிடத் தகுந்த கடுமை கொண்டதாக இருந்திருக்கிறது. நிஜ சம்பவமும் கூட , இத்தனைக்கு கடுமையானதாக இருதிருக்கும் என்றும் யூகிக்கிறேன்.

இந்த ஓரங்க நாடகம்தான் அசோகமித்திரன் எழுதிய கடைசி ஆக்கம்.

சின்னச் சின்ன வாக்கிய அசைவுகளிலும் – நிறைய அர்த்த பாவங்கள்!!
இதனை ஜீவனோடு வாசிக்கத் தந்தமைக்கு, அசோகமித்திரனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

தாஜ்…

—————————

‘ஆகா கான் மாளிகை’ – அசோகமித்திரன்

————

(ஓரு பெரிய அறை. சுவரோரமாகத் தரையில் போட்ட படுக்கையில் ஒரு முதிய பெண்மணி படுத்திருக்கிறாள். அறை ஓரத்தில் ஒரு கிழவர் உட்கார்ந்திருக்கிறார். ஓர் இளைஞன் ஒரு நிக்கல் செம்பையும் தம்ளரும் கொண்டு வருகிறான்.)

இளைஞன்:
பாபுஜி, அம்மாவுடைய கஞ்சி.

பாபுஜி:
இப்போ அம்மாவுக்கு மட்டும்தானா?

இளைஞன்:
உங்களுடையது இன்னும் தயாராகலை.

பாபுஜி:
சரி, கொடு.

(பாபுஜி, தூங்கும் கஸ்தூர்பா அருகில் உட்கார்ந்து கொள்கிறார்)

பாபுஜி:
பா… பா…. என்னாயிற்று? பா!
(தோளைத் தொடுகிறார்.)
மறுபடியும் ஜுரம் போலிருக்கே…. பா! பா!

பா:
(திடுக்கிட்டு) என்ன?…. நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?

பாபுஜி:
இல்லை, இன்னும் தயாராகலை.

பா:
எனக்கு தலையை வலிக்கிறது. வலி தாங்க முடியவில்லை.

பாபுஜி:
நல்ல ஜுரம் அடிக்கிறதே? காலையிலே டாக்டர் வந்தாரே, அப்பவே

சொல்லியிருக்கலாமே?

பா;
எல்லாம் சொல்லியாச்சு. அவர் ஆஸ்பத்திரிக்கு போகணும்றார். நான்

முடியாதுன்னுட்டேன்.

பாபுஜி:
இப்போ ஏதாவது வேணுமா? எனக்கும் ஆஸ்பத்திரி விஷயம் பிடிக்கலே.

பா:
நாளைக்குப் பாத்துக்கலாம். (கஞ்சி பாத்திரத்தை வாங்கிக் கொண்டு, ஒரு

நிமிஷம் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்கிறாள்.)

பாபுஜி:
சூடு ஆறிடப் போறது.

பா:
சூடு ஆறறதுக்குதான் இந்த ஜுரம்.

பாபுஜி:
முடிஞ்சவரை நம்பளும் உடம்பைப் பாத்துக்கணும்.

பா:
எனக்கும் சேர்த்துத்தான் நீங்க பாத்துக்கிறீங்களே. காலையில நல்ல பனி.

அந்தப் பனீலே வாக்கிங்க்!

பாபுஜி:
சரியோ தப்போ அது பழக்கமாயிடுத்து. என் வாக்கிங்கைக் காவல்

பாக்கிற போலீஸ்காரங்க ஓடி ஓடி வந்தாங்க. ஒரு சமயம் சிரிப்பா

இருக்கு. உடனே வருத்தமாயும் இருக்கு.

(பா, சிறிது கஞ்சியை விழுங்குகிறாள்.)

பா:
கஞ்சி கசக்கிறது.

பாபுஜி:
இங்கே எங்கேயோ உப்பு வச்சிருந்ததே? எடுத்துத் தரட்டுமா?

பா:
உங்க உப்பு உங்க கிட்டேயே இருக்கட்டும்.

பாபுஜி:
உனக்கு ஹரி ஞாபகம் வந்துடுத்து.

பா:
எனக்கு மட்டும்தான் அவன் ஞாபகமா? உங்க அகங்காரம் அவனை

வரவிடாம பண்ணறது. அவன் இங்கேதான் எங்கேயோ இருக்கானாம்.

இதை ஒரு ஆபிஸரே சொன்னார்.

பாபுஜி:
அவர் சொன்னா சொல்லட்டும். நாமா ஒண்ணும் கேக்கக் கூடாது. இது

ஜெயில்.

பா:
இருக்கட்டுமே. ஜெயில்னா அம்மா பிள்ளை உறவு போயிடுமா?

(பாபுஜி பதில் சொல்லாமல் இருக்கிறார். பா, கஞ்சி முழுதும் குடித்து

முடிக்கிறாள்… தள்ளாடி எழுந்து வேறோரு அறைக்குப் போகிறாள்.

அவள் திரும்பி வரும்போது தள்ளாடல் சிறிது குறைந்து இருக்கிறது.)

பாபுஜி:
நீ அகங்காரம்னு சொன்னது நிஜமா இருக்கலாம். என்னுடைய கடந்த

காலம், நான் பிடிவாதம் பிடிச்சது, எல்லாம் எனக்கு உள்ளூர

வெட்கமாயிருக்கு. பகவான் கிட்டே சொல்லலாம். உன்கிட்டே

சொல்லலாம். வேறு யார்கிட்டே அது நல்லதைவிட விபரீதத்தைதான்

ஏற்படுத்தும்.

(பாபுஜி எழுந்து நிற்கிறார். இளைஞன் உணவுத் தட்டு, லோட்டாவுடன்

வருகிறான்.)

இளைஞன்:
பாபுஜி, உங்க சாப்பாடு.

பாபுஜி:
மூணு ரொட்டிதானே இருக்கு?

இளைஞன்:
இன்னும் அடுப்பிலே இருக்கு. நீங்க சாப்பிட ஆரம்பிங்க. நான் சூடா

கொண்டு வர்றேன்… இது ஆறிடப் போறது.

பாபுஜி:
ஹே ராம்.

(இளைஞன் தட்டையும் லோட்டாவையும் பாபுஜியிடம் கொடுத்துவிட்டு,

மீண்டும் உள்ளே போய் ஒரு நிக்கல் தம்ளருடன் வருகிறான்.)

பாபுஜி:
(இளைஞன் போன பிறகு)
எப்போவோ ஆட்டு பாலுனு சொன்னேன். ஆனால் அதுலேதான் என்

உயிர் இருப்பதாக நினைக்கிறார்கள்.

(பா, சட்டென திரும்புகிறாள்.)

பா:
அப்போ ஆட்டுப் பால் உங்களுக்குப் பிடிக்கலெ.

பாபுஜி:
அப்படிதான் வைச்சுக்கோயேன்.

பா:
அப்போ இன்னொரு பொய்.

பாபுஜி:
ஒத்துக் கொள்கிறேன். பகவான் சில பொறுப்புகளை எங்கிட்டே

கொடுத்திருக்கிறார்.

பா:
பகவான் நேரிலே வந்து கொடுத்தாரா?

பாபுஜி:
பகவான் நேரிலே வரமாட்டார். ஆனால் அவருக்கு தெரிவிக்கத் தெரியும்.

இல்லைன்னா என்னோட நூத்துகணக்கான இல்லே,

லட்சகணக்கானவங்க ஜெயில்லே இருப்பாங்களா? நாம இருக்கிறதும்

ஜெயில்தான். நமக்கும் சரோஜினிக்கும், கட்டில் போடறேன்னாங்க. நான்

தான் வேண்டாம்னுட்டேன்.

பா:
ஒங்களுக்கு வேண்டாம்னு சொன்னாப் போறாது! ஏன் எனக்கும்

வேண்டாம்னீங்க? படுக்கைலேந்து எழுந்து நிக்கறதுக்கு எவ்வளவு

கஷ்டப்படறேன், தெரியுமா?

பாபுஜி:
பார்த்தேன். இன்னிக்கு தான்ஸன் வருவான். அவன் கிட்டே ஒரு கட்டில்

வேணும்னு சொல்லறேன்.

பா:
கொசுக்கு என்ன பண்ணப் போறீங்க?

பாபுஜி:
கொசுவலையும் கட்டித்தரச் சொல்றேன். இப்போ முடிஞ்சாக் கொஞ்சம்

தூங்கு.

(பா – படுத்து கண்ணை மூடிக்கொள்ள, பாபுஜி உணவு அருந்துகிறார்.

மேடை மூலையில் பரிதாபகரமான தோற்றதுடன் ஒருவன்

தோன்றுகிறான். அது ஹரிலால்.)

ஹரிலால்:
அம்மா, அம்மா, நீ செத்துப் போயிடாதேம்மா…!

(ஹரிலால் மறைந்து விடுகிறான். சிறிது நேர இடைவெளி – டாக்டர் பா

– வைப் பரிசோதிக்கிறார்.)

டாக்டர்:
இரண்டு மார்பிலும் சளி அடைந்து கிடக்ககிறது. ஆபரேஷன்

தியேட்டர்லே டூயூப் விட்டு எடுக்க முயற்சி செய்யலாம். அதுக் கூட

முடியுமான்னு நிச்சயமா சொல்ல முடியாது. நாடி மிகவும் பலஹீனமா

இருக்கு. எப்படியும் இவங்களை ஹாஸ்பிடல் கொண்டு போகணும். இந்த

விஷயங்களிலே ஏதோ நினைச்சுண்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

பாபுஜி:
பா….! பா…!

பா:
(மிகுந்த சிரமத்துடன்) என்ன?

பாபுஜி:
டாக்டர் சொன்னது புரிஞ்சுதா?

(பா பதில் சொல்வதில்லை.)

பாபுஜி:
டாக்டர், என்ன மருந்தும் இங்கேயே கொடுத்துடுங்க. அவங்க

விருப்பத்துக்கு மாறா ஹாஸ்பிடல் வேண்டாம்.

டாக்டர்:
இங்கே அதிகம் போனா ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கலாம். ஆனா,

அவுங்க மூச்சு விடறதுக்கு இடமே இல்லாம இரண்டு மார்பிலும் ஃப்ளூட்

அல்லது ஃபிளம் இருக்கு. சுவாசப்பை ரொம்ப சுருங்கிப் போயிடுத்து.

இப்போ அவங்க ரொம்பக் கஷ்டப் பட்டுண்டுதான் பாத்ரூம் போறாங்க.

அங்கே படுக்கையை விட்டு நகராமே எல்லாத்துக்கும் ஏற்பாடு

பண்ணலாம்.

பாபுஜி:
எல்லாம் சரி, டாக்டர். ஆனா அவுங்க இங்கே என்னை விட்டுட்டு

வருவாங்கன்னு தோணலை.

டாக்டர்:
அவுங்க உயிருக்கு ஆபத்து.

பாபுஜி:
நீங்களே கேட்டுப் பாருங்க.

டாக்டர்:
(கஸ்தூர்பாவிடம்) அம்மா, அவர் சரீங்கறார். ஆஸ்பிடல் போகலாமா?

பா:
பாபுஜியும் வருவாரா?

டாக்டர்:
இல்லேம்மா, அவர் கைதியில்லே? எதுக்கும் கமிஷனர் தாம்ஸனைக்

கேக்கலாம். பாபுஜி உங்களுக்கு பிராப்ள்ம் ஏதாவது இருக்கா? பிபி

எடுத்துடறேன்.

(மேடை இருளில் மூழ்கிறது)

ஒரு குரல்:
அம்மா…! அம்மா….!

பா – குரல்:
வந்துட்டயா, ஹரி! என் கண்ணே! ஏண்டா மூஞ்சியெல்லாம் என்னமோ

மாதிரி இருக்கு?

பாபுஜியின் குரல்:
சாராயம். சாராயமே குடிச்சுண்டு இருந்தா மூச்சி இப்படித்தான் இருக்கும்.

ஹரியின் குரல்:
வாயை மூடுடா! நீ மஹாத்மாவா? என் அம்மா மஹாத்மா… வாயைத்

திறக்காதே! கப்சிப்!

பாவின் குரல்:
அப்பாவோட சண்டை போடாதேடா, கண்ணா. மத்தப் பிள்ளைங்க

அப்பாவோட சண்டைக்கு வராங்களா? கிட்ட வாடா, கண்ணா ஹரி.

என்னாலே சரியா திரும்ப முடியலே. எழுந்திருக்க முடியலே.

ஹரியின் குரல்:
அம்மா, அப்படியே இரும்மா. நான் வறேன். உன்னை இந்த மாதிரி

நோயாளியாக்கிட்டானே! இந்த மஹாத்மா! பெரிய மஹாத்மா!

(மேடையில் மீண்டும் வெளிச்சம். அழுக்கு உடையணிந்து கொண்டு, பா

அருகில் ஹரி அழுது கொண்டு இருக்கிறான்.)

பா:
அழாதேடா, கண்ணா. எனக்கு கொள்ளி போடுவையா? நீ எங்கேன்னு

மட்டும் அப்பாவுக்கு அப்பப்போ சொல்லிடுடா.

ஹரி:
என்னை போட விட மாட்டாம்மா. நான் முஸல்மான் ஆனவன்

இல்லையா? அதோ அங்கே இருக்கானே, பெரிய மஹாத்மா. அவன்

உனக்கும் போடுவான், எனக்கும் போடுவான். நாம எல்லோருக்கும்

போடுவான்.

(ஹரி அழுது கொண்டே வெளியேறுகிறான். மீண்டும் இருள்.)

பாபுஜி குரல்:
நான் எவ்வளவு பாபம் செஞ்சிருக்கேன். எத்தனை ஆயிரக்

கணக்கானவங்க என் பேச்சைக் கேட்டு உயிரை விட்டிருக்காங்க.

மனைவி, குழந்தை, குடும்பம், தொழில், வருமானம் எல்லாத்தையும்

துறந்திருக்காங்க. நான், இதுக்கெல்லாம் என்ன பதில்

சொல்லப்போகிறேன். யார்கிட்டே சொல்லப்போறேன்? பகவானே என்னை

மன்னிப்பானா?

ஹரி குரல்:
மாட்டான். ஒரு போதும் மாட்டான்.

(மேடையில் வெளிச்சம்.)

பாபுஜி:
ஹரி, என்னை ஏன் சித்திரவதை செய்கிறாய்? நீ சீமைக்குப் போய் ஒரு

வெள்ளைக்காரனாத் திரும்ப வேண்டாம்னு இன்னிக்கும் சொல்றேன்.

ஹரி:
உனக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம். ஒரு டிகிரி கூட

வாங்காம நீ கடல் தாண்டிப் போகலாம், எல்லா தகுதிகளும் உள்ள நான்

போகக் கூடாது. உன் கூட இருக்கிற சகாக்கள் கூட்டாளிகளெல்லாம்

சீமைக்குப் போனவங்கதானே?

பாபுஜி:
நீ ஒருவனாவது முழு இந்தியனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

எனக்கு இன்னும் தெரியலைடா, இன்னொருவன் வாழ்க்கையை நான்

தீர்மானிக்கக் கூடுமா, கூடாதான்னு. ஹரி நான் உள்ளுக்குள்ளே நிறைய

சித்திரவதைப் படுகிறேன். இப்பொ பார், அம்மாவுக்கு வெள்ளைக்கார

வைத்தியம். அது அம்மாவுக்கும் பிடிக்கலை, எனக்கும் பிடிக்கலை.

ஹரி:
நீ எக்கேடு கெட்டுப் போ. நீ எனக்கு அப்பன் இல்லே. நான் உனக்குப்

பிள்ளை இல்லே.

(ஹரி போய் விடுகிறான்.)

பாபுஜி:
ஹரி, நீ மஹாப் பாபங்கள் செஞ்சிருக்கே. நான் மன்னிக்கணும்னு

இல்லே. பகவான் மன்னிக்கட்டும்.

(பாபுஜி, ஒரு மூலையில் அடுக்கி வைத்திருந்த கடிதங்களை எடுத்து

படிக்க ஆரம்பிக்கிறார்.)

பாபுஜி:
பா, இன்னிக்கு தேவ்தாஸ் வரப் போறான்.

(பா, கண்ணை மூடிப் படுத்தபடி இருக்கிறாள். பாபுஜி அவள் அருகில்

சென்று நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறார்.)

பாபுஜி:
ஐயோ, நெருப்பா கொதிக்கறதே!

(ஒரு கணம் கலங்கி நிற்கிறார். அறை ஓரத்தில் இருந்த பெட்டி

ராட்டையை எடுத்து நூல் நூற்கத் தொடங்குகிறார். தேவ்தாஸ்

வருகிறார்.)

தேவ்தாஸ்:
அப்பா…!

பாபுஜி:
தேவ்தாஸ், வந்துட்டயா? எப்போ வந்தே? நான் ரொம்பக் கலங்கி

இருக்கேண்டா.

தேவ்தாஸ்:
அப்பா, அம்மாவுக்கு ஒரு புது மருந்து கொண்டு வந்திருக்கேன். இது

எந்தப் பிராணியையும் கொன்னு செஞ்சதில்லே. இது கொடுத்தா அம்மா

நியூமோனியா போய்யிடும்.

பாபுஜி:
என்ன மருந்து?

தேவ்தாஸ்:
இப்போதைக்கு இதைப் பெனிசிலின்னு பெயர் வைச்சிருக்கா. எந்த விஷக்

காச்சலும் போயிடும். இந்த மருந்து குடும்பத்துக்கு ஆண்டிபயாடிக்ஸ்னு

பேர் வச்சிருக்காங்க.

பாபுஜி:
ஆண்டிபயாடிக்ஸ்னா உயிரினத்துக்கு எதிரின்னு அர்த்தம்.

தேவ்தாஸ்:
இல்லை பாபுஜி, இது விஷகிருமிக்கு எதிரி.

பாபுஜி:
ஊஹும் வேண்டாம். இந்த புது மருந்து அம்மாவுக்கு வேண்டாம்.

தேவ்தாஸ்:
அம்மா சரியாக வேண்டாமா? அம்மா பொழைக்க வேண்டாமா? இது

என்ன பிடிவாதம்பா? அம்மா நிமோனியா இதுலே போயிடும்.

பாபுஜி:
வேண்டாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.

தேவ்தாஸ்:
அப்பா, நீங்க என்னையும் அண்ணா மாதிரி ஆக்கப் பாக்கறீங்க.

பாபுஜி:
என் கஸ்தூரியே போயிடப் போறா. நீ தாராளமா என்ன

வேண்டுமானாலும் ஆகலாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.

(தேவ்தாஸ் மிகுந்த வெறுப்புடன் பாபுஜியைப் பார்க்கிறான். அம்மாவிடம்

போகிறான்.)

தேவ்தாஸ்:
அம்மா! அம்மா! இதோ உன் தேவ்தாஸ் வந்திருக்கேன்மா. அம்மா!

அம்மா!

(அம்மாவைக் குலுக்குகிறான். பா-வின் கையை தூக்கிக் கீழே

விடுகிறான். உயிரற்ற கை அப்படியே விழுகிறது.)

**
குறிப்பு:
காந்தி சிறை வைக்கப்பட்ட அறையில், மேஜை – நாற்காலி – கட்டில்

எதுவும் கிடையாது.

.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆகா கான் மாளிகை ஒரு கடினமான சூழ்நிலையில் – காந்திஜியும், அவரது மனைவியும், மகனும்…

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஒருவர் தன் கொள்கையில் அசையாப் பற்று வைத்திருந்தால், அதனால் அவர் குடும்பத்தில் எல்லோருக்கும் பிரச்சனைதான். அப்படிப்பட்டவரால் அவரது குடும்பம் துன்பங்களை அனுபவிக்க நேரிடும், தியாகங்கள் பல புரிய நேரிடும். ஆனா, அப்படி கொள்கையில் உறுதியா இருக்கும்போதுதான், மற்றவங்களைவிட வித்தியாச மனிதர்களா ஆகி பெரிய இடத்துக்கு உயருகிறார்கள்.

    காந்திஜியை எளிமையான மனிதரா வைத்திருக்க அரசாங்கம் கொடுத்த விலை, செலவழித்தது மிகவும் அதிகம் என்ற கருத்தை காந்தியிடம் கூறியதாகப் படித்திருக்கிறேன்.

    கொள்கையில் பற்றுடன் இருந்த இருக்கும் பலருடன் தொடர்பு இருந்திருக்கிறது. தானும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் எதுக்கு கஷ்டப்படுத்தணும்னு என் சாதாரண அறிவுக்குத் தோன்றியிருக்கு.

    இந்த எண்ணம் எனக்கு இருப்பதால் நான் சாதாரணன். கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் greatதான். ஆனால் அவங்க செய்வது பாவமில்லையா என்ற கேள்வி என்னுள் எழும். ஆனா, ஆசிசியரின் கண்டிப்பு, மருத்துவர் செய்யும் அறுவைச் சிகிச்சை போன்றது அது. வேறு வழியில்லாமல் சகிப்பவர்களுக்கு அது தண்டனைதான்.

    அசோகமித்திரன் எழுத்து உண்மைக்கு அருகில் இருக்கு. சிறந்த எழுத்தாளர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      30 ஆண்டுகளுக்கும் முன்னர், முதல் தடவையாக ரிச்சர்ட் அட்டன்பரோ நடித்த “காந்தி” ஆங்கில திரைப்படத்தில் ஓரளவு சித்தரிக்கப்பட்டிருந்த கஸ்தூரிபா’வின் இறுதிக்காலத்தை பார்த்தபோதே மனம் மிகவும் கனத்தது. ஆனால், படம் கலரில் இருந்ததாலும், தொடர்ந்து மற்ற காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்ததாலும் ரொம்ப பாதிப்பு ஏற்படவில்லை…..

      இப்போது அசோகமித்திரனின் எழுத்து வடிவத்தில் அந்த காட்சியை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாகவே இருக்கிறது.

      நீண்ட நாட்களாகவே, என் மனதில் நான் நினைத்திருக்கும் ஒரு விஷயம்… பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்பம் இருக்கக்கூடாது அல்லது, குடும்ப கடமைகளை முடித்து விட்ட பிறகு, குடும்பத்திலிருந்து விடுபட்டு,
      இவற்றில் ஈடுபட வேண்டும்…. சந்நியாசம் வாங்கிக்கொள்வதைப்போல…

      குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே, கொள்கை வழியே தீவிரமாக நடப்பவர்கள் படும்பாடுகளுக்கு காந்திஜியின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

      காந்திஜிக்கும், அவரது மகன்களுக்கும் இடையே நிலவிய மிக மோசமான உறவுகளைப்பற்றி சில கட்டுரைகளை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன்… இருந்தாலும் கூட, கஸ்தூரிபா-வுடன் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட இந்த ஓரங்க நாடகம், மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

      சமயத்தில், இந்தக்கால அரசியல்வாதிகளுடன், இதை தொடர்பு படுத்தி பார்க்கும்போது, இதெல்லாம் ஏதோ கதை படிப்பது போல் இருக்கிறது… நடைமுறை சாத்தியம் என்கிற நம்பிக்கையே ஏற்படுவதில்லை.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        காந்தி மட்டுமல்ல. காமராசர், அவருடைய குடும்ப அங்கத்தினர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மொரார்ஜி தேசாய் பிரின்சிபிளோடு இருந்தாலும் அவருடைய மகன் அப்படி இப்படி டீலிங்கில் ஈடுபட்டதும் அறிந்திருப்பீர்கள். பாரதியின் உறவினர்கள் அவரை விட்டு விலகி ஓடியதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். வ.உ.சி போன்ற பலரினால், அவர்கள் குடும்பம் எந்த கதி ஆனது என்பதும் தெரியும் (நல்லதோ கெட்டதோ) பிரின்சிபிளை யார் ஃபாலோ பண்ணினாலும் கூட இருப்பவர்களுக்கு மிகவும் கடினம். அது எந்தவித பிரின்சிபிளாக இருந்தாலும். ஆனால் அவர்களால்தான் தேசம் முன்னேறும். (ஒளிரும் விளக்கு அறைக்கு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் அந்த விளக்கின்கீழ் இருள் சூழ்ந்திருக்கும். அதுபோல் அவர்கள் குடும்பம் கஷ்டப்படும்)

        என் உறவினர் (என் மெண்டர்) என்னிடம் எப்போதும் சொல்லியது, எதையும் ‘கஷ்டம்’ என்று நினைத்தால்தான் கஷ்டம். எளிமையா இருந்து பழகு, எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ். கடைபிடிக்க மிகக் கடினமான அட்வைஸ்.

        அந்த வெறுப்பை, கஷ்டத்தை அசோகமித்திரன் அருமையா கொண்டுவந்திருக்கிறார். இதுபோல என் மனதைப் பாதித்த இன்னொரு ஓரங்க நாடகம் (இந்திரா பார்த்தசாரதி எழுதியதா ஞாபகமில்லை) படித்திருக்கிறேன். என் மனதில், காந்தி forced his principles on others mouth என்றுதான் தோன்றுகிறது. விமரிசனம் வைக்கமுடியாத யுக புருஷர்கள் உண்டோ? புத்தரும் தன் குடும்பத்தைக் கைவிட்டவர்தானே.

        பற்று எந்த விதத்திலும் இருந்தால், அதனை விட்டு விலகி தன் கொள்கைகளில் நடப்பவன், எவ்வளவு தூரம் ஆத்ம திருப்தி கொள்ள இயலும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கு. என்னுடைய நிலையை வைத்து என் சம்பந்தப்பட்டவர்களை முன்னேற்றினேன் என்பதிலா, வாழ்நாள் முழுவதும் நான் நல்ல கொள்கை வழி நடந்தேன், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இருந்தேன், அது என்னைச் சார்ந்த குடும்பத்திற்கு மிகுந்த துன்பமாக இருந்த போதும் என்பதிலா, இல்லை, பெரிய தவறு செய்யாமல், ஓரளவு காம்ப்ரமைஸ் செய்து எல்லோருக்கும் நல்லது செய்யும்படியாக வாழ்ந்தேன் என்பதிலா? எதில் மரணமடையும் தறுவாயில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும்?

        தனியா வானப்ரஸ்தம் போய் மரணமடைந்தால் ஓகே. ஆனால் வாழும்வரை தன் பிரின்சிபிள் மூலமாக, அதை ஒத்துக்கொள்ளாத அல்லது விரும்பாத குடும்பத்தினரின் மீது அதனைத் திணித்துவிட்டு, கடைசி காலத்தில் அந்தக் குடும்பத்தினரையே நம்பி இருந்தால் அது எப்படிப்பட்ட தண்டனை இருவருக்கும்?

        பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்பக் இருக்கலாம். ஆனால் அந்தக் குடும்பம் பலன் பெற அவர் உழைத்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்யணும் (குறைந்த பட்ச தேவை). அப்படிச் செய்யமுடியாத பட்சத்தில், திருமணம் செய்துகொள்ளக்கூடாது அல்லது தன் கொள்கைகளை ஒத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு உதவுவதால் வரும் கஷ்டம் தனக்கு இன்பமே என்று நினைப்பவர்களோடுதான் திருமணம் செய்துகொள்ளணும்.

        Whatever we do, should not disturb our family. At the same time, we should not die without doing what we want to do and what we believe in what we should do.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ….! இந்த ” ஆஹா கான் ” மாளிகை என்று கூறப்படுகிற இது முன்பு :– ஆகா கான் அரண்மனை இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரத்தில் அமைந்துள்ளது. 1892இல் இவ்வரண்மனையை கட்டியவர் சுல்தான் மூன்றாம் முகமது ஷா ஆகா கான் ஆவார். இவ்வரண்மனையின் மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர் ஆகும்…

    வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்குப்பின்- 9 / ஆகஸ்ட்/ 1942 முதல்- 6 / மே/ 1944 வரை அண்ணல் காந்தி, அன்னை கஸ்தூரிபா, மற்றும் காந்தியின் செயலர் மகாதேவ தேசாய் ஆகிய மூவரும் சிறையில் வைக்கப்பட்டு இருந்தது இந்த மாளிகையின் அறைகளிலேதான். … அன்னை கஸ்தூரிபாவும், மகாதேவ தேசாயும் காலமானபின் அவர்களின் சமாதிகள் அமைந்திருப்பதும் இந்த வளாகத்திலேதான்….

    இதில் என்ன ஒரு விஷேஷம் என்றால் மாளிகையின் பின்புறத் தோட்டத்தில் இருக்கும் அந்த இரண்டு சமாதிகளுக்கும் செல்லும் பாதையை காந்தி தன் கையாலேயே சீரமைத்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார் என்னும் குறிப்பு அங்கே வைக்கப்பட்டு இருப்பதை கண்ணுறும் போது ஏற்படும் எண்ணங்களை விவரிக்க இயலாது …

    அங்கே தற்போது ஒருசில அறைகள் மட்டுமே பார்வைக்கு அனுமதியளிக்கிறார்கள் …அன்னை கஸ்தூரிபா காந்தி காலமான அறை மட்டும் மூடியே வைக்கப்பட்டிருக்கிறது. பக்கத்து அறையிலிருக்கும் கண்ணாடி ஜன்னல் வழியாக மட்டுமே அதைப் பார்க்க முடியும்…. அங்கே உள்ள ஒரு ஓவியம் சுமார் ஒரு ஆளுயுரம் இருக்கும் அதில் காந்தியின் மடியில் அன்னை கஸ்தூரிபா தலைசாய்த்துப் படுத்திருக்கும் காட்சி காண்போர் நெஞ்சை அள்ளும் .. மகாத்மாவின் பாதக்குறடுகள், ராட்டை மற்றும் அவரது அஸ்தியின் ஒரு பகுதி ஆகியவை அங்கே உள்ளன — சரித்திர புகழ்மிக்க அந்த அரண்மனை { மாளிகை } இன்றும் பல அந்தக்கால நினைவுகளை நமக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறது …

    திரு அசோகமித்திரன் அவர்கள் இந்த ஓரங்க நாடகத்தை எழுத அவரை தூண்டியது அந்த ஆளுயர ஓவியமாகக் கூட இருக்கலாம் — நேரில் நடப்பதை செவிமடுப்பது போல ஒரு பதிவு … அருமை …!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      நீங்கள் தந்திருக்கும் தகவல்களுக்கு மிக்க நன்றி.

      இந்த “ஆகா கான்” மாளிகையை நான் வெளியிலிருந்து பார்த்திருக்கிறேன்…. உள்ளே சென்று சாவகாசமாக பார்க்கக்கூடிய சூழ்நிலையில் அப்போது நான் இல்லை… வேறு அவசரங்கள். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது
      பார்க்க வேண்டும். இவையெல்லாம் தான் உண்மையில் நமக்கு புண்ணிய க்ஷேத்திரங்கள்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! இது போன்ற இடங்களை அரசே தன் செலவில் அழைத்து சென்று காட்டினால் நல்லது என்றே தோன்றுகிறது — குறிப்பாக இன்றுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மதுரையில் உள்ள காந்தி மண்டபம் சென்று பார்த்தாலாவது ஓரளவு … திருந்துவார்களா — சபர்மதி ஆஸ்ரமம் பார்த்தவர்கள் வாயால் வடை சுடாமல் இருப்பார்களா .? படிக்கும் போது 1971 புனே அருகில் உள்ள கடக்வாசலா டேம் பற்றி அறிந்துகொள்ள சென்ற போது புனேவில் தங்க நேரிட்டது — அப்போது ஆஹா கான் செல்லும் பாக்கியம் கிட்டியது .. அதன் நினைவுகள் தான் இது … நேரில் சென்று பார்க்கும்போதுதான் அதன் தாக்கம் புரியும் — அதேபோல அந்தமான் சிறைச்சாலையை பார்த்தால் — இந்த ” சுதந்திரம் — குடியரசு ” போன்றவை என்ன — எப்படி — யாரால் — அவர்கள் சிந்திய ரத்தம் போன்றவை எதற்காக என்பது புரியும் — புரிந்தாலாவது நம் நாட்டின் வரலாறு தெரியும் … ! டிஜிட்டல் இந்தியா என்பது வெறும் ஷோகேஸ் மட்டும் என்பதும் விளங்குமா …?

  4. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Reading Ashok Mitran’s one-act play describing the dialogues between Kasturba, Mahatma, Hari and Devadas is very touching. People who were born in the forties will remember the patriotic lessons and Bharati’s songs that were taught in the elementary schools. So whenever we listen to the national anthem, Raghupathy Raghava and the like, it makes our hearts melt. We feel proud on seeing yesterday’s fantastic display of Republic Parade processions and the songs associated with floats of each State. At the same time, we can’t but feel depressed how after decades of independence, our country has become what it is today. I can’t find one sane, wise voice among the ruling class or opposition talking about basic decent governance. Alas, what we’ve lost and how we should redeem ourselves from the self inflicted damages that happened to the national polity since independence?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.