…
…

…
கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டிய செய்தி இது –
சிபிஐ டைரக்டர் அலோக் வர்மா அவர்களை பதவியை விட்டு விலக்கும்
முடிவை, பிரதமர், நீதிபதி சிக்ரி, எதிர்க்கட்சித் தலைவர் கார்கே (காங்கிரஸ்) ஆகிய மூவர் அடங்கிய இதற்காகவே அமைக்கப்பட்ட உயர்மட்ட அதிகாரக்குழு மேற்கொண்டு அவரை பதவிக்காலம் இன்னும் மூன்றே வாரங்களில் முடிவடைய இருக்கும் நிலையிலேயே அவசர அவசரமாக வெளியே அனுப்பியது.
இந்த முடிவு, ஒரு மனதான முடிவு அல்ல. 3 பேர் அடங்கிய குழுவில்,
எதிர்க்கட்சித்தலைவர் கார்கே இந்த முடிவை எதிர்த்தார். குற்றம் சாட்டப்பட்ட அலோக் வர்மாவுக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை; மேலும் இயற்கை நியதிப்படி (natural justice) அவருக்கு தன் மீதான் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கார்கே தனியே குறிப்பு எழுதி இருக்கிறார்.
ஆனால், இதனை மீறி பிரதமர், நீதிபதி சிக்ரி ஆகிய 2 பேரும் அலோக் வர்மா உடனடியாக பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டுமென்று தீர்மானித்தனர்…
இதில் பிரதமரின் நிலை ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டஒன்று தான்…. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் பிரதிநிதியாக செயல்பட்ட நீதிபதி சிக்ரி அவர்கள் பிரதமரின் கருத்துக்கு ஆதரவாக செயல்பட்டது எப்படி என்று தான் பலரும் வியந்தனர்….
அதற்கான பின்னணி குறித்து, நேற்று டெல்லி ஆங்கில இணையதளம்
ஒரு செய்தியை வெளியிட்டது….
நீதிபதி சிக்ரி அவர்கள், தற்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
ஜனவரி 31-ந்தேதி, பதவி ஓய்வுபெற்றவுடன்,
புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள மூத்த நீதிபதி.
ஆனால் – மார்ச் 4, 2019 அன்று அவர் ஓய்வுபெறும் வயதை எட்டி விடுவதால், அவரது பதவிக்காலம் சுமார் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும்….
இந்த நிலையில், அவருக்கு மத்திய அரசு ஒரு அருமையான வாய்ப்பை
வழங்கியுள்ளது.
அவரை, இந்தியாவின் சார்பாக – லண்டனிலிருந்து செயல்படும் காமன்வெல்த் செக்ரெடேரியட் ஆர்பைடல் ட்ரிப்யூனல் ( London-based Commonwealth Secretariat Arbitral Tribunal (CSAT), பதவிக்கு – நியமனம் செய்திருக்கிறது. இந்த பதவி லண்டனிலிருந்து செயல்பட வேண்டிய ஒன்று என்பதோடு, 4 வருடத்திற்கான fixed tenure பதவி.
சாதாரணமாகவே உள்ள வழக்கங்களின்படியே, இது மேலும் 4 ஆண்டுகளுக்கு (ஆக மொத்தம் 8 ஆண்டுகளுக்கு) நீடிக்கப்படக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
ஆக பதவியிலிருந்து ஓய்வுபெறும் நிலையில் அடுத்த 8 ஆண்டுகளுக்கு இன்னுமொரு உயர் பதவி….!!!
இந்த முடிவு, நீதிபதி சிக்ரி அவர்களுடன் கலந்தாலோசனை செய்தபிறகு,
கடந்த மாதமே மத்திய அரசால் எடுக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
அலோக் வர்மா விவகாரத்தில், நீதிபதி சிக்ரி அவர்களின், மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை இந்த பதவி offer-உடன் சம்பந்தப்படுத்தி நேற்று மதியம் டெல்லியில் இணையதளத்தில் செய்திகள் வெளியாயின…
இது நீதிபதி சிக்ரி அவர்களுக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டதால், தன்னை இந்த பதவிக்கு அனுப்ப வேண்டாம் என்று நேற்றிரவு மத்திய அரசிடம், அவர் தெரிவித்து விட்டதாக உறுதி ஆகாத செய்திகள் இன்று காலை வெளியாகியுள்ளன.
இது ஒரு புறம் இருக்க –
இதற்கு இரண்டரை மாதங்கள் முன்னதாக, தன்னை மத்திய அரசு சிபிஐ டைரக்டர் பதவியிலிருந்து விலக்கியது சட்டப்படி செல்லுபடியாகாது என்று அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கில் –
சிபிஐ டைரக்டரை அவரது பதவியிலிருந்து தன்னிச்சையாக நீக்க
மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிற ஒற்றை
விஷயத்தை தீர்மானிக்க 77 நாட்கள் எடுத்துக்கொண்டு, இறுதியில்
அதிகாரம் இல்லை என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்.
இந்த முடிவை அறிவிக்கும் முன்னர், உ.நீ.மன்றம், cvc (CENTRAL VIGILANCE COMMISSIONER ) திரு.கே.வி.சௌத்ரி, அலோக் வர்மா மீது சமர்ப்பித்திருந்த குற்றச்சாட்டுகளின் மீது, அவரே உரிய விசாரணை நடத்தி, தன்னிடம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது.
இந்த விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு.ஏ.கே.பட்நாயக்
அவர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டுமென்றும் உத்திரவிட்டிருந்தது.
இந்த விசாரணையை நடத்திய பிறகு, சிவிசி கே.வி.சௌத்ரி தனது
குற்றச்சாட்டை உறுதிசெய்து ஒரு அறிக்கையை உ.நீ.மன்றத்திடம் சமர்ப்பித்தார்.
இதே விசாரணையை மேற்பார்வையிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி திரு ஏ.கே.பட்நாயக் அவர்களும் தனியே ஒரு அறிக்கையை உ.நீ.மன்றத்திடம் சீலிட்ட கவரில் சமர்ப்பித்தார்.
இறுதியாக – அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க பிரதமர் தலைமையிலான 3 பேர் குழு கூடியபோது, சிவிசி அளித்த விசாரணை அறிக்கை மட்டுமே அங்கே தரப்பட்டு, விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீதிபதி ஏ.கே. பட்நாயக் அளித்த அறிக்கையை பற்றிய வார்த்தையே எங்கும் காணோம்.
அலோக் வர்மாவை நீக்குவது குறித்த
செய்திகள் வெளியானவுடன் –
அலோக் வர்மா மீதான விசாரணையை மேற்பார்வையிட்ட நீதிபதி ஏ.கே.பட்நாயக் – இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் உண்மை நிலவரத்தை தெரிவித்திருந்தார்…..
——————–
Justice Patnaik told the Indian Express on Saturday: “There was no evidence
against Verma regarding corruption. The entire enquiry was held on (CBI Special
Director Rakesh) Asthana’s complaint. I have said in my report that none of the
findings in the CVC’s report are mine.”
——————-
அலோக் வர்மாவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்று நீதிபதி ஏ.கே.பட்நாயக் அவர்கள் மிகத்தெளிவாக கூறி இருக்கிறார். இந்த விவகாரமே அலோக் வர்மா மீது, அவரது ஜூனியர் அதிகாரியான அஸ்தானா கொடுத்த புகார் அளவிலானதே… அவற்றிற்கான எந்தவித ஆதாரங்களும் அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
——————————-
இந்த லட்சணத்தில், நேற்று மற்றொரு மகா அசிங்கமான விஷயமும்
வெளியாகி இருக்கிறது.
லஞ்ச ஊழல் விவகாரத்தில் சிக்கி, சஸ்பெண்டாகி இருக்கும் சிபிஐ
அதிகாரி அஸ்தானா (அலோக் வர்மாவின் மீது புகார் அளித்தவர்…)
குறித்து, அலோக் வர்மா, அவரது annual confidential report -acr -ல்
குறிப்பிட்டிருக்கும் பாதகமான அம்சங்களை விலக்கி, மாற்றி எழுதித்தர
வேண்டுமென்று –
சிவிசி கே.வி.சௌத்ரி, அலோக் வர்மாவின் வீட்டிற்கே சென்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அலோக் வர்மா ஒத்துக்கொள்ளாததே, அவரது மீதான இத்தனை நடவடிக்கைகளுக்கும் காரணம் என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. ( சிவிசி இவ்வாறு செய்ததற்கு, அரசியல் தலைமையின் அஸ்தானா ஆதரவு நிலையே அடிப்படை காரணம் என்பது இங்கு சொல்லாமலே விளங்கும் விஷயம்….மற்றபடி சிவிசி நிலையில் இருப்பவர் இப்படியெல்லாம் இறங்கி வந்து, தனக்கு சம்பந்தம் இல்லாத விவகாரங்களில் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே….!)
இந்த விஷயத்தை விவரமாக, ஆதாரபூர்வமாக விளக்கி, அலோக் வர்மா
நீதிபதி ஏ.கே.பட்நாயக் அவர்களிடம் அளித்திருக்கிறார். அவர் மூலமாக
இந்த விஷயம் உ.நீ.மன்ற தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த விஷயங்கள் எதுவும், உயர்மட்ட 3 பேர் குழுவில் தெரிவிக்கப்படவுமில்லை. விவாதிக்கப்படவுமில்லை என்று சொல்லப்படுகிறது…..
ஆக மொத்தம் அலோக் வர்மாவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும்,
அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும் – அடிப்படை காரணம் என்ன
என்பது மேற்கண்ட செய்திகளிலிருந்து தெரியவருகின்றன.
எல்லாருமே உயர்நிலையில் இருப்பவர்கள்…
நீதியையும், தர்மத்தையும், நேர்மையையும் நிலைநாட்ட வேண்டிய கடமையில் இருப்பவர்கள்….
இருந்தும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும்போது –
“யாரைத்தான் நம்புவதோ… ” என்று தான் தோன்றுகிறது…
இந்த செய்திகளை எல்லாம் நமது சாதாரண பொதுஜனங்களில் எத்தனை பேர்
அறிந்திருக்கப்போகிறார்கள்…? இந்த நாட்டில் உச்ச பதவிகளில் இருப்போர்
நடந்துகொள்ளும் விதம் பற்றி அவர்களுக்கு எந்த அளவிற்கு உண்மை
தெரிந்திருக்க முடியும்…?
இவற்றை எல்லாம் விவரமாக மக்களுக்கு தெரிவிப்பதும், விவாதிப்பதும் ஊடகங்களின் கடமை இல்லையா…?
.
—————————————————————————————————————



மிகவும் வருத்தமளிக்கும் செய்தி இது.
இந்த நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை வகிப்பவ்ர்கள், மனசாட்சியை புறந்தள்ளி விட்டு செயல்படுவது நமது துர்பாக்கியம்.
ஊடகங்களின் கடமையா…? அப்படி ஏதாவது இருக்கா இப்ப…? அத தூர எறிந்து ஆச்சுது நான்கரை ஆண்டுகள்.
ஒரு சந்தேகம்…!
இவ்வளவு விவரங்கள் வெளி வந்த பிறகு…நீதிபதி அலோக் வர்மா அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறவோ அல்லது பொதுநல வழக்காக யாரும் போட்டு அவர்களுக்கு நடந்துள்ள அநீதிக்கு நியாயம் கிடைக்கவோ வாய்ப்பிருக்கிறதா…?
KM Sir it is really funny to see you ending like this after seeing DINAMALAR NEWS nowadays.It s highly one sided
அய்யா…! // அலோக் வர்மா ஊழல் செய்திருப்பது உண்மை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது ஏன் என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. // நீங்கள் “யாரைத்தான் நம்புவதோ… ” என்று கேட்கிறிர்கள் … ” அராஜக நிர்வாகத்தில் ” இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா …?
அவர்கள் எந்த கேள்விக்கு உருப்படியாக பதில் சொல்லி இருக்கிறார்கள்…?
பொதுக்கூட்ட மேடை ஏறினால் மட்டுமே அவர்களுக்கு பேச்சு வரும்.
in yesterday interview, judge has confirmed that the international posting is ‘non remunerative’ and it requires him to sit for 4 or 5 hearings per year.
check your facts!
வெங்கட்,
// check your facts! //
நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் மறுக்கவும் இல்லை..மறைக்கவும் இல்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை.
ஆனால், ஒரு சின்ன சந்தேகம்…
நீங்களே விளக்குங்களேன்…
இது ஒன்றும் அவ்வளவு சிறப்பான வாய்ப்பு இல்லையென்றால், அந்த ஜட்ஜ் – போன மாதம் அந்த வாய்ப்பை ஏற்க
சம்மதம் தெரிவித்ததேன்…?
இப்போது, அலோக் வர்மாவின் விவகாரத்தில், அவரது Role பற்றிய விமரிசனங்கள் எழுந்ததும், எனக்கு இந்த பதவி வேண்டாம்.. நான் என் சம்மதத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லுவது ஏன்…?
அவருக்கே மனசாட்சி உறுத்துவதாலா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்