…
…

“எதிர்கால இந்தியா முன் எப்போதும் இருந்ததை விட மிகுந்த
சிறப்புடனும் பெருமையுடனும் விளங்கப் போகிறது,”

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்…
நமக்கு நாமே புத்துணர்வு ஏற்படுத்திக்கொள்ள
சுவாமி விவேகானந்தரின் முழக்கங்களில் சிலவற்றை
இங்கு மீண்டும் பதிய விழைகிறேன்…!!!
“நம்பிக்கையும் வலிமையும்”
நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை
நம்மிடத்தில் நம்பிக்கை;
கடவுளிடத்தில் நம்பிக்கை.
இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று
கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது
உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர
தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து –
ஆனாலும் உங்களிடத்தே தன்னம்பிக்கை இல்லா விட்டால்
உங்களுக்குக் கதிமோட்சமில்லை.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே
நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று
நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக்
குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச்
சிந்திப்பதுதான்.
வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும்
பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
ஒழுக்கம் உள்ளவனாக இரு.
தைரியம் உள்ளவனாக இரு.
இதயபூர்வமான, உறுதி பிறழாத
ஒழுக்கத்தில் நிலைபெற்றிரு.
மத சம்பந்தமான தத்துவ உண்மைகளைப் போட்டு
உனது மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
கோழைதான் பாவம் செய்கிறான்.
தைரியசாலி ஒரு போதும் செய்வதில்லை.
சுயநலமே ஒழுக்கக்கேடு.
சுயநலமின்மையே நல்லொழுக்கம்.
இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய
ஒரே இலக்கணம் ஆகும்.
உன்னால் சாதிக்க முடியாத காரியம் இருப்பதாக
ஒருபோதும் நினைக்காதே அப்படி நினைத்தால்
ஆன்மீகத்திற்கு அது முற்றிலும் முரண்பட்டது.
மிக பெரிய உண்மை இது,

பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்,
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட
சக்தியற்றதாகிவிடும்.
என்றைக்கு ஆன்மீகம் தனது செல்வாக்கை இழந்து,
உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ,
அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு அழிவு
ஆரம்பித்து விடுகிறது. தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்
தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.
உனக்கு தேவையான எல்லா வலிமையும் உதவியும்
உனக்குள்ளேயே உள்ளன.
தூய்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சி
ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.
இவை அனைத்திற்கும் மேலாக அன்பு நிச்சயம் வேண்டும்.
ஒவ்வோரு உயிரிலும் தெய்வீகத் தன்மை மறைந்திருக்கிறது.
இந்தத் தெய்வீகத்தன்மையை மலரும்படி செய்வதுதான்
முடிவான லட்சியம்.

ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே
உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண்.
அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா.
மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின்
ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.

அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும்
தவிர்த்துவிடு. வெற்றிக்கு இதுதான் வழி.

.
——————————————————————————————————————-



True. Really inspiring.