ரிலையன்ஸ் – கடைசியாக (இப்போதைக்கு) … ஒரு கிரிமினல் வழக்கு பற்றி…


இரண்டு பெரிய வர்த்தக நிறுவனங்கள்….ரிலையன்ஸ் மற்றும் பாம்பே டையிங்… அவற்றிற்கு இடையிலான ஒரு கிரிமினல் பின்னணியுடைய
கதையொன்று கீழே –

அந்தக் காலத்திலேயே இரண்டிற்கும் ஜென்மப் பகை –
அடிப்படைக் காரணம் தொழில்முறைப் போட்டிதான்…!!

29 ஆண்டுகளுக்கு முன்னர், 1989-ல் – ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர்
முகேஷ் அம்பானியிடம் நேரடியாக – ஜெனரல் மேனேஜர் பொறுப்பில்
பணி புரியும், ஒரு உயர் அதிகாரி – கீர்த்தி அம்பானி – பாம்பே டையிங் அதிபர் நஸ்லி வாடியாவை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு கிரிமினல் வழக்கு -2014-ல் வெளியுலகுக்கு தெரிய வந்தது…!!!

இது குறித்து இதே தளத்தில் 2014-ல் வெளியான
ஒரு இடுகையின் சாராம்சம் கீழே –

——

அப்போது வெளிவரக் காரணம் – நஸ்லி வாடியா, சிபிஐ யிடம் தன்னை
கொலை செய்வதற்காக நடந்த இந்த கொலை முயற்சிக்கான பின்னணி காரணங்களைப் பற்றி வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாகக் கூறி இருக்கிறார்.

(அப்படியானால் – வழக்கு பதிவு செய்யப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இன்னும் யாரைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதோ, அவரிடமிருந்தே வாக்குமூலம்
வாங்கப்படவில்லை என்று ஆகிறது.. இடையில் ஏகப்பட்ட அரசியல்
தலையீடுகள் ….! ).

இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் (முதல் குற்றவாளியான கீர்த்தி
அம்பானி… ) சிபிஐ கோர்ட்டில் ஒரு பெடிஷன் போடுகிறார்.

நஸ்லி வாடியாவை திறந்த கோர்ட்டில் சாட்சியம் கூற
அனுமதிக்கக்கூடாது. ரகசியமாகத்தான் (in camera)
விசாரிக்க வேண்டுமென்று.
அவர் சொல்லும் காரணம், திறந்த
கோர்ட்டில் நஸ்லி வாடியாவை சாட்சியம் கூற அனுமதித்தால், அவர்
வேண்டுமென்றே தன் முன்னாள் முதலாளியைப் பற்றி 
(முகேஷ் அம்பானி தான் ) வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத,
தொழில் தகராறுகளை எல்லாம் வெளிப்படுத்துவார்.
அது தன் முன்னாள் முதலாளியின் உரிமைகளையும்,
சமூக அந்தஸ்தையும் பாதிக்கும்…!!

முதலில் இதே கீர்த்தி அம்பானி, சிபிஐ கோர்ட்டில்,
நஸ்லி வாடியாவை வாக்குமூலம் கொடுக்கவே அனுமதிக்கக் கூடாது
என்று வாதாடி இருக்கிறார்.

சிபிஐ கோர்ட்டில், அது நிராகரிக்கப்படவே,
மும்பை உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்.
உயர்நீதி மன்றத்தாலும் அப்பீல் நிராகரிக்கப்படவே,

இப்போது சிபிஐ கோர்ட்டில், வாக்குமூலம் பெறப்படுவது ரகசியமாக நடைபெற வேண்டும் என்று பெடிஷன்.

கிரிமினல் வழக்கு ஒன்று – அதுவும் கொலை முயற்சி பற்றியது – 
25 ஆண்டுகளாக இன்னமும் துவக்க நிலையிலேயே 
இருக்கிறது என்பதே அதிர்ச்சி தரும் செய்தி தானே …? 

எனவே, அதன் பின்னணியைப்
பற்றி அரிய முயற்சி செய்தேன் –

அடேயப்பா – பெரிய சரித்திரமே அடங்கி இருக்கிறது….
தற்போதைய அம்பானி சகோதரர்களின் தந்தையான
திருபாய் அம்பானியின் வாழ்க்கை மற்றும் தொழில் சரித்திரம் சென்ற
தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.

ambani_sons

( புகைப்படத்தில் அப்பா அம்பானி, அண்ணன் அம்பானி, மற்றும் தம்பி அம்பானி ….)

குஜராத் கிராமம் ஒன்றைச் சேர்ந்த எளிமையான பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகனான திருபாய் அம்பானி, இளம் வயதில் ஏமன் நாட்டிற்கு சாதாரண குமாஸ்தா வேலை செய்யப் போய் பல சாகசங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பி,

அந்தக்கால பாம்பே யில், 1960-ல் –
Reliance Commercial Corporation என்கிற பெயரில்,
வெறும் ரூபாய் 15,000′- (பதினைந்தாயிரம் மட்டுமே ) –

முதல் போட்டுத் துவக்கிய கம்பெனி தான் இன்று இந்தியாவின்
சர்வ வல்லமை பொருந்திய நம்பர் ஒன் கம்பெனியாக
வளர்ந்திருக்கிறது.

இன்று இந்தியாவில் ரிலையன்ஸ் கால் வைக்காத
துறைகள் மிகச்சிலவே. திருபாய் அம்பானியின்
மகன்கள் இன்று இந்தியாவின் நம்பர் ஒன்
மற்றும் டூ பணக்காரர்கள்…..

இந்த அளவிற்கு இந்த கம்பெனி வளர்ந்ததற்கு திருபாய் அம்பானியின் கடின உழைப்பும், தொழில் முனைப்பும் மட்டுமா காரணம்….???


புதிய மெஷின்களை இறக்குமதி செய்ய தடை
இருந்த கால கட்டத்தில்,
இறக்குமதி செய்யப்படும் புதிய மெஷின்களுக்கு
எக்கச்சக்கமாக வரி விதிக்கப்பட்டிருந்த காலத்தில்,
பழைய, உபயோகப்படுத்திய செகண்ட் ஹாண்ட்
மெஷின்கள் என்று சொல்லி சுங்கத்துறையை ஏமாற்றி,
ஒரு ஒட்டுமொத்த தொழிற்சாலையையே கப்பலில்
கொண்டு வந்து இறக்கினார் திருபாய் அம்பானி என்று
புகார்கள் எழுந்தன.

தனது முதலாவது பாலிஸ்டர்-டெரிலின்
துணி உருவாக்கும் தொழிற்சாலைக்கு
புத்தம் புதிய மெஷின்களை கப்பல் கப்பலாக
கண்டெயினர்களில் திருபாய் அம்பானி கொண்டு வந்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அம்பலப்படுத்தி
-அப்போது பல கட்டுரைகளை வெளியிட்டிருந்தது.

அவற்றில் சிலவற்றை நான் இளைஞனாக இருந்தபோது
தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாளில் படித்தது
இப்போதும் ஓரளவு நினைவில் இருக்கிறது.

இந்திய அரசியலில், நாம் போடுகிற ஓட்டு தான் அரசுகளை உருவாக்குகிறது, மாற்றுகிறது என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி இந்தியர்கள் இருப்பது தானேஇந்த கம்பெனிகளின் ராட்சத வளர்ச்சிக்கு காரணம்.

வங்கித் தலைவர்களை, மத்திய அரசின் நிதியமைச்சர்களை, 
ஏன் சில பிரதமர்களைக் கூட கையில்-பையில் போட்டுக்கொண்டு –
தான் நினைத்ததையெல்லாம் சாதிக்கக்கூடிய
சாமர்த்தியம் …..

முன்னாள் மத்திய நிதியமைச்சர் டி.ஏ.பை யிலிருந்து,
ஆர்.கே.தவான், திருமதி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியிலிருந்து, 
திருவாளர் தேவ கவுடா வரை –

அத்தனை பேரிடமும் எப்படியெல்லாம்
தன் காரியங்களை சாதித்துக் கொண்டார் திருவாளர் திருபாய் அம்பானி
என்பது பற்றியெல்லாம் –

ambani_indiragandhi

(புகைப்படத்தில் திருபாய் அம்பானி –
திருமதி இந்திரா காந்தியுடன் – அந்த அளவிற்கு நட்பு ….!! )

(கர்னாடக முதலமைச்சராக இருந்த திருவாளர் தேவகவுடா 
எதிர்பாராமல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும்,
உடனடியாக பங்களூர் சென்று, முதலமைச்சர் பதவியை
ராஜினாமா செய்து விட்டு, உடனேயே டெல்லி திரும்பி
பிரதமராகப் பதவி ஏற்றுக்கொள்ள – விமானம் தந்து,
கூடவே இருந்து உதவிய பெருந்தகை
திருவாளர் திருபாய் அம்பானி தான்
என்கிற தகவல்கள் உட்பட ….)

‘ The Polyester Prince – The Rise of Dhirubhai Ambani ‘
என்கிற பெயரில் 1999-ல் விவரமாக ஒரு புத்தகம் எழுதினார் –
டில்லியில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய
எழுத்தாளர் ஹாமிஷ் மெக்டொனால்டு என்பவர்.

polister prince-1

மத்திய அரசில் பதவியிலிருந்த யார் யாரிடம்,
எப்படி எப்படியெல்லாம் – தன் செல்வாக்கையும்,
தந்திரங்களையும் பயன்படுத்தி
திருபாய் அம்பானி தன் கம்பெனியை வளர்த்தார்
என்பதைப்பற்றி விலாவாரியாக அலசி இருந்தார்
ஹாமிஷ் மெக்டொனால்டு.

தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி – அந்த புத்தகத்தை வெளியிட
விடாமல் மத்திய அரசைக் கொண்டு தடை செய்ய வைத்தார் அப்பா
அம்பானி. (மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் / அதிகாரிகளின்
பலவீனங்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் விலாவாரியாக அலசப்பட்டு
இருந்ததே …)

அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸில் –
இந்த புத்தகம் பற்றிய விமரிசனத்தில் –
கதைச்சுருக்கம் ( !!! ) மட்டும் பார்க்க முடிந்தது….

(முழு புத்தகம் கிடைத்திருந்தால் –
பெரிய விருந்தாகவே இருந்திருக்கும் …)

பிரமிக்க வைக்கும் பின்னணி……
பின்னர் சமயம் வாய்க்கும்போது இதைப்பற்றி
மேலும் பேசலாம்… இப்போதைக்கு, இந்தியாவின்
நம்பர் ஒன் பணக்காரரின் பின்னணியில் ஒரு கொலை
வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதையும் விரைவில் அதைப்பற்றிய
மேல் விவரங்கள் விவாதத்திற்கு வரும் என்பதையும் மட்டும் நினைவில்
வைத்துக் கொள்வோம்.

———————————————————————

இன்றைய சேர்க்கை –

—————–

மேற்கண்ட 2014 நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு,
2016-ல் நடந்த ஒரு நீதிமன்ற ஹியரிங்க்-ல் …
தன்னைக் கொலை செய்யவும், ஹிமாசல் பிரதேசத்தில்
போர்டிங் பள்ளியில் படித்து வந்த தன் 2 பிள்ளைகளை
கிட்னாப் செய்யவும் முயற்சிகள் நடந்ததாக நஸ்லி வாடியா நீதிமன்றத்தில்
கூறுகிறார்…

இந்த முயற்சியின் பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனத்தில்
பணியாற்றி வந்த கீர்த்தி அம்பானி இருந்ததாகவும் கூறுகிறார்….

இந்த தகவல்களை தன்னிடம் கூறியதே சிபிஐ விசாரணை அதிகாரிகள்
தானென்றும், இதற்கு மேல் தன்னிடம் எந்தவித ஆதாரங்களும் இல்லை
என்றும் நஸ்லி வாடியா கூறுகிறார்…..

அதற்குப் பிறகு…..? கதம் கதம்….
வழக்கு என்ன ஆயிற்று என்றே இன்று வரை வெளியுலகிற்கு தெரியாது.

…..

இப்போதைக்கு இத்துடன் அம்பானி சீரியஸை முடித்துக் கொள்வோம்…!!!
.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ரிலையன்ஸ் – கடைசியாக (இப்போதைக்கு) … ஒரு கிரிமினல் வழக்கு பற்றி…

  1. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    A very interesting, unheard Story.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! இந்த இரண்டு செய்திகளும் ஒரே நபரின் கம்பெனிகள் பற்றியது — ஒன்று அப்படி — ஒன்று இப்படி …நமக்குத்தான் ஒன்றும் புரியல .. !
    // உட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..// https://tamil.goodreturns.in/news/2018/11/09/anil-ambani-s-reliance-is-under-great-danger/articlecontent-pf66462-012965.html

    // Exclusive: Post-Rafale, Dassault Investment in Inactive Anil Ambani Company Gave Reliance Rs 284 Crore Profit // https://thewire.in/political-economy/inactive-anil-ambani-company-made-rs-284-crore-profit-with-dassault-investment

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      “நவராத்திரி” படம் நினைவில் இருக்குமே…. சிவாஜி ஒன்பது வேடங்களில் மிகச்சிறப்பாகவும்,
      முற்றிலும் மாறுபட்டும் நடித்திருப்பாரே….

      இவர்கள் தொழில்துறையில் “சூப்பர் ஸ்டார்”கள்….. ஒரே சமயத்தில் உச்சகட்டலாபம், மகாமோசமான நஷ்டம்,
      எல்லாவற்றையும் காட்ட அவர்களால் முடியும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    காவிரி மைந்தன் சார், the polyester prince இணையத்தில் டவுன்லோட் செய்ய முடிகிறது

    https://www.pdfdrive.com/the-polyester-prince-d25457368.html

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      bandhu,

      நன்றி… படிக்க முயற்சி செய்து பார்க்கிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.